Published:Updated:

Doctor Vikatan: அடிக்கடி வயிற்று உப்புசம்; ஃப்ரூட் சால்ட்டை நீரில் கலந்து குடிப்பது சரியானதா?

Stomach (Representational Image)
News
Stomach (Representational Image) ( Image by Darko Djurin from Pixabay )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: அடிக்கடி வயிற்று உப்புசம்; ஃப்ரூட் சால்ட்டை நீரில் கலந்து குடிப்பது சரியானதா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Stomach (Representational Image)
News
Stomach (Representational Image) ( Image by Darko Djurin from Pixabay )

புழுங்கல் அரிசி நல்லதா... பச்சரிசி நல்லதா? தினமும் மைதா ரொட்டி சாப்பிடலாமா? அடிக்கடி வயிற்று உப்புசம் வருகிறது. இதிலிருந்து விடுபட பாக்கெட்டுகளில் வரும் பிரபல நிறுவனத் தயாரிப்பான ஃப்ரூட் சால்ட்டை நீரில் கலந்து குடிப்பது சரியானதா?

- அப்துல ரஷீத் (விகடன் இணையத்திலிருந்து)

ஸ்ரீமதி வெங்கட்ராமன்
ஸ்ரீமதி வெங்கட்ராமன்

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

``பச்சரிசி என்பது முழுவதும் பாலிஷ் செய்யப்படுவது. அதாவது நெல் அறுவடைக்குப்பின் நெல்லை, வேக வைக்காமல், நேரடியாக ஆலையில் அரைக்கும்போது கிடைக்கும் அரிசியே பச்சரிசி. அப்படி அரைக்கும்போது அதன் மேல்புறத்தில் உள்ள சத்துகள் அனைத்தும் போய்விடும். சைவ உணவுக்காரர்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு வரும் வாய்ப்புகள் மிக அதிகம். அதுவே கைக்குத்தல் அரிசியில் அந்த மேல்தோல் பாலிஷ் செய்யப்படாததால் அதில் அனைத்து வைட்டமின்களும் தாதுக்களும் அப்படியே கிடைக்கின்றன. அந்த வகையில் கைக்குத்தல் பச்சரிசி, புழுங்கலரிசி இரண்டுமே மிகச் சிறந்தவை.

புழுங்கல் அரிசி என்பது அறுவடைக்குப் பின் நீரில் வேகவைத்து, உலர்த்தி, பின்பு ஆலையில் அரைத்து அரிசியாக்கப்படுகிறது. புழுங்கல் அரிசி ஆலையில் தீட்டப்படும்போது, பெரும்பாலும் சத்துகளை இழப்பதில்லை, ஸ்டீம் பிரஷர் முறையில் தயாராவது என்பதால் சமைத்ததும் உதிரி உதிரியாக வரும். சமைக்க சற்று நேரம் பிடிக்கும். சிலருக்கு அந்த வாசனையும் உதிரி உதிரியான பதமும் பிடிப்பதில்லை.

அந்தக் காலத்தில் மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி, பூங்கார், கருடன் சம்பா என ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் இருந்தன. மாப்பிள்ளை சம்பா என்பது ஆண்களின் மலட்டுத்தன்மையைப் போக்க உதவுவதாகச் சொல்லப்படுகிறது. ரத்தச்சோகையைப் போக்கும் அரிசி, எலும்புகளைப் பலப்படுத்தும் அரிசி, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அரிசி என இவற்றில் ஒவ்வொன்றுக்கும் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த அரிசி வகைகள் மிகவும் ஆரோக்கியமானவை. விலை சற்று அதிகம் என்றாலும் இவற்றைப் பயன்படுத்துவது நல்லது.

 அரிசி வகைகள்
அரிசி வகைகள்

மைதாவே ஆரோக்கியத்துக்கு எதிரானது என்கிறபோது நீங்கள் தினமும் மைதா ரொட்டி சாப்பிடலாமா எனக் கேட்டிருக்கிறீர்கள். நிச்சயம் கூடாது. மைதாவும் கோதுமையிலிருந்துதான் எடுக்கப்படுகிறது. கோதுமையின் ஸ்டார்ச் பகுதியை ப்ளீச் செய்து, பதப்படுத்தி வெள்ளை வெளேரென நமக்குக் கிடைக்கிறது. அதனால் ஒவ்வாமை, வயிற்று உப்புசம் போன்றவை வரலாம். அதன் மீள்தன்மை காரணமாகக் குடலில் பசை போல ஒட்டிக்கொள்ளும். செரிமானமாவது கஷ்டம். நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல. மலச்சிக்கல் வரும். வளர்சிதை மாற்றச் செயல்பாட்டை தாமதப்படுத்தும்.

அடிக்கடி வயிற்று உப்புசம், அதற்கு ஃப்ரூட் சால்ட் எடுத்துக்கொள்வதாகச் சொல்லும் நீங்கள், முதலில் உங்களுடைய உணவுப் பழக்கத்தைக் கவனிக்க வேண்டும். சரியான உணவுகளை, இயற்கையாக சமைக்கப்பட்ட, நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுகிறீர்களா என்பதைக் கண்காணிக்க வேண்டியது அவசியம். பாக்கெட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிடுபவர் என்றால் இந்தப் பிரச்னை நிச்சயம் வரும். நிறைய காய்கறிகள், கீரைகள், பழங்கள் சாப்பிட வேண்டும்.

 ஃப்ரூட் சாலட்
ஃப்ரூட் சாலட்

செரிமானத்துக்காக அடிக்கடி ஃப்ரூட் சால்ட் சாப்பிடுவது சரியே இல்லை. அது ஒருவகையான சோடாதான். ரவாதோசை மாவு போன்ற சில ரெடி டு ஈட் உணவுகளில் இது சேர்க்கப்பட்டிருக்கும். அது நம் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவை அழித்துவிடும். குடல் சார்ந்த பிரச்னைகள், எதுக்களித்தல் பிரச்னைகளை ஏற்படுத்தும். வயிறு உப்புசமாக இருக்கிறது, அஜீரணமாக இருக்கிறது என நினைத்து அதைச் சாப்பிட நினைப்பவர்கள், அந்தப் பிரச்னைக்கான காரணத்தைக் கண்டறிந்து குணப்படுத்த வேண்டியது அவசியம். அதைச் சரிசெய்தாலே இவற்றை எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்காது.

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?