Published:Updated:

அஞ்சறைப் பெட்டியின் உச்ச நட்சத்திரம் வெந்தயம்!

அஞ்சறைப் பெட்டியின் உச்ச நட்சத்திரம் வெந்தயம்!
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சறைப் பெட்டியின் உச்ச நட்சத்திரம் வெந்தயம்!

அஞ்சறைப் பெட்டிடாக்டர் வி.விக்ரம்குமார்

அஞ்சறைப் பெட்டியின் உச்ச நட்சத்திரம் வெந்தயம்!

அஞ்சறைப் பெட்டிடாக்டர் வி.விக்ரம்குமார்

Published:Updated:
அஞ்சறைப் பெட்டியின் உச்ச நட்சத்திரம் வெந்தயம்!
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சறைப் பெட்டியின் உச்ச நட்சத்திரம் வெந்தயம்!

வெந்தயம் கொஞ்சம் கசக்கும். அது தரும் பலன்களோ மிகவும் இனிக்கும். வெந்தயத்துக்கான அறிமுக உரையாக இதைச் சொல்லலாம். மத்தியத் தரைக்கடல் நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளில் பல்லாயிரம் ஆண்டுகளாக உணவாகவும் மருந்தாகவும் வெந்தயம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வெந்தயத்தின் தாயகம் கிரேக்கம் என்பதால் ஃபெனுக்ரீக் என்ற ஆங்கிலப்பெயர் சூட்டப்பட்டது. கிரேக்கத்தில் அதிகளவில் விளைந்தாலும், ஆரம்பத்தில் கால்நடைகளுக்கான உணவாகவே வெந்தயத்தை கிரேக்கர்கள் அறிந்திருந்தனர். மெள்ள மெள்ள மற்ற நாடுகளுக்குப் பரவிய பிறகே மருந்தாகவும் சமையல் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டது. சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராக் பகுதியில் வெந்தயம் பயன்படுத்தியதற்கான ஆதாரம் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளது.

அஞ்சறைப் பெட்டியின் உச்ச நட்சத்திரம் வெந்தயம்!

மேதி, வெந்தை, மெந்தியம் எனப் பல்வேறு பெயர்களைக் கொண்ட வெந்தயம் குளிர்ச்சியுண்டாக்கி, சிறுநீர்ப்பெருக்கி, காமம்பெருக்கி, உரமாக்கி என பல செய்கைகளைக் கொண்டது. ‘வெச்சென்ற மேனி மிகவுங் குளிர்ச்சியதாம் அச்சமில்லை வெந்தயத்துக்காய்…’ என வெந்தயம் சார்ந்த பாடல், அதன் குளிர்ச்சித்தன்மை குறித்தும், பித்தம் சார்ந்த நோய்களுக்கான பயன்பாடு குறித்தும் எடுத்துரைக்கிறது. வெந்தயத்தை வறுத்துப் பொடியாக்கி, நீரில் ஊறவைத்துச் சாப்பிட்டால் வயிற்றுவலி, உடல்சூடு, வெள்ளைப்படுதல், கழிச்சல் போன்றவற்றுக்கு நிவாரணம் தரும். உடல் மெலிந்தவர்கள், வெந்தயம் சேர்த்துத் தயாரித்த அடையை, கருணைக்கிழங்கு சேர்த்துச் சாப்பிட்டால் உடல் பருமனாகும் என்கிறது சித்தர் தேரையரின் பாடல்.

ஈரல் சார்ந்த நோய்களுக்கு வெந்தயம், பெருங்காயம், கறிமஞ்சள், கடுகு ஆகியவற்றை நெய்விட்டு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அஞ்சறைப் பெட்டியின் உச்ச நட்சத்திரம் வெந்தயம்!

வறுத்துப் பொடியாக்கி, சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். வெந்தயம், பெருங்காயம், துவரம்பருப்பு சேர்த்து மண்பானையில் தயாரித்த உணவை, சூடாகச் சாப்பிட்டால் உடல் எரிச்சல் குறையும்.

பிரசவத்தைத் துரிதப்படுத்தவும் பிரசவித்த தாய்க்கு பால்சுரப்பு அதிகரிக்கவும் வெந்தயக் களி, வெந்தயக் கஞ்சி வைத்துக் கொடுக்கும் நடைமுறை கிராமங்களில் இன்றைக்கும் உள்ளது. வெந்தயத்தை நெய்யில் வறுத்துப் பொடித்து, கோதுமை மாவும் கருப்பட்டியும் சேர்த்துத் தயாரிக்கும் `இனிப்புக் களி’, பால்சுரப்பை அதிகரிக்கும். ராஜஸ்தான் மாநிலத்தில் வெந்தயத்துடன் பாதாம்பருப்பு சேர்த்துச் செய்யப்படும் `வெந்தய லட்டுகள்’ பண்டிகைக்கால பலகாரமாக மட்டுமல்லாமல், பிரசவித்த தாய்க்குப் பால்பெருக்கும் உணவாகவும் இருக்கிறது. 

நீரிழிவுக் கட்டுப்பாட்டில் வெந்தயத்தின் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. சாப்பிட்ட பின் அதிகரிக்கும் ரத்தச் சர்க்கரை அளவு மற்றும் மூன்று மாதங்களுக்கான ரத்தச் சர்க்கரை இருப்பைக் காட்டும் `HbA1c' அளவீட்டைக் குறைக்கவும் வெந்தயம் உதவும். இன்சுலின் செயல்பாட்டைத் தூண்டி, டைப்-2 நீரிழிவைக் கட்டுப்படுத்த வெந்தயம் உதவுவதாக `ஜர்னல் ஆஃப் மெடிசினல் ஃபுட்' என்ற இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பைத் தூண்டுவதுடன் குடல் பகுதியில் உட்கிரகிக்கப்படும் சர்க்கரை அளவையும் குறைக்கிறது. ரத்தத்தில் காணப்படும் சர்க்கரையை, செல்கள் பயன்படுத்தும்விதமாக நொதிகளைச் சுரக்கச் செய்து, குளூக்கோஸ் வளர்சிதை மாற்றத்தில் வெந்தயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இயற்கையின் பொக்கிஷமாகவே நீரிழிவாளர்கள் வெந்தயத்தைப் பார்க்கலாம்!

தவறான உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை காரணமாக `கல்லீரலில் கொழுப்புப் படிதல்’ என்பது சமீபத்தில் அதிகரித்துவரும் முக்கியப் பிரச்னை. கூடவே டிரைகிளிசரைடு அளவுகள் மற்றும் கெட்ட கொழுப்பு ரத்தத்தில் தாறுமாறாக அதிகரித்துள்ளன. இதற்கான சிறந்த தீர்வை வெந்தயம் கொடுப்பதாக `இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ஒபிஸிட்டி' இதழில் வெளியான ஆய்வுக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. சிறுநீரகக் கற்கள் மற்றும் பித்தப்பைக் கற்களின் அளவுகளைக் குறைக்கவும் வெந்தயம் பயன்படும். ரத்தத்தில் நுழைந்த கிருமிகளை அழிக்கும் வெள்ளை அணுக்களின் செயல்பாடுகளை வெந்தயம் துரிதப்படுத்தும். அமினோ அமிலங்கள் மற்றும் அதிகளவு நார்ச்சத்து, இரும்புச்சத்து, தயாமின் என நுண்ணூட்டங்களுக்கும் வெந்தயத்தில் குறைவில்லை.

அஞ்சறைப் பெட்டியின் உச்ச நட்சத்திரம் வெந்தயம்!

வெந்தயத்தை ஊறவைத்துச் சாப்பிடுவ தால், வயிற்றுப் புண்கள் குறையும். இதன் கொழகொழப்புத் தன்மை, வயிற்றுப் பகுதிக்குள் மெல்லிய படலத்தை ஏற்படுத்தி பாதுகாப்பளிக்கும். ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை நீர்விட்டுக் கொதிக்கவைத்து, வடிகட்டி வாய் கொப்பளித்தால் தொண்டைக்கட்டுச் சரியாகும். ஆண்களுக்கு வீரியத்தை அதிகரிக்க வெந்தயப் பொடி அல்லது வேகவைத்த வெந்தயத்தைத் தேனில் ஊறவைத்துச் சாப்பிடுவது பண்டைய ரோமானியர்கள் மற்றும் கிரேக்கர்களின் மருத்துவ யுக்தியாக உள்ளது.

அஞ்சறைப் பெட்டியின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் வெந்தயத்தை அடிக்கடி உபயோகப் படுத்துவது ஆரோக்கியத்துக்கு உகந்தது.

யப்பே... இது ஹில்பே!

