Published:Updated:

Doctor Vikatan: தேங்காய் சாப்பிட்டால் நீரிழிவு, கொலஸ்ட்ரால் பிரச்னைகள் வருமா?

Coconut
News
Coconut ( Photo by Tijana Drndarski on Unsplash )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: தேங்காய் சாப்பிட்டால் நீரிழிவு, கொலஸ்ட்ரால் பிரச்னைகள் வருமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Coconut
News
Coconut ( Photo by Tijana Drndarski on Unsplash )

சர்க்கரைநோய் உள்ளவர்கள் தேங்காயைத் தவிர்க்க வேண்டுமா? தேங்காயை பச்சையாகச் சாப்பிட்டால் பிரச்னை இல்லை. கொதிக்க வைத்தால்தான் பிரச்னை, தேங்காய்ப்பால்தான் ஆபத்து என்றெல்லாம் சொல்கிறார்களே... அப்படியா? கேரளாவிலும் இலங்கையிலும் தேங்காய் இல்லாத சமையலே இல்லை. அவர்களுக்கெல்லாம் வராத நீரிழிவும் கொலஸ்ட்ராலும் நமக்கு மட்டும் வருமா?

- மிதுன் (விகடன் இணையத்திலிருந்து)

ஸ்ரீமதி வெங்கட்ராமன்
ஸ்ரீமதி வெங்கட்ராமன்

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

``தேங்காய் மிகவும் நல்லது. நீங்களே உங்கள் கேள்வியில் குறிப்பிட்டுள்ளபடி தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கையில் தேங்காய் என்பது பாரம்பர்யமாகப் பயன்படுத்தப்படுவது. தேங்காயில் நார்ச்சத்து மிக அதிகம்.

மலச்சிக்கல் பிரச்னை இல்லாமல் இருக்க நார்ச்சத்து மிகவும் அவசியம். இயற்கையான எந்த உணவுப் பொருளுமே நல்லதா கெட்டதா என்ற விவாதத்துக்கு அப்பாற்பட்டது. குறிப்பிட்ட அந்த உணவுப்பொருள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வயதைப் பொறுத்து அவரது உடல் நலத்துக்கு ஏற்றதா என்று பார்க்க வேண்டும்.

அப்படிப் பார்த்தால் உங்களுக்கு குடும்ப பின்னணியில் சர்க்கரை நோயோ, கொலஸ்ட்ராலோ, இதய பிரச்னைகளோ இருக்கின்றனவா என்று பார்த்து உங்களுடைய உணவுமுறைக்கு தேங்காய் ஏற்றதா என்பதை வைத்துதான் இதற்கான பதிலை அளிக்க முடியும்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். அந்த வகையில் சர்க்கரை நோயாளிகளும் தேங்காயைத் தவிர்க்க தேவை இல்லை. ஆனால், அளவு என்பது முக்கியம். 100 கிராம் தேங்காயில் 444 கலோரிகள் உள்ளன. 4.5 கிராம் புரோட்டீன் உள்ளது. நார்ச்சத்தும் உள்ளது. அதுவே கொப்பரைத் தேங்காயில் 660 கலோரிகள் உள்ளன.

பொதுவாக நம் சமையலில் தேங்காய்த் துருவலை சாம்பார், கூட்டு, அவியல், துவையல், சட்னி போன்றவற்றுக்குப் பயன்படுத்துகிறோம். சர்க்கரை நோயாளிகள் தினமும் தேங்காய் சட்னி, தேங்காய் துவையல் போன்று எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கலாம்.

தேங்காய்
தேங்காய்

கொப்பரைத் தேங்காயில் கலோரிகள் அதிகம் என்றாலும் நம்முடைய சமையலில் அதை அடிக்கடி பயன்படுத்துவது இல்லை. தேங்காயை பச்சையாகச் சாப்பிடுவது சிறந்ததா, சமைத்துச் சாப்பிடுவது சிறந்ததா என்ற கேள்விக்கும் அவரவர் உடல்நிலையைப் பொறுத்தே பதில் சொல்ல முடியும்.

குடல் சம்பந்தமான பிரச்னைகள் உள்ளவர்களுக்கு தேங்காயை பச்சையாகச் சேர்த்துக்கொள்வது ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். அப்படிப்பட்டவர்கள் அதைப் பச்சையாகச் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

மற்றவர்கள் அதைத் தாராளமாகப் பச்சையாகச் சேர்த்துக் கொள்ளலாம். பச்சையாகச் சேர்த்துக்கொள்வதற்கும் கொதிக்க வைத்து சேர்த்துக்கொள்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

தேங்காய்ப்பால் நல்லதா என்று கேட்டிருக்கிறீர்கள். பெரும்பாலும் நம்முடைய சமையலில் தினசரி தேங்காய்பால் பயன்படுத்தப்படுவதில்லை. குருமா, பாயசம் என என்றோ ஒருநாள்தான் தேங்காய்ப்பாலை சமையலுக்குப் பயன் படுத்துகிறோம். தேங்காய்ப்பாலில் நார்ச்சத்து கிடையாது. எனவே, அதை அடிக்கடி பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். மற்றபடி தேங்காய்ப்பால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடல் சார்ந்த பிரச்னைகள் போன்றவற்றுக்கு மிகவும் நல்லது.

Coconut
Coconut

சர்க்கரை நோயாளிகளும் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களும் வாரத்துக்கு ஒருநாள் தேங்காய்ப்பால் சேர்த்துக்கொள்ளலாம். தேங்காய் சேர்த்துக் கொள்வதால் நீரிழிவும், கொலஸ்ட்ரால் பிரச்னையும் வந்துவிடாது. உங்கள் குடும்ப பின்னணியில் சர்க்கரைநோய், அதிக கொலஸ்ட்ரால் பிரச்னை இருந்தால் நீங்கள் அடிக்கடி தேங்காய் சேர்த்துக்கொள்வதைத் தவிர்த்தால் போதுமானது. மற்றபடி நீரிழிவுக்கும் கொலஸ்ட்ராலுக்கும் தேங்காய் நேரடி காரணமாக அமைவதில்லை."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?