Published:Updated:

Doctor Vikatan: சர்க்கரைநோய்க்கு மாத்திரை எடுப்போருக்கு பிறவிக்குறைபாடுள்ள குழந்தை பிறக்குமா?

Diabetes
News
Diabetes ( Pixabay )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: சர்க்கரைநோய்க்கு மாத்திரை எடுப்போருக்கு பிறவிக்குறைபாடுள்ள குழந்தை பிறக்குமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Diabetes
News
Diabetes ( Pixabay )

என் கணவருக்கு 5 வருடங்களாக சர்க்கரைநோய் இருக்கிறது. மெட்ஃபார்மின் மாத்திரை எடுத்து வருகிறார். சமீபத்தில் ஒரு செய்தியில் மெட்ஃபார்மின் சாப்பிடும் ஆண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறவிக் குறைபாடுகள் வருவதாகப் படித்தேன். எங்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் அது போல நேருமா?

- வித்யா (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் சஃபி சுலைமான்
மருத்துவர் சஃபி சுலைமான்

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி.

``நீங்கள் குறிப்பிடுகிற அந்த ஆய்வு தொடர்பான செய்தியை நானும் படித்தேன். ஏற்கெனவே சர்க்கரைநோயுள்ள சிலர் இன்சுலின் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். மெட்ஃபார்மின் (Metformin) என்ற மாத்திரையையும், சல்ஃபனிலூரியா (Sulfonylureas) என்ற மாத்திரையையும் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இவற்றில் மெட்ஃபார்மினும், சல்ஃபனிலூரியாஸும் வாய்வழியே எடுக்கக்கூடிய மாத்திரைகள். இன்சுலின் என்பது ஊசிவழியே எடுத்துக்கொள்வது. சல்ஃபனிலூரியாஸ் என்பது நேரடியாக நம் கணையத்தில் போய் வேலைசெய்யக்கூடியது. இன்சுலின் சுரப்பைத் தூண்டக்கூடிய மருந்து அது.

மெட்ஃபார்மின் என்பது கல்லீரலில் வேலைசெய்யக்கூடியது. கல்லீரலில் இருந்து உணவு மூலமாக வெளியாகக்கூடிய குளுக்கோஸை குறைக்கக்கூடியது அது. இன்சுலின் என்பது நேரடியாக நம் ரத்தத்தில் வினையாற்றக்கூடியது.

குறிப்பிட்ட இந்த ஆய்வில், மெட்ஃபார்மின் எடுத்துக்கொண்ட அப்பாக்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு பிறவிக்குறைபாடுகள் இருந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 1.1 மில்லியன் ஆட்களில் அது 5.5 சதவிகிதம் பேரிடம் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். சல்ஃபனிலூரியாஸ் மருந்து எடுத்தவர்களைப் பற்றி தெளிவாக எதையும் குறிப்பிடவில்லை. இன்சுலின் எடுத்த ஆண்களுக்கு இந்தப் பிரச்னைகள் பெரும்பாலும் இல்லாமல் இருந்திருக்கின்றன. அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளிடம் பெரிய பாதிப்புகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

Diabetes (Representational Image)
Diabetes (Representational Image)
Pixabay

மெட்ஃபார்மின் குறித்த தகவலிலும் அவர்கள், இது இறுதியான ஆய்வில்லை, மேலும் பல ஆய்வுகள் செய்யப்பட வேண்டியிருக்கின்றன என்றே சொல்லியிருக்கிறார்கள். மெட்ஃபார்மின் எடுத்த அப்பாக்கள் தங்கள் சர்க்கரை அளவை எப்படி வைத்திருந்தார்கள், அதில் ஏற்ற இறக்கங்கள் இருந்தனவா என்ற புள்ளிவிவரங்கள் இல்லை. அதனால் இந்தப் பிரச்னைக்கு மெட்ஃபார்மின் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. ஆனாலும் மெட்ஃபார்மின் எடுத்தவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை வந்ததைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

சர்க்கரைநோய் உறுதிசெய்யப்பட்ட நிலையில் முதல் முறை மருத்துவரைச் சந்திக்க வரும் நபர்கள், `மாத்திரையில் இதைக் கட்டுப்படுத்த முடியுமா' என்றுதான் கேட்பார்கள். இன்சுலின் மிகச் சிறந்த மருந்து. ஆனாலும் ஊசியின் மீதுள்ள பயத்தினாலும், அதன் விலை, ஊசியால் வரும் வலி, தினமும் தவறாமல் போட வேண்டிய அவதி போன்ற பிரச்னைகளால் அதை வேண்டாம் என்று சொல்பவர்களே அதிகம்.

Tablets (Representational Image)
Tablets (Representational Image)
Image by Michal Jarmoluk from Pixabay

அதே நேரம் மெட்ஃபார்மின் என்பது சர்க்கரைநோய்க்கு முந்தைய ப்ரீடயாபட்டிஸ் நிலை உள்ளவர்களுக்கும், பிசிஓடி பிரச்னை உள்ள பெண்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிற பிரதான மருந்து. சர்க்கரைநோய் தவிர்த்து வேறு பிரச்னைகளுக்கும் அது உதவுவதால், இந்த ஆய்வு குறிப்பிடும் ஒரு காரணத்துக்காக அதை அறவே ஒதுக்க முடியாது. இன்றைய சூழலில் மெட்ஃபார்மின் மிக முக்கியமான, தவிர்க்க முடியாத ஒரு மருந்து. இந்த ஓர் ஆய்வை வைத்து எந்த முடிவுக்கும் வந்துவிடாமல் காத்திருந்து, பலகட்ட ஆய்வுகளுக்குப் பிறகுதான் இது குறித்து எதையும் உறுதியாகச் சொல்ல முடியும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?