மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன நோய்... எந்த டாக்டர்? 8- இதயமே... இதயமே...

இதயமே... இதயமே
பிரீமியம் ஸ்டோரி
News
இதயமே... இதயமே

உங்களுக்காக ஒரு கிளினிக் கைடு

இதயம் தொட்ட, இதயத்துக்கு நெருக்கமான, இதயத்தை நொறுக்கும்... இப்படிப் பல விஷயங்களையும் இதயத்தோடு ஒப்பிட்டுப் பேசுகிறோம். அந்த அளவுக்கு இதயம் முக்கியத்துவம் பெறுகிறது. மனித உடலின் பிரதான உறுப்புகளில் ஒன்றான இதயம், தன் இயக்கத்தை நிறுத்திக்கொண்டால் மனித வாழ்க்கையும் முற்றுப்பெறுகிறது.

இதயத்தை பாதிக்கும் பிரச்னைகள், அவற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளும் வழிகள், இதய நோய்களின் அறிகுறிகள், அலெர்ட் ஆக வேண்டிய தருணங்கள்...இப்படி எல்லாவற்றையும் விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் மருத்துவர் முகமது இத்ரீஸ்.

இதயம் என்பது யாதெனில்...

‘`மனித உடலின் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்று இதயம். இது நம் நெஞ்சுப் பகுதியில் இருக்கிறது. இது 500 முதல் 600 கிராம் அளவுக்கு சிறியதாகத்தான் இருக் கும். ஆனால் நம் பிறப்பு முதல் இறப்புவரை இதயம் தொடர்ந்து இயங்கிக் கொண்டேதான் இருக்கும்.

இடது, வலது என இதயத்தை இரண்டாகப் பிரிக்கலாம். அசுத்தமான ரத்தம், அதாவது ஆக்ஸிஜன் இல்லாத ரத்தம் வலது பக்க இதயத்துக்கு வரும். அதை அந்தப் பகுதி இதயமானது பம்ப் செய்து நுரையீரலுக்கு அனுப்பும். அங்கு போனதும், நாம் மூச்சை இழுப்பதால் அந்த ரத்தத்தில் ஆக்ஸிஜன் சேர்ந்து சுத்தமாகி இடது பக்க இதயத்துக்கு அனுப்பப்படும். இடது பக்க இதயத்திலிருந்து பம்ப் செய்யப்படுகிற ரத்தம்தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் செல்லும். இந்தச் சுழற்சி நம் வாழ்நாள் முழுவதும் தொடரும்.

ஒவ்வொரு நிமிடமும் நம் இதயமானது 60 முதல் 72 முறை வரை துடிக்கும். இதயம் எந்த அழுத்தத்தில் ரத்தத்தை பம்ப் செய்கிறதோ, அதே அழுத்தத்தில் தான் ரத்தம் நம் மூளைக்கும் போகும். காலின் நுனி நரம்புக்கும் போகும். எனவே இதயச் செயல்பாட்டுக்கு ரத்த அழுத்தமும் முக்கியம், இதயத் துடிப்பும் முக்கியம்.

என்ன நோய்... எந்த டாக்டர்? 8- இதயமே... இதயமே...

மாரடைப்பு மற்றும் பல...

இதயத்தின் மேல் பகுதியில் கரோனரி எனப்படும் ரத்தக்குழாய்கள் இருக்கும். இதயத்தில் நான்கு வால்வு களும் இருக்கும். இவை திறந்து, மூடியபடி இருக்கும். இடது, வலது பக்க இதயத்தைப் பிரிக்க நடுவில் ஒரு தடுப்பு இருக்கும். முதலில் சொன்ன ரத்தக்குழாய் களுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு வந்தால் அதுதான் ஹார்ட் அட்டாக். வால்வுகள் திறந்து, மூடும் பணியைச் சரியாகச் செய்ய வேண் டும். 100 மில்லி ரத்தம் போக வேண்டிய இந்த வால்வில் 50 மில்லிதான் போகிறது, மீதி 50 மில்லி ரத்தம் கசிகிறது என்ற நிலையில் வால்வில் பிரச்னை வரலாம். இதனாலும் இதய நலன் பாதிக்கப்படும்.

