மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன நோய்... எந்த டாக்டர்? - 2 - குழந்தைகள்நல மருத்துவம்... எந்த வயது வரை?

குழந்தைகள்நல மருத்துவம்
பிரீமியம் ஸ்டோரி
News
குழந்தைகள்நல மருத்துவம்

உங்களுக்காக ஒரு கிளினிக் கைடு

குழந்தைகள் உள்ள வீடுகளில் கலகலப்புக்குப் பஞ்சமிருக்காது. போலவே கவலைக்கும்... அவர்களின் சுட்டித்தனத்தை ரசிக்கும் நாம், அவர்கள் சுணங்கிப்போகும்போது தவித்துப்போகிறோம். குறிப்பிட்ட வயது வரை அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுவ தென்பது குழந்தைகளின் இயல்பு. குழந்தை களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகளுக்கு எந்த மருத்துவரை அணுக வேண்டும்... எத்தனை வயது வரை... எந்த நிலையில் நிபுணர்களிடம் அழைத்துச்செல்ல வேண் டும்? விளக்கங்களை அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள்நல மருத்துவர் பத்மப்ரியா.

குழந்தைகள்நல மருத்துவம் என்பது என்ன?

பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கான மருத்துவத்தை குழந்தைகள்நல மருத்துவம் என்கிறோம். பொது மருத்துவம் படித்துவிட்டு குழந்தைகள் நல மருத்துவத்தில் நிபுணத்துவம் பெறுபவர்கள், குழந்தைகள்நல மருத்துவர்கள் (பீடியாட்ரீஷியன்) என அழைக்கப்படுகிறார்கள். குழந்தை பிறந்த நொடியில் இருந்து அடுத்த 28 நாள்கள் வரை அந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பவரை பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் (நியோநேட்டாலஜிஸ்ட்) என்று சொல்வோம். 28 நாள்களுக்கு பிறகு சிகிச்சை அளிப்பவர்கள் குழந்தைகள்நல மருத்துவர்கள்.

என்ன நோய்... எந்த டாக்டர்? - 2 - குழந்தைகள்நல மருத்துவம்... எந்த வயது வரை?

குழந்தைநல மருத்துவத்திலும் பிரிவுகள்...

தலை முதல் கால் வரையிலான அனைத்து உறுப்புகளுக்கும் சிகிச்சை அளிக்க குழந்தை களுக்கான பிரத்யேக துறைசார் நிபுணர்கள் உள்ளனர். உதாரணத்துக்கு பீடியாட்ரிக் நியூராலஜிஸ்ட், பீடியாட்ரிக் கார்டியாலஜிஸ்ட்... இப்படி ஒவ்வோர் உறுப்புக்குமான குழந் தைகள்நல சிறப்பு மருத்துவர்கள் உள்ளனர். பிறந்த குழந்தை முதல் 18 வயது வரையிலானவர் களுக்கு அறுவை சிகிச்சை செய்வதில் நிபுணத் துவம் பெற்றவர் `பீடியாட்ரிக் சர்ஜன்'.

குழந்தைகளுக்கு ஏற்படும் எந்தப் பிரச்னைக் கும் முதலில் குழந்தைகள்நல மருத்துவரையே அணுக வேண்டும். அவர் குழந்தையைப் பரி சோதித்துவிட்டு தேவைப்படும்பட்சத்தில் துறை சார் மருத்துவரைப் பார்க்கப் பரிந்துரைப்பார்.

குழந்தைகள்நல மருத்துவம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

பிறந்தது முதல் குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளுக்கு தனக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து வெளியே சொல்லத் தெரியாது. இந் நிலையில் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத் துவரோ, குழந்தைகள்நல மருத்துவரோதான் குழந்தையை முழுமையாகப் பரிசோதித்து விட்டு பிரச்னைகளைக் கண்டுபிடித்து சரி யான சிகிச்சைகளைப் பரிந்துரைக்க முடியும்.

குழந்தைகளை பெரியோர்களின் பாதியாக நினைத்துக்கொண்டு பெரியவர்களுக்கு கொடுக்கும் மருந்துகளில் அளவை குறைத்துக் கொடுப்பதெல்லாம் மிகவும் தவறான அணுகு முறை. குழந்தைகளுக்கென்று பிரத்யேக பிரச்னைகளும், அவற்றை அணுக வேண்டிய முறைகளும் இருப்பதால் அதற்கேற்பவே மருத் துவம் செய்ய வேண்டும்.