மத்தியக் கிழக்கு நாடுகளின் மருத்துவக்குணம் நிறைந்த இணை உணவு ‘ஹில்பே’ (Hilbeh). பொடித்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை நீரில் நன்றாகக் கலந்து இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலை நீரை மட்டும் வெளியேற்ற வேண்டும். மீதமுள்ள கொழகொழப்பான கலவையுடன், இரண்டு பூண்டுப் பற்கள், சிறிது அரைத்த தக்காளி விழுது, சீரகப்பொடி, ஏலப்பொடி, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். மிளகுத்தூள் தூவினால் காரமும் கிடைக்கும். பருப்பு வகைகளையும் இதில் சேர்க்கலாம். சட்னியைப் போல இதைப் பயன்படுத்த வயிறு சம்பந்தமான கோளாறுகள் குணமாகும்.

* வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதைவிட, நீரில் ஊறவைத்தோ, பொடித்தோ, மருந்தாக மற்றும் சமையலில் நறுமணமூட்டியாகப் பயன்படுத்துவதே சிறந்தது. வெந்தயத்தை பொன்வறுவலாக வறுத்துப் பயன்படுத்தும்போது, அதன் மணம் கூடி, கசப்புத்தன்மை குறையும். தயிர்ப்பச்சடியிலோ, மோரிலோ வெந்தயப் பொடியைத் தூவி வேனிற்காலங்களில் சாப்பிடுவதால் குளிர்ச்சியூட்டுவதுடன் செரிமானத்தைத் தூண்டும். வெந்தயத்தை இரவு முழுவதும் பாலில் ஊறவைத்து, சிறிது தயிர் சேர்த்துக் காலையில் அருந்துவதும் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைக் கொடுக்கும். வெந்தயத்தை முளைக்கட்டி பயன்படுத்துவதும்
நல்லது.

ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 250 மில்லி நீரில் போட்டுக் கொதிக்கவைத்து 100 மில்லியாக வற்றச்செய்து, ஒரு டீஸ்பூன் இஞ்சிச்சாறு சேர்க்க வேண்டும். அதில் சிறிது தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இருமல், ஆஸ்துமா தொந்தரவுகள் குறையும். கோழையை அகற்றும் செய்கையுடைய இதை, காலையும் மாலையும் அரை டீஸ்பூன் அளவு சாப்பிடுவதன்மூலம் நுரையீரல் பாதை சுத்தமாகும்.

வெந்தயம் ஊறவைத்த நீரில், இஞ்சி-பூண்டு விழுது தயார்செய்வது உத்தரப்பிரதேச மாநிலச் சமையல் நுணுக்கமாகும். கர்நாடகம் மற்றும் பஞ்சாபில் பூசணிக்காயைச் சமைக்கும்போது, அதன் இனிப்புச் சுவையை ஈடுகட்ட வெந்தயம் சேர்க்கின்றனர். கேரளாவில் மீன்கறி சமைக்கும்போது, மீன் துண்டுகள் உதிராமலிருக்க, வெந்தயத்தை அதன் மீது தடவும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். உப்புக்கண்டம் போடும்போது, வெந்தயத்தை அரைத்து இறைச்சியில் சேர்க்கும் வழக்கம் மத்தியக் கிழக்கு நாடுகளில் உள்ளது.

வெந்தய புலாவ்

250 கிராம் வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, நெய்யில் லேசாக வறுத்து, வேக வைத்த அரிசியுடன் கலந்து சாப்பிடும் எளிமையான புலாவ் ரகத்தைச் சிம்லாவின் குறிப்பிட்ட மக்கள் விரும்பிச் சாப்பிடுகின்றனர்.

கொழும்பு (Colombo) பவுடர்

கால் கப் அரிசியை லேசாக வறுக்க வேண்டும். தலா ஒரு டீஸ்பூன் வெந்தயம், தனியா, மிளகு, கடுகு, கிராம்பு எடுத்துத் தனித்தனியாக வறுத்துப் பொடிக்க வேண்டும். கால் கப் சீரகம் மற்றும் மஞ்சளை அரைத்துக் கொள்ள வேண்டும். கடைசியில் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாக அரைத்துப் பொடியாக்கி மசாலாபோல பயன்படுத்தலாம். உருளை, வாழை, மீன் உணவுகளுக்கு இந்தக் கொழும்புப்பொடி பிரத்யேக சுவை தரும்.

இரவு முழுவதும் நீரில் ஊறிய வெந்தயத்தை அரைத்து, பசை போல தலைமுழுவதும் பூசி அரை மணிநேரம் கழித்து, சிகைக்காய் கொண்டு தலைமுழுகினால் பொடுகுத்தொல்லை குறைவதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.

வெந்தய விதைகள் கற்கள்போல காட்சியளிப்பதால், சிறுசிறு கற்கள் கலப்படம் செய்யப்படுகின்றன. நீரில் ஊறவைத்துப் பயன்படுத்தும்போது கலப்படத்தை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.