Published:Updated:

நாப்கின் முதல் கப் வரை... வெளிப்படையாகப் பேசுவோம்!

நாப்கின் முதல்  கப் வரை... வெளிப்படையாகப் பேசுவோம்!
பிரீமியம் ஸ்டோரி
நாப்கின் முதல் கப் வரை... வெளிப்படையாகப் பேசுவோம்!

ஹேப்பி பீரியட்ஸ்நிவேதிதா லூயிஸ்

நாப்கின் முதல் கப் வரை... வெளிப்படையாகப் பேசுவோம்!

ஹேப்பி பீரியட்ஸ்நிவேதிதா லூயிஸ்

Published:Updated:
நாப்கின் முதல்  கப் வரை... வெளிப்படையாகப் பேசுவோம்!
பிரீமியம் ஸ்டோரி
நாப்கின் முதல் கப் வரை... வெளிப்படையாகப் பேசுவோம்!

ன் வாழ்நாள் முழுக்க ஒரு பெண் சானிட்டரி நாப்கின்களுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் செலவு செய்கிறாள். இந்தியாவில் மட்டும் ஓர் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 13 ஆயிரம் டன் சானிட்டரி நாப்கின் கழிவுகளை நம் நீர்நிலைகள், நிலங்களில் நாம் கொட்டிக்கொண்டிருக்கிறோம். இந்த நிலையில், சத்தமின்றி இன்றைய பெண்களிடம் ஓர் அமைதிப் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. பெண்களின் ‘அந்த நாள்கள்’ பற்றி அதிகம் விவாதிக்காத நம் சமூகம், வழக்கம்போல இதையும் இறுக்கத்துடன் கடந்து செல்லப் பார்க்கிறது. அதையும் மீறி, பெண்கள் அவர்களுக்குள்ளாகவே பேசி ஆலோசித்து மாறிக்கொண்டு வருகிறார்கள் - `கப்' பெண்களாக. பெண்ணுறுப்பில் பொருத்திக்கொள்ளக்கூடிய மென்ஸ்ட்ருவல் கப் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத ‘ஹேப்பி பீரியட்ஸ்’ பற்றிய புரிந்துணர்வை உருவாக்கிவரும் அந்தப் பெண்களிடம் பேசினோம்.

விளிம்புநிலைப் பெண்களுக்கு விழிப்பு உணர்வு

மும்பையில் வசிக்கும் சீமா கண்டாலே, `ஆஷய்' தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைவி. ‘ருது கப்’ என்கிற மென்ஸ்ட்ருவல் கப்பை வடிவமைத்து, குறைந்த விலையில் (ரூ. 555) வழங்கிவருகிறார். கூடவே அலைபேசியிலும் அதை எப்படி உபயோகிப்பது, எப்படி ஸ்டெரிலைஸ் செய்வது என்பதை விளக்குகிறார்.

“ஒரு குழந்தையையே வெளியே அனுப்பும் வஜைனாவால் ஒரு கப்பை உள்வாங்கி வெளியே தள்ள முடியாதா  என்ன! அதன் தசைகள் மிக மென்மையானவை, சரியாகப் பொருத்தி, சரியாக எடுத்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. சந்தை விலையைவிடக் குறைவான விலையில், வாடிக்கையாளரை கப் சென்றடைய வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாப்கின் முதல்  கப் வரை... வெளிப்படையாகப் பேசுவோம்!