குழந்தைகள்நல மருத்துவம் படிக்கும்போதே மருத்துவர்களுக்கு குடும்பத்தாரை கையாளவும் சேர்த்தே பயிற்சி அளிக்கப்படும். வெறுமனே குழந்தையைப் பரிசோதித்துவிட்டு, மருந்து எழுதிக் கொடுப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், குழந்தை யோடும், குடும்பத்தாரோடும் இணக்க மாக, அக்கறையாகப் பேசவும் பழகவும் மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கப் படும்.

பத்மப்ரியா
பத்மப்ரியா

ஐந்து வயது வரை கவனம்!

மூன்று முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக இருக்கும் என்பதால் சுவாசம் தொடர்பான பிரச்னைகள் அடிக்கடி பாதிக்கும். வானிலை மாறுதல், தொற்று பாதிப்பு போன்றவற்றால் இந்த வயது குழந் தைகள் சளி, இருமல், காய்ச்சல், வீஸிங் போன்ற பிரச்னைகளுக்கு எளிதில் இலக்கா வார்கள். ஐந்து வயதுக்குப் பிறகு குழந்தைகளின் நோய் எதிர்ப்புத்திறன் ஓரளவு மேம்படும்.

பருவ வயதிலும் குழந்தைகள்நல மருத்து வரையே பார்க்க வேண்டுமா?

இந்தக் காலத்துக் குழந்தைகள் உடல்ரீதியாக வும் மனரீதியாகவும் சீக்கிரமே முதிர்ச்சியடை கிறார்கள். பெண் குழந்தைகள் 8-9 வயதிலேயே பூப்பெய்துகிறார்கள். இந்நிலையில் அந்தக் குழந்தைக்கு அதுவரை சிகிச்சையளித்த அதே குழந்தைகள்நல மருத்துவரிடம் தொடர்ந்து காட்ட வேண்டுமா, ஒருவேளை அவர் ஆணாக இருக்கும்பட்சத்திலும் என்ற கேள்வி சில பெற்றோருக்கு வரலாம். குழந்தைநல மருத்துவர் பெண்ணாக இருக்கும் பட்சத்தில் இதே கேள்வி ஆண் குழந்தைகளைப் பெற்றவர் களுக்கும் வரலாம். 18 வயது வரை ஆண், பெண் குழந்தைகளை கட்டாயம் குழந்தைகள் நல மருத்துவரிடம்தான் காட்ட வேண்டும். வயதுக்கு வந்துவிட்டதால் அந்தப் பெண் குழந் தையை மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டியதில்லை. குழந்தைகள் கூச்சப்படும் பட்சத்தில் ஆண் குழந்தை களை ஆண் (குழந்தைகள்நலம்) மருத்துவரிடமும், பெண் குழந்தைகளை பெண் மருத்துவரிடமும் கூட்டிச் செல்லலாம்.

குழந்தைகளும் வலிப்புநோயும்

குழந்தைகளுக்கு வரும் வலிப்பு நோய்க்கு பிரதான காரணம் காய்ச்சல். ஆறு மாதம் முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு வரும் வலிப்புநோயை ‘சிம்பிள் ஃபெப்ரைல் சீஷர்ஸ்’ (Simple febrile seizures) என்று சொல்வோம். 100-102 டிகிரிக்குமேல் காய்ச்சல் அதிகரிக்கும்போது இத்தகைய வலிப்பு வரும். வலிப்பு என்றதுமே உடனே நரம்பியல் மருத் துவரிடம் குழந்தையைக் கூட்டிச் செல்ல வேண்டியதில்லை. குழந்தைகள்நல மருத் துவரே இதற்குச் சிகிச்சை அளிப்பார். அதுவே வலிப்புக்கு காய்ச்சல் காரணமல்ல, வேறு ஏதோ சிக்கல் என்று தெரிய வந்தால் குழந்தைகள்நல நரம்பியல் மருத்துவரிடம் பரிந்துரைப்பார்கள்.

குழந்தைகளும் தடுப்பூசியும்

'இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்' அமைப்பானது, பிறந்தது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு அந்தந்தப் பருவத்தில் போடவேண்டிய தடுப் பூசிகளுக்கான அட்டவணையைக் கொடுத்துள்ளது. குழந்தைகள்நல மருத்துவர் எந்தெந்த வயதில், எந்தத் தடுப்பூசிகளைப் போட வேண்டும் என்பதை மிகச் சரியாகப் பின்பற்றி, பெற்றோருக்கு உணர்த்துவார்.

