Published:Updated:

கதிர்வீச்சு, வலி அபாயமில்லை... மார்பகப் புற்றுநோய் பரிசோதனைக்குப் புதிய கருவி `ஐ ப்ரெஸ்ட் ஸ்கேனர்'!

கதிர்வீச்சு, வலி அபாயமில்லை... மார்பகப் புற்றுநோய் பரிசோதனைக்குப் புதிய கருவி `ஐ ப்ரெஸ்ட் ஸ்கேனர்'!
News
கதிர்வீச்சு, வலி அபாயமில்லை... மார்பகப் புற்றுநோய் பரிசோதனைக்குப் புதிய கருவி `ஐ ப்ரெஸ்ட் ஸ்கேனர்'!

மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய புதிய கருவி `ஐ ப்ரெஸ்ட் ஸ்கேனர்'!

"மாறிவரும் வாழ்க்கைமுறை, ஹார்மோன் சுழற்சி மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் மார்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகமாகி வருகிறது. நாற்பது வயதைத் தாண்டிய பெண்கள் தயக்கமின்றி பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்" என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், பரிசோதனைக் கருவிகள் மீதான பயத்தால் பல பெண்கள் பரிசோதனைகளைத் தவிர்க்கின்றனர். மார்பகப்புற்றுநோயைக் கண்டறிய `மேமோகிராபி` (Mammography) என்ற சோதனைமுறை பயன்படுத்தப்படுகிறது. `இந்தப் பரிசோதனையின்போது கதிர்வீச்சு வெளிப்படும். சில சமயங்களில் வலியும் ஏற்படலாம்' என்ற அச்சமும் பெண்கள் மத்தியில் இருக்கிறது. ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்தால் மார்பகப் புற்றுநோயைக் குணப்படுத்திவிட முடியும். ஆனால் பலர் பரிசோதனைக்கு பயந்தே நோயை முற்றச் செய்துவிடுகிறார்கள். 

இந்த நிலையைப் போக்கும் வகையில், கதிர்வீச்சுப் பாதிப்பும் வலியுமின்றி, மார்பகப்புற்றுநோயைக் கண்டறியும் `ஐ ப்ரெஸ்ட் ஸ்கேனர்' (iBreast Scanner) என்னும் நவீன கருவி அறிமுகமாகியுள்ளது. 

உள்ளங்கை அளவே இருக்கும் இந்தக் கருவியில் பதினாறு சென்சார்கள் உண்டு. இந்தக் கருவியை மார்பின் மீது வைத்தவுடன், அப்பகுதியில் உள்ள திசுக்களைத் திரையில் காட்டும். இந்தக் கருவியுடன் மொபைல் போனை ப்ளூ-டூத் மூலம் இணைத்துக்கொள்ள முடியுமென்பதால், பரிசோதனை முடிந்ததுமே அதன் முழுவிவரம் நமக்குக் கிடைத்துவிடும். சில நிமிடங்களில் ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பெற்றுக்கொள்ளலாம். ஏதேனும் அசாதாரணமான திசு வளர்ச்சி இருந்தால், சிவப்பு நிறத்தில் அதை அடையாளம் காட்டும். ஆனால், சிறிய அளவிலான கருவி என்பதால், மார்பின் அனைத்துப் பகுதிகளிலும் கருவியை வைத்து, பரிசோதனை மேற்கொள்ளவேண்டியிருக்கும். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

`ஐ ப்ரெஸ்ட் ஸ்கேனர்', அசாதாரண திசு வளர்ச்சியைக் கண்டறியுமே தவிர அதற்கான காரணம் என்ன என்பதைத் தெரிவிக்காது. ஆகவே, அசாதாரண திசு வளர்ச்சி இருப்பவர்கள் மட்டும் அல்ட்ரா-சவுண்டு, பயாப்ஸி, மேமோகிராம் போன்ற பரிசோதனைகள் செய்து காரணத்தை அறியவேண்டும்.  

விழிப்புஉணர்வு அவசியம்! 

எந்தவொரு புற்றுநோயையும், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் குணப்படுத்திவிடலாம். ஆனால் இந்தியாவில் போதிய விழிப்புஉணர்வு இல்லாத காரணத்தால் 66 சதவிகித நோயாளிகள் மட்டுமே முழுமையாகக் குணப்படுத்தப்படுகின்றனர் (2010 முதல் 2014-ம் ஆண்டு வரை) என `லேன்சட்' என்ற மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது. `டெஸ்ட் எடுக்கணும்னா நிறைய செலவாகும்' என்பதில் தொடங்கி, `மார்பகத்தைக் காட்டணுமா... எனக்குப் பரிசோதனையே வேண்டாம்' என்பது வரை, பரிசோதனையைத் தள்ளிப்போடுவதற்காகப் பல்வேறு காரணங்களை இந்தியப் பெண்கள் கூறுகின்றனர். 

``பத்தில் ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேவையான மருத்துவ வசதிகள் இருந்தும், வெகுசிலரே பாதிப்பிலிருந்து முழுமையாக மீள்கின்றனர். ஆக, கருவிகளைக் காட்டிலும் விழிப்புஉணர்வே இங்கு அதிகம் தேவைப்படுகிறது" என்கிறார் அறுவை சிகிச்சை மருத்துவர் ஷ்ரேயா.

``வளர்ந்துவரும் நாடுகளைவிட வளர்ந்த நாடுகளில்தான் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் நோயிலிருந்து முழுமையாக மீள்பவர்களும் அதிகம் உள்ளனர். இந்தியாவில், 40 முதல் 70 வயது வரையிலான பெண்களும், மரபணுக் கோளாறு இருப்பவர்களும்தாம்  மார்பகப் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய்க்கான முக்கிய அறிகுறிகள் மார்பகம், அக்குள், மார்புக்காம்புப் பகுதியைச் சுற்றி ஏற்படும் கட்டிகள்தாம். சிலநேரங்களில் அவை எவ்வித வலியையும் ஏற்படுத்தாமலும்கூட இருக்கலாம். எனவே, பெண்கள் அவ்வப்போது மார்பைச் சுற்றிய பகுதிகளில் விரல்களால் அழுத்தம் கொடுத்து, ஏதேனும் வலி உணர்வு இருக்கிறதா, ரத்தம் கசிகிறதா என்று தாங்களாகவே சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும். 

நவீன மருத்துவத்தில் அல்ட்ரா சவுண்டு, மேமோகிராம் தொடங்கி ஐ ப்ரெஸ்ட் ஸ்கேனர் வரை பல்வேறு பரிசோதனை முறைகள் வந்துவிட்டன. ஆனாலும், அவை அனைத்துக்கும் முதன்மையானது, சுயபரிசோதனை. நாற்பது வயதைத் தாண்டிய பெண்கள், மாதம் ஒருமுறையாவது சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும். மார்பகம், அக்குள் போன்ற எந்தப் பகுதிகளில் எத்தகைய மாற்றம் தெரிந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். புற்றுநோயியல் துறை மருத்துவரைத்தான் அணுகவேண்டும் என்ற கட்டாயமில்லை. குடும்ப மருத்துவர், மகப்பேறு மருத்துவர்களைக்கூட அணுகலாம். அவர்கள் பரிந்துரைத்தால், `ஐ ப்ரெஸ்ட் ஸ்கேனர்', `மேமோகிராம்' மற்றும் `ஜீன் மேப்பிங்' போன்ற பரிசோதனைகளைச் செய்யலாம். 

புற்றுநோய் வராமல் தடுக்க... 

புற்றுநோய் வருவதற்கு முக்கியக் காரணம், உடலில் `ஈஸ்ட்ரோஜென்' ஹார்மோன் அளவுக்கு அதிகமாகச் சுரப்பதே. பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில், `ஈஸ்ட்ரோஜென்' அதிகம் சுரக்கும். 12 வயதுக்கு முன் பூப்படைவதும், 35 வயதுக்குப் பிறகு மெனோபாஸ் அடைவதும் உடலில் ஈஸ்ட்ரோஜென் சுரப்பை அதிகமாக்கும்.  அது அடுத்தகட்டமாக, மார்பகப் புற்றுநோய்க்கு வழிவகுக்கக்கூடும். இவை இரண்டுமே, உணவுமுறை மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் பிரச்னைகள் என்பதால், அவற்றில் அக்கறையுடன் செயல்படவேண்டும். 

பெண்கள் தங்களை மார்பகப் புற்றுநோயிலிருந்து தற்காத்துக்கொள்ள சிறந்த வழி, 30 வயதுக்குள் முதல் குழந்தையை பெற்றெடுப்பதே. காரணம், கர்ப்பகாலத்தில் புரொஜெஸ்ட்ரோன் அதிகம் சுரக்கும்; மேலும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதன்மூலம் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனைக் கட்டுக்குள் வைக்கலாம். இவை, புற்றுநோயிலிருந்து உடலைக் காக்கும். 

பரிசோதனை தொடர்பான பல்வேறு தயக்கங்கள் நிலவி வரும் சூழலில் `ஐ ப்ரெஸ்ட் ஸ்கேனர்' போன்ற நவீனக் கருவிகள், பரிசோதனை முறையைச் சற்றே எளிமையாக்கியிருக்கிறது. மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இக்கருவியை அரசின் சார்பில் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளார்கள். இந்தியாவிலுள்ள மற்ற மாநில அரசுகளும் நவீனமயமாக்கப்பட்ட, கதிர்வீச்சு அபாயமற்ற இந்தப் பரிசோதனை முறையை நடைமுறைப்படுத்த முயலவேண்டும்" என்கிறார் ஷ்ரேயா ராஜேந்திரன்.