ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

சைனஸ்... ஆஸ்துமா... சரும வறட்சி... மூட்டுவலி... பனிக்கால நோய்கள்... தீர்வுகள்!

பனிக்கால நோய்கள்... தீர்வுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
பனிக்கால நோய்கள்... தீர்வுகள்!

பனிக்காலத்தில் காய்ச்சல் வருவது எதிர்பார்க்கக்கூடியதுதான். இதற்கான தீர்வு நிலவேம்புக் கஷாயம். சளிப்பிடித்துவிட்டால் கபசுரக்குடிநீர்.

வருடத்தின் முக்கால்வாசி நாள்கள் ‘ஸ்ஸப்பா... என்ன வெயில்’ என்று அலுக்கும் பலருக்கும், `குளு குளு’ பனிக்காலம் ஏங்க வைக்கும் சுகம். டீ, காபியோடு சுடச்சுட வாழைக்காய் பஜ்ஜியோ, வெங்காய பக்கோடாவோ தேடவைத்து, மனதுக்குப் பிடித்தமானதாக இருந்தாலும், சருமம் வறண்டு போவதில் ஆரம்பித்து ஆஸ்துமா வரை பனிக்காலத்தில் வருகிற பிரச்னைகளும் பல.

பனிக்காலத்தில் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கை களை மேற்கொண்டு, வர வாய்ப்புள்ள உடல்நலப் பிரச்னைகளை அதற்குண்டான தற்காப்பு நடவடிக்கைகளுடன் எதிர்கொண்டால் மார்கழியை சுமுகமாகக் கடக்கலாம். அதற்கு வழிகாட்ட, பனிக்கால நோய்கள், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து இந்த இணைப்பிதழில் தகவல்கள் பகிர்ந்துகொள்கிறார்கள் பல்துறை நிபுணர்கள். நுரையீரல் மருத்துவர் அபர், எலும்பியல் மருத்துவர் ஏ.பி.கோவிந்தராஜ், கண் மருத்துவர் நிஷாந்த், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா, சித்த மருத்துவர் தெ.வேலாயுதம் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் ரேச்சல் தீப்தி ஆகியோர் வழங்கும் குறிப்புகள் ஆரம்பம்...

சைனஸ்... ஆஸ்துமா... சரும வறட்சி... மூட்டுவலி... பனிக்கால நோய்கள்... தீர்வுகள்!
lilkar

பனிக்காலமும் சித்த மருத்துவமும்!

பனிக்காலத்தில் கைக்கொடுக்கக்கூடிய சித்த மருத்துவ சிகிச்சை முறைகள் பற்றி சொல்கிறார், சித்த மருத்துவர் தெ.வேலாயுதம்.

‘`கோடைக்காலம், மழைக்காலம், பனிக்காலம் எனப் பருவ நிலைகள் மாறும்போது, நம் உடலிலும் வாதம், பித்தம், கபம் ஆகியவற்றின் உயிர் தாதுக்களில் மாற்றம் ஏற்படும். ஈரக்காற்றும், பனிக்காற்றும் மூக்கு மற்றும் காது வழியாக உடம்புக்குள் நுழைந்து தலைபாரத்தில் ஆரம்பித்து மூச்சிரைப்பு வரைக்கும் ஏற்படுத்தி விடும். தவிர, குளிருக்கு வாதத்தை அதிகப்படுத்திவிடும் தன்மையும் உண்டு. அதனால்தான் பனிக்காலத்தில் மூட்டு சார்ந்த பிரச்னைகள் அதிகமாகின்றன.

 தெ.வேலாயுதம்
தெ.வேலாயுதம்

வராமலே தடுக்கலாம்!

பனிக்காலத்தில், நம்முடைய காதுகள் குளிர்காற்றை உள்ளிழுத்து கபாலத்தில் சேர்த்துவிடும். இதனால், தலையில் நீர்க்கோத்துக்கொள்ளும். விளைவு, தலைபாரம். வண்டியில் வேகமாகச் செல்லும்போதும், வாகனங்களில் ஜன்னலோரம் உட்காரும்போதும் இந்தப் பிரச்னை அதிக மாகும். காதுகளில் பஞ்சு வைத்துக்கொள்வது அல்லது உல்லன் ஸ்கார்ஃப் கட்டிக்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்னையை வராமலே தவிர்க்க முடியும். பனிக்காற்றும் ஈரக்காற்றும், காது மற்றும் மூக்கு வழியாக சைனஸ் காற்றறைகளுக்குள் செல்கையில், மூக்கடைப்பும் தும்மலும் வரும். காதுகளையும் மூக்கையும் தொடர்ந்து மறைக்காமலிருந்தால், நாள்பட நாள்பட இந்த ஈரக்காற்றும் பனிக்காற்றும் நுரையீரலின் மேல் பகுதி வரைக்கும் சென்றுவிடும், கவனம்.

சைனஸ்... ஆஸ்துமா... சரும வறட்சி... மூட்டுவலி... பனிக்கால நோய்கள்... தீர்வுகள்!
Andrija Nikolic

சளித்தொல்லையா?

சளி பிடித்துவிட்டால் சித்த மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று சிவனார் அமிர்தம், தாளி சாதி சூரணம், தூதுவளை லேகியம், திப்பிலி ரசாயனம் ஆகியவற்றில் ஒன்றைச் சாப்பிட குணம் பெறலாம்.

3 பிரச்னைகள்... 3 தீர்வுகள்!

பனிக்காலத்தில் காய்ச்சல் வருவது எதிர்பார்க்கக்கூடியதுதான். இதற்கான தீர்வு நிலவேம்புக் கஷாயம். சளிப்பிடித்துவிட்டால் கபசுரக்குடிநீர். நுரையீரலில் சளி சேர்ந்து மூச்சுவிடச் சிரமமாக இருக்கிறதென்றால், அதை ஆடாதொடா குடிநீர் சரிசெய்யும். மூன்று குடிநீரையும் தயாரிக்கும் முறை ஒன்றுதான். கால் லிட்டர் தண்ணீரில் 10 கிராம் சூரணம் போட்டு, நீரை நான்கில் ஒரு பங்காக வற்றவைத்து, வடிகட்டிக் குடிக்க வேண்டும்.