‘கோல்டு பீரியட்ஸ்’ என்ற பெயரில் இந்தியன் விமன் பிளாக்ஸ் அமைப்புடன் இணைந்து ஜெய்ப்பூரில் 49 தெருவோரவாசி பெண்களுக்கு இந்தக் கப்புகள் குறித்து விளக்கி இலவசமாக வழங்கினோம். ஆண்களும் அங்கு ஆர்வமாக அமர்ந்து கவனித்தனர். இப்போது கப்பைக் கழுவி, ஸ்டெரிலைஸ் செய்து, பத்திரப்படுத்தி, நாங்கள் தந்த சுருக்குப் பைகளில் வைத்து, தங்கள் பாவாடையுடன் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் வீடுகளற்ற அந்த பிளாட்பாரவாசிகள். நாக்பூர், மும்பை, நாசிக், புனே, தானா என்று அருகில் இருக்கும் நகரங்களில் ரோட்டரி கிளப் மற்றும் தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து விளிம்புநிலைப் பெண்களுக்கு இலவசமாக மென்ஸ்ட்ருவல் கப் வழங்கிக்கொண்டிருக்கிறோம். நேபாளம் முதல் டெல்லி, சென்னை எனப் பல நகரங்களில் முகநூல் மூலம், வாய் வார்த்தை மூலமாகவே வாடிக்கையாளர்களானவர்கள் பலர் உண்டு. அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் கப்புகளை உபயோகிக்கும் முறை குறித்து இலவச விளக்கக் கூட்டங்களும் நடத்துகிறோம். இந்த நாள்களில் தன்னுள் நடப்பது என்ன என்பதைப் பெண்கள் உணர்த்தினால் ஒழிய அது ஆண்களுக்குப் புரியப்போவதில்லை. எனவேதான் நான் நடத்தும் பயிற்சி வகுப்புகளில் ஆண்கள் நிச்சயமாக இருக்க வேண்டும் எனச் சொல்கிறேன். கப்பைப் பயன்படுத்திய பெண்களை, அதைப் பற்றிய விழிப்பு உணர்வை அந்த கப்களே பேசவைக்கும்’’ என்று அழுத்திச் சொல்கிறார் சீமா.

நாப்கின் முதல்  கப் வரை... வெளிப்படையாகப் பேசுவோம்!

மாற்றத்தின் முகம்

பெங்களூரில் சத்தமின்றி ஒரு புரட்சியைச் செய்துவருகின்றனர், ‘கிரீன் தி ரெட்’ அமைப்பினர். பாதுகாப்பான குப்பை வெளியேற்றமே இவர்களது குறிக்கோள். அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான மாலினி பார்மர், “தோழி ஒருத்தியின் அறிவுறுத்தலில் கப்பை உபயோகிக்க ஆரம்பித்தேன். இரண்டு முறைக்குப் பின் அதன் எளிமை, வசதி எனக்குப் பிடித்துவிட்டது. தெரிந்த பெண்கள் அனைவருக்கும் கப்புகளைப் பரிசளிக்க ஆரம்பித்தேன். என்னைப்போல் எண்ணம்கொண்ட நான்கு பெண்கள் இணைந்து, முடிந்தவரை ‘சஸ்டெயினபிள் மென்ஸ்ட்டுரேஷன்’, அதாவது துணி நாப்கின் அல்லது கப்புகளை உபயோகிக்க வைப்பது என்று முடிவெடுத்தோம். அதிக தன்னார்வலர்கள் சேர, ‘கப்வேர்ட்ஸ்’ என்ற பெயரில் குழு ஒன்றை அமைத்தோம்.

நாப்கின் முதல்  கப் வரை... வெளிப்படையாகப் பேசுவோம்!
நாப்கின் முதல்  கப் வரை... வெளிப்படையாகப் பேசுவோம்!
நாப்கின் முதல்  கப் வரை... வெளிப்படையாகப் பேசுவோம்!

இன்ஃபோகிராபிக்ஸ்: எஸ்.ஆரிப் முகம்மது

2015 முதல், சரியான வடிவமைப்புள்ள கப் ஒன்றைத் தொழில் முறையாக உருவாக்கும் எண்ணம் வந்தது. 18 மாதங்களுக்குப் பின் ஒரு புதிய தயாரிப்பாளர் கிடைத்தார். 2016 இறுதியில் எங்கள் கப் விற்பனைக்கு வந்தது. உலகத் தரத்தில் வடிவமைப்பு இருக்க வேண்டும் என்று தேடித் தேடி உலகில் எங்கும் இல்லாத, தண்டு இல்லாத கப் ஒன்றைச் செய்தோம். `வி' வடிவம் இல்லாமல் `யூ' வடிவ கப் என்பதால் அதிக கொள்ளளவைக் கொண்டது எங்கள் ‘ஸ்டோன்சூப் கப்’.