பழகிய டாக்டர்... 18 வயதுக்கு மேலும் அவரிடமே சிகிச்சை எடுக்கலாமா?

பல வருடங்களாகப் பார்க்கும் மருத்துவர், சென்டிமென்ட், ராசி என பல காரணங்களுக்காக 18 வய துக்குப் பிறகும் குழந்தைகள்நல மருத்துவரிடமே அழைத்துச் செல் லும் பெற்றோர் பலர் இருக் கிறார்கள். அது தேவையில்லை. 18 வயதுக்கு மேல் ஆணும் பெண் ணும் சட்டப்படி மேஜர் என்பதால் தனக்கான மருத்துவரைத் தேர்ந் தெடுக்கும் உரிமையும் அவர் களுக்கு உண்டு. அந்த வயதுக்குப் பிறகு பொது மருத்துவரையோ, இன்டெர்னிஸ்ட்டையோ அணுகலாம்.

குழந்தைகள் மருத்துவம்... கவனத்தில் கொள்ள வேண்டியவை...

ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு எக்காரணம் கொண்டும் பெற்றோர் தாமாக மருந்துகள் கொடுக்கக்கூடாது. சளிப் பிரச்னை வந்திருக்கலாம்... அது சாதாரண சளியா, நிமோனியாவா என்று தெரியாமல் இப்படி மருந்து கொடுப்பது ஆபத்தில் முடியலாம்.

குழந்தைகளுக்கு வெளியிடங்களில் உணவு வாங்கித் தருவதைத் தவிர்க்க வேண்டும். வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும் குழந்தைகளுக்கு உடலில் நீர்ச்சத்து வற்றிப் போகும். எனவே அதைத் தடுக்க முதல் கட்டமாக அரிசிக் கஞ்சி உள்ளிட்ட உணவு களைக் கொடுத்து நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகும் காய்ச்சலும் வாந்தி, வயிற்றுப் போக்கும் தொடர்ந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

குழந்தைகளைப் பொறுத்தவரை எடைக்கேற்பதான் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். எனவே பெரியவர்களுக்கான மருந்துகளில் பாதியையோ, கால் பாகத்தையோ கொடுப்பது போன்ற தவறுகளை ஒருபோதும் செய்யக் கூடாது.

வலிப்பு வரும் குழந்தைகளை வெளியே அழைத்துச்செல்லும் போது பாராசிட்டமாலும், வலிப்புக்கான பிரத்யேக மருந்தையும் எப்போதும் கைவசம் வைத்திருக்கும்படி குழந்தைநல மருத்துவர் ஏற்கெனவே வலியுறுத்தி யிருப்பார். பாராசிட்டமால் எவ்வளவுக்கு எவ்வளவு நல்ல மருந்தோ, அளவு கடக்கும்போது அதுவே ஆபத்தானதாகவும் மாறி விடும். கல்லீரலை பாதித்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கும் அளவுக்கு கொண்டு செல்லும். எனவே பாராசிட்டமால் தானே என அதை அலட்சியமாக, அளவுக் கதிகமாகக் கொடுக்கக் கூடாது. வலிப்புக்கும் சம்பந்தப்பட்ட மருத்துவர் பரிந்துரைத்த மருந்தை, அவர் பரிந்துரைத்த அளவில் மட்டுமே கொடுக்க வேண்டும்.

குழந்தைக்கு `டான்சில்ஸ்' எனப்படும் தொண்டைச்சதை வீக்கம் ஏற்பட்டு, சளி, இருமல் பாதித்திருக்கலாம். மருத்துவர் அதற்கு ஆன்டிபயாடிக் கொடுத்திருப்பார். அதையே அடுத்தமுறை குழந்தைக்கு பாதிப்பு வரும் போதும் கொடுப்பது ஆபத்தானது. இப்படிக் கொடுக்கும்பட்சத்தில் ஒருகட்டத்தில் அந்த மருந்து வேலையே செய்யாமல் போய்விடும்.

ஓவர் சுத்தம்... சரியா, தவறா?