சைனஸ்... ஆஸ்துமா... சரும வறட்சி... மூட்டுவலி... பனிக்கால நோய்கள்... தீர்வுகள்!

தொண்டை கரகரப்பா?

தாளி சாதி வடகம் அல்லது அதிமதுரம் சேர்க்கப்பட்ட கண்டக்குளிகையை வாயிலிட்டு சுவைத்துச் சாப்பிடலாம்.

மூக்கடைப்பா?

சித்த மருத்துவர் வழிகாட்டுதலுடன், மிளகை நல்லெண்ணெய் விளக்கில் சுட்டு, வெளியேறும் புகையை உள்ளிழுக்கலாம்.

டான்ஸில் பிரச்னையா?

பனிக்காலம் டான்ஸில்ஸ் பிரச்னையை அதிகப்படுத்தி விடும். குளிர்காற்று காது வழியாக உள்ளே சென்று டான்ஸிலை வீக்கமடைய செய்யும் அல்லது வீக்கத்தை அதிகமாக்கும். எனவே காதுகளில் பஞ்சு வைத்துக்கொள்வது அல்லது மஃப்ளர் போட்டுக்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்னை வராமல் தடுக்கலாம். வந்துவிட்டால், குளிர்காலம் முழுக்க வெந்நீர் அருந்துவது, சித்த மருந்தான பூண்டு தேனை தொண்டையின் உள்பக்கத்தில் தடவுவது மூலம், டான்ஸில் வீக்கத்தைச் சரி செய்யலாம்.

சைனஸ் தொல்லையா?

வீடு, ஆபீஸ், கார் என எங்கெங்கும் குளிர்சாதன வசதி என வாழ்ந்து வரும் இந்தக் காலத்தில், பெரும்பாலானவர்களுக்கு சைனஸ் தொல்லை இருக்கிறது. இவர்கள் சித்த மருத்துவர் ஆலோசனை பெற்று, திப்பிலி ரசாயனம், சிவனார் அமிர்தம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். சைனஸ் காரணமாக வருகிற தலைவலிக்கு நீர்க்கோவை மாத்திரையை நீரில் குழைத்து பற்றுப்போட, வலி குறையும்.

சைனஸும் சுக்குத் தைலமும்!

சைனஸ் இருப்பவர்கள் வெயில் காலத்திலேயே தலைக்குக் குளிக்க சிரமப்படுவார்கள். பனிக்காலத்தில் கேட்கவா வேண்டும்? இப்படிப்பட்டவர்கள், தலையில் சுக்குத் தைலம் தேய்த்துக் குளிக்கலாம். சைனஸ் பிரச்னை அதிகரிக்காது.

ஆஸ்துமாவுக்கு... லேகியம், ரசம்!

ஆஸ்துமா பிரச்னையிருப்பவர்களுக்கு பனிக்காலம் மிகக் கடினமான காலகட்டமாக இருக்கும். அவர்களின் பிரச்னைக்கு ஏற்ற அளவில் தூதுவளை லேகியம் அல்லது திப்பிலி ரசாயனம் சாப்பிட்டு, சிரமத்தைக் குறைக்கலாம்.

சைனஸ்... ஆஸ்துமா... சரும வறட்சி... மூட்டுவலி... பனிக்கால நோய்கள்... தீர்வுகள்!

வாசனையும் ஒவ்வாமையும்!

ஒவ்வாமைப் பிரச்னை இருப்பவர்கள், பனிக்காலத்தில் வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தும்போது மூச்சிரைப்பு, சைனஸ் இரண்டுமே அதிகமாகும். எனவே மாற்றாக நலங்கு மாவு, சந்தனம், ஜவ்வாது, பன்னீர் என இயற்கையான பொருள்களைப் பயன்படுத்தலாம்.

செரிமானக்கோளாறு ஏற்படுகிறதா..?

குளிர்காலத்தில் உடலின் உஷ்ணம் குறைவதால், செரிமானம் தாமதமாக நடக்கும். குளிர்காலத்தில் எதையாவது சுடச்சுடச் சாப்பிட்டுக்கொண்டே இருப்போம். இந்த இரண்டும் சேர்ந்துகொண்டு, செரிமானக்கோளாறு ஏற்படும். சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டீஸ்பூன் அஷ்ட சூரணத்தை வாயிலிட்டு வெந்நீர் அருந்தினாலே இந்தப் பிரச்னை சரியாகிவிடும். குளிர்காலம் முழுக்க கூடுமானவரை வெந்நீர் அல்லது கிராம்பு போட்டு காய்ச்சிய நீரை அருந்தி வந்தால், செரிமானக் கோளாறு பிரச்னையே ஏற்படாது. சளித்தொல்லை சரியாக, திரிகடுகு சூரணம் சாப்பிட்டு வந்தால் செரிமானக்கோளாறும் சரியாகிடும்.

மூட்டுவலியும் மூட்டு வீக்கமும்!

பனிக்காலம் நம் உடலில் வாயுப் பிரச்னையை அதிகப்படுத்தி விடும் என்பதால், மூட்டுகளில் வலி வர ஆரம்பித்துவிடும். மூட்டுக்களில் வீக்கம் இருப்பவர்களுக்கு, இந்தப் பிரச்னை இன்னும் அதிகமாகும். இந்தப் பிரச்னை இருப்பவர்களுக்குக் காலில் அடிக்கடி ஈரம் படக்கூடாது; வெறுங்காலுடன் தரையில் நடக்கக்கூடாது; தரையில் படுக்கக்கூடாது; மூட்டுகளில் குளிர்காற்றுபடும்படி முழங்கால் வரை மட்டுமே நீளும் ஆடை அணிவதும் கூடாது. கை, கால் முழுவதுமாக மறையும்படி ஆடைகள் அணிந்து, உடலைக் கதகதப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். மூட்டுகளில் வீக்கம், வலி, விறைப்புத்தன்மை இருப்பவர்கள், வீக்கத்தின் மீது கற்பூராதி தைலம் அல்லது வாத சார தைலத்தைத் தடவி, வெந்நீரால் ஒற்றடம் கொடுக்க அவை மூன்றும் குறையும்.

சைனஸ்... ஆஸ்துமா... சரும வறட்சி... மூட்டுவலி... பனிக்கால நோய்கள்... தீர்வுகள்!

முகவாதம்... வந்தால் சரியாகுமா?

