Published:Updated:

இளைஞர்களை நோயாளிகளாக்கும் 3 பழக்கங்கள்! #DoubtOfCommonMan

ரத்த அழுத்தம்
News
ரத்த அழுத்தம்

இந்தியாவில் ஐந்தில் ஒருவருக்கு உயர் ரத்தஅழுத்தம் இருப்பதாகச் சொல்கிறது சமீபத்திய ஒரு புள்ளிவிவரம்.

Published:Updated:

இளைஞர்களை நோயாளிகளாக்கும் 3 பழக்கங்கள்! #DoubtOfCommonMan

இந்தியாவில் ஐந்தில் ஒருவருக்கு உயர் ரத்தஅழுத்தம் இருப்பதாகச் சொல்கிறது சமீபத்திய ஒரு புள்ளிவிவரம்.

ரத்த அழுத்தம்
News
ரத்த அழுத்தம்

முன்பெல்லாம் நாற்பது, ஐம்பது வயதுக்காரர்களுக்கு மட்டுமே வந்த ரத்த அழுத்தம், இன்று இருபது, முப்பது வயதுக்காரர்களையெல்லாம் வாட்டத்தொடங்கிவிட்டது. சின்னவயதுக்காரர்கள் எல்லாம் 'பிரஷர்' மாத்திரைகளை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அலைவதைப் பார்க்கமுடிகிறது. இந்தியாவில் ஐந்தில் ஒருவருக்கு உயர் ரத்தஅழுத்தம் இருப்பதாகச் சொல்கிறது சமீபத்திய ஒரு புள்ளிவிவரம்.

வாசகர் கேள்வி
விகடனின்  #DoubtOfCommonMan பக்கத்தில் உமா மகேஸ்வரன் என்ற வாசகர் எழுப்பியிருந்த கேள்வி இது. "நான் ரயில் ஓட்டுநராக இருக்கிறேன். எனக்கு உயர் ரத்தஅழுத்தம் இருப்பதால், தினமும் மாத்திரை சாப்பிடுகிறேன். 6 மாதங்களுக்குமுன் ரத்தத்தில் கெட்ட கொழுப்பு (LDL) அதிகமாகவும் நல்ல கொழுப்பு (HDL) குறைவாகவும் இருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். அதற்கும் மாத்திரை சாப்பிடுகிறேன். நிறைய பயணம் செய்வதால் உணவு, உறக்கம் மாறிவிடுகிறது. உடற்பயிற்சியும் செய்வதில்லை. அதிகமாக வெளி உணவு எடுத்துக்கொள்கிறேன். நான் என்ன செய்யவேண்டும்?" என்பதுதான் அவரது கேள்வி. இவரது வயது 28. எடை 90 கிலோ இருப்பதாகவும் ரத்த அழுத்தம் மாத்திரை எடுக்காத நேரத்தில் 170-120, மாத்திரை சாப்பிட்டால் இயல்பாக உள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார் உமா மகேஸ்வரன்.

உமா மகேஸ்வரனின் கேள்வியை பொதுநல மருத்துவர் அருணாசலத்தின் முன்வைத்தோம்.

மருத்துவர் அருணாசலம்
மருத்துவர் அருணாசலம்

உயர் ரத்தஅழுத்தம் என்பது தவிர்க்கக்கூடியதே. உரிய நேரத்தில் உணவு, போதுமான உறக்கம், சரியான உடற்பயிற்சி ஆகிய மூன்று இல்லை என்று அந்த வாசகரே ஒப்புக்கொண்டிருக்கிறார். அதிக உடல் எடை , கெட்ட கொழுப்பு எனப்படுகிற `எல்டிஎல்' (Low-Density Lipoproteins) அளவு அதிகரிப்பு, உயர் ரத்தஅழுத்தம் ஆகிய மூன்றுக்கும் அந்த வாழ்வியல் முறைதான் அடிப்படைக் காரணம். வாழ்க்கை முறையையும் உணவுப்பழக்கத்தையும் மாற்றாமல், மாத்திரையால் மட்டும் இந்த மூன்றையும் கட்டுக்குள் வைக்கமுடியாது. உடல்பருமன், கெட்ட கொழுப்பு, உயர் ரத்தஅழுத்தம் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஒன்றின் பாதிப்பு மற்ற இரண்டு பிரச்னைகளிலும் பிரதிபலிக்கும். இந்தப் பிரச்னைகள் வந்துவிட்டால் வாழ்க்கைமுறையில் கட்டாயம் சில மாற்றங்களைச் செய்யவேண்டியிருக்கும்.

உயர் ரத்தஅழுத்தம்

உடல் முழுவதும் ரத்தம் சீராக ஓட ரத்த நாளங்களில் குறிப்பிட்ட அளவு அழுத்தம் இருக்கவேண்டும். அந்த அழுத்தம்தான் எல்லா உடல் பாகங்களுக்கும் ரத்தத்தை எடுத்துச்செல்வதற்கான உந்துசக்தி. வயது, எடை, உயரம் ஆகியவற்றைப் பொறுத்து இந்த அழுத்தம் சிறிது மாறுபடலாம். இந்த அழுத்தமானது குறிப்பிட்ட அளவுக்குமேல் குறைவாகவோ, அதிகமாகவோ இருக்கும் நிலையை ரத்த அழுத்தம் என்கிறோம்.

ரத்த அழுத்த  அளவு
ரத்த அழுத்த அளவு

120/80 மி.மீ. மெர்க்குரி என்ற சீரான ரத்தஅழுத்த அளவானது, 140/90 மி.மீ.மெர்க்குரி என்ற அளவுக்கு மேல் செல்லும் நிலையையே `உயர் ரத்தஅழுத்தம்' அல்லது `ஹைபர்டென்ஷன்' (Hypertension or High Blood Pressure) என்கிறோம். உலக சுகாதார நிறுவனம் 140/90 மி.மீ.க்கு மேல் அதிகரித்தால் அதை உயர் ரத்த அழுத்தம் என்று வரையறை செய்துள்ளது. இந்த அளவை அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் 130/80 என்று மாற்றியமைக்க சமீபத்தில் பரிந்துரைத்திருக்கிறது.

அலர்ட்!

ரத்த அழுத்தப் பரிசோதனை
ரத்த அழுத்தப் பரிசோதனை

பரம்பரையில் யாருக்கேனும் உயர் ரத்தஅழுத்தம் இருந்தால் நமக்கும் வரலாம். உடல் பருமனானவர்கள், சர்க்கரை நோயாளிகள், தவறான உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடிப்பவர்கள், மனஅழுத்தம் உள்ளவர்கள், உணவில் அதிகமாக உப்பு சேர்த்துக்கொள்பவர்கள், உடற்பயிற்சி செய்யாதவர்கள், போதிய அளவு தூக்கமில்லாதவர்களுக்கு உயர் ரத்தஅழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தவிர்க்க, தடுக்க...

பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கைமுறையில் வேலை, வேலை என ஓடிக்கொண்டிருப்பதால் சத்தான உணவு உண்ண முடியவில்லை, உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்கின்றனர். இதனால் உடலில் கொழுப்பு சேர்ந்து உடல் பருமனை ஏற்படுத்துகிறது. உடல் பருமன், ரத்த அழுத்தத்தில் தொடங்கி, இதய நோய்கள் வரை பல்வேறு நோய்களுக்கு நுழைவு வாயிலாக அமைந்துவிடுகிறது. எனவே, முடிந்தவரை நடைப்பயிற்சி மேற்கொள்ளவேண்டும். உடற்பயிற்சி, நடைப்பயிற்சியெல்லாம் அதிகாலையில்தான் செய்யவேண்டும் என்பதில்லை. அதிகாலையில் செய்யமுடியாதவர்கள், கிடைத்தநேரத்தில் செய்யலாம். மைதானம், பூங்காக்களில் மட்டுமே வாக்கிங் செல்லவேண்டும் என்றில்லை. பக்கத்தில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களுக்கு நடந்து செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.