கோவிட் நமக்குக் கற்றுக்கொடுத்த அடிப் படை சுகாதாரத்தை எப்போதும் பின்பற்றுவது அவசியம். அதாவது அடிக்கடி கைகழுவுவது, இருமல், சளி இருந்தால் மாஸ்க் அணிவது போன்றவை... வெளியிலிருந்து வந்ததும் கை கால்களைக் கழுவுவது, பள்ளி முடிந்து வந்த தும் குளிப்பது, கழிவறை பயன்படுத்தியதும் சோப் உபயோகித்து கை கழுவுவது போன் றவை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

வெளியில் சாப்பிடவே கூடாது என்று ஒரேடியாக குழந்தைகளைக் கட்டுப்படுத்த முடியாது. சுகாதாரமற்ற சூழலில் விற்கப்படும் உணவுகளைத் தவிர்க்கச் சொல்லலாம். ஒரே எண்ணெயை மீண்டும் மீண்டும் உபயோகிக்கும் கடைகளில் சாப்பிட வேண்டாம் என அறி வுறுத்தலாம். மாதம் ஒன்றிரண்டு முறை வெளி யில் சாப்பிடுவதில் தவறில்லை. அப்படிச் சாப்பிடும் இடங்கள் சுகாதாரமானவையாக இருக்க வேண்டியது அவசியம்.

சரிவிகித உணவுப்பழக்கம் குழந்தைகளுக்கு மிக அவசியம். காய்கறிகள், பழங்கள் என எல்லாவற்றையும் சாப்பிடப் பழக்க வேண்டும். அது எதிர்ப்பாற்றலை வளர்க்கும். மற்றபடி கோவிட் காலத்தில் சிலர் செய்ததுபோல காய்கறி, பழங்களை சோப் போட்டுக் கழுவிப் பயன்படுத்திய மாதிரியான அதீத சுத்த மெல்லாம் தேவையே இல்லை.

முக்கியமான நான்கு மாதங்கள்

குழந்தை பிறந்து 8 முதல் 12 மாதங்களில் நீங்கள் பழக்கும் உணவுகளை அது தொடர்ந்து சாப்பிடும். இந்தப் பருவத்தில் ஓர் உணவைப் பழக்காமல், பின்னாளில் அந்த உணவு தன் குழந்தைக்குப் பிடிக்காது என சொல்வது சரியல்ல.

குழந்தைகளுக்கு ஊசி அவசியமா?

குழந்தைகளைப் பொறுத்தவரை வாய்வழி மருந்துகளே போதுமானவை. 102 டிகிரிக்கு மேல் காய்ச்சல் அதிகரித்து, வலிப்பு வரும் குழந்தைக்குக்கூட வாய்வழி மருந்துகள் கொடுத்தே மருத்துவரால் குணப்படுத்த முடியும். மருத்துவமனையில் அட்மிட் செய்து சிகிச்சை அளிக்கப்படும் நிலையில்தான் தேவையென்றால் மருத்துவர் குழந்தைக்கு ஊசி போடுவார். வாய்வழியே சாப்பிட மறுக்கும் நிலையில் ஊசி போடப்படும். எனவே ஊசி போட்டால் நோய் சீக்கிரம் குணமாகும் என்ற எண்ணத்தில் பெற்றோரே மருத்துவரை அதற்கு வற்புறுத்துவது கூடாது.

- அடுத்து வயிறு, குடல், இரைப்பை மருத்துவம்

- அலெர்ட் ஆவோம்...

என்ன நோய்... எந்த டாக்டர்? - 2 - குழந்தைகள்நல மருத்துவம்... எந்த வயது வரை?

டேஞ்சர் டேட்டா

சர்க்கரை அதிகம் சாப்பிடும் குழந்தைகள் ஹைப்பர் ஆக்டிவ்வாக வளரவும் இனிப்புச் சுவைக்கு அடிமையாகவும் வாய்ப்புண்டு. பல் தொடர்பான பிரச்னை களும் அதிகரிக்கும் என்பதால் இனிப்பு சேர்த்த உணவுகள், பேக்கரி உணவுகளைத் தவிர்க்க அறிவுறுத்துகிறோம். ‘இதையெல்லாம் சாப்பிடாம அப்புறமென்ன குழந்தைப் பருவம்...’ என சிலர் கேட்கலாம். எதுவும் அளவோடு இருக்கட்டும். ஒருவர் பெரியவரானதும் அவருக்கு சர்க்கரைநோயோ, உயர் ரத்த அழுத்தமோ வருமா என்பதை குழந்தைப்பருவ உணவுப்பழக்கமும் வாழ்வியல் முறையுமே தீர்மானித்துவிடுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதனால்தான் குழந்தைப் பருவத்திலிருந்தே ஆரோக்கியமாக வாழப் பழக்க வேண்டியது அவசியமாகிறது.