உணவு ஊட்டும்போதும், தொட்டிலில் ஆட்டும்போதும் குழந்தைகள் தொடர்ந்து "ப்பா... பா... ம்மா... மா... த்தா...தா..." என ஏதாவது ஒரு ஒலியை எழுப்பிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் தங்களுக்குத் தாங்களே ஏதோ சந்தோஷமாகப் பேசிக்கொண்டும் இருக்கின்றனர் அல்லவா?! இந்த பொருளற்ற ஒலி மற்றும் சிரிப்பு blabbering என அழைக்கப்படுகிறது.
இதையே பெரியவர்களாகிய நாம் செய்தால்..? நம்மை ஏளனமாகப் பார்க்கும் மற்றவர்கள் "He speaks gibberish" என்பார்கள்.
உண்மையில் ஜிப்பரிஷ் என்றால் உளறல்என்று தான் அர்த்தம். தொடர்ந்து உளறிக்கொண்டே இருக்கும் குழந்தை, தான் மகிழ்ச்சியுடன் இருப்பதுடன் தன்னுடன் இருப்பவர்களையும் மகிழ்விக்கவும் செய்வதைப் போல, வளர்ந்த நாமும் உளறத் துவங்குகையில் நாமும் மகிழ்வதுடன் பிறரையும் மகிழ்விக்கத் துவங்குவோம் என்கிறார் ஓஷோ.
உண்மையில் ஜிப்பரிஷ் என்ற வார்த்தை ஜப்பார் என்ற சூஃபி துறவியின் பெயரிலிருந்து தான் வந்ததாம்.

"மனிதனது வாழ்வும், இருப்பும் அர்த்தமற்ற ஜிப்பரிஷ் போன்றதுதான்" என்று சொன்ன சூஃபி ஜப்பார் அதை உணர்தத மேற்கொண்ட தியான வழிமுறை மிகவும் வித்தியாசமானது. தனது ஆயிரக்கணக்கான சீடர்களுடன் ஒவ்வொரு ஊருக்கும் பயணம் மேற்கொண்ட சூஃபி ஜப்பார், கூடியிருக்கும் மக்களின் கேள்விகளுக்கெல்லாம், அர்த்தமற்ற சப்தங்களால் பதிலளித்திருக்கிறார்.
அவரிடம்,"கடவுள் இருக்கிறாரா..?" என்று கேட்டாலும் உளறல்தான், "மனிதன் இருக்கிறானா..?" என்று கேட்டாலும் உளறல்தான். தொடர்ந்து வேகமாக உளறிக்கொண்டே இருக்கும் அவரது குரலில் மொழி இருக்காது, இடைவெளி இருக்காது, முற்றுப்புள்ளியும் இருக்காது. சமயங்களில் கேள்விகளுக்கு பதிலே கூறாமல் தலைகீழாக நின்றுகொள்வார், சிரித்துக் கொண்டே இருப்பார் அல்லது பறவைகளின் ஒலியை எழுப்புவார். ஆனால், சிறிது நேரத்தில் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு, கண்களை மூடி அமைதியாகத் தியானம் செய்து, பின்பு அந்த இடத்திலிருந்து புறப்பட்டு விடுவார்.
சூஃபிகளுக்கே உரித்தான கவிதை, நடனம், பாடல்கள், அருளுரை என எந்தவிதமான உலக இணைப்பும் ஜப்பாரிடம் இருக்காது. இவ்வாறு சூஃபி ஜப்பார் பேசிய அர்த்தமற்ற மொழியைத் தான், அவரது பெயரில் 'ஜிப்பரிஷ்' என அழைக்கத் தொடங்கிய அவருடைய சீடர்கள், பின்பு அதையே பின்பற்றத் தொடங்கினர்.
இதையே தியானமுறையாக தமது வகுப்புகளில் பயிற்றுவித்த ஓஷோ, "No mind... A Meditative Therapy" என்ற தனது உரையில், "இந்த உளறல்கள் மூலம் ஜப்பார், அநேக மக்கள் முழுமையான மன அமைதியுடன் இருப்பதற்கு உதவினார். மனதில் தோன்றுவதை எல்லாம் உளறிக்கொண்டே இருங்கள்... உங்கள் மனதால் எவ்வளவு நேரம் தான் பேசமுடியும்? அனைத்தையும் கொட்டித் தீர்த்தவுடன் மனம் காலியாகி, லேசாகிவிடும். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக, ஓர் ஆழ்ந்த வெறுமையில் விழிப்புணர்வு என்னும் ஒரு ஒளிச்சுடர் தோன்றும். உண்மையில் உங்கள் மனது எப்போதும் இந்த தேவையற்ற ஜிப்பரிஷ் எனும் குப்பைகளால், அழுக்குகளால் சூழப்பட்டிருக்கிறது. இந்த ஜிப்ரிஷ்ஷைத்தான் நீங்கள் வெளியே எடுத்துவிட வேண்டும். அதுதான் உங்களின் விஷம்!" என்கிறார்.

இந்த ஜிப்பரிஷ் என்ற உளறல் மெடிட்டேஷன், "நான், எனது, என்னுடையது" என்ற சுயநலப் போக்கை மாற்றி, உள்ளே நீண்ட காலமாக அடக்கி வைக்கப்பட்டிருக்கும் கோபம், குற்ற உணர்வு, துயரம், ஆற்றாமை ஆகியவற்றை வெளியேற்றி, மனதை சாந்தப்படுத்தி, தன்னம்பிக்கையைக் கூட்டுகிறது என்பதை மனோதத்துவமும் ஒப்புக்கொள்கிறது. யோசித்துப் பார்த்தால், blabber என்ற நிலையில் இருக்கும் குழந்தை தனது கடினமான உழைப்பால் தனது நியூரோ லிங்விஸ்டிக்ஸ் என்ற மொழித்திறனை கற்றுக்கொள்கிறது. அந்தக்குழந்தை, வளரும்போது, தான் பிரயோகிக்கும் வார்த்தைகளாலேயே பெரும் பிரச்னைகளை பிற்காலத்தில் சந்திக்கவும் நேரிடுகிறது.
அந்த வார்த்தைகளை எல்லாம் இந்த gibberish என்ற உளறல் மூலமாக உதறித் தள்ளும்போது அவன் மீண்டும் குழந்தை ஆகிறான் என்பதும் புரிகிறது.
உலகத்தில் எப்போதும் ஆனந்தமாக இருப்பது குழந்தையும், மன நிலை பிறழ்ந்தவர்களும்தான் என்கிறார்கள் ஞானிகள். அப்படி நாமும் ஆனந்தமாக இருக்க மறுபடியும் குழந்தையாக மாற முடியாது. ஆனால், குழந்தையைப் போல மகிழ்ச்சியுடன் இருக்க, இந்த ஜிப்பரிஷ் என்ற மொழி உதவும் என்றால் அதைக் கற்றுக் கொள்வோமே... அதிலென்ன தவறு இருக்கப் போகிறது?
#MindfulMeditation