மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன நோய்... எந்த டாக்டர்? - 4 - பெண்கள்... பிரச்னைகள்... தீர்வுகள்... யாரிடம்?

என்ன நோய்... எந்த டாக்டர்?
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன நோய்... எந்த டாக்டர்?

உங்களுக்காக ஒரு கிளினிக் கைடு

குடும்பத்தில் யாருக்கு என்ன பிரச்னை என்றாலும் கவனிக்க முதல் நபராக நிற்பவள் பெண். அதுவே தனக்கு உடல்நலம் சரியில்லை என்றால் அதை கடைசியாகவே கவனிப்பவளாகவும் இருக்கிறாள், அதுவும் அந்தப் பிரச்னை முற்றியநிலையில்...

‘`குடும்பத்தில் பெண் தன் ஆரோக்கியத்தைச் சிறப்பாகப் பார்த்துக்கொண்டால்தான், அவளால் ஒட்டுமொத்த குடும்பத் தாரின் ஆரோக்கியத்தையும் கவனிக்க முடியும். எனவே ‘இது ஒன்றும் பெரிய விஷயமல்ல’ என எந்தப் பிரச்னையையும் பெண்கள் அலட்சியம் செய்யக்கூடாது’’ என்கிறார் சென்னை யைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர்களின் பங்களிப்பையும் பெண்கள் அவர்களைச் சந்திக்க வேண்டியதன் அவசியத்தையும் விரிவாகப் பேசுகிறார் அவர்.

 நித்யா ராமச்சந்திரன்
நித்யா ராமச்சந்திரன்

மகளிர் மருத்துவரா.... மகப்பேறு மருத்துவரா?

மகளிர் மருத்துவர் என்பவர் `கைனகாலஜிஸ்ட்'. பெண் குழந்தை பிறந்து, பூப்பெய்தியது முதல் அந்தப் பெண் வளர்ந்து, பெரியவளாகி, மெனோபாஸ் காலத்தை எட்டும்வரையிலான அவளது உடல்நலம் தொடர்பான எல்லாப் பிரச்னைகளுக்கும் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரை அணுகலாம்.

மகப்பேறு மருத்துவர் என்பவர் `ஆப்ஸ்டட்ரீஷியன்'... பெண்ணின் கர்ப்ப காலம் தொடங்கி, பிரசவம்வரை பார்த்துக் கொள்பவர் இவர். எம்.பி.பி.எஸ் முடித்ததும் மகளிர் மற்றும் மகப்பேறு துறையைத் தேர்ந்தெடுக்க விரும்புவோர் Obstetrics and Gynecology என்ற படிப்பைப் படிக்கிறார்கள். இதைத் தேர்ந்தெடுக்கும் எல்லா மருத் துவர்களும் மகளிர் மருத்துவத்தையும், மகப் பேறு மருத்துவத்தையும் படிக்கவேண்டும். எல்லோருக்கும் மகளிர் பிரச்னைகளுக்கு மருத்துவம் பார்க்கத் தெரிந்திருப்பதோடு, பிரசவம் பார்க்கவும் தெரிந்திருக்க வேண்டும். படிப்பை முடித்ததும் சிலர், பிரசவம் பார்க்க விரும்பாமல், வேறு சிறப்புப் பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பது உண்டு. உதாரணத்துக்கு குழந்தையின்மை சிகிச்சை, லேப்ராஸ்கோப்பி சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை போன்றவை.

பூப்பெய்தும் பெண்களை மகளிர் மருத் துவரிடம் அவசியம் அழைத்துச் செல்ல வேண்டுமா?

பூப்பெய்தும் வயதிலுள்ள பெண் குழந்தைகளுக்கு பீரியட்ஸ் பற்றிய அடிப்படை விஷயங்களை அம்மா, பாட்டி, உறவினர்கள், ஆசிரியர்கள் போன்றோர் ஓரளவுக்கு சொல்லிக்கொடுத்திருப்பார்கள். சோஷியல் மீடியா மூலமும் இந்தத் தலைமுறை பெண் குழந்தைகள் நிறைய தெரிந்துகொள்கிறார்கள். ஆனாலும் பீரியட்ஸின்போது அதிக அளவிலான ப்ளீடிங் எப்படியிருக்கும், 3-4 நாள்கள் நீடிக்க வேண்டிய ப்ளீடிங், 10 நாள்களைக் கடந்தும் போகிறது என்ற சூழ்நிலைகளில் மகளிர் மருத்துவரை ஆலோசிக்கலாம்.