இதயத்தில் ஓட்டை விழுமா?

வலது பக்க இதயமும் இடது பக்க இதயமும் தனித்தனியே பிரியாமல் நடுவில் ஓட்டை இருந்தால் அசுத்தமான ரத்தமும் சுத்தமான ரத்தமும் ஒன்றாகக் கலக்க நேரும். இதன் காரணமாகவே பிறக்கும்போது சில குழந்தைகள் நீல நிறத்தில் இருப்பதைப் பார்க்கிறோம். இதைத்தான் இதயத்தில் ஓட்டை இருப்பதாகக் குறிப்பிடுகிறோம்.

இதயம் நிமிடத்துக்கு 72 முறை துடிப்பதை அறிவோம். இதயத்துக்கு உள்ளே ஒரு எலக்ட்ரிகல் லைன் இருக்கும். இதில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் இதயத்துடிப்பிலும் பிரச்னை இருக்கும். 72 முறை துடிக்க வேண்டிய இதயம் 20 முறை துடிக்கும். தலைச்சுற்றி மயங்கி விழுவார்கள். 72 முறைக்கு பதிலாக 100 முறை, அதற்கு மேல் துடிக்கும்போதுதான் நெஞ்சு படபடப்பது போன்று உணர்வதாகச் சொல்வார்கள். இப்படி இதயத்தில் பல பிரச்னைகள் வரலாம்.

இவையெல்லாம் இதய பாதிப்பை உணர்த்தலாம்...

நீரிழிவு, புகைப்பழக்கம், உயர் ரத்த அழுத்தம், பரம்பரையில் இதயக் கோளாறு... இவையெல்லாம் இருப்பவர்களுக்கு ரத்தக்குழாயில் பாதிப்பு வரலாம். எனவே இவர்கள் ரெகுலர் செக்கப் செய்து கொள்ள வேண்டியது முக்கியம். ஹார்ட் அட்டாக்கின் பிரதான அறிகுறி நெஞ்சுவலி. ஆனால் அது மட்டுமன்றி, சிலருக்கு தொண்டை வலி, தாடை வலி, இடது பக்க தோள்பட்டை மற்றும் கையில் வலி வரலாம். சாப்பிட்டு முடித்ததும் வயிற்றுவலி அல்லது ஏப்பம் வருவதுகூட மாரடைப்பின் அறிகுறியாக இருக்கக்கூடும்.

வால்வு கசிவு ஏற்படும்போது களைப்பு இருக்கும். மூச்சுவிடுவதில் சிரமம், கால் மற்றும் வயிற்றில் நீர்கோத்து வீங்கிக்கொள்ளும். முகம் வீங்கலாம். இதயத்தில் ஓட்டை இருக்கும் நிலையில் அசுத்த ரத்தமும் சுத்த ரத்தமும் கலப்பதால் உடல் நீலநிறமாக மாறும். மூச்சுத்திணறல் ஏற்படும். குழந்தை யாக இருந்தால் பால் குடிக்க மாட்டார்கள், அதிகம் வியர்க்கும். விளையாட முடியாமல் சிரமப்படு வார்கள். இதயத் துடிப்பில் பிரச்னை ஏற்படும்போது படபடப்பு, தலைச்சுற்றல், மயக்கம் வரலாம்.

ஹார்ட் வீக் ஆகுமா?

இதயத்துக்கென சராசரியாக பம்ப்பிங் திறன் ஒன்று உண்டு. அது சிலருக்கு சராசரியைவிட குறையும். ஹார்ட் அட்டாக், வால்வு பிரச்னை உள்பட இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பம்ப்பிங் திறன் குறைவதைத் தான் ஹார்ட் வீக்காக இருப்பதாகக் குறிப்பிடு வோம். அதற்கான காரணம் அறிந்து சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும். சாதாரண மருந்து மாத்திரை கொடுப்பதிலிருந்து, பேஸ் மேக்கர் வைப்பது, இதய மாற்று அறுவை சிகிச்சை வரை தீவிரத்தைப் பொறுத்து அதற்குப் பல தீர்வுகள் உள்ளன.

இதயம் பலவீனமானவர்களிடம் அதிர்ச்சி யான, மகிழ்ச்சியான தகவல்களைப் பகிரக் கூடாதா என்ற கேள்வி பலருக்கு உண்டு. அதிகபட்ச உணர்வுகளை இவர்களால் தாங்க முடியாது என்பது உண்மைதான். எனவே சந்தோஷமோ, துக்கமோ, அவர்களை அதிகம் உணர்ச்சிவசப்படுத்தும் விஷயங்களைத் தாங்க முடியாமல் மயங்கி விழ வாய்ப்புண்டு.

ஹார்ட் அட்டாக்கும் உயிரிழப்பும்...

ஏற்கெனவே சொன்னபடி இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் மாரடைப்பு வர வாய்ப்பு உண்டு. இந்த ரத்தக்குழாய்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியமில்லை. இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் எந்த இடத்தில் அடைப்பு ஏற்படுகிறதோ அதற்கேற்ப பாதிப்பு இருக்கும்.

இதயத்தின் பிரதான ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால் அதை `மேஜர் அட்டாக்' என்கிறோம். சிறிய ரத்தக்குழாயில் மட்டும் அடைப்பு ஏற்படும்போது பாதிப்பு குறைவாக இருக்கலாம். அப்படிப்பட்டவர் களுக்கு தனக்கு ஹார்ட் அட்டாக் வந்ததுகூட தெரியாமலிருப்பார்கள். சிலருக்கு லேசான நெஞ்சுவலி, புளித்த ஏப்பம் வந்திருக்கும். அதை வாயுத்தொல்லை என அலட்சியம் செய்திருப்பார்கள். பிற்காலத்தில் வேறு ஏதேனும் விஷயத்துக்காக இசிஜி எடுக்கும் போதுதான் ஏற்கெனவே ஹார்ட் அட்டாக் வந்தது தெரிய வரும். சிலருக்கு பிரதான ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு இதயம் முழுவதும் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் அவர்கள் உயிர் பிழைப்பதே சிரமமாகும். பாதிப்பின் தீவிரம் குறைவாக இருக்கும் போது உயிர் பிழைத்து விடுவார்கள்.

ஹார்ட் அட்டாக்கா... கார்டியாக் அரெஸ்ட்டா?

இதயம் இயங்குவது முழுமையாக நின்று போவதுதான் கார்டியாக் அரெஸ்ட். இதை ஹார்ட் அட்டாக்குடன் குழப்பிக் கொள்ளக் கூடாது. இதயம் இப்படி முழுமையாகச் செயலிழப்பதற்குப் பல காரணங்கள் இருக்க லாம். ஹார்ட் அட்டாக் வந்ததால்கூட இப்படிச் செயலிழக்கலாம். இதயத்துடிப்பு குறைவதாலோ, அதிகரிப்பதாலோகூட இதயம் வேலை செய்வது நின்றுபோகும்.

அலட்சியப்படுத்தக்கூடாத அறிகுறிகள்...

நெஞ்சுவலி, தோள்பட்டை வலி, தாடை வலி இருந்தால் மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம் என்பதால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

ரெகுலராக வாக்கிங் செல்பவராக இருப் பார். தினமும் 2 கி.மீ தூரம் நடக்கும் அவரால் திடீரென ஒரு கிலோமீட்டருக்கு மேல் நடக்க முடியாமல், ஓய்வெடுத்துவிட்டு நடக்க வேண்டி வந்தால் இதயத்தில் பிரச்னை இருக்கக்கூடும். புளித்த ஏப்பம், சாப்பிட்டதும் ஏற்படும் நெஞ்சு, வயிற்று வலி போன்றவை அஜீரணத்தின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். இதயம் தொடர்பான பிரச்னையின் அறிகுறி களாகவும் இருக்கலாம். புகைப்பழக்கம் இருப் பவர்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ள வர்களுக்கு இந்த அறிகுறிகள் வந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

பெண்களுக்கும் ஹார்ட் அட்டாக் ஏன்?

ஆண், பெண் இருவருக்கும் ஹார்ட் அட்டாக் வரும். உடல் உறுதியோடு இருப்பது வேறு, தசை வலிமை என்பது வேறு. பாடி பில்டராக இருப்பார். ஆனால். அவரால் 2 கி.மீ ஓடக்கூட முடியாது. எனவே அவருடைய தாங்கும் திறன் என்பது முக்கியம். பாடி பில்டராகவோ, சிக்ஸ்பேக் வைக்காமலோ உள்ள ஒருவர் சர்வ சாதாரணமாக 5 கி.மீ ஓடுவார். எனவே தசை வலிமையைவிட உடல் உறுதிதான் முக்கியம்.

ஆண்களோடு ஒப்பிடும்போது பெண் களின் ரத்தக்குழாய்கள் சிறிதாக இருக்கும். அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட அதுவே முக்கிய காரணம்.

என்ன நோய்... எந்த டாக்டர்? 8- இதயமே... இதயமே...

ஹார்ட் அட்டாக்கிலிருந்து மீண்ட பிறகு...

ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்துவிட்டால் அவர்களுக்கு ரத்தக்குழாய்களில் அடைப்பு வந்ததை ஏற்றுக்கொண்டாக வேண்டும். அதன் பிறகு அவர்கள் புகைப்பழக்கத்தை அறவே நிறுத்த வேண்டும். ரத்தச் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த அளவுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உட்கார்ந்தபடியே வேலை செய்வோர், உடலியக்கத்தை அதிகப்படுத்த வேண்டும்.வாழ்வியல் மாற்றம் முக்கியம். கொழுப்பில்லாத உணவுப் பழக்கம் முக்கியம். ஹார்ட் அட்டாக்தான் வாழ்வின் இறுதி என அர்த்தமில்லை. வாழ்வியல் முறையில் மாற்றங்களைக் கடைப்பிடித்தால் மாரடைப்பு வந்து 10, 20 ஆண்டுகள் கடந்தும் ஆரோக்கியமாக வாழலாம்.

இதய ஆரோக்கியத்துக்கு...

ரிஸ்க் காரணிகளை கவனிக்கவும். ரத்தச் சர்க் கரை, ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க வேண்டும்.

உடல் பருமன் குறைக்கப்பட வேண்டும்.

உடலியக்கம் மிக மிக முக்கியம். உடற்பயிற்சிகள் அவசியம்.

40 வயதைக் கடந்த எல்லோருக்கும் இதய ஆரோக்கியத்துக்கான வருடாந்தர டெஸ்ட் அவசியம்.

இதய ஆரோக்கியம் அறிய பல டெஸ்ட்டுகள் உள்ளன. எக்கோ, இசிஜி, டிரெட்மில் ஆகிய மூன்று டெஸ்ட்டுகள் அவசியமானவை. பிரச்னைகள் இருந்தால் 99 சதவிகிதம் இந்த மூன்றிலும் தெரிந்துவிடும். ரிஸ்க் காரணிகள் இருந்தாலோ, குடும்பப் பின்னணியில் இதய பாதிப்பு இருந்தாலோ, 50 ப்ளஸ் வயதில் இருந்தாலோ கரோனரி ஆஞ்சியோ கிராம் செய்ய வேண்டியிருக்கும்.

சிகிச்சைகள்...

தீவிரமற்ற ரத்தக்குழாய் அடைப்புக்கு மருந்து மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். இவை அடைப்பை குணப்படுத்தாது. அடைப்பை மேலும் தீவிரப்படுத்தாமல் தடுக்கும். இது தவிர, பாதிக்கப்பட்ட நபரின் ரத்தக்குழாய் அடைப்பின் தீவிரத்தைப் பொறுத்து ஸ்டென்ட், பைபாஸ் போன்றவை தேவையா என முடிவு செய்யப்படும்.

அடுத்த இதழில் எலும்பியல் மருத்துவம்

- அலெர்ட் ஆவோம்...