ஹெல்த்
Published:Updated:

சகலகலா சருமம் - 30

சகலகலா சருமம் - 30
பிரீமியம் ஸ்டோரி
News
சகலகலா சருமம் - 30

அழகுசெல்வி ராஜேந்திரன், சரும மருத்துவர்

ழகுப் பிரச்னைகள் அனைத்துக்கும் பார்லர் போவதுதான் தீர்வா?  பிரச்னைகள் வராமலிருக்க வீட்டிலேயே கடைப்பிடிக்கிற சிகிச்சை களைப் பின்பற்றுவது உதவாதா? என்கிற கேள்வி பலருக்கும் உண்டு. நோய் வருமுன் தவிர்க்க முன்கூட்டியே வீட்டு சிகிச்சைகளை மேற்கொள்வதைப் போல, அழகு சிகிச்சையிலும் பின்பற்றலாம். உங்கள் சருமம் எப்படிப்பட்டது என்று தெரிந்துகொண்டு அதற்கேற்ப தினசரி அக்கறை எடுத்துக்கொண்டாலே அழகைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.

சகலகலா சருமம் - 30

வறண்ட சருமத்துக்கு....

* குளிப்பதற்கு முன் அல்லது குளித்த பிறகு ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தலாம். குளிப்பதற்கு முன்பென்றால் ஆலிவ் ஆயிலுடன், பழுப்புச் சர்க்கரை மற்றும் தேன் கலந்து ஸ்க்ரப் போன்று உபயோகிக்கலாம். குளித்தபிறகு சருமத்தில் தடவிக்கொள்வதும் வறட்சியைப் போக்கும்.

சரும வறட்சிக்குப் பாலாடை மிகச் சிறந்த தீர்வு. அதிலுள்ள லாக்டிக் அமிலம் சருமத்துக்கு நல்லது. சருமத்தின் பி.ஹெச் பேலன்ஸைச் சரியாக வைக்கும். பாலாடையுடன் கடலை மாவு சேர்த்துக் குழைத்து உடல் முழுக்கத் தேய்க்கவும். 15 நிமிடங்கள் வைத்திருந்து, ஸ்க்ரப் செய்து குளிக்கலாம்.

தேன் மிகச்சிறந்த இயற்கையான மாயிஸ்சரைசர் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட். தொடர்ந்து பயன்படுத் தினால் சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கும். சருமத்தைத் தாக்கும் நுண்ணுயிர்களை விரட்டும். பீஸ்வாக்ஸ் உடன் தேன் கலந்து சருமத்தில் தடவி, 10 நிமிடங்கள் வைத்திருந்துக் குளிர்ந்த நீரில் கழுவலாம்.

அவகேடோ அல்லது பட்டர் ஃப்ரூட் எனப்படுகிற பழத்தை மசித்து அப்படியேவோ அல்லது அதனுடன் சிறிது தேன் கலந்தோ சருமத்தில் வாரம் ஒருமுறை தடவி ஊறிக் குளிப்பதும் சரும வறட்சியைப் போக்கும்.

ஓட்ஸைத் தண்ணீரில் ஊற வைத்து வறட்சி அதிகமுள்ள சருமப் பகுதியில் தேய்த்துக் குளிக்கலாம். மசித்த வாழைப்பழத்துடன் அரைத்த ஓட்ஸ் சேர்த்து, வெதுவெதுப்பான பால் சேர்த்துக் கலந்து வாரம் ஒருமுறை சருமத்தில் தடவிக் குளிக்கலாம்.

எண்ணெய்ப் பசையான சருமத்துக்கு...

கற்றாழையில் ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டிஃபங்கல் தன்மைகள் உண்டு. கற்றாழை ஜெல்லுடன் எலுமிச்சை சாறு கலந்து, வெந்நீர் சேர்த்து அப்படியே குடிக்கலாம். அல்லது அதனுடன் எலுமிச்சை சாறு, தேன் மற்றும் பால் கலந்து சருமத்தில் பேக் போல உபயோகிக்கலாம்.

ஆப்பிளில் மாலிக் அமிலம் உள்ளது. அதுவும் சருமத்தின் எண்ணெய்ப் பசையைக் கட்டுப்படுத்தும். தோல் நீக்கித் துருவிய ஆப்பிளை முகத்தில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து கழுவலாம்.

ஆப்பிள் சிடர் வினிகரில் உள்ள ஆல்பா ஹைட்ராக்சி அமிலம் சருமத்தின் துவாரங்களை மூடி சருமத்தை இறுகச் செய்யும். கால் கப் ஆப்பிள் சிடர் வினிகருடன் முக்கால் கப் டிஸ்டில்டு வாட்டர் கலந்து சருமத்துக்கான டோனராகப் பயன்படுத்தலாம்.

சகலகலா சருமம் - 30

சென்சிட்டிவ் சருமத்துக்கு...

இந்த வகை சருமத்துக்கு மாயிஸ்சரைசர் அதிகம் தேவை. எனவே, சுத்தமான தேங்காய் எண்ணெயைத் தடவிக்கொள்வதே சிறந்த சிகிச்சையாக இருக்கும்.

தேனுடன் இனிப்பு சேர்க்காத கோகோ பவுடர், சிறிது தேங்காய் எண்ணெய் மற்றும் பால் கலந்து மாஸ்க் போலச் செய்து சருமத்தில் தடவி ஊற விடலாம். சிறிது நேரம் கழித்து மென்மையாகத் தேய்த்துக் கழுவலாம்.

சர்க்கரை சேர்க்காத கோகோ பவுடர் 5 டீஸ்பூன், தேன் 5 டீஸ்பூன், பால் 2 டீஸ்பூன், சிக்கரி கலக்காத காபித் தூள் சிறிது கலந்து மாஸ்க் போல உபயோகிக்கலாம்.

மாம்பழத்தின் கூழுடன் சிறிது தயிர், ரோஸ் வாட்டர், தேன், பாதாம் எண்ணெய் சேர்த்துக் குழைத்து சருமத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கலாம்.

காம்பினேஷன் சருமத்துக்கு...

இந்த வகை சருமத்தில்  T ஸோன் எனப்படுகிற நெற்றி மற்றும் மூக்குப் பகுதி மட்டும் எண்ணெய்ப் பசையுடனும், மற்ற பகுதிகள் சாதாரணமாகவும் காணப்படும்.

மசித்த திராட்சையுடன் சிறிது தேன் கலந்து சருமத்தில் தடவிக் கழுவலாம். இது ஆன்டி பாக்டீரியல் தன்மை கொண்டது என்பதால், பருக்களை விரட்டும். ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்தது என்பதால், சருமத்தை இளமையாக வைக்கும்.

பன்னீர் ரோஜா இதழ்களை நீரில் ஊற வைக்கவும். சிறிது நேரம் கழித்து அவற்றைக் கசக்கிச் சாறு எடுத்து அத்துடன் சுத்தமான பன்னீர் சேர்க்கவும். தேன், தயிர் சேர்த்து முகத்தில் பேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.

பப்பாளிப் பழக்கூழ், கேரட் விழுது மற்றும் வாழைப்பழ விழுது சேர்த்து தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.

சாதாரண சருமத்துக்கு...

கடலை மாவுடன், மஞ்சள் தூளும், பாலும் சேர்த்துக் குழைத்து சருமத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். மஞ்சளில் உள்ள குர்குமின் ஆன்டிஆக்ஸிடன்ட்டாகச் செயல்படும்.

ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், ஒரு டீஸ்பூன் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில், சில துளிகள் தேன் கலந்து தடவினால் அது இறந்த செல்கள் நீங்கி சருமம் பளிச்சென மாறும்.

நிறைந்தது.

- ஆர்.வைதேகி

சகலகலா சருமம் - 30

செலிப்ரிட்டி ஸ்கின்:

சந்தோஷத் தண்ணீரே...

``என்னுடைய அழகுக் குறிப்புகள் ரொம்பவும் சிம்பிள். ஆனால் அவ்வளவு பவர்ஃபுல்.

தண்ணீர்தான் இந்த உலகத்தின் பெஸ்ட் பியூட்டி சீக்ரெட். தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிப்பேன். உடலில் ஒருதுளி கூட நீர் வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொண்டாலே சருமம் சந்தோஷப்படும்.

சருமத்துக்கான சரியான ஃபேஸ் வாஷைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. பருக்கள் வரும்போதும் நீங்கள் எப்போதும் பயன்படுத்துகிற அதே ஃபேஸ் வாஷைத் தவிர்த்து, பருக்களை விரட்டும் ஃபேஸ் வாஷ் உபயோகிக்க வேண்டும்.

உடற்பயிற்சி இல்லாமல் ஒருநாளும் எனக்கு நிறையாது. உடற்பயிற்சிகள் உடலுக்கானவை மட்டுமல்ல, உள்ளுக்குள் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, சருமம் பளபளக்கவும் உதவுபவை.’’

- ஷ்ரத்தா சஷிதர், Miss Diva, 2017