Published:Updated:

அசல் சீஸ் தயாரிக்க ஆசையா?

அசல் சீஸ் தயாரிக்க ஆசையா?
பிரீமியம் ஸ்டோரி
அசல் சீஸ் தயாரிக்க ஆசையா?

நீங்களே செய்யலாம் - சீஸ்சாஹா, படங்கள்: வீ.நாகமணி

அசல் சீஸ் தயாரிக்க ஆசையா?

நீங்களே செய்யலாம் - சீஸ்சாஹா, படங்கள்: வீ.நாகமணி

Published:Updated:
அசல் சீஸ் தயாரிக்க ஆசையா?
பிரீமியம் ஸ்டோரி
அசல் சீஸ் தயாரிக்க ஆசையா?

சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு, நிலா காட்டி சோறூட்ட வேண்டியதில்லை இன்று. கொஞ்சம் சீஸ் சேர்த்துக் கொடுத்தால் போதும். இட்லி, தோசையில் தொடங்கி, பீட்சா, பர்கர் வரை எல்லாவற்றுக்கும் சீஸ் சேர்த்துச் சாப்பிடும் தலைமுறை இது. பெரியவர்களும் விதிவிலக்கல்ல.

அளவுக்கு அதிகமாக சீஸ் சாப்பிடுவது ஆரோக்கியமற்றது என்று தெரிந்தாலும், சீஸை விரும்பிச் சாப்பிடுவதைப் பலராலும் தவிர்க்க முடிவதில்லை.

‘பிரச்னை சீஸில் இல்லை. அது தயாரிக்கப்படும் முறையில்தான். தரமான, கலப்படமில்லாத பாலில், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் சீஸ் ஆரோக்கியத்தைப் பாதிக்காது’ என்கிறார்கள் சென்னையைச் சேர்ந்த தோழிகள் அனுராதா கிருஷ்ணமூர்த்தியும் நம்ரதா சுந்தரேசனும்.  ‘கேஸ்’ என்கிற பெயரில் சீஸ் தயாரிப்பு கம்பெனி நடத்தி வரும் இவர்கள், சீஸ் தயாரிப்பில் பயிற்சி வகுப்புகளும் எடுக்கிறார்கள்.

அசல் சீஸ் தயாரிக்க ஆசையா?

‘`நான் ஒரு சோஷியல் வொர்க்கர். கேட்கும் திறன், பார்வைத்திறன் இல்லாதவங்களுக்காக ஒரு `பிபிஓ’ நடத்திட்டிருக்கேன். கேட்கும் திறனற்ற பெண்களுக்காக பேக்கரி ஒன்று தொடங்கணும்னு ரொம்ப நாளா ஒரு யோசனை இருந்தது. நானும் நம்ரதாவும் பத்து வருஷ ஃப்ரெண்ட்ஸ். சமையலில் அவங்களுக்கு ஆர்வம் அதிகம். பேக்கிங் எக்ஸ்பெர்ட். அவங்க மூலமாகவே நான் ஆசைப்பட்டதுபோல கேட்கும் திறனற்ற பெண்களுக்கு பேக்கரி பயிற்சி கொடுக்கலாமானு பேசினேன். `சென்னையில நிறைய பேக்கரி யூனிட் இருக்கு. அதைவிட சீஸ் மேக்கிங் சொல்லித் தரலாமே’னு அவங்க சொன்னாங்க. நம்ரதா முறைப்படி சீஸ் தயாரிப்புப் பயிற்சி எடுத்துக்கிட்டவங்க. 2015-ம் வருஷம் சும்மா ஒரு ட்ரயல் முயற்சியா பத்து லிட்டர் பால் வாங்கி சீஸ் மேக்கிங்கை ஆரம்பிச்சோம்.  ரெண்டு மூணு கிலோ சீஸ் செய்துட்டோம். அதுக்கான வரவேற்பு எப்படியிருக்கும்னு பார்க்கிறதுக்காக ஃப்ரெண்ட்ஸ், தெரிஞ்சவங்கன்னு சிலரைக் கூப்பிட்டு, அந்த சீஸ்ல விதவிதமான உணவுகள் செய்து கொடுத்தோம். எல்லாருக்கும் ரொம்பப் பிடிச்சது. அந்தப் பாராட்டுதான் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தது. சின்ன கிச்சன், ஐம்பது லிட்டர் பிடிக்கிற பாத்திரம், சில்லிங் யூனிட்... இவற்றை மட்டும் வெச்சுக்கிட்டு  சீஸ் மேக்கிங்கை பிசினஸா ஆரம்பிச்சோம்’’ - அறிமுகம் சொல்கிறார் அனுராதா கிருஷ்ணமூர்த்தி.

