Published:Updated:

தானத்தில் சிறந்தது தாய்ப்பால் தானம்! - உலக தாய்ப்பால் வார சிறப்புப் பகிர்வு #WorldBreastfeedingWeek

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தானத்தில் சிறந்தது தாய்ப்பால் தானம்! - உலக தாய்ப்பால் வார சிறப்புப் பகிர்வு #WorldBreastfeedingWeek
தானத்தில் சிறந்தது தாய்ப்பால் தானம்! - உலக தாய்ப்பால் வார சிறப்புப் பகிர்வு #WorldBreastfeedingWeek

``தாய்ப்பால் தருவதால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடும். ஊட்டச் சத்து கிடைக்கும். தாய்-சேய் இடையே நெருக்கமான பந்தம் உருவாகும்."

ன்று (01.08.2018) தொடங்குகிறது உலகத் தாய்ப்பால் வாரம். உலகின் உயர்வானது தாய்மை. ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை என்பது வரம். குழந்தையைப் பெற்றெடுத்தவுடன் தாய்ப்பால் ஊட்டவேண்டியது அவசியம். அது குழந்தையின் வளர்ச்சிக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் ஆதாரத் தேவை. உலகில் கலப்படம் செய்ய முடியாத ஒரே உணவு தாய்ப்பால்தான். 

ஆனால், சில தாய்மார்களுக்குப் பால் அதிகமாகச் சுரக்காது. அதேபோல பிரசவத்தின்போது தாய் இறப்பதால் தனிமையில் தவிக்கும் குழந்தைக்கும், தொட்டில் குழந்தையாகவிடப்படும் குழந்தைகளுக்கும் பால் கிடைக்காது. இந்தக் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தரவேண்டியது நம் கடமை. பிறக்கும் குழந்தைக்குப் பால் தர மறுப்பது, அந்தக் குழந்தையின் உணவு உரிமையைப் பறிக்கும் செயல். இந்தப் பிரச்னையைச் சமாளிக்க, தமிழக அரசு 2014-ம் ஆண்டில் `ஹ்யூமன் மில்க் பேங்க்’ (Human milk bank) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம் தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகள் பயனடைவார்கள்; அதோடு தாய்மார்கள் தங்கள் குழந்தைக்குக் கொடுத்தது போக, மீதமுள்ள பாலை தானமாக, மருத்துவமனைகளில் உள்ள மில்க் பேங்கில் செலுத்தலாம். 

``இந்த ஆஸ்பத்திரியில யார் யாரோ புண்ணியவதிங்க கொடுத்த பாலுலதான் என் குழந்தை வளர்ந்துச்சு. தாய்ப்பால் கொடுத்த எல்லாரும் நல்லா இருக்கணும்...’’ - நெகிழ்ச்சி பொங்கப் பேச்சை ஆரம்பிக்கிறார்  துளசி... 

``எனக்குச் சொந்த ஊரு காஞ்சிபுரம் பக்கத்துல இருக்குற உத்திரமேரூர். என் கணவர், தனியார் மருத்துவக் கல்லூரியில பேராசிரியர். எங்களுக்கு மூணு வயசுல ஒரு பெண் குழந்தை இருக்கு. அந்தக் குழந்தை சுகப்பிரசவத்துலதான் பிறந்துச்சு. குழந்தை பிறந்து இரண்டு வருஷத்துக்குப் பிறகு கர்ப்பமானேன். டாக்டர் சொன்ன தேதிக்கு மூணு மாசத்துக்கு முன்னாடியே வலி வந்துருச்சு. சென்னை, எழும்பூர்ல இருக்கிற குழந்தைகள் நல மருத்துவமனையில சேர்த்தாங்க. ஆண் குழந்தை பொறந்துச்சு. குறைப்பிரசவத்துல பிறந்ததால குழந்தைக்கு என்னால பால் தர முடியலை. குழந்தை பிறந்தப்போ வெறும் 750 கிராம் எடைதான் இருந்துச்சு. பசியில குழந்தை அழுறதைப் பார்க்கும்போது கஷ்டமா இருக்கும். அப்போதான் ஆஸ்பத்திரிலேயே இருக்குற `பால் வங்கி' மூலமா என் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைச்சுது. 