10 ஆயிரம் பெண்களை கப்புக்கு மாற்றியிருக்கிறோம். `கப்பை மேல்தட்டு பெண்கள் மட்டுமே உபயோகிக்கிறார்கள்' என்கிற பொது எண்ணத்தை மாற்ற எண்ணி, 50 சதவிகிதத் தள்ளுபடி விலையில் மக்களிடம் கொண்டுசேர்த்தோம். கர்நாடக மாநிலத்தின் பரஹம்சே கிராமத்தில் இப்போது 40 பெண்கள் எங்கள் கப்பை உபயோகிக்கிறார்கள். விலை குறைவான ‘பிரதம்’ என்ற கப்பைக் கிராமப்புற மற்றும் வசதி குறைவான பெண்களும் வாங்க ஏதுவாக 350 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தினோம். ‘விமன் எண்டேஞ்சர்டு’ அமைப்பு மூலம் டெல்லியின் தெருவோரப் பெண்களுக்கு இலவசமாக வழங்கினோம்’’ என்று மாலினி சொன்னபோது, நிகழ்ந்துகொண்டிருக்கும் மாற்றத்தின் முகம் புரிந்தது.

தூங்கலாம்... நீந்தலாம்!

சென்னையில் ‘பூந்த்’ நிறுவனத்தை நடத்துகிறார்கள் சோனல் ஜெயின் மற்றும் பாரதி கண்ணன். “2016-ம் ஆண்டு முதல் ‘பூந்த் கப்’கள் விற்பனையில் உள்ளன. பத்து வருடங்கள்வரை உபயோகப்படுத்தக் கூடிய ஒரு கப்பின் விலை 600 ரூபாய் மட்டுமே” என்கிறார் சோனல். “இந்த சிலிக்கன் கப்புகளால் ரேஷஸ் வருவதில்லை; எந்தப் பக்க விளைவும் இல்லை; குப்பை அதிகரிப்பதில்லை; பணமும் மிச்சம்.

நாப்கின் முதல்  கப் வரை... வெளிப்படையாகப் பேசுவோம்!

6-12 மணி நேரம் வரை உங்கள் ஃப்ளோவுக்கு ஏற்ப தொடர்ந்து அணியலாம், இதை வைத்துக் கொண்டு தூங்கலாம், நீந்தலாம், உடற்பயிற்சி செய்யலாம், உடல் உபாதைகளைக் கழிக்கலாம். கப் உள்ளே இருப்பதையே மறந்துவிடும் அளவுக்கு வசதியானது. நாங்கள் பிற நிறுவனங்களுடன் இணைந்து இலவசமாக கப்புகளை ஜார்க் கண்ட், ராஜஸ்தான், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் உள்ள உழைக்கும் பெண்களுக்கு வழங்குகிறோம். 1,200 ரூபாய்க்கு நாங்கள் விற்கும் ‘பூந்த் டுகெதர்’ கப்பை நீங்கள் வாங்கும்போது, ஒன்று உங்க ளுக்கும், அதேபோன்ற இன்னொரு கப் கிராமப்புறப் பெண் ஒருவருக்கு இலவசமாகவும் சென்றடைகிறது. இதுகுறித்த விழிப்பு உணர்வு தர, ஐ.ஐ.டி, ஸ்டெல்லா மாரிஸ் எனக் கல்வி நிறுவனங்களுக்கும், ஃபிலிப்ஸ் குளோபல், ஸ்ட்ரெங்த் சிஸ்டம்ஸ் போன்ற வணிக அலுவலகங் களுக்கும் சென்று தன்னார்வ முகாம்கள் நடத்துகிறோம். ‘க்ரிம்சன் வேவ்’ என்ற பெயரில், மாதவிடாய் குறித்த உலகின் முதல் நடமாடும் கலை அருங் காட்சியகத்தை மே 28 அன்று  தொடங்கினோம். ஒரு சானிட்டரி பேட் முற்றிலும் மக்க பல நூறு ஆண்டுகள் ஆகின்றன. கப் போன்ற சுற்றுச்சூழல் மாசு தராத பொருள்களைப் பெண்கள் அதிகம் பயன்படுத்த அரசும் ஆவன செய்ய வேண்டும்” என்கிறார் சோனல்.

அமேசான் முதல் பல ஆன்லைன் விற்பனை வலைதளங்களில் பல வடிவங்களில், வண்ணங்களில், விலையில் இந்த கப்புகள் கிடைக்கின்றன. இவற்றை தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று அவற்றை உபயோகிப்பது நல்லது. மாதவிடாய் குறித்து இன்னும் வெளிப்படையான வாதங்கள், ஆய்வுகள் நிகழும் வரை, அந்த நாள்கள் பெண்களுக்கு சோதனை நாள்களாகவே இருக்கும். நிறைய படிப்போம், விவாதிப்போம்.

என்ன? எப்படி?

