Published:Updated:

``பெற்ற தாயே குழந்தையை ஏரியில் வீசியது ஏன்?’’ - மகப்பேறு மருத்துவரின் விளக்கம்

``பாதிக்கப்பட்ட அந்த வேளச்சேரி பெண் விஷயத்தில், மார்பகங்களில் தாங்க முடியாத வலி இருந்துள்ளது. அதற்கு மருத்துவ உதவி எடுத்துக்கொள்ள கணவர் அனுமதிக்காதது, ஹார்மோன் குறைபாடு, இரவுத் தூக்கமின்மை என எல்லாம் சேர்ந்து, அவர் மனதைப் பாதித்துள்ளது. இந்த நிலையை மருத்துவத்தில், பெரிபெரல் மேட்னெஸ் என்று சொல்வோம்.''

``பெற்ற தாயே குழந்தையை ஏரியில் வீசியது ஏன்?’’ - மகப்பேறு மருத்துவரின் விளக்கம்
``பெற்ற தாயே குழந்தையை ஏரியில் வீசியது ஏன்?’’ - மகப்பேறு மருத்துவரின் விளக்கம்

`தான் பெற்ற குழந்தையை, தாயே ஏரியில் வீசிக் கொன்றுவிட்டார்' என்ற செய்திதான் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது. ``குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது மார்பகங்களில் கடுமையாக வலி ஏற்பட்டதால் இப்படிச் செய்துட்டேன். தயவுசெய்து என்னை என் கணருடன் சேர்த்துவெச்சுடுங்க'' என்று கதறிக்கொண்டிருக்கிறார் அந்தப் பெண். 

ஒரு தாய், தான் பெற்றக் குழந்தையை ஏரியில் தூக்கிவீசும் அளவுக்கு மார்பக வலி இருக்குமா அல்லது வேறு ஏதேனும் உளவியல் காரணங்களா? இதுகுறித்து, மூத்த மகப்பேறு மருத்துவர் வாணி ஷ்யாம் சுந்தரிடம் பேசினேன்.

``அந்தப் பெண்ணின் விஷயத்தில் மார்பில் பால் கட்டியது மட்டுமன்றி, உளவியல் பிரச்னையும் இருந்திருக்கும். அதுவே, குழந்தையின் மரணத்துக்குக் காரணமாகிவிட்டது. பால் கட்டிக்கொண்டால் எப்படி வலிக்கும் என்பது பெண்ணால் மட்டுமே உணரக்கூடிய விஷயம். மார்பகங்களுக்குள் ஐஸ்கட்டியை நொறுக்கிப் போட்டதுபோல இருக்கும். அதைவிடக் கொடுமை, மார்புக் காம்புகளில் ஆழமான ரணம் இருந்தால், குழந்தையானது பாலை உறிஞ்சிக் குடிக்கும்போது ரத்தமே வந்துவிடும். இந்தப் பிரச்னைக்கு தற்போது ஆயின்மென்ட்ஸ் வந்துவிட்டன. டாக்டரிடம் ஆலோசித்து அந்த மருந்தை வாங்கி, மார்புக் காம்புகளில் தடவிக்கொள்ளலாம். பாலூட்டுவதற்கு முன்பு வாஷ் செய்துவிட்டு பால் கொடுக்கலாம். 'மருந்தெல்லாம் யூஸ் பண்ணக் கூடாது' எனத் தடுத்தது அந்தப் பெண்ணின் கணவருடைய அறியாமை. அதுவும்தான் ஒரு சிசுவின் உயிர் போனதுக்கு முக்கியக் காரணம்.

அடுத்தது, உளவியல் சிக்கலுக்கு வருகிறேன். ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது, கருவை வளர்ப்பதற்காக அதிகரித்த ஹார்மோன்கள் எல்லாமே, குழந்தை பிறந்ததும் சடாரென்று குறைந்துவிடும். இதனால், மனதளவில் பிள்ளை பெற்ற பெண்கள் நிறைய பாதிப்புகளுக்குள்ளாவார்கள். இரவுகளில் அப்போதுதான் பால் கொடுத்துக் குழந்தையைத் தூங்கவைத்திருப்பார்கள். தானும் தூங்கலாம் எனக் கண்கள் சொருகும் நேரத்தில், குழந்தையானது கண் விழித்து பாலுக்காக அழ ஆரம்பிக்கும். இல்லையென்றால், ஒன் பாத்ரூம் அல்லது டூ பாத்ரூம் போய்விட்டு அழும். எனவே, இரவெல்லாம் கண் விழித்து குழந்தையைப் பராமரிப்பது, பகலில் வீட்டு வேலை, குழந்தைக்குப் பால் கொடுக்கும் அளவுக்கு உடம்பில் போதுமான சத்து இல்லாமல் இருப்பது எனப் பிள்ளை பெற்ற பெண்களின் நிலைமை, சில நேரங்களில் பிற பெண்களுக்கே புரிவதில்லை. 

பல கணவர்களைப் பொறுத்தவரை, மனைவி கர்ப்பமாக இருக்கும் வரை விழுந்து விழுந்து கவனிப்பார்கள். குழந்தை பிறந்ததும், அந்தக் குழந்தையைக் கொஞ்சுவதோடு நின்றுவிடுவார்கள். மனைவியின் மனநிலை, உடல்நிலை குறித்த தெளிவோ, அக்கறையோ இருக்காது. பாதிக்கப்பட்ட அந்த வேளச்சேரி பெண் விஷயத்தில், மார்பகங்களில் தாங்க முடியாத வலி இருந்துள்ளது. அதற்கு மருத்துவ உதவி எடுத்துக்கொள்ள கணவர் அனுமதிக்காதது, ஹார்மோன் குறைபாடு, இரவுத் தூக்கமின்மை என எல்லாம் சேர்ந்து, அவர் மனதைப் பாதித்துள்ளது. இந்த நிலையை மருத்துவத்தில், பெரிபெரல் மேட்னெஸ் (peripheral madness) என்று சொல்வோம். இந்தப் பிரச்னை வந்த பெண்கள், தங்கள் இயல்பு வாழ்க்கையை எது பாதித்தாலும் தொந்தரவுக்குள்ளாவார்கள். அது, பெற்ற குழந்தை விஷயத்திலும் தொடரும். இது பெண்களுக்கு மட்டுமே வருகிற பிரச்னை. 

இந்தப் பிரச்னை அந்தக் காலங்களிலும் இருந்தது. 'பச்சைப் புள்ளையைத் தூக்கி தொப்புனு போட்டுட்டா டாக்டரம்மா' எனக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு பாட்டிமார்கள் ஓடிவருவார்கள். 'அந்தப் பொண்ணுகிட்ட அன்பா இருக்கிறதுதான் தீர்வு' எனச் சொல்வோம். அந்த வேளச்சேரிப் பெண்ணுக்கு தற்போது கொடுக்க வேண்டியது கவுன்சலிங்தான், தண்டனை கிடையாது'' என அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் வாணி ஷ்யாம் சுந்தர்.