இங்கே இருக்கிற செவிலியர்கள் எனக்கு உறுதுணையா இருந்தாங்க. இப்போ குழந்தை ஆரோக்கியமா இருக்கு. இன்னும் மூணு நாள்ல டிஸ்சார்ஜ் ஆகிடுவேன். 10 மாசம் ஆகிடுச்சு... இப்போ, என் குழந்தைக்கு நானே தாய்ப்பால் கொடுக்குறேன். குழந்தைக்குப் போக, மீதியை இங்கே தானமாகத் தந்துடுறேன். ரத்த தானம், கண் தானமெல்லாம் யார் வேணுமானாலும் செய்யலாம். ஆனா, தாய்ப்பால் தானத்தை மட்டும் ஒரு தாயாலதான் தர முடியும். 

என் குழந்தைக்கு யாரோ ஒருத்தரால தாய்ப்பால் கிடைச்சுது. அதேபோல, என்னால யாரோ ஒருத்தரோட குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்கணும். அதுதான் அவங்களுக்கு நான் செலுத்துற நன்றிக் கடனா இருக்கும். என்னால முடியும்போதெல்லாம் மருத்துவமனைக்கு வந்து தானம் செய்றேன். நான் மட்டும் இதைச் செய்யாம, எனக்குத் தெரிஞ்சவங்களையும் தாய்ப்பால் தானம் கொடுக்கச் சொல்றேன். என்னால முடிஞ்ச அளவுக்குத் தாய்ப்பால் தானம் பத்தி விழிப்புஉணர்வு ஏற்படுத்துறேன்...’’ - மன நிறைவோடு சொல்கிறார் துளசி. 

தமிழகத்தில் சென்னை, தஞ்சாவூர், மதுரை, சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைகளில், தாய்ப்பால் சேமிக்கப்படுகிறது. சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இந்தச் சேவையைப் பெறலாம். 

இன்றும், சில தாய்மார்களிடம் `தாய்ப்பால் தானம்' செய்வதில் தயக்கம் இருக்கிறது. சிலர் தங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் போதாது என்று நினைத்தும், சில மூடநம்பிக்கைகளாலும் தானம் செய்ய மறுக்கிறார்கள். ``இந்த நிலையில் தாய்ப்பால் பற்றாக்குறையை எப்படிச் சரி செய்கிறீர்கள்?’’ என்று எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை `பால் வங்கி' யின் தலைமைப் பொறுப்பாளர் கமலரத்தினத்திடம் கேட்டோம்... 

``தாய்மார்களுக்கு ஆலோசனைகள் வழங்கி, அவர்களின் பயத்தைப் போக்கி, குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தர ஊக்குவிக்கிறோம். தாய்ப்பால் கொடுக்கக் கொடுக்க அதிகமாகச் சுரக்குமே தவிர, குறையாது என்பதை அவர்களுக்குப் புரியவைக்கிறோம். தாய்ப்பால் தட்டுப்பாடு வரும்போது, அதைச் சரிசெய்ய, இங்கே பிரசவம் பார்க்கும் பெண்களிடம் கேட்டுப் பெறுவோம். 60 சதவிகிதம் பேர் தாய்ப்பால் தந்து உதவுகிறார்கள். சிகிச்சைக்கு வரும் தாய்மார்களில் 10 சதவிகிதம் பேர் மட்டுமே தருவார்கள். இதற்காக யாரும் பணம் பெறுவதில்லை. அதேபோல, தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு இலவசமாகவே இதை வழங்குகிறோம்’’' என்கிறார் கமலரத்தினம். 

தாய்ப்பால் தருவதால் என்னென்ன நன்மைகள்? - குழந்தைகள் நலக் கல்வியாளர் கங்காதரன் விவரிக்கிறார்... 

``தாய்ப்பால் தருவதால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடும். ஊட்டச் சத்து கிடைக்கும். தாய்-சேய் இடையே நெருக்கமான பந்தம் உருவாகும். கொடுக்காவிட்டால், குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு, எடை குறைவு ஏற்படும். தாய்க்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படலாம். தாய்ப்பாலுக்கு நிகரான உணவு குழந்தைக்கு உலகில் வேறு எதுவும் இல்லை" என்கிறார் கங்காதரன். 

தூளியில் கட்டிவிட்டிருந்த குழந்தையின் அழுகையை, தாய் வரும் வரை காத்திருக்காமல், தன் மார்போடு சேர்த்து பாலூட்டும் `இறைவிகள்' துளசி போன்றோர்... கண்ணுக்குத் தெரிந்த தேவதைகளின் சேவையை வாழ்த்துவோம்! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு