வாசகிகள் பக்கம்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

தாய் மனசு... ரிலாக்ஸ் ப்ளீஸ்!

தாய் மனசு... ரிலாக்ஸ் ப்ளீஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
தாய் மனசு... ரிலாக்ஸ் ப்ளீஸ்!

தாய் மனசு... ரிலாக்ஸ் ப்ளீஸ்!

குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே புகட்டினால் போதும்; தண்ணீர்கூட கொடுக்கத் தேவை இல்லை. அந்தளவுக்கு முழுமையான சத்துகள் நிரம்பிய, நிகரற்ற தாய்ப்பால் குடிக்கப்பெற்ற குழந்தைகளே ஆரோக்கியமான மனிதர்களாக வளர்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம், தாய்ப்பால் தருகிற நோய் எதிர்ப்புத் திறன்.

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்வதற் கான ஆலோசனைகளை வழங்குகிறார், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஜெயந்தி.

தாய் மனசு... ரிலாக்ஸ் ப்ளீஸ்!

``பொதுவாக, பிரசவத்துக்குப் பின் தாய்க்கு ஏற்படும் மன அழுத்தமும் தாய்ப்பால் சுரப்பைக் குறைக்கும். குழந்தையின் பாலினம், நிறம் ஆகியவற்றை முன்னிறுத்தி சுற்றம் சொல்லும் வார்த்தைகள், குடும்பத்தில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பைக் கணவரோ, பிறரோ பகிர்ந்துகொள்ளாத சூழ்நிலை, இயல்பாகவே தாய்மார்களுக்குப் பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் போஸ்ட்பார்டம் ப்ளூஸ்... இவை எல்லாம் அவர்களுக்கு மன அழுத்தம் கொடுக்கலாம். அதோடு, குழந்தைக்குத் தேவையான பால் தனக்குச் சுரக்கவில்லையோ என்ற கவலையும் அவர்களை மன அழுத்தத்துக்குள் தள்ளும். இந்த அழுத்தமும் சேர்ந்து பால் சுரப்பைக் குறைக்கும் என்பதை உணர்ந்து தாய், தன்னைத் தானே மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ள முன்வர வேண்டும்.

பிரசவத்துக்குப் பின், முதலில் சீம்பால் சுரக்கும். குழந்தை பிறந்த முதல் மூன்று நாள்களுக்குத் தாய்ப்பால் சுரப்பு குறைவாகவே இருக்கும். என்றாலும், இது குழந்தையின் தேவைக்கும் ஜீரண சக்திக்கும் போதுமானதுதான். அடுத்ததாக, குழந்தை பாலைக் குடிக்கக் குடிக்கத்தான் சுரப்பு தூண்டப்படும். அதனால், `எனக்குப் பால் சுரக்கவே இல்லையே' என்ற கவலைப்படுவதை விட்டு விட்டு, தனக்கும் குழந்தைக்குமான தருணங்களை ரசித்து அனுபவித்தாலே, இருவருக்கும் இடையிலான பந்தம் அடர்ந்து, ஸ்ட்ரெஸ் லெவல் குறைந்து, தாய்மைக்கான ஹார்மோன் சுரப்பு அதிகரித்து, பால் நன்றாக ஊறும். பாலூட்டும் தாய்மார்களுக்குச் சராசரியாக 850 மி.லி தாய்ப் பால் தினமும் சுரக்கும்.  குறிப்பாக, மூளையின் கட்டளையை உடல் நிச்சயம் ஏற்கும். அதனால், கர்ப்ப காலத்திலேயே, `என் குழந்தைக்கு நான் தாய்ப்பால் மட்டுமே கொடுப்பேன்' என்று மனதளவில் தயாராக வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதால் அழகு குலைந்து போகும் போன்ற வதந்திகளையெல்லாம் பொருட்படுத்தக் கூடாது.

தாய் மனசு... ரிலாக்ஸ் ப்ளீஸ்!

தாய்ப்பால் உணவுகள்

* தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கப் புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய தானியங்களைத் தினமும் எடுத்துக்கொள்ளலாம்.

கொழுப்பில்லாத அல்லது கொழுப்பு நீக்கிய அசைவ உணவுகளைச் சாப்பிடலாம்.

தினமும் நிறைய பால் அருந்தும்போது, பால் சுரப்பு சிறப்பாக இருக்கும்.

இரும்புச்சத்து நிறைந்த உணவுகளான பேரீச்சை, வெல்லம் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

தினமும் 10-12 டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது.

நார்ச்சத்து மிகுந்த பழங்கள், காய்கறிகள் போன்ற வற்றை அதிகளவில் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கீரை வகைகளில் பொன்னாங்கண்ணிக் கீரை, அகத்திக்கீரை ஆகியவற்றில் அதிக அளவில் புரதமும், மாவுச்சத்தும், வைட்டமின்களும் இருக்கின்றன. வாரம் இருமுறை இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

தினமும் பூண்டை, பாலில் வேகவைத்துச் சேர்த்துக்கொள்வதன் மூலமும் பால்சுரப்பு அதிகரிக்கும்.

பாலூட்டும் தாய்மார்கள் கவனிக்க வேண்டியவை

ஃபீடிங் பொசிஷனில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது, மார்பக் காம்பு முழுவதும் குழந்தையின் வாய்க்குள் இருப்பது, குழந்தை யின் நாசி தாயின் மார்பகத்தில் அழுந்தாமல் இருப்பது, குழந்தையின் தலைப்பகுதியைச் சற்று தூக்கிப் பிடித்திருப்பது எனக் குழந்தை, பால் குடிக்க வசதியான மற்றும் சரியான நிலையில் அமர்ந்து பாலூட்ட வேண்டும். தாயின் உடலோடு குழந்தையைச் சேர்த்து அணைத்தபடி பால் புகட்டும்போது, குழந்தை அந்த அரவணைப்பின் மூலம் பாதுகாப்பாக உணர்ந்து நிம்மதியாகப் பால் குடிக்கும். 

இரண்டு பக்கமும் மாற்றி மாற்றிப் பால் புகட்ட வேண்டும். அப்போதுதான் இரண்டு மார்பகங் களிலும் பால் நன்றாகச் சுரக்கும், பால் கட்டாது.

பம்ப்பிங் முறையில் பால் சேகரிக்கும்போதும், இரண்டு மார்பகங்களில் இருந்தும் பால் எடுத்துச் சேமிக்கவும்.

சில நேரங்களில் மார்பகக் குழாய்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால், அந்தக் காம்புப் பகுதியில் ஒரு புள்ளி தோன்றும். கூடவே வலியும் இருக்கும். தாய்ப்பாலும் சரியாக வெளிவராது. அப்போது, வெதுவெதுப்பான நீரால் மார்பைச் சுத்தம்செய்து நீவிவிட, அடைப்பு சரியாகி தாய்ப் பால் வெளிவருவதில் பிரச்னை தீரும். பால் கட்டும்போதும் இதேபோலச் செய்து நிவாரணம் பெறலாம்.

தாய்ப்பாலூட்டும் பெண்கள் உள்ளாடை அணிவது, தினமும் ஒருமுறை மார்பகங்களுக்கு மசாஜ் செய்துகொள்வது போன்ற பழக்கங்களால் மார்பக வலி மற்றும் பால் கட்டுதல் பிரச்னை களைத் தவிர்த்து, குழந்தைக்குத் தடையின்றி பால் புகட்டலாம்.

தாய்ப்பால் புகட்டுவதற்கு முன்பும் பின்பும் காம்பு மற்றும் மார்பை ஈரமான பருத்தித்துணி கொண்டு சுத்தம் செய்யவும்.''

- சு.சூர்யா கோமதி