மூக்கு மற்றும் காதுகள் வழியாக உள்செல்லும் குளிர்காற்று சிலருக்கு ஃபேஷியல் நரம்புகளை பலவீனமாக்கி விடும். பாதிக்கப்பட்டவருடைய முகம் ஒருபக்கமாக இழுத்துக் கொள்ளும். ‘முகம் ஒருபக்கமா கோணிக்கிச்சு’ என்பார்கள் இதை. இப்படி முகவாதம் வந்தவர்கள் ஊதினால், காற்று ஒருபக்கமாக வரும். இது நிகழாமல் தடுக்க, பனிக்கால பயணங்களின்போது ஜன்னல் ஓரம் அமராமல் இருப்பது நல்லது. அப்படியே அமர்ந்தாலும் குளிர்காற்று காதுகளுக்குள் செல்லாதபடி பஞ்சு வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை முகவாதம் வந்துவிட்டாலும், பயப்பட தேவை யில்லை. மருத்துவ ஆலோசனை பெற்று அதற்கான தைலங்களைத் தடவி, ஒருபக்கமாக இழுத்துக் கொண்ட முகத்தைச் சரி செய்துவிடலாம். ஒருவேளை பிரச்னை தீவிரமாக இருந்தால், சரியாவது தாமதமாகும்.

சரும வறட்சிக்கு சிறந்த தீர்வு!

எல்லா காலங்களிலும், சரு மத்துக்குத் தேங்காய் எண்ணெ யும் நலங்கு மாவும்தான் பெஸ்ட் ஃபிரெண்ட். சருமம் வறண்டுபோய் இருந்தால், தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் தூளைக் குழைத்து, தடவிக் குளிக்க லாம். சருமம் சிவந்தும் தடித்தும் இருந் தால் அருகன் தைலமும், தோலழற்சியான எக்ஸிமா (Eczema) இருந்தால் கரப்பான் தைலமும், பூஞ்சைத்தொற்று இருந்தால் புங்கன் தைலமும் தடவ, பிரச்னையின் தீவிரம் பொறுத்து குறையும் அல்லது சரியாகும். எக்ஸிமாவும், ஆஸ்துமாவும் ஒன்றோடொன்று தொடர்புடையது. வீசிங் அதிகமானால், எக்ஸிமா கூடும். எக்ஸிமா கூடினால் ஆஸ்துமா அதிகமாகும். ஒன்றுக்கு சிகிச்சை அளித்தால் இன்னொன்று குறையும் என்பதை கவனத்தில்கொண்டு, மருத்துவரிடம் சிகிச்சை எடுக்க வேண்டும்.

சைனஸ்... ஆஸ்துமா... சரும வறட்சி... மூட்டுவலி... பனிக்கால நோய்கள்... தீர்வுகள்!

கண்வலிக்கு... நந்தியாவட்டை!

`மெட்ராஸ் ஐ' ஒருவகை தொற்றுநோய். சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் படிகார நீர் கொண்டு முகம், கை, கால்களைச் சுத்தம் செய்வதன் மூலம் இந்தத் தொற்று வராமல் தடுக்கலாம் அல்லது வெந்நீரில் உப்பு, மஞ்சள் போட்டு கை, கால்களைக் கழுவி வந்தால் தொற்று வருவதைத் தடுக்கலாம். மீறி வந்துவிட்டால், உடலின் நோய் எதிர்பாற்றலைப் பொறுத்து மூன்று நாள்கள் முதல் ஒரு வாரத்தில் சரியாகிவிடலாம். உணவில் சிறிய வெங்காயத்தைக் கூடுதலாகச் சேர்த்துக்கொள்ளவும். நந்தியாவட்டைப் பூவின் இதழ்களைக் கண் களின் மீது வைத்துக்கட்ட கண்வலியின் தீவிரம் குறையும். சித்த மருத்துவர் ஆலோசனையைக் கேட்டு இளநீர்க்குழம்பு அல்லது நேத்திரப் பூண்டு தைலம் பயன்படுத்தலாம்'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் தெ.வேலாயுதம்.

சைனஸ்... ஆஸ்துமா... சரும வறட்சி... மூட்டுவலி... பனிக்கால நோய்கள்... தீர்வுகள்!

ஆஸ்துமா... குணப்படுத்த முடியுமா?

பெரும்பாலும் குளிர்காலத்தில் அழையா விருந்தாளியாக சளி, இருமல், தும்மல் வந்துவிடுகிறது. அதிலும் ஆஸ்துமா, சைனஸ் இருப்பவர்களின்பாடு பெரும்பாடாகிவிடுகிறது. இதனால் இந்த நோய்களைப் பற்றி முழுவதுமாக அறிந்துகொள்வது மிக மிக முக்கியமாகும். ஆஸ்துமா மற்றும் சைனஸ் பற்றி விழிப்புணர்வு தகவல்கள் தருகிறார், நுரையீரல் மருத்துவர் அபர்.

``ஆஸ்துமா என்பது பொதுவாக நுரையீரலில் ஏற்படும் அலர்ஜி. மூச்சுக்காற்று பயணிக்கும் மூச்சுக்குழாயில் நமது சுற்றுப்புறத்தில் இருக்கும் ஏதாவது ஒன்று அலர்ஜியை ஏற்படுத்தினால், அது சுருங்கிவிடும். மேலும், இது நுரையீரலில் சளி உற்பத்தியை அதிகரிக்கும். இந்த சளி ஏற்கெனவே சுருங்கியிருக்கும் மூச்சுக் குழாயை அடைத்து மூச்சுத்திணறல், இருமல், சளி ஆகியவற்றை ஏற்படுத்தும்.

தூசி, மகரந்தம், பூச்சி ஆகியவற்றால் ஏற்படும் அலர்ஜியினாலும், பரம்பரையில் யாருக்கேனும் ஆஸ்துமா இருந்தாலும், ஒருவருக்கு ஆஸ்துமா ஏற்படலாம். மிகச் சிலருக்கு, உணர்ச்சிகள் மற்றும் ஹார்மோன் பிரச்னையினால்கூட ஆஸ்துமா ஏற்படுகிறது.

