Published:Updated:

இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே !

இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே !
இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே !

பச்சிளம் குழந்தை முதல் பல் விழுந்த முதியோர் வரை எல்லாத் தரப்பினருக்கும் ஏற்ற உணவு, இட்லி. நோயாளிகளும் டயட்டில் இருப்பவர்களுக்கும் மிருதுவான இட்லி மீது ஈர்ப்பு உண்டு. வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாவாசிகள் இட்லிக்கு அடிமையாகிவிடுவர். இந்த இட்லியைப் பல்லாண்டுகளாக தென்னிந்தியர்கள் சாப்பிட்டு வந்தாலும், அதன் பிறப்பிடம் இந்தியா கிடையாது என்பது தெரியுமா? இந்தோனேசியாவில் இதை `கெட்லி” (Kedli) என்பார்கள். அதுதான், `இட்லி’ என மருவியது. கன்னட மக்கள் பயன்படுத்திய இல்லாலிகே உணவுதான் 'இட்லி' என்றும் சொல்வோர் உண்டு. எப்படி இருந்தாலும், இந்தியாவில்தான் இட்லி ஃபேமஸ் என்று வரலாறு பதிவாகியுள்ளது. 

புளிக்க வைக்கப்படாத மாவினால் ‘டோக்ளா’ என்ற பெயரில் குஜராத்திலும், புளிக்கச் செய்து அத்துடன் கள் சேர்த்து, சிறிது இனிப்புடன் ‘வட்டப்பம்’ என்ற பெயரில் கேரளாவிலும், ‘சன்னாஸ்’ என்று மங்களூளூரிலும், இந்த இட்லி பல்வேறு அவதாரங்கள் எடுக்கின்றன. சாக்லெட் இட்லி, காய்கறி இட்லி, சில்லி இட்லி, சிறுதானிய இட்லி என விதவிதமான ஃபிரஷ் இட்லி முதல் மிச்சமாகி இட்லி உப்புமா ஆவது வரை, பல வீடுகளில் வலம்வருகிறது. எனினும், ஆவியில் வேகவைத்த இட்லியே உடலுக்கு நல்லது. அத்தகைய இட்லியை மிருதுவாக உருவாக்குவதற்கான செய்முறையை விளக்குகிறார், சமையல் கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி. 

மிருதுவான இட்லி

அரிசி - 4 கப் 

உளுந்து - ஒரு கப் 

வெந்தயம் - கால் டீஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: 

அரிசி மற்றும் உளுந்தை இரண்டு முறை கழுவி, தண்ணீர் ஊற்றி தனித்தனியாக மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். முதலில், வெந்தயம் மற்றும் உளுந்தை கிரைண்டரில் போட்டு, மையாக அரைத்து எடுக்கவும். பிறகு, அரிசியை கிரைண்டரில் போட்டு  அரைத்து எடுக்கவும் இதை, அரைத்துள்ள உளுந்து மாவுடன் சேர்த்துக்கொள்ளவும். பிறகு, தேவையான அளவு உப்பு சேர்த்து, கையால் நன்கு கலக்கி மூடிவைக்கவும். 8 மணி நேரம் மாவு புளிக்கட்டும். பிறகு, இட்டி தட்டில் சுத்தமான வெள்ளைத் துணியை விரித்து, அதன் குழிகளில் மாவை ஊற்றவும். இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தட்டுகளை வைத்து, அடுப்பில் வைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து இட்லி வெந்ததும் எடுத்துப் பரிமாறவும். 

குறிப்பு: 

இட்லிக்கு அரைக்கும் மாவுடன் சிறிது பழைய சோறு சேர்த்து அரைத்தால், பூபோன்று இருக்கும். 

வேகவைத்து எடுத்த சூடான இட்லியின் மீது, சிறிது நல்லெண்ணெய் எண்ணெய் சேர்த்து பரிமாறினால், கூடுதல் சுவையுடன் இருக்கும். 

உளுந்து அரைக்கும்போது, அதிகப்படியான தண்ணீர் ஊற்றக்கூடாது. 

அரிசியை அரைக்கும்போது, சிறிது அவல் சேர்த்தால், இட்லி பூபோன்று இருக்கும். 

குக்கர் இட்லியைவிட, இட்லி தட்டில் துணி விரித்து ஆவியில் வேகவைக்கும் இட்லி சுவையாக இருக்கும். 

இட்லி நல்லதா? 

இட்லி உடலுக்கு எந்த அளவுக்கு ஆரோக்கியமானது என விளக்குகிறார் நியூட்ரீஷியன் நித்யா. 

மருத்துவர் முதல் டயட்டீஷியன் வரை பரிந்துரை செய்யும் உணவு, இட்லி. இது, எளிதில் செரிமானம் ஆகும் உணவு மட்டுமின்றி, ஆரோக்கியமான உணவும். ஒரு இட்டிலியில் 85 கலோரிகள் உள்ளது. 2 கிராம் புரோட்டீன், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. சராசரியான எடை, உயரம் உடையவர்கள் ஒருவேளைக்கு 4 அல்லது 5 இட்லி சாப்பிடலாம். இட்லியுடன் சாம்பார் சேர்த்துச் சாப்பிடும்போது, புரதச்சத்து அதிகம் கிடைக்கும் என்பதால், இட்லிக்குச் சாம்பார்தான் பெஸ்ட் சாய்ஸ். சட்னி வகைகளைக் குறைத்துக்கொள்ளலாம். இட்லி மாவுடன் காய்கறிகளைச் சேர்த்து தயாரிப்பதன் மூலம், இன்னும் கூடுதல் எனர்ஜி பெறலாம். காலை, இரவு என இரண்டு வேளைகளிலும் இட்லி சாப்பிடுபவர்கள், அதில் ஒருவேளைக்கு அரிசிக்குப் பதில், சிறுதானியங்களை உளுந்துடன் சேர்த்து அரைத்து இட்லி வார்க்கலாம்.