சீனா உள்பட உலக நாடுகளில் புதுவகை கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் வாராந்தர கோவிட் தொற்று எண்ணிக்கை 11 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் உருமாறிய திரிபான பி.எஃப்.7 வைரஸ், சீனாவில் இருந்து இந்தியா உள்பட பல நாடுகளுக்குப் பரவி வருகிறது.

இந்தியாவில் புதுவகை கொரோனா பாதிப்பு குஜராத், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அவ்வகையில் இன்று நாடு தழுவிய அளவில் கொரோனா நோய்த்தடுப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாட்டில் கடந்த ஒன்பது வாரங்களாக கோவிட் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையுடன் முடிந்த வாரத்தில் சற்று அதிகத்துள்ளது. அதாவது தொற்று பாதிப்பானது முந்தைய வாரத்தில் இருந்த 1,103 பேர் என்ற எண்ணிக்கையில் இருந்து 11 சதவிகிதம் அதிகரித்து 1,219 ஆக உயர்ந்துள்ளது.
வாராந்தர கொரோனா பரவலானது 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சற்று அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா சற்று உயர்ந்துள்ள நிலையில் பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சலப்பிரதேசம், டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

தற்போதையை கோவிட் தொற்று அதிகரிப்பானது இந்தியாவில் புதுவகை கொரோனா வைரஸின் தாக்கமாக இருக்குமா அல்லது பரிசோதனைகள் அதிகரிப்பதன் விளைவா என்பது தெளிவாகப் புலப்படாத நிலையில், நாட்டில் கோவிட் இறப்புகள் குறைவாகவே பதிவாகி வருகின்றன.