சைனஸ்... ஆஸ்துமா... சரும வறட்சி... மூட்டுவலி... பனிக்கால நோய்கள்... தீர்வுகள்!
Mohammed Haneefa Nizamudeen

மரபு காரணமாக வரும் ஆஸ்துமாவை தடுக்க முடியாது. எனவே, அதற்கான வாய்ப்பு உள்ள குழந்தைகளின் எதிர்ப்பு சக்தி மீது ஆரம்பத்தில் இருந்தே கவனம் செலுத்த வேண்டும். ஒருவேளை அவர்களுக்கு அலர்ஜிக்கான அறிகுறி தெரிய ஆரம்பித்தால், உடனடியாக சிகிச்சையை ஆரம்பித்துவிட வேண்டும். இந்த அலர்ஜி பிரச்னையை 12 வயதிலிருந்து

15 வயதிற்குள் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால், பிற்காலத்தில் அவர்களுக்கு ஆஸ்துமாவை முழுவதுமாக கட்டுப்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

சில நோயாளிகளுக்கு ஆஸ்துமாவுக்கான அறிகுறிகள் தொடர்ச்சியாக வெளிப்படும். சிலருக்கு மூச்சுத்திணறல் பிரச்னை இல்லாமல், இருமல் மட்டும் இருக்கும் (Cough Variant Asthma). இன்னும் சிலருக்கு இரவு நேரத்தில் மட்டும் ஆஸ்துமா அறிகுறிகள் இருக்கும் (Nocturnal Asthma). மேலும் சிலருக்கு உடற்பயிற்சி செய்யும் போது ஆஸ்துமா அறிகுறிகள் தென்படும் (Exercise Induced Asthma). சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமல் ஆஸ்துமா இருக்கும் (Non-allergic Asthma). இப்படி ஆஸ்துமா பல வகைப்படும்.

 அபர்
அபர்

ஆஸ்துமா பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ரத்த பரிசோதனை, நுரையீரல் பரிசோதனை ஆகியவற்றை செய்யும்போது அவர் எந்தவிதமான ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆஸ்துமாவின் ஏதேனும் ஓர் அறிகுறி தென்பட்டாலே, நுரையீரல் மருத்துவரை சந்திப்பது மிக மிக அவசியம். எவ்வளவு சீக்கிரத்தில் கண்டு பிடிக்கிறோமோ, அந்த அளவுக்கு ஆஸ்துமா நுரையீரலின் நிரந்தர நோய் ஆவதை தடுக்கலாம்.

Lung Function Test, Pulmonary Function Testing, Spirometry போன்ற பரிசோதனைகள் மூலம் ஆஸ்துமாவை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். இதில் Pulmonary Function Testing என்பது மிக முக்கிய பரிசோதனை. சில நேரங்களில் மார்பு பரிசோதனைகளும் செய்யப்படும். அலர்ஜி பரிசோதனைக்காக ரத்த பரிசோதனை, தோல் பரிசோதனை ஆகியவையும் செய்யப்படும்.

சைனஸ்... ஆஸ்துமா... சரும வறட்சி... மூட்டுவலி... பனிக்கால நோய்கள்... தீர்வுகள்!
FatCamera

சைனஸைட்டிஸ்... காரணம் முதல் சிகிச்சை வரை!

`சைனஸ்' (Sinus) என்பது ஒரு நோய் அல்ல. அது நமது மண்டையோட்டில் இருக்கும் காற்றுள்ள வெற்றிடம் (cavity). தலை கனத்தை குறைப்பதற்காகத்தான் சைனஸ் என்ற அமைப்பு நமது மண்டைப் பகுதியில் இடம்பெற்றிருக்கிறது. அப்போதுதான் தலையை நாம் எளிதாக நிமிர்த்தி வைத்திருக்க முடியும்.

`சைனஸைட்டிஸ்' (Sinusitis) என்பதுதான் நோயின் பெயர். மண்டை பகுதியில் இருக்கும் சைனஸ் அமைப்பு ஏதாவது ஒரு காரணத்தினால் வீக்கம் அடைந்தால், அதற்குப் பெயர்தான் சைனஸைட்டிஸ். சைனஸ், அது அமைந் திருக்கும் இடத்தை பொறுத்து Frontal Sinus, Sphenoid Sinus, Maxillary Sinus எனப்படும். இதில் ஏதாவது ஒரு சைனஸில் அலர்ஜியோ, வீக்கமோ ஏற்பட்டால் சைனஸைட்டிஸ் என்று கூறப்படுகிறது.

சளி, மூக்கடைப்பு, தொடர் தொண்டை அரிப்பு ஆகியவைதான் சைனஸைட்டி ஸுக்கான முக்கிய அறிகுறிகள். அலர்ஜி மற்றும் தொற்று சைனஸைட்டிஸுக்கு இரண்டு முக்கியக் காரணங்கள். சிலருக்கு சைனஸில் அடிக்கடி ஏற்படும் வீக்கம் சைனஸைட்டிஸை ஏற்படுத்துகிறது. மேலும் இது மரபு காரணமாகவும் ஏற்படும் வாய்ப்புள்ளது.

நம்மையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருப்பதன் மூலமும், உடற்பயிற்சி செய்வதன் மூலமும், அலர்ஜியை ஏற்படுத்தும் காரணிகளில் இருந்து தள்ளியிருப்பதன் மூலமும் சைனஸைட்டிஸ் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.

பொதுவாக சைனஸ் தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ளும் தன்மை உடையது. அதற்காக நாம் எதையும் தனியாக செய்யவேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் சைனஸைட்டிஸிற்கான அறிகுறி தெரிந்தால் மருத்துவரை அணுகுவது மிக முக்கியம்.

சைனஸைட்டிஸினால் பாதிக்கப்பட்டவர்கள் அலர்ஜி பரிசோதனை செய்து, அவர்களுக்கு எது அலர்ஜியை ஏற்படுத்துகிறதோ அதை தெரிந்துகொண்டு தவிர்ப்பது மிகவும் அவசியம்.

எக்ஸ்ரே மற்றும் சி.டி ஸ்கேன் ஆகிய இரண்டும் சைனஸைட்டிஸை கண்டுபிடிக்கும் சிறந்த வழிகள். ஒரு சில வேளைகளில் மட்டும் எண்டோஸ்கோப்பி (Endoscopy) பரிசோதனை செய்ய வேண்டியதாக இருக்கும்.

