Published:Updated:

கர்ப்பகால உடல் பிரச்னைகள் தவிர்க்க என்னவெல்லாம் செய்யலாம், செய்யக் கூடாது? #MorningSickness

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கர்ப்பகால உடல் பிரச்னைகள் தவிர்க்க என்னவெல்லாம் செய்யலாம், செய்யக் கூடாது?  #MorningSickness
கர்ப்பகால உடல் பிரச்னைகள் தவிர்க்க என்னவெல்லாம் செய்யலாம், செய்யக் கூடாது? #MorningSickness

கர்ப்பகால உடல் பிரச்னைகள் தவிர்க்க என்னவெல்லாம் செய்யலாம், செய்யக் கூடாது? #MorningSickness

யம், தவிப்பு, பதற்றம் அத்தனையும் பெண்களுக்குத் தரும் காலம் கர்ப்பகாலம். அந்த நேரத்தில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் கர்ப்பிணிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு அளவே இல்லை. வாந்தி, மயக்கம், குமட்டல் என ஒவ்வொரு நாள் விடியலுமே ஏதாவது ஓர் அவஸ்தையோடுதான் ஆரம்பிக்கும். முதல் குழந்தையின்போது, குமட்டல் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து, அவர்களின் உடலை மேலும் சிரமத்துக்குள்ளாக்கிவிடும். தங்களுக்கு உடலில் ஏற்படும் மாற்றங்கள், வயிற்றில் இருக்கும் சிசுவை பாதித்துவிடுமோ என்ற அச்சமே, பல கர்ப்பிணிகளையும் உளவியல் சார்ந்த சிக்கல்களுக்கு இட்டுச்சென்றுவிடும். ஆங்கிலத்தில் 'Morning Sickness' என்று இதைக் கூறுவார்கள். இந்தப் பிரச்னையை கர்ப்பிணிகள் எப்படி எதிர்கொள்ளலாம் என்பது குறித்து மகப்பேறு மருத்துவர் ஶ்ரீகலா விவரிக்கிறார்...

* சிலருக்கு சுடச்சுடச் சாப்பிடும் பழக்கம் இருக்கும். கர்ப்பகாலத்தில் அப்படிச் சாப்பிட்டால் அது குமட்டலை ஏற்படுத்தக்கூடும். எனவே, நன்கு ஆறவைத்த உணவையே சாப்பிடவும்.

* எந்த ஒரு உணவையும் 'முழுமையாக உட்கொள்வது' அல்லது 'சாப்பிடாமலேயே இருப்பது' இரண்டுமே குமட்டல் உணர்வு ஏற்படுத்தும். குறிப்பிட்ட நேரத்தைக் கணக்கில் கொண்டு, இடைவெளி எடுத்து சிறிது சிறிதாகச் சாப்பிட்டு வர வேண்டும். மூன்று வேளை சாப்பிடும் பழக்கமிருந்தால், அதை ஆறு வேளைகளாகப் பிரித்துச் சாப்பிடவும். சாப்பாடாகச் சாப்பிட பிடிக்காதவர்கள், ஜுஸ், பழங்கள் மூலம் தேவையான சத்துகளை எடுத்துக்கொள்ளலாம்.

* இயல்பாகவே மசாலாப் பொருள்கள் வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தும். எனவே, கர்ப்பகாலத்தில் உணவில், காரம் மற்றும் மசாலாப் பொருள்களை முடிந்தவரை குறைத்துக்கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகள், காரம் அதிகமுள்ள உணவுகளுக்குப் பதிலாக கார்போஹைட்ரேட்ஸ், புரதச்சத்துகள் நிறைந்த காய்கறிகளை சேர்த்துக்கொள்ளவும்.

* தேவையான அளவு ஓய்வு அவசியம். நடந்துகொண்டே இருப்பது, வேலை செய்துகொண்டே இருப்பது போன்றவை தூங்கி எழும் நேரத்தில் தேவையற்ற அலுப்பை ஏற்படுத்தும். கர்ப்பிணிகளுக்கு, இரவு 8 முதல் 10 மணி நேரத் தூக்கமும், மதியம் ஓரிரு மணி நேரத் தூக்கமும் அவசியம். பல வீடுகளில் பெரியவர்கள் மதிய நேரத் தூக்கத்துக்குத் தடைபோடுவார்கள். கர்ப்பிணிகளுக்கு மதிய நேர உறக்கம் மிக அவசியம். தூக்கம் வரவில்லை என்றாலும், வெறுமனே படுத்து எழுந்திருக்க வேண்டும்.

