Published:Updated:

ஒரு பெண்ணுக்கு 3 தடவைக்கு மேல் ஐ.வி.எஃப். செய்தால்..?! எச்சரிக்கும் மருத்துவர்!

``தலைவலி மாத்திரையையே செல்ஃபாக எடுக்கக் கூடாது. சினைப்பைகளைத் தூண்டும் ஹார்மோன் மாத்திரையை அவர்களாகவே வாங்கிச் சாப்பிட்டால் சினைப்பை புற்றுநோய் வரை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது!''

ஒரு பெண்ணுக்கு 3 தடவைக்கு மேல் ஐ.வி.எஃப். செய்தால்..?! எச்சரிக்கும்  மருத்துவர்!
ஒரு பெண்ணுக்கு 3 தடவைக்கு மேல் ஐ.வி.எஃப். செய்தால்..?! எச்சரிக்கும் மருத்துவர்!

ரண்டு நாள்களுக்கு முன்பு, வைரலான புகைப்படம் அது. ஒரு பச்சிளம் குழந்தை. அதைச் சுற்றிலும் இதய வடிவில் அடுக்கப்பட்ட விதவிதமான ஊசிகள். அந்த ஊசிகளைப் பற்றி குழந்தையின் தாய், `அத்தனையும் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள என் உடம்பில் குத்தப்பட்ட ஊசிகள். நான்கு வருடங்களில் ஏழு ஐ.வி.எஃப் எனக்குச் செய்யப்பட்டது' எனக் குறிப்பிட்டிருந்தார். 

அந்தப் புகைப்படமும், தாயின் வார்த்தைகளும் பார்த்தவர்களின் மனங்களைக் கனக்க செய்தது. குழந்தையின்மை சிகிச்சையில் ஒரு பெண் எந்த அளவுக்குக் காயப்படுகிறாள் என்பதை அந்தப் படம் எல்லோருக்கும் தெளிவாக உணர்த்திவிட்டது. அந்தப் படத்தைப் பார்த்ததும் நம் மனதில் எழுந்த கேள்விகள்... கருமுட்டையையும் உயிரணுவையும் டெஸ்ட் டியூபில் இணைத்து, வளர்த்து அதைச் சில நாள்கள் கழித்துப் பெண்ணின் கருப்பையில் ஊசி மூலமாகச் செலுத்தும் ஐ.வி.எஃப் முறையை எத்தனை தடவை செய்யலாம், அளவுக்கு மீறி ஐ.வி.எஃப் செய்தால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு என்னென்ன பாதிப்புகள் நேரிடும், மகப்பேறு மருத்துவர் ஶ்ரீகலா பரத்தைத் தொடர்புகொண்டோம். இனி அவர் பேசுகிறார்.

 ``ஐ.வி.எஃப் சிகிச்சை என்பது, குழந்தையே பிறக்காது என்ற நிலையில் இருக்கும் தம்பதியருக்கு உதவும் சிகிச்சை முறை. அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், சிகிச்சையாக இருந்தாலும் அளவாகச் செய்வது சம்பந்தப்பட்ட தாயின் வருங்கால ஆரோக்கியத்துக்கு நல்லது. அந்த வைரல் புகைப்படத்தில் சொல்லப்பட்டிருப்பதுபோல ஏழு முறையெல்லாம் இதைச் செய்யவே கூடாது. இத்தனை முறை இந்தச் சிகிச்சையைச் செய்தால் உடல் கஷ்டம், மனக் கஷ்டம், பணக் கஷ்டம் என எல்லா வகையிலும் தம்பதியரை வேதனைப்படுத்திவிடும். ஒரே தடவையில் ஒன்றுக்கு மேற்பட்ட கருமுட்டைகளை உருவாக்கி, அவற்றில் பல முறை ஐ.வி.எஃப். செய்தால் பிரச்னை இல்லை. சில பெண்கள் ஒரு மருத்துவமனையில் ஒரு முயற்சி தோற்றுவிட்டால், வேறு மருத்துவரிடம் சென்றுவிடுவார்கள். இப்படி மருத்துவரை அடிக்கடி மாற்றும்போது, ஒவ்வொருவரும் தனித்தனியாக இந்தச் சிகிச்சையை செய்யும்போது, மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது'' என வருத்தப்படுகிறார் ஶ்ரீகலா பரத்.

ஐ.வி.எஃப். முறையை அதிகபட்சமாக 4 முறை செய்யலாம் என அறிவுறுத்துபவர், ``இந்தச் சிகிச்சையில் ஒரு சிட்டிங்குக்கு 2 அல்லது 3 லட்சம் வரை செலவாகும். முதல் முயற்சியிலே இந்தச் சிகிச்சை வெற்றிபெறும் எனச் சொல்ல முடியாது. ஒவ்வொரு முறையும் இத்தனை லட்சங்களை எல்லோராலும் செலவுசெய்ய முடியுமா என்பது பெரிய கேள்வி. அப்படியே செலவழிக்க முடியும் என்றாலும், 7 முறை செய்யவே கூடாது. அளவுக்கு மீறி இந்தச் சிகிச்சையைச் செய்யும்போது சம்பந்தப்பட்ட பெண்ணின் எதிர்கால ஆரோக்கியத்தில் பிரச்னைகள் வரும்'' என்கிறார். 

அடுத்து சொன்ன விஷயம்தான் நம்மை அதிக கவலையில் ஆழ்த்திவிட்டது. ``கருத்தரிப்பதற்காகச் சினைப்பைகளைத் தூண்டி சினைமுட்டைகளை உருவாக்கும் ஓவிலேஷன் இன்டக்‌ஷன் என்கிற மாத்திரைகளைச் சில பெண்களுக்குத் தேவையான அளவில் பரிந்துரை செய்வோம். ஆனால், நாங்கள் ஒரு தடவைக்குத் தரும் பிரிஸ்கிரிப்ஷனைக் காட்டியே பல முறை அவர்களாகவே மாத்திரை வாங்கிச் சாப்பிடுகிறார்கள். ஓவிலேஷன் இன்டக்‌ஷன் மாத்திரை என்பது, ஹார்மோன் மாத்திரை. தலைவலி மாத்திரையையே செல்ஃபாக எடுக்கும்போது பக்கவிளைவுகள் வரும். இந்நிலையில், சினைப்பையைத் தூண்டும் ஹார்மோன் மாத்திரையை அவர்களாகவே சாப்பிடும்போது, சினைப்பையில் புற்றுநோய் வரலாம். தங்கள் தோழி ஓவிலேஷன் இன்டக்‌ஷன் மாத்திரையைச் சாப்பிட்டு குழந்தையைப் பெற்றார் எனத் தெரிந்து, அந்த மருந்துச்சீட்டையே மெடிகல் ஷாப்பில் காண்பித்து வாங்கும் பெண்களும் இருக்கிறார்கள். இவர்களை என்ன சொல்லித் தடுப்பது?'' என்கிறார் ஶ்ரீகலா பரத், வேதனையான குரலில்.