Published:Updated:

Doctor Vikatan: பிரெக்னன்சி டெஸ்ட்டில் பாசிட்டிவ்... ஆனாலும் ப்ளீடிங்... என்ன காரணம்?

Pregnancy test (Representational Image)
News
Pregnancy test (Representational Image) ( Pexels )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: பிரெக்னன்சி டெஸ்ட்டில் பாசிட்டிவ்... ஆனாலும் ப்ளீடிங்... என்ன காரணம்?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Pregnancy test (Representational Image)
News
Pregnancy test (Representational Image) ( Pexels )

பிரெக்னன்சி டெஸ்ட்டில் பாசிட்டிவ் என்று வந்துள்ளது. ஆனாலும் எனக்கு ப்ளீடிங் ஆகிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது?

- கே.மங்கை, விகடன் இணையத்திலிருந்து.

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

பிரெக்னன்சி டெஸ்ட் பாசிட்டிவ் ஆன பிறகும் ப்ளீடிங் ஆவதாகக் குறிப்பிட்டுள்ள நீங்கள் அது எத்தனையாவது மாதத்தில் என்று குறிப்பிடவில்லை. உதாரணத்துக்கு, முதல் மூன்று மாதங்களில் (ட்ரைமெஸ்டர்) ப்ளீடிங் ஆனால் அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அதை `இம்ப்ளான்ட்டேஷன் ப்ளீடிங்' என்று சொல்வோம். அதாவது, கர்ப்பம் உறுதியாகியிருக்கும். ஆனால், ப்ளீடிங்கும் இருக்கும். கருவானது கர்ப்பப்பையில் பதிந்து வளர்வதையே `இம்ப்ளான்ட்டேஷன்' என்று சொல்கிறோம்.

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி
மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

அப்படிப் பதியும்போது சிலருக்கு லேசான ரத்தப்போக்கு இருக்கலாம். பெரும்பாலும் இது அவர்களின் மாதவிடாய் நாள்களிலேயே ஆவதால் பலரும் இதை வழக்கமான பீரியட்ஸ் என்றே நினைத்துக்கொள்வார்கள். ஆனால், அவர்களுக்கு கர்ப்பப் பரிசோதனை செய்தால் பாசிட்டிவ் என்று வரும். `ஆன் எம்ப்ரியானிக்' பிரெக்னன்சி (Anembryonic pregnancy) எனப்படும் முறையாக உருவாகாத கர்ப்பத்திலும் இப்படி ப்ளீடிங் இருக்கலாம்.

கருச்சிதைவின் காரணமாகவும் ப்ளீடிங் ஆகலாம். அபார்ஷன் ஆகிக்கொண்டிருக்கிற நிலையில் ப்ளீடிங் இருக்கும். அந்த நிலையில் நீங்கள் பிரெக்னன்சி டெஸ்ட் செய்து பார்த்தாலும் கரு முழுவதுமாகக் கலைகிற வரை ரிசல்ட் பாசிட்டிவ் என்றே காட்டும். அடுத்து `எக்டோபிக் பிரெக்னன்சி' எனப்படும் கருக்குழாய் கர்ப்பமும் ப்ளீடிங் ஆவதற்கான காரணங்களில் ஒன்று. அதாவது, கருவானது கர்ப்பப்பையில் பதியாமல் கருக்குழாயில் பதிந்து வளர்வதே எக்டோபிக் கர்ப்பம்.

பிரெக்னன்சி டெஸ்ட் பாசிட்டிவ், கூடவே அடி வயிற்றுவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் போன்றவை இருக்கலாம். ஸ்கேன் செய்து பார்த்தால் கர்ப்பப்பையில் கரு தெரியாமல், கருக்குழாயில் தெரிந்தால் அதை எக்டோபிக் கர்ப்பம் என்போம். இது உடனடியாகக் கவனிக்கப்படாவிட்டால் கருக்குழாய் வெடித்து உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். கருக்குழாயில் கருவானது வளர போதுமான வசதி இல்லாமல் கருக்குழாய் அழற்சி ஏற்பட்டு அது வெடிக்கலாம்.

pregnancy expectation
pregnancy expectation

எனவே, மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால் அது எக்டோபிக் கர்ப்பமா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு ஸ்கேன் செய்யும்போது கரு எந்த இடத்தில் இருக்கிறது என்பதைத் தெளிவாகச் சொல்ல முடியாமல் போகலாம். அந்நிலையில் அவர்களுக்கு `சீரியல் பீட்டா ஹெச்சிஜி' (serial beta-hCG) என்ற ரத்தப் பரிசோதனை செய்து பார்த்து கருவானது எங்கே உருவாகியிருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும்.

அடுத்து முத்துப்பிள்ளை கர்ப்பம் என்ற நிலையிலும் பிரெக்னன்சி டெஸ்ட் பாசிட்டிவ் என்று வந்த பிறகும், ப்ளீடிங் இருக்கலாம். ஸ்கேன் செய்து பார்த்தால் அது முத்துப்பிள்ளை கர்ப்பம் எனத் தெரியவரும். இது குழந்தை மாதிரி வளராது என்பதால் உடனே அகற்றப்பட வேண்டும். அலட்சியமாக விட்டால் அதீத ரத்தப் போக்கு ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

கர்ப்பப்பை வாய்ப்பகுதியில் புண் இருந்தாலும் ப்ளீடிங் இருக்கலாம். அந்தப் பகுதியில் அதிகமான ரத்த ஓட்டம் இருப்பதால் தாம்பத்திய உறவுக்குப் பிறகோ, மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகோ கூட லேசான ரத்தப்போக்கு இருக்கலாம். கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் ப்ளீடிங் ஆக இவையெல்லாம்தான் காரணங்கள்.

Pregnancy
Pregnancy

அடுத்தடுத்த மாதங்களில் ப்ளீடிங் ஆக, நஞ்சுப் பகுதி கர்ப்பப்பை வாயின் கீழ்ப்பகுதியில் பதிந்திருந்தாலோ, நஞ்சு பிரிந்திருந்தாலோகூட ப்ளீடிங் ஆகலாம். எனவே, நீங்கள் கர்ப்பத்தின் எந்த மாதத்தில் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்கு ஏற்படும் ப்ளீடிங்கின் காரணம் அறிந்துதான் சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும்.