என்ன நோய்... எந்த டாக்டர்? - 4 - பெண்கள்... பிரச்னைகள்... தீர்வுகள்... யாரிடம்?

எந்தெந்தப் பிரச்னைகளுக்கு மகளிர் மருத்துவரை அணுக வேண்டும்?

ஒவ்வொரு நபருக்கும் குடும்ப மருத்துவர் என ஒருவர் இருப்பார். பெண்களைப் பொறுத்தவரை மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் அவர்களுக்கு குடும்ப மருத்துவர் போன்றவர்தான். திருமணமான, திருமணம் ஆகாத அனைத்துப் பெண்களுக்கும் இது பொருந்தும்.

* பீரியட்ஸ் தொடர்பான பிரச்னைகள்

* பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பு

* தைராய்டு

* உடல்பருமன்

* சிறுநீரகத் தொற்று (புதிதாக தாம்பத்திய உறவில் ஈடுபடுவதால் திருமணமான புதிதில் பெரும்பாலான பெண்களுக்கு இந்தத் தொற்று வரும். இதற்கு சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்)

சாதாரண செரிமான பிரச்னை தொடங்கி, வயிற்றுவலி, மூட்டுவலி என எல்லாவற்றுக்கும் மகளிர் மருத்துவரிடமே ஆலோசனை பெறலாம். அவர் பரிசோதித்துவிட்டு, தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட துறைசார் மருத்துவருக்குப் பரிந்துரைப்பார்.

ப்ரீ ப்ரெக்னன்சி கவுன்சலிங் யாரிடம்?

கர்ப்பத்துக்குத் திட்டமிடும் பெண்களும் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரை கலந்தாலோசிக்கலாம். பதின் பருவத்தில் அவர்களுக்கு சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பு இருந்தாலோ, முறைதவறிய பீரியட்ஸ் இருந் தாலோ, அவர்களும் கர்ப்பத்துக்குத் திட்ட மிடும் முன் மருத்துவ ஆலோசனை பெறலாம்.

30 ப்ளஸ் வயதில் திருமணம் செய்து, அதன் பிறகு கர்ப்பம் தரிக்கும் பெண்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்து வருகிறது. 35 வயதுக்கு மேல் கருத்தரிக்கும் பெண்களுக்கு டௌன் சிண்ட்ரோம் பாதிப்புள்ள குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் தாமதமாகக் கருத்தரிக்கும் பெண்கள் அதிலுள்ள சவால்கள், சிக்கல்கள் குறித்து முன்கூட்டியே மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

பரு, பிக்மென்ட்டேஷன் எனப்படும் மங்கு போன்ற பிரச்னைகளுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்போர், கர்ப்பம் தரிப்பதற்கு முன் அவற்றை நிறுத்த வேண்டி யிருக்கும். அதேபோல நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்வோரும் கர்ப்பத்தின்போது அவற்றைத் தொடர்வது குறித்து முன்கூட்டியே மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

மெனோபாஸ் வயதினர், லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் பெண்கள், தனியே வசிக்கும் பெண்களுக்கான ஆலோசனைகள் அடுத்த இதழில்...

- அலெர்ட் ஆவோம்...

ப்ரீமேரிட்டல் கவுன்சலிங் அவசியமா?

திருமணம் செய்யும் முடிவில் இருப்போர் தங்கள் ஆரோக்கியத்தைத் தெரிந்துகொள்ள மகளிர் மருத்துவரிடம் ஓர் ஆலோசனை பெறலாம். பரம்பரை யாகத் தொடரும் பாதிப்புகள் இருந்தால், திருமணத் துக்கு முன் மகளிர் மருத்துவரை அணுகி அது குறித்து ஆலோசனை பெற வேண்டும்.

நெருங்கிய உறவில் திருமணம் செய்வோருக்கு பிறக்கும் குழந்தைகளிடம் நிறைய பிரச்னைகள் இருப்பது தெரியவந்ததால், கடந்த சில வருடங்களில இத்தகைய திருமணங்கள் வெகுவாகக் குறைந்திருக் கின்றன. திருமணம் செய்துகொள்ளவிருக்கும் ஆணுக்கோ, அவரின் குடும்பத்தாருக்கோ குறிப்பிட்ட உடல்நலக் கோளாறுகள் இருப்பது தெரிந்தால் அது குறித்தும் மகளிர் மருத்துவரிடம் ஆலோசனை பெறு வதன் மூலம் பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை உறுதிசெய்ய முடியும்.