பர்கர்
பர்கர்

உடல் உயரத்துக்கு ஏற்ப உடல் எடையைப் பராமரிக்கவேண்டும். மது, புகைப்பழக்கத்தைத் தவிர்க்கவேண்டும். வெளியிடங்களில் சாப்பிட நேர்ந்தால் ஃபாஸ்ட் ஃபுட்,  ஐங்க் ஃபுட் உணவுகளைத் தொடக்கூடாது. இவை உடலில் கெட்ட கொழுப்பின் அளவை கிடுகிடுவென உயர்த்திவிடும். காய்கறிகள், பழங்கள், கீரைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். அவற்றில் உள்ள நார்ச்சத்தானது உடலில் உள்ள `எச்டிஎல்' (High-Density Lipoprotein - HDL)  எனும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிப்பதுடன்  `எல்டிஎல்'  (Low-Density Lipoprotein - LDL) எனும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும். இதனால், ரத்தக் குழாய்களில் படியும் கொழுப்பின் அளவு குறைந்து,  ரத்த ஓட்டம் அதிகரித்து, உயர் ரத்தஅழுத்தம் ஏற்படாமல் தடுக்கும். நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதைத் தவிர்த்து பழங்கள் சாப்பிடலாம். விலை மலிவாகக் கிடைக்கும் பப்பாளி, கொய்யா போன்ற பழங்களே போதும். அதேபோல, வெள்ளரிக்காய், முள்ளங்கி, கேரட், தக்காளி, வெங்காயம், முட்டைகோஸ் ஆகியவற்றைப் பச்சையாகவே சாப்பிடலாம்.  ஃப்ரூட் சாலட்டுடன் சேர்த்து வைத்துக்கொண்டால், நேரம் கிடைக்கும்போது சாப்பிடலாம்.

ஒரு நாளைக்கு ஐந்து கிராம் உப்பு போதுமானது. உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் 2-3 கிராம் என்ற அளவில் எடுத்துக்கொண்டால் போதும். மோர், தயிரில் தனியாக உப்பு சேர்த்துச் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும். ஊறுகாய், அப்பளம், வடகம் தவிர்க்கவேண்டும். சிப்ஸ் மற்றும் எண்ணெயில் பொரித்த பொருள்களை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.

ரத்த  அழுத்த பரிசோதனை
ரத்த அழுத்த பரிசோதனை

பொதுவாக, ரத்தஅழுத்த சோதனையில் 130/80 மெர்க்குரி என்ற அளவைத் தாண்டினாலே, எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்துவோம். அவர்கள் ரத்தஅழுத்த நோயாளிகள் அல்ல. ரத்த அழுத்தம் வர வாய்ப்புகள் உண்டு. அந்த நிலையில் மாத்திரை எடுத்துக்கொண்டே ஆகவேண்டும் என்பதில்லை. மருத்துவர்களின் பரிந்துரைப்படி உணவுப் பழக்கம், நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டு ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கலாம். 140/80 மெர்க்குரி என்ற அளவுக்குமேல் உள்ளவர்கள் மட்டும் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவேண்டும். உணவுப்பழக்கம், வாழ்க்கை முறைகளையும் மாற்றிக்கொள்வது அவசியம். மரபு வழியில் ரத்த அழுத்த பிரச்னை இருப்பவர்கள் 20 வயதுக்குப்பிறகு 5 வருடத்துக்கு ஒருமுறையும், 40 வயதுக்குப்பிறகு வருடந்தோறும் ரத்த அழுத்த பரிசோதனை செய்யவேண்டும். ரத்த அழுத்தம், உடல் பருமனாக இருப்பவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை இசிஜி பரிசோதனை செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்" என்கிறார் அவர்.