கோவிட் பிஎஃப்7 வைரஸின் பாதிப்பு சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அடுத்த 40 நாள்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

டிசம்பர் 24, 26 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு வந்த சர்வதேச பயணிகளில் 6,000 பேருக்கு, ரேண்டம் முறையில் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 39 பேருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து இந்த அறிவுறுத்தல்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இந்நிலையில் சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் நோயாளிகள் 'ஏர் சுவிதா' எனப்படும் சுய அறிவிப்புப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் 72 மணி நேரத்துக்கு முன்பு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்த ரிப்போர்ட்டையும் சமர்ப்பிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாலும், முந்தைய தொற்று பாதிப்பால் இயற்கையாகவும் கோவிடுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கும். இதன் காரணமாக, இந்தியாவில் கோவிட் புதிய அலை ஏற்பட்டாலும் உயிரிழப்புகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
என்ன காரணம்?
இதற்கு முந்தைய அலைகள் தாக்கத்தின் முறைகளை (pattern) வைத்துப் பார்க்கும்போது, கிழக்கு ஆசியாவில் அலையின் தாக்கம் ஏற்பட்ட 30-35 நாள்களில் இந்தியாவிலும் பாதிப்புகள் ஏற்படத் தொடங்கியிருக்கின்றன. அந்த அடிப்படையில் ஜனவரி மாதத்தில் இந்தியாவில் கோவிட் பாதிப்புகள் அதிகரிக்கும் என்றும், அடுத்த 40 நாள்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

சில நாடுகளில் கோவிட் பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட், மத்திய அரசுக்கு 2 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் நாடு முழுவதும் கோவிட் சிகிச்சைக்கான கட்டமைப்பு வசதிகள், மனிதவளம், சிகிச்சை முறைகள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளனவா என்பது குறித்த ஒத்திகை நடைபெற்று முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.