* 'எலுமிச்சையை மோந்து பாரு', 'இஞ்சி டீ குடி' என வாந்தியை நிறுத்துவதற்கு ஏராளமான வழிகளை வீட்டுப் பெரியவர்கள் சொல்வார்கள். இவை எல்லோருக்கும் எல்லா நேரமும் சரியாக இருக்காது. சம்பந்தப்பட்ட பெண்ணின் இயல்பைப் பொறுத்து, அவள் மனதுக்கும் உடலுக்கும் நெருக்கமான ஒரு பழக்கத்தை பழக்கிவிட வேண்டும். சிலருக்கு புளிப்பு மிட்டாய் சாப்பிடால் வாந்தி வராமல் இருக்கும். சிலருக்கு பிஸ்கெட் சாப்பிடுவது குமட்டலைக் குறைக்க உதவும். ஆக, அவரவர் மனமும் உடலும் எதை ஏற்கிறதோ அதைப் பின்பற்றவும்.

* சாப்பிட்டாலே வாந்தி வருகிறது, குமட்டுகிறது என்று சொல்லிக்கொண்டு சாப்பிடாமலே பலர் இருப்பார்கள். இப்படிச் சாப்பிடாமல் இருப்பது, ஹார்மோன் குறைபாடுகளை ஏற்படுத்தும். இன்றைய பெண்களில் பலருக்கு குழந்தை பிறந்த பிறகு ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் ஏற்படுவது இயல்பான ஒன்றாக ஆகிவருகிறது. கர்ப்பகாலத்தில், 'பேலண்ஸ்டு டயட்' முறையை ஃபாலோ செய்தால், இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

* கர்ப்பிணிகளுக்கு பல்வேறு சத்துகளும் அவசியம். அவற்றில் முக்கியமான ஒன்று, குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின் பி 6. மீன் வகைகள், பால் போன்றவை வைட்டமின் பி 6 நிறைந்த உணவுகள். இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அதிகமாக இவற்றை உட்கொள்ளக் கூடாது. கர்ப்பிணிகள் தினமும் பால் குடிக்க வேண்டும் எனக் கூறி வலுக்கட்டாயமாக அதை அருந்தச் செய்வார்கள். இதுபோல விருப்பமில்லாமல் வலுக்கட்டாயமாகச் சாப்பிடும் எல்லா உணவுகளும், வாந்தியையும் குமட்டலையும் அதிகப்படுத்தும். உடல் எந்த உணவை ஏற்றுக்கொள்கிறதோ, அதை மட்டுமே உடலுக்குத் கொடுங்கள்.

* கர்ப்பகாலத்தில், உடல்ரீதியாக மட்டுமின்றி, மனரீதியாகவும் பல்வேறு சிக்கல்கள் இருக்கும். உண்மையில், உடல் பாதிப்புகளைவிடவும் உள பாதிப்புகள்தான் மிகவும் ஆபத்தானவை. எனவே, தினந்தோறும் யோகா, உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றில் ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். அமைதியாக, மகிழ்ச்சியாக உங்களை இருக்கவைக்கும் இசையைக் கேளுங்கள், உங்களுக்கு மனநிறைவைத் தரும் அனைத்து நல்ல விஷயங்களையும் தேடிச் செய்யுங்கள்.

80 சதவிகிதப் பெண்களுக்கு, கர்ப்பகாலத்தின் முதல் 12 வாரங்களில் குமட்டல் பிரச்னை பெரியளவில் இருப்பதாக ஓர் ஆய்வு சொல்கிறது. சிலருக்கு 12 முதல் 13 வாரங்கள் வரைகூட இதுபோன்ற குமட்டல் பிரச்னைகள் தொடர்கிறது. ஆக, இது எல்லோருக்கும் இருக்கும் இயல்பான ஒன்றுதான். இந்த விஷயத்தில் உளவியல்ரீதியான பயம் அவசியமில்லாதது. உடலில் ஏற்படும் பிரச்னைகளைச் சமாளிக்க, மருந்து, மாத்திரைகள் மட்டும் போதாது... மனதில் நம்பிக்கையும் இருக்க வேண்டும். ராஜாவின் உயிர் கிளிக்குள் இருப்பதுபோல, உடலின் இயக்க சக்தி மனதில்தான் இருக்கும். இருக்க வேண்டும். மனம் சொல்வதைக் கேட்கும் உடல் தாய்க்கு இருந்தால், குழந்தையின் வளர்ச்சியும் நன்றாகவே அமையும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு