Published:Updated:

``மூணு லட்சம்.. ஒரு குழந்தைக்கு வாழ்க்கை... கிட்னியை வித்துட்டேன்!’’ - சென்னை பெண்ணின் வாக்குமூலம்

ஒரு ரஸ்னா பாக்கெட் அளவுக்கு ரத்தம் கொடுத்தா 15,000 ரூபா தருவாங்க. - பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்

``மூணு லட்சம்.. ஒரு குழந்தைக்கு வாழ்க்கை...  கிட்னியை வித்துட்டேன்!’’ -  சென்னை பெண்ணின் வாக்குமூலம்
``மூணு லட்சம்.. ஒரு குழந்தைக்கு வாழ்க்கை... கிட்னியை வித்துட்டேன்!’’ - சென்னை பெண்ணின் வாக்குமூலம்

து, சென்னையின் பிரபல மருத்துவமனை. அதற்கு வெளியே மிகவும் சோர்வாக, மருண்ட கண்களோடு வயிற்றைப் பிடித்தபடி அமர்ந்திருந்தார் அந்தப் பெண்மணி, அடிக்கடி தலையைக் குனிந்தும் நிமிர்ந்தும் ஏதோ செய்துகொண்டிருந்தார். `இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே!’ என்று தோன்றியது. கொஞ்சம் நெருங்கினால் நன்றாக அறிமுகமானவர்போலத் தெரிந்தது. யோசித்ததில், ஒரு முறை வாடகைத்தாய் குறித்த ஒரு கட்டுரைக்காக அவரிடம் பேசியிருந்ததும், அவர் பெயரும் நினைவுக்கு வந்தது. அருகில் சென்று ``என்ன ஆச்சு... குடிக்கறதுக்கு தண்ணி வேணுமா?’’ என்று கேட்டேன். ``அதெல்லாம் வேணாம் தம்பி. லேசா வயித்த வலிக்குது. சார் வருவாரு... அவருக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கேன். அவர் வந்ததும், மாத்திரை வாங்கிப் போட்டுக்கிட்டா சரியாகிடும்’’ என்றவர், தொடர்ந்து பேசப் பேச அதிர்ந்துபோனேன்.

``இப்போ நான் வாடகைத்தாயா போறதில்லை. கடனையெல்லாம் அடைச்சுட்டேன். வீட்டுக்குக்காரருக்கு ஒரு வண்டியும் வாங்கிக் கொடுத்தாச்சு. எப்பயாவது வண்டிக்கு டியூ கட்ட, கைச்செலவுக்கு பணம் இல்லைனா மட்டும் ரத்தம் கொடுக்கப் போவேன். ஒரு ரஸ்னா பாக்கெட் அளவுக்கு ரத்தம் கொடுத்தா 15,000 ரூபா தருவாங்க. சென்னை புறநகர்ல இருக்குற ஆஸ்பத்திரிங்க மட்டும் இல்லை... சென்னைக்குள்ளயும் பல இடத்துல கொடுக்கலாம். இதுக்கு புரோக்கர் இருக்காரு. அவர்தான் கூட்டிட்டுப் போவாரு. ஒரு தடவை ரத்தம் கொடுக்கப் போனப்போ கிட்னி வேணும்னு கேட்டு ஒரு புரோக்கர் வந்தாரு. நமக்குத்தான் ரெண்டு கிட்னி இருக்கேன்னு, ஒண்ணைக் கொடுத்துட்டேன்...’’ பதறவைக்கும் செய்தியைச் சர்வ சாதாரணமாகச் சொல்கிறார் அந்தப் பெண்மணி. சென்னையைச் சேர்ந்தவர். வயது முப்பத்தியெட்டு. வாடகைத்தாயாக இருந்தவர். பின்னர் கருமுட்டை விற்பனை செய்துவந்திருக்கிறார். அவ்வப்போது ரத்தம் கொடுத்துவந்தவர், இப்போது தன் ஒரு சிறுநீரகத்தையும் விற்பனை செய்திருக்கிறார். இதெல்லாம் சட்டமீறல் என்பதுகூட அவருக்குத் தெரியவில்லை.

என்ன நடந்தது? விரிவாக விவரிக்கிறார் அவர். ``செலவுக்குப் பணம் இல்லையேன்னு ஒருநாள் ரத்தம் கொடுக்குறதுக்காக ஆஸ்பத்திரிக்குப் போனேன். அப்போதான் ஒரு புரோக்கர் வந்து, `உங்ககிட்ட பேசணும்மா’னு சொன்னாரு. அவரை அந்த ஆஸ்பத்திரியில அடிக்கடி நான் பார்த்திருக்கேன். `சரி... என்ன விஷயம்?’னு அவர்கிட்ட கேட்டேன். `கிட்னியை வித்தா மூணு லட்ச ரூபாய் பணம் கிடைக்கும். 12 வயசு பணக்கார வீட்டுக் பெண் குழந்தை... பாவம் ரெண்டு கிட்னியும் செயலிழந்துபோய் ரொம்பக் கஷ்டப்படுது’னு சொன்னார். என் ரெண்டு பசங்களைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்ததுல வெளியில கொஞ்சம் கடனாகிடுச்சு. கிட்னி வித்தா பணம் கிடைக்கும். அதைவெச்சு கடனை அடைச்சுடலாம். நம்மளால ஒரு குழந்தைக்கும் வாழ்க்கை கிடைக்கும்னு நினைச்சு, `சரி’னு சொல்லிட்டேன். சென்னையில இருக்குற ஒரு ஆஸ்பத்திரியிலதான் கிட்னி கொடுத்தேன். நான் படிக்கலை. அதனால ஆஸ்பத்திரி பேரெல்லாம் தெரியலை.

என்கிட்ட இப்ப ஒரு கிட்னிதான் இருக்கு. என்னைக்கு இருந்தாலும் நமக்கு சாவு வரத்தான் போகுது. மண்ணுலதான் நம்மைப் புதைக்கப் போறாங்க. போறதுக்கு முன்னாடி ஒரு குழந்தைக்கு உயிர் கொடுத்த நிம்மதியாவது இருக்கும். நான் இப்போ செத்தாலும் நிம்மதியா சாவேன். சொல்லுங்க... இதைவிட வாழ்க்கையில வேற என்ன வேணும்?

என்ன... அளவுச் சாப்பாடுதான் சாப்பிட முடியும். அடிக்கடி வயித்தவலி, தலைவலி வரும். கிட்னி இருந்த இடத்துல உள்ளேயிருந்து யாரோ புடிச்சு இழுக்குற மாதிரி இருக்கும். திடீர் திடீர்னு மூச்சு வாங்கும்... அந்த நேரத்துல நாமா கடைக்குப் போய் மாத்திரை, மருந்து வாங்கியும் சாப்பிட முடியாது. `வேற டாக்டரையும் பார்க்கக் கூடாது’னு சொல்லியிருக்காங்க. கிட்னி வாங்கிக் கொடுத்த சாருக்குத்தான் போன் பண்ணிச் சொல்லணும். அவங்களே மாத்திரை, மருந்து வாங்கிக் கொடுப்பாங்க. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போவாங்க . எல்லாச் செலவையும் அவங்கதான் பார்த்துப்பாங்க, கைச்செலவுக்குப் பணமும் கொடுப்பாங்க.

கிட்னியை ஆபரேஷன் பண்ணி எடுக்குறதுக்கு முன்னாடி நிறையா செக்கப் செய்வாங்க. பெரிய ஆஸ்பத்திரிதான். நாலஞ்சு செக்கப் பண்ணணும். ஒவ்வொரு தடவையும் 2,000, 3,000, 4,000 இப்படிப் பணம் கொடுப்பாங்க. நமக்கும் கைச்செலவுக்கு ஆகும்.

யாரு கஷ்டப்படுறாங்கனு தெரிஞ்சுக்கிட்டுதான் புரோக்கர் பேசறதுக்கே வருவாங்க. `வட்டிக்காரன்கிட்ட திட்டு வாங்கி அசிங்கப்படுறதைவிட இது எவ்வளவோ மேல்’னு நினைச்சு சரின்னு சொல்லிடுவோம். நான் மட்டுமில்லை... என்னை மாதிரி பலபேரு கிட்னி கொடுத்திருக்காங்க. ரத்தம் அடிக்கடி கொடுப்பாங்க.

ரத்தம் கொடுக்கப் போகும்போது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வோட்டர் ஐ.டி கொண்டு போனா போதும். அந்த ஆஸ்பத்திரி சென்னை புறநகர்ல இருக்கு. அங்கே பிபி, சுகர்லாம் செக் பண்ணுவாங்க. நார்மலா இருந்தா ரத்தம் வாங்கிக்குவாங்க. ஆரம்பத்துல 5,500 ரூபாய்தான் கொடுத்தாங்க. இப்போல்லாம் 10,000 ரூபாய், 15,000 ரூபாய்னு கொடுக்குறாங்க. கிட்னி கொடுத்ததால, என்னால இப்போ ரத்தம் கொடுக்க முடியாது. செக்கப் பண்ணும்போது மாட்டிக்குவேன்.

வாடகைத்தாயா போறதெல்லாம் தப்பே இல்லை தம்பி. எனக்கே ஒரு பொண்ணு இருந்து, அதுக்கு குழந்தை இல்லைனா, அவங்க மாமியார் கொடுமைப்படுத்தத்தான் செய்வாங்க. அக்கம் பக்கத்துல கேலி பேசுவாங்க. அந்தத் துக்கம் தாங்காம தற்கொலை பண்ணிக்கிட்டு செத்துப்போற பொண்ணுங்க நிறையப் பேர். எங்களை மாதிரி வாடகைத்தாய்ங்கதான் அவங்க உசுரைக் காப்பாத்துறோம். எனக்கு பலநாள் வாழணும்னு ஆசை இல்லை. சாகுறதுக்குள்ள நாலு பேருக்கு உதவி செஞ்சுட்டு செத்துப்போயிடணும். கண்தானம்கூட செய்யலாம்னு இருக்கேன்.

கிட்னி ஆபரேஷன் பண்றதுக்கு முன்னாடி மட்டும் கொஞ்சம் பயமா இருந்துச்சு. அழுகையா வந்துச்சு. எனக்குத் தெரிஞ்ச ஒரு பொண்ணு இப்படித்தான் கிட்னி கொடுக்கப்போய் செத்துப் போயிடுச்சு. அதனாலதான். மத்தபடி ஒரு கிட்னி போறதால, எனக்கு எந்தக் கவலையோ, பயமோ சுத்தமா இல்லை.

முதல்ல எங்க வீட்டுல யாரும் சரின்னு சொல்லலை. `கிட்னில்லாம் கொடுக்க வேணாம்மா’னு என் பசங்க என்கிட்ட சண்டை போட்டாங்க . சார் ஒரு டைம் வீட்டுக்கு வந்து, அந்தப் பொண்ணோட போட்டோவ என் பசங்ககிட்ட காமிச்சாரு. குழந்தை முகத்தைப் பார்த்ததும் என் பசங்களும், `சரி கிட்னி கொடும்மா’னு சொல்லிட்டாங்க. கிட்னி வித்தக் காசுலயும் பசங்க ஒரு ரூபாய்கூட வாங்கிக்கலை. அந்தக் குழந்தையோட வீட்டுல இருக்குற யாராவது கிட்னி கொடுத்திருக்கலாம். ஆனா, அவங்ககிட்ட பணம் மட்டும்தான் இருக்கு. நல்ல மனசு இல்லை. உயிர் போயிடுமோனு பயமும் இருக்கு. எனக்கு அப்படி இல்லை. நல்ல மனசு இருக்கு. அதனால கொடுக்கிறேன்’’ என்றபடியே சிரிக்கிறார் அந்தப் பெண்மணி. அவரைப் பார்த்து பரிதாபப்படுவதா அல்லது அவரை ஏமாற்றியவர்களின் மீது கோபப்படுவதா என்று தெரியவில்லை!