Published:Updated:

``நம்ம உயிர் அவங்க... நாமளே புறக்கணிச்சா எங்க போவாங்க'' - சிறப்புக் குழந்தையின் தாய் தீபா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``நம்ம உயிர் அவங்க... நாமளே புறக்கணிச்சா எங்க போவாங்க'' - சிறப்புக் குழந்தையின் தாய் தீபா
``நம்ம உயிர் அவங்க... நாமளே புறக்கணிச்சா எங்க போவாங்க'' - சிறப்புக் குழந்தையின் தாய் தீபா

''நம்ம உயிர் அவங்க... நாமளே புறக்கணிச்சா எங்க போவாங்க'' - சிறப்புக் குழந்தையின் தாய் தீபா

``ஒரு பெண் கருவுறும்போதே தன் குழந்தையைப் பற்றி நிறைய கனவுகளோடு இருப்பாள். அந்தக் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் எனப் பல வகையில் யோசித்திருப்பாள். ஆனால், பிறந்த குழந்தையை `ஸ்பெஷல் சைல்டு' என்று சொல்லும்போது, அந்தத் தாயின் மனம் எவ்வளவு வேதனைப்படும். ஆனால், இந்தச் சிறப்புக் குழந்தைகளின் தூய அன்புக்கு முன்னால் எல்லா வலிகளும் தோற்றுப்போகும்'' என மென்மையாகப் பேச ஆரம்பிக்கிறார் தீபா. கோயம்புத்தூரில், `கெளமாரம் பிராசாந்தி (Kaumaram Prashanthi Academy) என்கிற பெயரில் ஆட்டிஸ குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியை நடத்துபவர்.

``எனக்குச் சின்ன வயசிலிருந்தே அடுத்தவங்களுக்கு உதவுவதில் ஆர்வம் அதிகம். எனக்குத் திருமணம் முடிந்த அன்றே கணவரிடம், `என் 30 வயதுக்கு மேல் ஆதரவற்றவர்களுக்குப் பணிபுரிவேன். அதற்கு சம்மதிக்க வேண்டும்' எனச் சொல்லியிருந்தேன். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்தவள், யஷ்வந்த்ரா. இளையவள், ரிஷ்வந்தரா. என் இந்த வாழ்வுமுறைக்கான தூண்டுகோல், இளைய மகள்தான். ஐந்து மாதம் வரை மற்ற குழந்தைகள்போல இயல்பாகவே இருந்தாள். பிறகு, தவழுதல், நடத்தல் போன்ற செயல்களில் பின்தங்க ஆரம்பித்தாள். மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். அவர் சொன்ன தகவல் என்னை நிலைகுலைய வைத்தது. `மூளை வளர்ச்சி முழுமை அடைவதற்கு முன்னரே, குழந்தையின் உச்சிக் குழி மூடிவிட்டது. எனவே, இந்தக் குழந்தையால் இயல்பாக இருக்க முடியாது' என்றார்.

ஓர் அம்மாவாக என்னால் ஜீரணிக்கவே முடியலை. எல்லாப் பெண்களைப் போலவும் அவளைச் சுமந்த 10 மாதங்களும் எவ்வளவு கற்பனைகள் கண்டேன். ஆயிரம் பேர் ஆறுதல் சொன்னாலும் அம்மாவாக யோசித்தபோது வேதனை சுட்டது. ஒருமுறை தற்கொலைக்கும் முயற்சி செய்தேன். அப்போ என் பெரிய பொண்ணு, ``அம்மா, பாப்பா சிரிக்கிறா. அவளும் நம்மளை மாதிரிதான் இருக்கா. அவளுக்கு நோய் இல்லைம்மா'னு அழுதுட்டே சொன்னாள். அவளை கட்டிப்பிடிச்சு அழுததுதான் என் கடைசி அழுகை. இனி எதுக்கும் அழக் கூடாதுன்னு முடிவெடுத்தேன்'' என்கிற தீபா குரலில் ஒரு கம்பீரம் வருகிறது.

``என் சின்னப் பொண்ணைக் குணப்படுத்துவதற்காகப் பார்க்காத டாக்டர்ஸே இல்லை. ஒரு சர்ஜரியும் செய்து பார்த்துட்டோம். எதுவும் அவளை முழுசாக் குணப்படுத்தலை. அதன்பின் ஒரு முடுவுக்கு வந்தேன். எதையும் அவளாகப் புரிஞ்சுக்கலைன்னா என்ன நாம புரியவைப்போம்னு தீர்மானிச்சேன். அவளைப் படிக்கவைக்க நிறைய ஸ்கூல் ஏறி இறங்கினேன். பல பள்ளிகளின் அணுகுமுறையும் சிறப்புக் குழந்தைகளை நடத்தும் விதமும் எனக்குத் திருப்தியை தரலை. என் பொண்னுக்காக நானே பாடங்களை சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சேன். எங்கள் தெருவில் வசித்த ஒருவரின் குழந்தையும் என் குழந்தை மாதிரிதான். அந்தப் பெண்ணுக்கும் பாடம் சொல்லிக்கொடுத்தேன். என் அணுகுமுறையைப் பார்த்து வேற சில சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்கள் என்கிட்டே வந்தாங்க. வீட்டிலேயே பாடம் சொல்லிக்கொடுத்துட்டிருந்தேன். 

காற்றோட்டமான வசதியுடன் ஓர் இடம் கிடைச்சா நல்லா இருக்குமேன்னு பல இடங்களைத் தேடி அலைஞ்சேன். ஆட்டிஸக் குழந்தைகளுக்கான ஸ்கூல்னு சொன்னதும், பலரும் இடம் கொடுக்க மறுத்துட்டாங்க. `இந்தக் குழந்தைகளும் மனுசங்கதாம். சொல்லப்போனா, தெய்வக் குழந்தைகள்'னு கத்தி அழணும்போல இருக்கும். என் விடாமுயற்சிக்கும் தேடலுக்கும் பலனாக, குமரகுரு மடத்திலிருந்து இலவசமாக இடம் கொடுத்தாங்க. மூன்று குழந்தைகளுடன் ஆரம்பித்த பள்ளி, இன்னிக்கு 200 குழந்தைகளுடனும் 90 ஆசிரியர்களுடனும் சிறப்பாகச் செயல்படுது. இங்கே இவ்வளவு ஃபீஸ் கட்டணும்னு எந்தக் கட்டாயமும் இல்லை. பெற்றோர் அவங்களால் முடிஞ்ச கட்டணத்தைச் செலுத்தலாம். எதுவுமே கொடுக்கமுடியாதவங்களின் குழந்தைகளுக்கு வெளியிலிருந்து உதவித்தொகை வாங்கியும் படிக்கவைக்கிறோம். 

கம்யூனிகேஷன் தெரபி, ஸ்பீச் தெரபி, நேச்சுரோ தெரபி எனப் பல்வேறு சிகிச்சைகள் மூலமாகக் கற்றுக்கொடுக்கிறோம். பேச முடியாத குழந்தைகளுக்குப் படங்கள் மூலம் தங்கள் கருத்தை வெளிப்படுத்தவும் கற்றுக்கொடுக்கிறோம். இந்தப் பள்ளியை ஆரம்பிச்சு 13 வருஷம் ஆயிடுச்சு. எங்கள் பயிற்சி மூலம் இதுவரை 60 குழந்தைகளை நார்மல் பள்ளியில் சேர்த்திருக்கோம். மற்ற குழந்தைகள் மாதிரி வேகமாக அவங்க கற்றுக்கொள்ளாவிட்டாலும், நல்ல முன்னேற்றம் இருக்கு. படிப்பை ஏற்றுக்கொள்ளவே முடியாத குழந்தைகளுக்கு, பேக்கரி, பேப்பர் பை தயாரிப்பு, டேட்டா என்ட்ரி போன்ற தொழிற்கல்வியைக்  கற்றுக்கொடுக்கிறோம். இதுபோன்ற குழந்தைகளைப் பெற்றோர்கள் சரியாகப் புரிந்துகொண்டாலே போதும். இவங்களும் வாழ்க்கையில் ஜெயிச்சு உயர்ந்த இடங்களை அடைய முடியும். இதுபோன்ற குழந்தைகள் பிறந்துட்டால், `என்ன பாவம் பண்ணாங்களோ' எனப் பேசும் ஊர் வாய்களுக்கு என்னுடைய பதில் இதுதான். இந்தக் குழந்தைகளோடு ஒரே ஒருநாள் செலவழிச்சுப் பாருங்க. இவங்களின் தூய்மையான அன்புக்கு முன்னால் எதுவுமே ஜெயிக்காது'' என நெகிழ்கிறார் தீபா. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு