Published:Updated:

Doctor Vikatan: பிரசவத்துக்குப் பிறகு சிறுநீர்க் கசிவு; பிரச்னை தீர என்ன வழி?

 (Representational Image)
News
(Representational Image)

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: பிரசவத்துக்குப் பிறகு சிறுநீர்க் கசிவு; பிரச்னை தீர என்ன வழி?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

 (Representational Image)
News
(Representational Image)

என் வயது 34. சிசேரியன் பிரசவத்தில் குழந்தை பிறந்து 5 வருடங்கள் ஆகின்றன. அடிக்கடி சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. வேலைக்குச் செல்லும் எனக்கு இது தர்மசங்கடமாக உள்ளது. தீர்வு என்ன?

- மஞ்சுளா (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் ஸ்ரீதேவி
மருத்துவர் ஸ்ரீதேவி

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

``அடிக்கடி சிறுநீர்க் கசிவு ஏற்படுவதாகச் சொல்லியிருக்கிறீர்கள்... ஆனால், எந்த மாதிரியான வேலைகளைச் செய்யும்போது அப்படி ஏற்படுகிறது என்ற விவரம் இல்லை. உதாரணத்துக்கு இருமும்போது, தும்மும்போது, சிரிக்கும்போதெல்லாம் இப்படி ஏற்பட்டால் அதை `ஸ்ட்ரெஸ் இன்கான்டினென்ஸ்' என்று சொல்வோம். அதாவது இருமும்போது, தும்மும்போதெல்லாம் வயிற்றுப் பகுதியின் அழுத்தம் அதிகமாகும்போது, சிறுநீரை சிறுநீர்ப்பை தேக்கிவைக்காமல், சிறுநீர்க்குழாய் வழியே வெளியேற்றுவதைத்தான் `ஸ்ட்ரெஸ் இன்கான்டினென்ஸ்' என்று சொல்கிறோம். அந்த சிறுநீர்க்குழாயைச் சுற்றியுள்ள தசைகள் பலவீனமாக இருப்பதுதான் இதற்கான முதல் காரணம்.

சுகப்பிரசவமானவர்கள், நீண்ட நேரம் பிரசவவலியில் இருந்திருந்தால் அந்தப் பகுதியின் தசைகள் விரிந்து பலவீனமாகியிருக்கலாம். ஆனால், உங்களுக்கு சிசேரியன் என்கிறீர்கள்.

ஆனால், நீண்டநேரம் சுகப்பிரசவத்துக்கான முயற்சிகளை மேற்கொண்டுவிட்டு, பிறகு சிசேரியன் செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. அப்படிச் செய்திருந்தால் சுகப்பிரசவத்தில் ஏற்படக்கூடிய சிறுநீர்க்குழாய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.

`ஸ்ட்ரெஸ் இன்கான்டினென்ஸ்' பிரச்னை பொதுவாக பிரசவமானதும் சில பெண்களுக்கு இருக்கும். சில மாதங்களில் சரியாகிவிடும். அவர்கள் கீகெல் எனப்படும் இடுப்புப் பகுதிக்கான பயிற்சிகளைச் செய்வதன் மூலம் சரியாகும்.

நீரிழிவு, உடல்பருமன் போன்றவற்றாலும் சிறுநீர்க்கசிவு ஏற்படலாம். எடை அதிகமாக இருந்தால் அதைக் குறைக்க வேண்டும். `அர்ஜ் இன்கான்டினென்ஸ்', `ஓவர்ஃப்ளோ இன்கான்டினென்ஸ்' என சிறுநீர்க்கசிவில் வேறு சில நிலைகளும் உள்ளன. அவற்றுக்கும் நீங்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் முதலில் மருத்துவரை அணுகி இதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டால்தான் சிகிச்சையைத் தொடங்க முடியும்.

Woman (Representational Image)
Woman (Representational Image)
Photo by cottonbro from Pexels

எடையைக் குறைத்து, கீகெல் பயிற்சிகளை மேற்கொண்டும் இந்தப் பிரச்னை சரியாகவில்லை என்றால் அறுவைசிகிச்சை உங்களுக்குப் பலன் தரலாம். கர்ப்பப்பை இறக்கத்தாலும் சிறுநீர்க்கசிவு ஏற்படலாம். சிறுநீர்ப் பரிசோதனை, சிறுநீர் கல்ச்சர் பரிசோதனை போன்ற யூரோடைனமிக் ஸ்டடி உங்களுக்குத் தேவைப்படலாம். மருத்துவர் அது குறித்து உங்களுக்கு வழிகாட்டுவார்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?