Published:Updated:

கர்ப்பமாக இருக்கும்போது ஏன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்! ஆச்சர்யக் காரணம்

கர்ப்பமாக இருக்கும்போது ஏன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்! ஆச்சர்யக் காரணம்
கர்ப்பமாக இருக்கும்போது ஏன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்! ஆச்சர்யக் காரணம்

தாயின் ரத்தத்தைச் சுத்திகரித்து கருவில் இருக்கிற சிசுவுக்கு அனுப்புவதுதான் நஞ்சுக் கொடியின் வேலை. அப்படிச் சுத்திகரித்து அனுப்பும்போது, தாயின் அத்தனை நல்ல விஷயங்களையும் சேர்த்தே சேய்க்கு கடத்திவிடும்.

''பேராண்டி,  பொண்டாட்டி மாசமா இருக்கும்போது அவளைச் சந்தோஷமாக வைச்சுக்கணும்டா.  அப்பதான் உன் பிள்ளை பிறந்த பிறகு சந்தோஷமா இருப்பான். மனைவிக்கு எந்த மனக் கஷ்டமும்  நீ தரக்கூடாது. அவ ஆசைப்பட்டுச் சாப்பிட கேட்கிறதெல்லாம் கண்டிப்பா வாங்கிக் கொடுத்துடணும்.  இல்லன்னா, வயித்துல இருக்கிற உன் பிள்ளை காதில் சீழ் வடியும்டா'' என்று, கர்ப்பமாக இருக்கிற பெண்களுக்காக கிராமத்துப் பாட்டிகள் அவர்களுடைய கணவர்களிடம் பரிந்து பேசுவதை நாமெல்லோருமே கேட்டிருப்போம். இந்தப் பேச்சில் உளவியல் உண்மை மட்டுமல்ல, அறிவியல் உண்மையும் இருக்கிறது என்கிறார் மகப்பேறு மருத்துவர் நிர்மலா விஜயகுமார். 

 ''தாயையும் சேயையும் இணைப்பது தொப்புள்கொடி மட்டும்தான்  என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் நஞ்சுக்கொடி எனப்படும் பிளசன்டாவும் இந்த வேலையைப் பார்த்து வருகிறது. தாயின் ரத்தத்தைச் சுத்திகரித்து கருவில் இருக்கிற சிசுவுக்கு அனுப்புவதுதான் நஞ்சுக் கொடியின் வேலை. அப்படிச் சுத்திகரித்து அனுப்பும்போது, தாயின் அத்தனை நல்ல விஷயங்களையும் சேர்த்தே சேய்க்குக் கடத்திவிடும். அவை என்னென்ன, அவற்றால் சேய்க்கு கிடைக்கிற நல்ல பலன்கள் என்னென்ன என்பதைச் சற்று விளக்கமாகவே சொல்கிறேன். 

   மனிதர்களின் மனநிலைகளுக்கும், எண்ணங்களுக்கும் மிகுந்த வலிமை இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட விஷயம்தான். நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது,  கோபப்படும் போது, படித்தவற்றை நினைவில் வைத்துக்கொள்ள முயலும்போது காதலிக்கும்போது நம்முடைய மூளையில் இருக்கிற நியூரோ டிரான்ஸ்மீட்டர் வேலைப் பார்க்க ஆரம்பித்து விடும். இதே தான் கருவுற்ற ஒரு தாயின் உடலிலும் நடைபெறும். உணர்வுகளுக்குத் தகுந்தாற்போல, அதாவது சந்தோஷமாக இருந்தால்  டோபமைன் (  dopamine), ஸ்டிரெஸ்ஸாக இருக்கும்போது நாரபிநெப்ரின் (  norepinephrine)   போன்ற ஹார்மோன்கள் அம்மாவின் மூளையில் இருந்து உருவாகி, அது சிசுவின் மூளைக்குப் போய் சேர்கிறது.   

    கருவுற்றிருக்கும் பெண்கள் சந்தோஷமாக இருக்கும்போது,  இந்த மன உணர்வுகள் நியூரோ டிரான்ஸ்மீட்டர் வழியாகக் கருவில் இருக்கிற சிசுவுக்கும் செல்கிறது. அப்போது, அந்தக் குழந்தையின்  அடிப்படை இயல்பும் சந்தோஷமானதாகவே இருக்கும். கர்ப்பமாக இருக்கும்போது கவலைப்படக் கூடாது, கண்ணீர்விடக் கூடாது என்று சொல்வதன் உள்ளர்த்தமும் இதுதான். 

கருவுற்றிருக்கும்போது ஆன்மிக புத்தகங்கள் படிக்க வேண்டும் என்பார்கள் பெரியவர்கள்.  இந்தக் காலத்தில் அறிவுப்பூர்வமான புத்தகங்களை படிக்க வேண்டும் என்கிறோம். இதிலும் ஒரு அறிவியல் உண்மை இருக்கிறது. அம்மா நல்ல படிப்பாளி என்றால், அம்மாவின் மூளையில் இருந்து வெளியேறுகிற ஹார்மோன்கள்  வழியாகப் படிப்பின் மீதான ஈடுபாடு  சிசுவுக்குள் வந்துவிடும்.  இந்த விஷயத்தில் அம்மாவின் இயல்புகளுக்குத்தான் முதல் இடம். மரபணுக்கள்கூட இரண்டாம் பட்சம்தான். 

ஒரு சில பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் அவ்வளவு சீக்கிரத்தில் சளி, காய்ச்சல், தொற்றுநோய்கள் எல்லாம் வரவே வராது.  இப்படிப்பட்ட பெண்கள் அம்மாவாகும்போது, இவரிடம் இருக்கிற நோய் எதிர்ப்பு சக்தியானது அப்படியே கருவில் இருக்கிற சிசுவுக்கு சென்று விடும். வைரசோ அல்லது பாக்டீரியாவோ தாக்கும்போது நம் உடம்பில் இருந்து எதிர்ப்பு சக்தி ஒன்று உருவாகும். இதை ஆங்கிலத்தில் இம்யூனிட்டி பவர் என்று சொல்வோம். இது நம் உடம்பில் இருக்கிற சில செல்கள் மற்றும் இம்யூனோ குளோபுளின் என்கிற புரதச்சத்துப் பொருளில் இருந்துதான் உருவாகும். இந்தச் சக்தியானது, நஞ்சுக் கொடி வழியாகக் சிசுவுக்கு சென்று விடும். அம்மாவிடம் இருக்கிற நோய்க்கூறுகளையெல்லாம் எல்லாம் முடிந்தவரைச் சிசுவிடம் கொண்டுபோய் சேர்க்காமல் ஒரு வடிகட்டி போலச் செயல்படும் நஞ்சுக்கொடி,  இந்த எதிர்ப்பு சக்தியை மட்டும் சிசுவிடம் மிகச் சரியாக கொண்டு போய் சேர்த்து விடும்'' என்று முடித்தார் மகப்பேறு மருத்துவர் நிர்மலா. 

ஆதலால், மகிழ்ச்சியாக இருங்க; ஆரோக்கியமா இருங்க இளம் அம்மாக்களே..!

அடுத்த கட்டுரைக்கு