Published:Updated:

Doctor Vikatan: தாம்பத்திய உறவில் நாட்டமில்லாமல் இருக்கிறேன்; இதனால் பல பிரச்னைகள்; தீர்வு உண்டா?

Woman (Representational Image)
News
Woman (Representational Image) ( Photo by cottonbro from Pexels )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: தாம்பத்திய உறவில் நாட்டமில்லாமல் இருக்கிறேன்; இதனால் பல பிரச்னைகள்; தீர்வு உண்டா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Woman (Representational Image)
News
Woman (Representational Image) ( Photo by cottonbro from Pexels )

எனக்குத் திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன. தாம்பத்திய உறவில் சிறிதும் நாட்டமில்லாமல் இருக்கிறது. இதனால் கணவருடன் எப்போதும் பிரச்னை வருகிறது. இதற்கான காரணம், தீர்வுகளைச் சொல்ல முடியுமா?

- பாரதி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் ஸ்ரீதேவி
மருத்துவர் ஸ்ரீதேவி

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

``உங்களுடைய வயது, எத்தனை நாள்களாக உங்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது, சமீபத்தில் வந்த பிரச்னையா, பல நாள்களாகத் தொடர்வதா போன்ற தகவல்களை நீங்கள் குறிப்பிடவில்லை. அதேபோல நீங்கள் வேறு ஏதேனும் மருந்துகள் எடுத்துக்கொள்பவரா, உங்களுக்கு வேறு உடல்நலப் பிரச்னைகள் உள்ளனவா என்றும் தெரியவில்லை.

பொதுவாக, இப்படி தாம்பத்திய உறவில் ஈடுபாடில்லாத நிலையை `ஹைப்போஆக்டிவ் செக்ஸுவல் டிசையர் டிஸ்ஆர்டர்' (Hypoactive Sexual Desire Disorder) என்று சொல்வோம். அதாவது, இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டோருக்கு தாம்பத்திய உறவில் மிகக்குறைவான நாட்டமோ, நாட்டமே இல்லாமலோ இருக்கும். அதாவது, அந்த நபருக்கு தன் துணையுடனான உறவே பாதிக்கப்படுகிற அளவுக்கு அந்த நாட்டமின்மை தீவிரமாக இருக்கும்.

உங்களுக்கு மன அழுத்தம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். தீவிர மன அழுத்தமோ, உங்கள் துணையுடனான மனஸ்தாபமோ, இருவருக்கும் இடையில் தீர்க்க முடியாத பிரச்னைகளோ இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். அப்படி இருந்தாலும் தாம்பத்திய உறவில் நாட்டமில்லாமல் போகலாம்.

அடுத்தது உங்கள் உடல் குறித்த பார்வை. அதாவது, உங்கள் உடலைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் தாழ்வு மனப்பான்மையோ, நெகட்டிவ் எண்ணமோ இருந்தாலும் உறவில் நாட்டமில்லாமல் போகலாம். பிறப்புறுப்பிலோ, மார்பகங்களிலோ ஏதேனும் அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருப்பதும் இதற்கொரு காரணம்.

சில நேரங்களில் வேலைப்பளு காரணமாக ஏற்படும் அதீத களைப்பு, சோர்வும் உறவில் நாட்டமின்மைக்கான காரண மாகலாம். சிறுவயதில் பாலியல் ரீதியான மோசமான நிகழ்வுகள், அனுபவங்களைச் சந்தித்திருந்தாலோ, செக்ஸ் தொடர்பான ஹார்மோன்கள் சரியாகச் சுரக்காமலிருந்தாலோ, தைராய்டு பாதிப்பிருந்தாலோ, புற்றுநோய், நீரிழிவு, இதய நோய்கள், மல்ட்டிபுள் ஸ்கிலோரெசிஸ் போன்ற பாதிப்புகள் இருந்தாலோ, சிறுநீர்ப்பை பாதிப்பு இருந்தாலோகூட தாம்பத்திய உறவில் விருப்பமின்மை ஏற்படலாம்.

Woman (Representational Image)
Woman (Representational Image)
Photo by Nicolas Postiglioni from Pexels

சிலருக்கு தீவிர நோய்கள் இருக்கலாம். உதாரணத்துக்கு மனநல பாதிப்புகளுக்காக ஆன்டி டிப்ரெசன்ட் மருந்துகள் எடுத்துக்கொள்பவராக இருக்கலாம். அந்த மருந்துகளின் விளைவாலும் உறவில் நாட்டம் குறையலாம். உயர் ரத்த அழுத்தத்துக்குப் பரிந்துரைக்கப்படும் சில மருந்துகளின் விளைவாலும் நாட்டம் குறையும். அப்படி இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகளை நிறுத்தாமல் வேறு மருந்துகளை மாற்றி வாங்கி உபயோகிக்கலாம். புற்றுநோய்க்கு கொடுக்கப்படும் கீமோதெரபி மற்றும் கருத்தடை மாத்திரை உபயோகம்கூட இதற்குக் காரணமாகலாம்.

கர்ப்பகாலம், தாய்ப்பால் ஊட்டுவது போன்றவற்றால் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களும் காரணமாகலாம். மெனோபாஸ் காலகட்டம் அல்லது பெரிமெனோபாஸ் எனப்படும் மெனோபாஸுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்தாலும் ஹார்மோன் அளவுகள் மிகக் குறைவாக இருப்பதன் காரணமாக தாம்பத்திய உறவில் ஈடுபாடின்மை ஏற்படும்.

எனவே, இவற்றில் எந்தக் காரணத்தால் உங்களுக்கு உறவில் நாட்டமில்லை என்று தெரிந்தால்தான் அதற்கேற்ற சரியான சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும். நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள்தான் காரணம் என்றால், அவற்றை மாற்றி எடுத்துக்கொள்வதன் மூலம் இதற்குத் தீர்வு கிடைக்கும். உறவுச்சிக்கல்கள், ஸ்ட்ரெஸ் போன்றவற்றுக்கு கவுன்சலிங் மூலம் தீர்வு காணலாம். ஆல்கஹால், சிகரெட் பழக்கங்கள் இருந்தால் தவிர்க்க வேண்டும். ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதும் இந்த விஷயத்தில் மிகவும் அவசியம். ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி போன்றவையும் தாம்பத்திய உறவில் நாட்டத்தை அதிகரிக்கும். சிலருக்கு சிகிச்சை தேவைப்படலாம்.

Woman (Representational Image)
Woman (Representational Image)
Photo by Masha Raymers from Pexels

உதாரணத்துக்கு, மெனோபாஸ் காலத்தில் இருப்போருக்கு ஹார்மோன் தெரபி தேவைப்படலாம். ஆனால், அதை எல்லோருக்கும் பரிந்துரைக்க முடியாது. மருத்துவ ஆலோசனையின் பேரில், தேவைப்படுவோருக்கு தேவைப்படும் அளவு மட்டுமே கொடுக்க வேண்டும். உதாரணத்துக்கு, தாம்பத்திய உறவில் நாட்டம் குறைவாக உள்ளவர்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஜெல், ஸ்பிரே, பேட்ச்சஸ், டெஸ்ட்டோஸ்டீரான் பேட்ச்சஸ் போன்றவற்றைப் பரிந்துரைப்பார்கள்.

ஆனால், இவை எல்லாமே காரணங்களைத் தெரிந்துகொண்ட பிறகு, பரிந்துரைக்கப்படும் சிகிச்சைகள். எனவே, முதலில் உங்கள் விஷயத்தில் இதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டறியுங்கள். அதன்பிறகு, மருத்துவ ஆலோசனையோடு தகுந்த சிகிச்சையைப் பின்பற்றுங்கள்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?