குறைந்த அளவு சைனஸைட்டிஸ் பாதிப்பிற்கு ஆன்டிபயாடிக் மற்றும் ஆவி பிடிப்பதே போதுமானது. ஆனால் அலர்ஜியினால் சைனஸைட்டிஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் சிகிச்சை தேவைப்படும். இந்த சிகிச்சை, தீவிரத்தை பொறுத்து ஒரு வாரம் முதல் இரண்டு ஆண்டுகளுக்குக்கூட தேவைப்படலாம். மேலும் அலர்ஜி மற்றும் வீக்கத்தால் ஏற்படும் சைனஸைட்டிஸிற்கு ஸ்டீராய்டு நேசல் ஸ்பிரே (Steroid Nasal Spray) அல்லது ஆன்ட்டிஹிஸ்தமின் நேசல் ஸ்பிரே (Antihistamine Nasal Spray) பொதுவாக வழங்கப்படுகிறது. இது அலர்ஜி மற்றும் வீக்கத்தை குணப்படுத்தும். இவற்றை குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். ஒரு சிலருக்கு மட்டும் ஆன்ட்டி அலர்ஜிக் (anti-allergic) மாத்திரைகள் வழங்கப்படும்'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் மருத்துவர் அபர்.

 ஏ.பி கோவிந்தராஜ்
ஏ.பி கோவிந்தராஜ்

மூட்டுவலி... ஆண்களை விட பெண்களுக்கு அதிக பாதிப்பு!

மூட்டுவலி என்பது பலரும் அடிக்கடி கேள்விப்படும் அல்லது நேரடியாக பாதிக்கப்படும் பிரச்னை. அதைப்பற்றி எலும்பியல் மருத்துவர் ஏ.பி.கோவிந்தராஜ் விளக்குகிறார்.

``மூட்டுவலி என்பதை ஒரு நோய் என்றே சொல்லக்கூடாது. அது ஒரு மருத்துவ உடல்நிலை (Medical condition). மூட்டுவலி என்பது பொதுவாக மூட்டு தேய்வினால் ஏற்படுவது. மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் ஹார்மோன் பிரச்னைகளால், இது ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கிறது. உணவில் யூரிக் ஆசிட் அதிகரிப்பதும், எலும்பு மிருதுவாகுவதும் மூட்டுவலிக்கான பிற காரணங்கள்.

கால்கள் சிலருக்கு நேராக வளராமல், உள்பக்கமாகவோ, வெளிப்பக்கமாகவோ வளைந்திருக்கும். இதுகூட மூட்டுவலிக்கு ஒரு காரணமாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு விளையாட்டின்போது அடிபட்டு ஜவ்வு கிழிந்து மூட்டுவலி ஏற்படும். சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு சரியாக கட்டுப் போடவில்லை என்றால் மூட்டுத் தேய்வு ஏற்பட்டு மூட்டுவலியை ஏற்படுத்தும். மரபுக் காரணத்தாலும் மூட்டுவலி ஏற்படலாம்.

சைனஸ்... ஆஸ்துமா... சரும வறட்சி... மூட்டுவலி... பனிக்கால நோய்கள்... தீர்வுகள்!
triloks

உடற்பயிற்சி செய்து வருவதன் மூலமும், காலுக்கு அதிகமாக வேலை கொடுக்காமல் இருப்பதன் மூலமும் மூட்டுவலி வருவதைத் தடுக்க முடியும். உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மூட்டுவலி வருவதற்கான வாய்ப்பு அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால், உடல் பருமனாக இருக்கும் அனைவருக்கும் மூட்டுவலி வரும் என்பதில்லை. கர்ப்பகாலத்திலோ, மாத்திரையினாலோ, பிற காரணங்களினாலோ திடீரென உடல் எடை கூடினால், அவர்களுக்கு மூட்டுவலி வரக்கூடிய வாய்ப்பு அதிகம்.

சீரான உடல் எடை, சரிவிகித உணவு, உடற்பயிற்சி செய்வது மூலம் மூட்டுவலி வருவதை தடுக்கலாம். ஒருவர் நடப்பதை வைத்து, அவரது காலை தொட்டு பார்ப்பது மூலம்கூட அவருக்கு மூட்டுவலி இருக்கிறதா என்பதை சொல்லிவிடலாம். ஆனால் எக்ஸ்ரே தான் அதை உறுதிப்படுத்தும்.

யூரிக் ஆசிட் அதிகம் இருந்தால், அதை ரத்த பரிசோதனையில் தெரிந்துகொள்ள முடியும். இவர்கள் மட்டன், சில வகை மீன்கள், தக்காளி, விதையுள்ள பழங்கள், அதிக பருப்பு வகைகள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. அதிக வலி இல்லாமல் இருந்தால், வீட்டிலேயே தைலம் மற்றும் ஒத்தடம் கொடுக்கலாம். ஆனால் இரண்டு, மூன்று நாள்களுக்கு மேல் வலி தொடர்ந்தால் மருத்துவரை அணுக வேண்டும். அடிக்கடி வலி அல்லது வீக்கம் ஏற்பட்டாலோ, காலை மடக்க முடியவில்லை என்றாலோ மருத்துவரை அணுகி எக்ஸ்ரே மற்றும் ரத்தப் பரிசோதனை செய்வது அவசியம்.

சைனஸ்... ஆஸ்துமா... சரும வறட்சி... மூட்டுவலி... பனிக்கால நோய்கள்... தீர்வுகள்!
Deepak Sethi

ஆரம்பத்திலேயே மூட்டுவலியை கண்டுபிடித்துவிட்டால் உடற்பயிற்சி மற்றும் ஜாயின்ட் லூப்ரிகேஷன் (Joint lubrication) மருந்துகள் போதுமானவை. மூட்டுவலி அதிகமானால் ரத்தத்தை பதப்படுத்தி செய்யும் ப்ளேட்லெட் ரிச் ப்ளாஸ்மா தெரபி (Platelet-rich Plasma Therapy - PRP) செய்யவேண்டி இருக்கும். பாதிப்பு இன்னும் தீவிரமாக இருந்தால், மாற்று மூட்டு அறுவை சிகிச்சை செய்யலாம். தற்போது ஒரே நேரத்தில் இரண்டு கால்களுக்கும் செய்யக்கூடிய வசதிகள் வந்துவிட்டன’’ என்று விளக்கினார் சென்னையைச் சேர்ந்த எலும்பியல் மருத்துவர் ஏ.பி.கோவிந்தராஜ்.

பனிக்காலத்தில் தண்ணீர்... எவ்வளவு?!

பனிக்காலத்தில் ஆரோக்கியம் அளிக்கும் உணவுகள் பற்றி பகிர்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் ரேச்சல் தீப்தி.

``பனிக்காலத்தில் நாம் தண்ணீர் குடிப்பது குறைவு. இதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து வறட்சி ஏற்படும். இதைத் தடுக்க ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து மூன்று லிட்டர் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் சருமம் எப்போதும் புத்துணர்வுடன் இருக்கும்.

 ரேச்சல் தீப்தி
ரேச்சல் தீப்தி

நம்முடைய அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் அனைத்து பொருள்களுமே குளிர்காலத்தில் நமக்குக் கை கொடுக்கும். மிளகு, சீரகம், சுக்கு, எள்ளு, தனியா என அனைத் தையும் ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்ளவும். அடிக்கடி தேநீர் குடிப்பதை தவிர்த்து சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீர், சுக்கு மல்லி காபி, துளசி டீ, அதிமதுரம் கலந்த டீ , கொள்ளு ரசம், சிக்கன் சூப் என மெனுவை மாற்றவும். மாலை நேரத் தில் காய்கறி சூப், மஷ் ரூம் சூப் போன்று ஏதேனும் ஒரு சூப் பருகலாம். அதில் மிளகு, இஞ்சி போன்றவை கலந்து பருகினால் இதமாக இருப்பதுடன் ஆரோக்கியமும் மேம்படும்.பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கேக், பஃப்ஸ், போன்ற பேக்கரி உணவுகளை தவிர்த்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நட்ஸ், பருப்பு வகைகள், உலர் பழங்கள் போன்றவற்றை சாப்பிடுவது ஆரோக்கியமானது.

பனிக்காலத்தில் புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவில் சேர்க்க வேண்டும். தினமும் இரண்டு முட்டை சாப்பிடலாம். மேலும் முளைத்த தானியங்கள், பருப்பு வகைகள், எள் உருண்டைகள், வேர்க்கடலை போன்ற வற்றையும் சேர்த்துக்கொள்ளவும். தினமும் ஒரு டீஸ்பூன் எள்ளை சமையலில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமானது.

சைனஸ்... ஆஸ்துமா... சரும வறட்சி... மூட்டுவலி... பனிக்கால நோய்கள்... தீர்வுகள்!

புதினா, கொத்தமல்லி, முருங்கை, வெந்தயக்கீரை, சிறுகீரை, மணத்தக்காளி கீரை என ஏதேனும் ஒரு கீரையை உணவில் அன்றாடம் சேர்த்துக்கொள்ளவும். இவை ரத்த ஓட்டத்தை சீராக்கி, புத்துணர்வுடன் வைத்திருக்க உதவும். அரிசி உணவுகளை விட முழு தானிய உணவுகள் எப்போதும் ஆரோக்கியமானவை.

பனிக்காலத்தில் கம்பு, ராகி, சோளம், வரகு ஆகியவற்றை ஒரு வேளைக் காவது உணவாகக் கொள்வது நல்லது. சிறுதானியங்களை கஞ்சியாகவோ, பொங்கலாகவோ விருப்பப்படி சேர்க்கவும். தினமும் உணவில் ஒரு டீஸ்பூன் பசு நெய் சேர்த்துக் கொள்வது நல்லது.

பனிக்காலத்தில் சர்க்கரைவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு, கருணைக் கிழங்கு போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகளை அவசியம் சேர்க்க வேண்டும். சளித்தொல்லை, உடலில் நீர்கோத்தல் போன்ற பிரச்னை இருப்பவர்கள் பூசணி, சுரைக்காய் போன்ற நீர்க்காய்கறிகளை தவிர்க்கலாம். மூட்டுவலி, கால்வலி இருப்பவர்களுக்கு பனிக்காலத்தில் நீர்கோத்தல் பிரச்னை கூடுதலாகும். இதனை தவிர்க்க மிளகு, ஓமம், சீரகம், ஆகியவற்றை சம அளவு எடுத்து கொதிக்க வைத்து, வடிகட்டி இரண்டு நாள்களுக்கு ஒரு முறை பருகலாம். இவை தவிர்த்து சீசனில் கிடைக்கும் காய்கறிகளை குறைந்தது 100 கிராம் அளவிலாவது உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்’’ என்று பரிந்துரைக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் ரேச்சல் தீப்தி.

 வசுந்தரா
வசுந்தரா

சருமம், உதடு, கேசம்... பராமரிக்கும் வழிகள்!

பனிக்கால சரும பராமரிப்பு பற்றி பகிர்கிறார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா

``பனிக்காலத்தில் வியர்வை சுரப்பிகள் குறைவாக வியர்வைகளை சுரப்பதால் சருமம் வறட்சியுடன் காணப் படும். இதனை எதிர்கொள்ள கடல் பாசி கால் டீஸ்பூன், முல்தானி மிட்டி 2 டேபிள்ஸ்பூன், ரோஸ் வாட்டர் 2 டேபிள்ஸ்பூன் இவற்றை ஒன்றாக கலந்து முகம், கை கால் போன்ற இடங்களில் பேக் போன்று அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். வறட்சி நீங்கி சருமம் புத்துணர்வுடன் இருக்கும்.

உப்பு கலக்காத வெண்ணெய் அரை டீஸ்பூன், மாதுளம் பழச்சாறு சில சொட்டுகள் இவற்றை ஒன்றாகக் கலந்து உதடுகளில் அப்ளை செய்து வந்தால் வெடிப்புகள் நீங்கும்.

சைனஸ்... ஆஸ்துமா... சரும வறட்சி... மூட்டுவலி... பனிக்கால நோய்கள்... தீர்வுகள்!

பனிக்காலத்தில் உதடுகளுக்கு `லிப் பாம்' பயன் படுத்துவது அவசியம். கூந்தல் மிக வறட்சியாக இருக்கிறது எனில், ஆலிவ் எண்ணெயை லேசாக சூடு செய்து ஸ்கால்ப்பில் அப்ளை செய்து மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து மைல்டு ஷாம்பூ பயன்படுத்தி குளித்தால் கூந்தல் வறட்சி நீங்கும்.

கோடைக்காலத்தில் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவோம். ஆனால் பனிக்காலத்தில் பெரும்பாலானவர்கள் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது கிடையாது. சன்ஸ்கிரீன் என்பது வெயிலிருந்து நம் சருமத்தை காக்கும் என்பதை விட, சூரியனின் புற ஊதாக் கதிர்களிலிருந்து நம்மை காக்கிறது. பனிக்காலத்திலும் புற ஊதாக் கதிர்களின் தாக்கம் இருக்கும் என்பதால் சன்ஸ்கீரின் பயன்படுத்துவது அவசியம்.

ஓட்ஸ், மற்றும் பால் சம அளவு எடுத்துக்கொள்ளவும். ஓட்ஸை பாலில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். இந்தக் கலவையை அடுப்பில் வைத்து லேசாக சூடு செய்து கொள்ளவும். கை கால், கழுத்து என உடல் முழுவதும் அப்ளை செய்து ஸ்க்ரப்பர் போன்று தேய்த்துக் குளித்தால் பனிக்காலத்தில் வறட்சி நீங்கி சருமம் மிளிரும்.

வறட்சியால் முடி கொட்டுகிறது என்பவர்கள் இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள். மறுநாள் காலையில் அரைத்து அத்துடன் சில துளி தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் பேக் போன்று அப்ளை செய்து பத்து நிமிடங்கள் கழித்து குளித்தால் கூந்தல் வறட்சி நீங்கும்.

சைனஸ்... ஆஸ்துமா... சரும வறட்சி... மூட்டுவலி... பனிக்கால நோய்கள்... தீர்வுகள்!

கற்றாழையின் சதைப்பகுதியுடன் சில சொட்டுகள் தேன் கலந்து சருமத்தில் அப்ளை செய்து, லேசாக மசாஜ் செய்து சருமத்தை சுத்தம் செய்தால் சரும வறட்சி நீங்கும்.

கைகள், முட்டிகள், கால் ஆகிய இடங்களில் பனிக்காலத்தில் சிலருக்கு சொரசொரப்பு தன்மை தெரியும். இந்த இடங்களில் தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சம அளவு கலந்து அப்ளை செய்து மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து கடலை மாவு கொண்டு தேய்த்துக் குளிக்க சொரசொரப்பு இருந்த இடம் மிருதுவாக மாறும்.

தினமும் குளித்துவிட்டு வந்ததும் சருமத்துக்கு மாய்ஸ்ச்சரைசர் அப்ளை செய்வது அவசியம். மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்தினாலும் சருமத்தில் பனிக்கால வெடிப்புகள், தோல் உரிதல் போன்ற பிரச்னை இருக்கிறது என்பவர்கள், கடலை மாவு, பாசிப்பயறு மாவு இரண்டையும் ஒன்றாகக் கலந்து அதில் சில சொட்டுகள் குங்குமாதி தைலம் கலந்து சோப்புக்கு பதில் பயன்படுத்தி வந்தால் சரும வெடிப்புகள் நீங்கும்.

சைனஸ்... ஆஸ்துமா... சரும வறட்சி... மூட்டுவலி... பனிக்கால நோய்கள்... தீர்வுகள்!

பனிக்காலத்தில் சருமத்தில் இறந்த செல்களின் எண்ணிக்கை அதிகமாகும். எனவே மாதம் ஒரு முறை ஃபேஷியல் செய்து கொள்வது நல்லது. ஃபேஷியல் செய்ய நேரம் இல்லை என்பவர்கள், பப்பாளி, வாழைப்பழம் இரண்டையும் சம அளவு எடுத்து தேன் கலந்து பேஸ்ட் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். இதைச் சருமத்தில் அப்ளை செய்து பத்து நிமிடங்கள் கழித்துக் கழுவ ஃபேஷியல் செய்தது போன்ற ஃப்ரெஷ் லுக் கிடைக்கும்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

*******

உணவுகள் என்னென்ன?

பனிக்காலம் நம் உடலுக்குத் தருகிற குளிர்ச்சியைக் குறைப்பதற்கான உணவுகளைச் சாப்பிட வேண்டும். உதாரணத்துக்குத் தூதுவளை ரசம், பச்சை சுண்டைக்காய், சுண்டைக்காய் வற்றல் குழம்பு, பிஞ்சுக் கத்திரிக்காய், பாகற்காய் என உடலில் சளி சேராமல் தடுக்கக்கூடிய காய்கறிகள், கீரைகளைச் சாப்பிடவும். இதையும் மீறி சளி பிடித்தால், மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி போன்ற காரமான உணவுகளைச் சாப்பாட்டில் சேர்க்கவும். உடலுக்கு வெப்பம் தரும் அன்னாசி மற்றும் பப்பாளியை அதிகம் சாப்பிட வேண்டும். கோதுமை உடலுக்கு உஷ்ணம் தரும் தானியம் என்பதால், பனிக்காலத்தில் கோதுமை உணவுகளை அதிகம் சாப்பிடலாம். தவிர, குளிர்காலம் முழுக்க, முடிந்தவரை உணவைச் சுடச்சுடச் சாப்பிடுங்கள். பனிக்காலம் முழுக்க வெந்நீர் மட்டுமே குடிப்பது நல்லது.

சுவைகளில் இனிப்பு, உப்பு, புளிப்பு தவிர்க்க வேண்டும். காரம், கசப்பு, துவர்ப்பு சுவைகளை அதிகமாகச் சேர்க்க வேண்டும். பாலுக்கும், தயிருக்கும், வெண்ணெய்க்கும் `நோ' சொல்லுங்கள். உருக்கிய நெய், தாளித்த மோர் என்றால் ஓகே.

கேரட், பீட்ரூட், புளித்த மாவு உள்ளிட்ட உடலை மந்தமாக்கும் உணவுகளைத் தவிர்த்து விடுங்கள். கூடவே, ஒரு டீஸ்பூன் திரிகடுகு (சுக்கு, மிளகு, திப்பிலி) சூரணத்தை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், சளி, இருமல் போன்ற பிரச்னைகளை வருமுன் தடுக்கலாம். இந்தச் சூரணம் மாத்திரையாகவும் கிடைக்கிறது.