“மென்ஸ்ட்ருவல் கப்புகள் மாதவிடாய் நேரத்தில் பிறப்புறுப் பில் பொருத்திக்கொள்ளக் கூடியவை. சிலிக்கன் மற்றும் ரப்பரால் செய்யப்படுபவை. கப் என்பது நம் மாதவிடாய்க் கழிவைச் சேகரிக்கிறது, டேம்பன் மற்றும் சானிட்டரி நாப்கின்கள் உதிரத்தை உறிஞ்சுகின்றன. இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இந்த கப் பெரிய வரம். விலை குறைவாக இருப்பதால், ஏழை எளிய பெண்களுக்கு மிகவும் பயனுள்ளது. இரண்டு கப் இருந்தால் போதும், 6 முதல் 12 மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்றி மாற்றி, ஆறு மாதங்கள் முதல் பத்தாண்டுகள் வரை உபயோகிக்கலாம். 30 வயதுக்குட்பட்ட, குழந்தை பெறாத பெண்கள் ‘ஸ்மால் சைஸ்’ கப்பும், திருமணம் ஆன பெண்கள் ‘லார்ஜ் சைஸ்’ கப்பும் உபயோகிக்கலாம்.

நாப்கின் முதல்  கப் வரை... வெளிப்படையாகப் பேசுவோம்!

நாப்கின்கள் மற்றும் டாம்பன்களில் ப்ளீச் மற்றும் ரசாயனங்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதனால் சரும எரிச்சல் ஏற்படலாம். வஜைனல் ஃப்ளூயிட்டில் உள்ள பிஹெச் அளவு சீராக இருந்தால்தான் பெண்ணுறுப்பில் உள்ள நல்ல பாக்டீரியா சரிவர இயங்கும். பேடுகள், டாம்பன்கள் இவற்றில் உள்ள ரசாயனங்கள், அந்த கார - அமிலத்தன்மை சமநிலையை பாதிக்கும். அதனால், நல்ல பாக்டீரியாவும் சுத்தமாக ‘வாஷ்-அவுட்’ ஆகிவிடும். வஜைனல் கனாலில் உள்ள நல்ல பாக்டீரியா உடல்நலத்துக்கு மிகவும் அவசியமானது. நாப்கின் மற்றும் டாம்பன் பிறப்புறுப்பை ஈரமாகவே வைத்திருப்பதால், ஃபங்கல் தொற்றும் ஏற்படுகிறது. டாம்பன் உபயோகிப்பதால் டிஎஸ்எஸ் எனப்படும் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் எனும் கடும் பாக்டீரியாத் தொற்றும் ஏற்படுகிறது.

உள்ளே செலுத்த வேண்டும் என்ற தயக்கத்தால்தான், பெண்கள் கப்பைப் பயன்படுத்த முன்வருவதில்லை. சரியான முறைப்படி அதை ஒருமுறை பொருத்திப் பழகிக்கொண்டால், எந்த பயமும் இல்லை. சாதாரண நீரில் நன்றாகச் சுத்தம் செய்து உபயோகித்துக் கொண்டு, ஒவ்வொரு சைக்கிளுக்குப் பின்னும் ஸ்டெரிலைஸ் செய்து காயவைத்து உபயோகித்தால் போதுமானது. ரத்த சோகையாலோ, அதிக உதிரப்போக்காலோ அவதிப்படும் பெண்கள், தங்கள் மாதவிடாய்ப் போக்கை கப் கொண்டு அளவிட்டுக்கொள்ளலாம். சிலிக்கான் கப் பயன்படுத்துவது பாதுகாப்பானது. பக்கவிளைவுகள் இல்லாதது. உடலில் எந்த பயமும் இன்றிப் பொருத்திக்கொள்ளலாம். காப்பர்-டி பொருத்தியிருப்பவர்களும் இதை பயமின்றிப் பயன்படுத்தலாம். கடுமையான தரக் கட்டுப்பாட்டு தரம் கொண்ட அமெரிக்க எஃப்டிஏ அமைப்பு இந்த மென்ஸ்ட்ருவல் கப்புகளை உபயோகிக்க அனுமதி வழங்கியிருக்கிறது. பெண்கள் தங்கள் மருத்துவர்களிடம் கலந்தாலோசித்து அவர்களுக்கு ஏற்ற கப்புகளை சரியான வழிகாட்டுதல்படி பயன்படுத்தலாம்” என்று பரிந்துரைக்கிறார் மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் மோகன பிரமிளா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism