Published:Updated:

மார்பகப் புற்றுநோய்... அறிகுறிகள் என்னென்ன, தடுப்பது எப்படி? A டூ Z! #breastcancermonth

மார்பகப் புற்றுநோய்... அறிகுறிகள் என்னென்ன, தடுப்பது எப்படி? A டூ Z! #breastcancermonth
மார்பகப் புற்றுநோய்... அறிகுறிகள் என்னென்ன, தடுப்பது எப்படி? A டூ Z! #breastcancermonth

லகெங்கும் உள்ள நாடுகளில் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள்தான் என்றாலும், நமது நாட்டில் மட்டும் நிலைமை தலைகீழாக இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ICMR - Indian Council of Medical Research) கூறியுள்ளது. ஆம்... இந்தியாவில் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் என்பதுடன் அவர்களை அதிகம் பாதிப்பது மார்பகப் புற்றுநோய் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில், இது ஒரு உயிர்க்கொல்லி நோயாக மாறியிருப்பது கவலைதருவதாக உள்ளது. அக்டோபர் மாதத்தை, மார்பகப் புற்றுநோய் விழிப்புஉணர்வு மாதமாக உலகம் முழுவதும் அனுசரிக்கும் சூழலில், இந்திய அரசும் இதுகுறித்த விழிப்புஉணர்வைப் பெண்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது. 

உலக அளவில், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் அமெரிக்கா, சீனா மற்றும்  இந்தியா முதல் மூன்று இடங்களில் உள்ளது தெரியவந்துள்ளது. இதுவரை 50 வயதுக்கு மேற்பட்டோர் மத்தியில் அதிகமாகக் காணப்பட்ட இந்நோய், தற்போது 30 வயதிலேயே வருகிறது. அதிலும் டெல்லி, சென்னை, பெங்களூரு, மும்பை, திருவனந்தபுரம், புனே போன்ற மெட்ரோ நகரங்களைச் சேர்ந்த பெண்கள்தான் அதிகப்படியாக மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல்களைத் தந்துள்ளது மருத்துவ ஆராய்ச்சி நிறுவன புள்ளிவிவரங்கள்.

இந்திய புற்றுநோய் மையம் அளித்துள்ள சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி, லட்சம் இந்தியப் பெண்களில் 26 பேருக்கு மார்பகப் புற்றுநோய் காணப்படுகிறது. இதில் கவலைதரும் விஷயம் என்னவென்றால், மார்பகப் புற்றுநோய் தாமதமாகக்  கண்டறியப்படுவதால், நோய் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு பேரில் ஒருவர், அதாவது 50 சதவிகிதத்தினர்  அடுத்த சில நாட்களிலேயே இறந்து விடுகின்றனர். அதாவது, தொடக்க நிலையில் மார்பில் வலியற்ற சிறு கட்டியாகத் தோன்றும்போது அதை அலட்சியப்படுத்திவிடுகிறார்கள். நாளடைவில் அந்தக் கட்டி வளர்ச்சியடைந்து, வலி நிறைந்த பெரிய கட்டியாக மாறும்போதுதான்  பெண்கள் மருத்துவ உதவியையே நாடுகின்றனர். 

பெரும்பாலும் புற்றுநோய் முற்றிய நிலையில் (ஸ்டேஜ் 3, 4) புற்றுநோய் கண்டறியப்படுவதால்தான் இந்தியாவில் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலை தொடர்ந்தால், இந்தியாவில் 2020-ம் வருடத்துக்குள், மார்பகப் புற்றுநோய் காரணமாக, 8 லட்சத்துக்கும் மேலான உயிரிழப்புகள் ஏற்படலாம் என்கிறது அந்த ஆய்வறிக்கை. ஆனால், தொடக்கநிலையிலேயே சிறிய வலியற்ற கட்டியாக இருக்கும்போதே (ஸ்டேஜ் 1, 2) கண்டுபிடித்து சிகிச்சை பெறுவோரின் இறப்பு விகிதம் பெருமளவு குறைந்திருப்பதை அரசும், மருத்துவத் துறையும் கவனித்திருக்கின்றன. இதையடுத்து இந்திய அரசு மார்பகப் புற்றுநோய்க்கான விழிப்புஉணர்வு ஏற்படுத்துவதில் முழுவீச்சில் இறங்கியுள்ளது.

புற்றுநோய் நம்மைத் தாக்காமல் இருக்க, நாம் செய்ய வேண்டியது என்ன, எதனால் மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது, இதனை முழுவதுமாக தடுக்க மற்றும் குணப்படுத்த முடியுமா, இதற்கென பிரத்தியேகமான பரிசோதனைகள் ஏதேனும் உள்ளனவா என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மார்பகப் புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் இன்னும் முழுமையாகக் கண்டறியப்படவில்லை. ஆனாலும் அதற்கான சூழல்களை மருத்துவ உலகம் நமக்கு அடையாளம் காட்டியுள்ளது. 

பெண்கள் சிறுவயதிலேயே பூப்படைவது, 30 வயதுக்குப் பிறகு நடக்கும் திருமணங்கள், அதன் தொடர்ச்சியாக நடக்கும் குழந்தைப்பேறின்மைக்கான தொடர் ஹார்மோன் சிகிச்சைகள், டெஸ்ட் டியூப் பேபி போன்ற செயற்கைக் கருத்தரிப்பு முறைகள் மற்றும் தாமதமாகும் மெனோபாஸ் போன்றவைதான் மார்பகப் புற்றுநோய் வர முக்கியக் காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் உறவினர்களில், குறிப்பாக தாய் அல்லது சகோதரிக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தால் அந்தக் குடும்பத்துப் பெண்ணுக்கு இந்தப் புற்றுநோய் வர 10 சதவிகித வாய்ப்புகள் அதிகம் என்பது தெரியவந்துள்ளது. குரோமோசோம்களில்  BRCA 1&2 என்ற மரபணுக்கள் தோன்றுவதும்கூட மார்பகப் புற்றுநோயை உருவாக்கலாம் என்றும் கூறுகிறது இந்த புள்ளிவிவரம். 

உடல்பருமன், உடற்பயிற்சியின்மை, புகை மற்றும் மதுப்பழக்கம், ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், ஒவ்வாத மேற்கத்திய உணவுப் பழக்கவழக்கங்கள், அதிகக் கொழுப்பு உணவுகள் போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்களையும் காரணங்களாகக் கோடிட்டுக் காட்டுகிறது உலகப் புற்றுநோய் மையம். இவ்வளவு கொடுமையான நோயை வரும்முன் கண்டறிவது எப்படி என்று தெரியவேண்டியது அவசியம். நமக்கு நாமே பரிசோதித்துக் கொள்ளும் மார்பக சுயபரிசோதனை முறையும், மருத்துவமனை சென்று பரிசோதனை செய்யும் `மேம்மோகிராம் ' (Mammogram) முறை மூலமும்  மிகவும் எளிதாகப்  புற்றுநோயைக் கண்டறியலாம் என்கின்றனர் பெண்கள் நல மருத்துவர்கள்.

25 வயது முதல் பெண்கள், மாதம் ஒருமுறையாவது, தங்களது மார்புகளைத் தாங்களாகவே சோதனை செய்து கொள்ளும், `சுய மார்பகப் பரிசோதனை' (Self Breast Examination) அவசியமான ஒன்றாகும். மாதவிலக்கு ஏற்பட்ட 7 முதல் 10 நாள்களுக்குள், கண்ணாடி முன் நின்று, இரு மார்பகங்களுக்கு இடையே வித்தியாசம் தெரிகிறதா என்று கண்களால் பார்த்தும், அந்தப்பக்க கையின் நான்கு விரல்களால் அழுத்தித் தேய்த்தும் சுயபரிசோதனை செய்து கொள்ளலாம். பரிசோதனையின்போது, மார்பில் கட்டி அல்லது வீக்கம், மார்பகத் தோலில் அதீத சுருக்கம், மார்பகத்தில் ரத்தக்கசிவு போன்ற வித்தியாசமான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரின் உதவியை நாடவேண்டும். அதன்பிறகு `மாமோகிராம்' என்ற ஸ்கிரீனிங் டெஸ்ட், மிக முக்கியமான பரிசோதனை முறையாகும்.

மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் `மேம்மோகிராம் '  உண்மையில் ஒரு எக்ஸ்-ரே டெஸ்ட் தான். ஆனால், இதில் பயன்படுத்தப்படும் குறைந்த அளவிலான கதிர்வீச்சு கொண்ட எக்ஸ்ரே கதிர்கள், மார்பகத்தில் புதிதாகத் தோன்றும் மாற்றங்களைக் கண்டறிந்துவிடும். மார்பகத்தில் கட்டிகள் இல்லாவிட்டாலும்கூட, கட்டிகள் வருவதற்கான அறிகுறிகள், கால்சியம் அளவில் மாற்றங்களை இந்த `மாமோகிராம்' பரிசோதனை காட்டிக் கொடுத்துவிடும்.  இதன்மூலம் நோய் வரும்முன் கண்டறிந்து சிகிச்சை கொடுக்க முடியும் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

`மாமோகிராம்' பரிசோதனைகளை எந்த வயதில் செய்து கொள்ளலாம் என்பதற்கான வழிகாட்டுதல்களும் இருக்கின்றன.  40 வயதுக்குட்பட்ட பெண்கள், மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மருத்துவரிடம் மார்பகப் பரிசோதனை செய்தபிறகு, மருத்துவருக்குச் சந்தேகம் ஏற்பட்டால் மட்டும் `மாமோகிராம்' பரிசோதனை செய்து கொள்ளலாம்.  40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒருமுறையும் `மாமோகிராம்' செய்து கொள்வதும் அவசியம் என்கிறது அமெரிக்க கேன்சர் சொசைட்டி. புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ள பெண்களுக்கு, மருத்துவரின் பரிந்துரையின்பேரில் `மாமோகிராம்' மட்டுமன்றி எம்ஆர்ஐ ஸ்கேனிங்கும் சேர்த்து மேற்கொள்ளப்படும்.

`மாமோகிராம்' வெறும் எக்ஸ்-ரேதான் என்றாலும், அதன் துல்லியம் 85 சதவிகிதமாகும். பரிசோதனையில், அது ஒரு சென்டிமீட்டருக்கும் குறைவான கட்டிகளைக்கூடக் கண்டறிந்து விடும் என்பதே இதன் சிறப்பம்சம்.  ஆனாலும், இந்த எக்ஸ்-ரே எடுக்கும்முறை சற்று வலி நிறைந்ததாகும். பரிசோதனையின்போது இரண்டு ஸ்டீல் பிளேட்டுகளின் நடுவே, மார்பகத்தை அழுத்தித் தட்டையாக்கி, அதன்பிறகே இந்த எக்ஸ்-ரே எடுக்கமுடியும் என்பதால், மார்பகத்தில் தற்காலிகமாக, அழுத்தமான வலி ஏற்படக்கூடும். 20 நிமிடங்கள் மட்டுமே மேற்கொள்ளப்படும் இந்த பரிசோதனை முறை, 25 சதவிகித பெண்களை இறப்பிலிருந்து காக்கிறது என்பதால், பெண்கள் இந்த வலியைப் பொருட்படுத்தக்கூடாது. இதற்காகவே, `புற்றுநோய்க்கு மட்டும் பயப்படுங்கள். அதன் பரிசோதனைகளுக்கு அல்ல...' என்று பெண்களை `மாமோகிராம்'செய்ய அழைக்கிறது உலகப் புற்றுநோய் மையம்.

சில நேரங்களில் `மாமோகிராம்' பரிசோதனை முடிவுகள் சந்தேகத்துக்கிடமாக இருந்தால், அதன் கூடவே மார்பக ஸ்கேனிங் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மாறாக, `மாமோகிராம்' பரிசோதனை மூலம் மார்பகப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தால், அதனை மேலும் உறுதிசெய்ய, `எஃப்என்ஏசி' (FNAC) என்ற நீர்பரிசோதனை அல்லது பயாப்ஸி செய்ய வேண்டியிருக்கும். மார்பகப் புற்றுநோய் பெரும்பாலும் பெண்களை மட்டுமே பாதிக்கும் என்றாலும் ஆண்களுக்கும் ஏற்படும் சாத்தியக் கூறுகள் உள்ளது என்பதால், ஆண்களும் இதனைக் கவனிக்க வேண்டும். 

`மாமோகிராம்' பரிசோதனைக்கான செலவு  தனியார் மருத்துவமனைகளில் உத்தேசமாக இரண்டாயிரம் ரூபாய் வரை கட்டணம் ஆகலாம். ஆனாலும், ஆரம்பக் கட்டத்தில் கண்டறியப்பட்டால், மார்பகப் புற்றுநோயை முழுமையாகக் குணப்படுத்திவிடலாம் என்பதால் மார்பக சுயபரிசோதனை மற்றும் `மாமோகிராம்', தற்போது மிகவும் அவசியமானவையாக உள்ளன. மார்பகப் புற்றுநோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்த நடிகை கௌதமி, தான் தொடர்ந்து மேற்கொண்ட மார்பக சுயபரிசோதனை மற்றும் `மாமோகிராம்' பரிசோதனையால்தான், தனக்கு மார்பகப் புற்றுநோய் இருந்ததை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து அதை வெல்லவும் முடிந்தது என்று கூறியுள்ளது மார்பக சுயபரிசோதனை மற்றும் மாமோகிராமின் அவசியத்தை நமக்கு நன்கு உணர்த்துகிறது. சமீபத்தில், பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மார்பகப் புற்றுநோய் விழிப்புஉணர்வுக்காக பாடிய `ஐ டச் மை செல்ஃப்...' என்ற பாப் வீடியோவும் இந்த சுயபரிசோதனை முறையின் அவசியத்தை, உலக அளவில் பெண்களிடையே வலியுறுத்துவதற்காகவேயாகும்.

மார்பக சுயபரிசோதனை மற்றும் `மாமோகிராம்' முடிந்து, மார்பில் புற்றுநோய் கண்டறியப்பட்டால் அதற்கான சிகிச்சைகள் என்ன என்பதையும் அறிந்து கொள்வோம். புற்றுநோய் கண்டறியப் பட்டவுடன், அதன் நிலைகள் (Staging) மற்றும் அதன் தீவிரம் (Grading) கணக்கிடப்படுகின்றன. அவற்றைக் கணக்கில் கொண்டு அதற்கேற்றாற்போல அறுவை சிகிச்சை, கதிரியக்கச் சிகிச்சை, கீமோதெரபி ஆகிய மும்முனை சிகிச்சைகளில் ஏதேனும் ஒன்றோ அல்லது அனைத்துமே வழங்கப்படுகிறது.

புற்றுநோய் என்றதும் யாரும் பயப்படவோ மனதளவில் சோர்ந்துபோகவோ தேவையில்லை. மார்பகப் புற்றுநோயையும், மரணத்தையும் வெல்லும் ஆற்றல், மகளிருக்கு நிச்சயம் உண்டு.பாலிவுட் நடிகை மும்தாஜ், நமது ஊரில் கௌதமி, `Tomb Raider' புகழ் ஏஞ்சலினா ஜோலி, டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவ்ரத்திலோவா போன்ற பிரபலங்கள் மார்பகப் புற்றுநோயை வென்று நமக்கு நம்பிக்கை அளிக்கின்றனர். 

`அவ்வளவு எளிதாக நான் எதையுமே விட்டுக் கொடுப்பதில்லை.. என்னிடத்தில் மரணம்கூட போராடத் தான் வேண்டியிருக்கும்...' என்று மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு பேசிய பெண்கள் பலர் இருக்கிறார்கள்.  ஆம்... புற்றுநோய்க்குப் பிறகும் வாழ அழகான ஒரு வாழ்க்கை உள்ளது. அதற்கு ஒரே தேவை, புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிவதே..!