இவை வேண்டவே வேண்டாம்!

குளிர்காலத்தில் ஆறிப்போய் ஜில்லென்று இருக்கிற உணவுகளையும், ஃபிரிட்ஜில் வைத்த பழைய உணவுகளையும் அறவே தவிருங்கள். ஐஸ் வாட்டர், ஐஸ்க்ரீம், இனிப்பு வகைகள், சீஸ், பனீர் போன்றவற்றை உணவில் சேர்த்தால், சளித்தொல்லையை ஏற்படுத்தும். ஏற்கெனவே இருந்தால், அதை இன்னும் அதிகப்படுத்தும்.

மெட்ராஸ் ஐ... சில தகவல்கள்!

சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் நிஷாந்த், `மெட்ராஸ் ஐ' பற்றி விளக்குகிறார்...

‘மெட்ராஸ் ஐ’ அடினோவைரஸ் (Adenovirus) அல்லது பாக்டீரியா தொற்றால் ஏற்படும்.

வெயில் காலத்தைவிட காற்றில் ஈரப்பதம் அதிகமிருக்கும் காலங்களில் இந்தக் கிருமிகள் வேகமாகப் பரவும்.

தொற்று பாதிப்புள்ள நபர், தன் கண்களைத் தொட்ட கைகளால் டி.வி. ரிமோட்டை தொட்டு, அந்த ரிமோட்டை வீட்டிலிருப்பவர்கள் தொட்டுப் பயன்படுத்தினால், அவர்களுக்கும் மெட்ராஸ் ஐ வரும். மற்றபடி, பலரும் நினைத்துக்கொண்டிருப்பதுபோல, இது பார்ப்பதன் மூலமாகப் பரவுகிற தொற்று கிடையாது.

மெட்ராஸ் ஐ வந்தவர்களுக்கு சொட்டு மருந்து போட்டுவிடுபவர்கள், உடனடியாக கைகளை சோப் போட்டு சுத்தமாகக் கழுவ வேண்டும்.

மெட்ராஸ் ஐ வந்த கண்களில் எண்ணெய் விடுவது, தாய்ப்பால் விடுவது போன்ற சுய மருத்துவம் கூடவே கூடாது.

பார்மசியில் ஏதோவொரு ஐ டிராப்ஸ் வாங்கி விடவும் கூடாது. ஏனென்றால், மெட்ராஸ் ஐ-யில் பலவகை இருக்கின்றன. அதில் உங்களுக்கு வந்திருப்பது எந்த வகை என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கான ஐ டிராப்ஸை கண் மருத்துவரால் மட்டுமே பரிந்துரைக்க முடியும்.

பாக்டீரியா தொற்றால் வந்திருந்தால், ஒரு வாரத்தில் சரியாகி விடும். வைரஸ் தொற்றால் வந்திருந்தால் 10 நாள்கள் வரைகூட ஆகலாம். சுய வைத்தியம் செய்து பிரச்னையைப் பெரிதாக்கினால், குணமாக இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகலாம்.

சைனஸ்... ஆஸ்துமா... சரும வறட்சி... மூட்டுவலி... பனிக்கால நோய்கள்... தீர்வுகள்!

இன்ஹேலர்... இதற்குத்தான்!

ஆஸ்துமாவுக்கு இன்ஹேலர்தான் சிறந்த மற்றும் முக்கிய சிகிச்சை ஆகும். ஒருமுறை இன்ஹேலரை வைத்து நாம் சிகிச்சையை தொடங்கிவிட்டாலே, அது நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். ஆனால், உடலில் உள்ள அலர்ஜி முழுவதுமாக குணமடையும்வரை பாதிக்கப்பட்டவர் கண்டிப்பாக இன் ஹேலரை பயன்படுத்த வேண்டும். பிறகு மெள்ள மெள்ள இன்ஹேலர் பயன் படுத்துவதை நிறுத்திக்கொள்ளலாம்.

சிலர் இன்ஹேலரை பயன்படுத்திக்கொண்டே இருந்தால், அதற்கு பழக்கமாகி விடுவோமோ என்று நினைப்பர். அது பழக்கம் அல்ல, சிகிச்சை. நாம் இன்ஹேலரை சுவாசிக்கும்போது, அது நேரடியாக நுரையீரலுக்குள் சென்று வேலைசெய்யத் தொடங்கிவிடும். பெரும்பாலும் இன்ஹேலரால் அதிக பாதிப்பு கிடையாது. நோய் கட்டுக்குள் வந்துவிட்டால் இன்ஹேலர் பயன் படுத்துவதை நிறுத்திவிடலாம். ஒருவேளை திரும்ப வந்தால், அப்போது இன்ஹேலர் பயன்படுத்துவதைத் தொடரலாம். ஆனால், மருத்துவர் கூறிய பின்தான் இன்ஹேலர் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

ஆஸ்துமாவை நம்மால் முழுவதுமாக குணப்படுத்த முடியாது. ஆனால் இன்ஹேலர் பயன்படுத்துவது மூலம் கட்டுக்குள் கொண்டு வரலாம்.

சைனஸ்... ஆஸ்துமா... சரும வறட்சி... மூட்டுவலி... பனிக்கால நோய்கள்... தீர்வுகள்!

சைனஸைட்டிஸ் பெரும்பாலும் 70% பேருக்கு இந்த ஸ்பிரே மற்றும் ஆன்டிபயாடிக் மூலம் முழுமையாக குணமடைந்துவிடும். 30% பேருக்கு மட்டுமே பாதிப்பு மோசமடையும். அப்போது அறுவை சிகிச்சை தேவைப்படும். துளையிட்டு சைனஸில் ஏற்பட்டுள்ள அடைப்பு அல்லது வீக்கத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிடலாம். முழுவதுமாக குணப்படுத்திவிடலாம்.

பொருள்கள் வாங்கும்போது!

கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்தால் உணவுப் பொருள்கள் வதங்கிக் காணப்படும். ஆனால், பனிக்காலத்தில் உணவுப் பொருள்கள் எப்போதும் ஃப்ரெஷாக இருப்பது போன்றே இருக்கும். எனவே கடைகளில் உணவுப் பொருள்கள் வாங்கும்போது அது பேக்கிங் செய்யப்பட்ட தேதிகளை கவனித்து வாங்குவது அவசியம்.