‘`வாய்வழி விளம்பரமா எங்க தயாரிப்பு வெளியில தெரியவந்தது. மெள்ள மெள்ள எங்க பிசினஸ் பிக்கப் ஆச்சு. இன்னிக்கு பால் உபயோகம் பத்தி அநேகம் பேருக்கு ஒரு பயமிருக்கு. மார்க்கெட்ல கிடைக்கிற பால் பொருள்கள் தரமானவைதானாங்கிற கேள்வியும் இருக்கு. சீஸ் தயாரிக்க நாங்க பயன்படுத்தறது எந்த வகையிலும் ட்ரீட் செய்யாத, சுத்தமான பால் மட்டும்தான். ஹார்மோன் ஊசிகள் போட்டு வளர்க்கிற மாடுகள்கிட்டருந்து கறக்கும் பாலையும் தவிர்க்கிறோம். அதே மாதிரி அயோடைஸ்டு செய்யப்படாத கல் உப்புதான் பயன்படுத்தறோம். தனிப்பட்ட முறையில செய்ற விற்பனை தவிர, இப்போது, கடைகளுக்கும் சப்ளை பண்ண ஆரம்பிச்சிருக்கோம். இந்த பிசினஸின் எல்லாத் துறைகளிலும் மாற்றுத்திறனாளிப் பெண்களின் பங்கும் இருக்கு’’ என்கிறார் நம்ரதா சுந்தரேசன்.

மொசரெல்லா, செடார், ஃபெடா என இருபது வகையான சீஸ் தயாரிக்கும் இந்தத் தோழிகள், இந்த வருடம் மார்ச் மாதம், மத்திய அரசின் ‘நாரிசக்தி புரஸ்கார்’ விருதை வென்ற தமிழர்கள் என்கிற பெருமைக்கும் உரியவர்கள். சீஸ் தயாரிப்பு பிசினஸில் ஈடுபட விரும்புவோருக்கு வழிகாட்டுகிறார்கள் தோழிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அசல் சீஸ் தயாரிக்க ஆசையா?

என்னென்ன தேவை... எவ்வளவு முதலீடு?

கொழுப்பு நீக்கப்படாத, பதப்படுத்தாத, தரமான பால், பெரிய பாத்திரங்கள், கல்ச்சர், ரெனட் (பெரும்பாலும் இது, விலங்குகளிடமிருந்து எடுக்கப்படுவது. வெளிநாடுகளிலிருந்து நமக்குக் கிடைக்கிற சீஸில் அந்த வகையான ரெனட்தான் சேர்க்கப்பட்டிருக்கும். நாங்கள் வெஜிடேரியன் ரெனட் சேர்க்கிறோம்), காஸ் அடுப்பு, சீஸ் துணி, சீஸ் மோல்டு என அடிப்படையான பொருள்களுக்கு இருபதாயிரம் ரூபாய் முதலீடு தேவைப்படும்.

சில்லிங் யூனிட்டுக்கு இருபதாயிரம் ரூபாய் செலவாகும். ஆரம்ப நிலையில் ஃப்ரிட்ஜை வைத்துச் சமாளித்துக்கொள்ளலாம். பிசினஸ் வளர்ந்ததும் சில்லிங் யூனிட் அவசியம். அதில் வைக்கிறபோது, ஒரு மாதம் வரை சீஸ் கெட்டுப்போகாமலிருக்கும்.

அசல் சீஸ் தயாரிக்க ஆசையா?

விற்பனை வாய்ப்பு? லாபம்?

ஒரு லிட்டர் பாலில் இருந்து நூறு கிராம் சீஸ் எடுக்கலாம். பத்து லிட்டர் பாலில் ஒரு கிலோ சீஸ் எடுக்கலாம்.

புராசெஸ்டு சீஸ் என்று கடைகளில் கிடைக்கிறது. அவற்றில் வெறும் இருபது சதவிகிதம் மட்டுமே சீஸ். மற்றதெல்லாம் தேவையற்ற பொருள்களே. அது, விலை மலிவாகக் கிடைக்கும். ஆனால், அசல் சீஸின் தரமும் சுவையும் பிரத்யேகமானவை. 250 கிராம் சீஸை குறைந்தது 500 ரூபாயிலிருந்து  விற்கலாம்.

சீஸ் இல்லாத இடமே இல்லை என்கிற அளவுக்கு இன்று ரெஸ்டாரன்ட், பீட்சா கடைகள், ஃபாஸ்ட் ஃபுட் கடைகளிலும் அதன் தேவை அதிகரித்திருக்கிறது. மக்கள், தரமான உணவுகளைத் தேடிச் சாப்பிடுகிறார்கள். அந்த மாதிரி இடங்களில் ஆர்டர் பிடித்தால் விற்பனை வாய்ப்புகள் பெருகும். 40 சதவிகித லாபம் நிச்சயம்.

பயிற்சி?

அடிப்படை சீஸ் தயாரிப்பு மட்டும் போதும் என நினைப்பவர்கள், ஐந்தாயிரம் ரூபாய் கட்டணத்தில் ஒரே நாளில் கற்றுக் கொள்ளலாம். சீஸ் தயாரிப்பில் ஏராளமான பயிற்சிகளும் நுட்பங்களும் உள்ளன.