Published:Updated:

மார்பகப் புற்றுநோயை வெல்வதற்கான முதல் படி!

மார்பகப் புற்றுநோயை வெல்வதற்கான முதல் படி!
பிரீமியம் ஸ்டோரி
News
மார்பகப் புற்றுநோயை வெல்வதற்கான முதல் படி!

பெண் நலம்வே.கிருஷ்ணவேணி

`மருத்துவர்கள் அறிவுறுத்தும் விழிப்பு உணர்வு, அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், மருத்துவ முன்னேற்றங்கள்... இவற்றையெல்லாம்விட, ஒவ்வொரு பெண்ணும் சுயபரிசோதனை செய்துகொள்வதே மார்பகப் புற்றுநோயை வெல்வதற்கான முதல் படி'' என்று அறிவுறுத்துகிறார் மகப்பேறு மருத்துவர் மகேஸ்வரி. மார்பகப் புற்றுநோய் பற்றிப் பெண்கள் அறிந்துகொள்ள வேண்டிய மருத்துவ விளக்கங்களைத் தருகிறார் அவர்.

மார்பகப் புற்றுநோயை வெல்வதற்கான முதல் படி!

சுயபரிசோதனை

தொடக்க காலத்திலேயே நோயைக் கண்டறிய, இருபது வயதுக்கு மேற்பட்ட பெண்கள், குளியலறையில் கண்ணாடி முன் நின்று மார்பக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கையை மார்பகங்களில் வைத்து அழுத்திப்பார்த்து ஏதாவது கட்டிகள் தென்படுகின்றனவா என்று உணர வேண்டும். ஆரம்ப நிலையென்றால், கட்டி சிறு உருண்டையாகக் கைகளில் தென்படும். அது, பாதிப்பற்ற ஃபைப்ரோஅடினோமா கட்டியாகவும் இருக்கலாம். இது கேன்சர் கட்டியில்லை என்பதால், மருத்துவர் உறுதி செய்வதற்கு முன் பதற்றம் வேண்டாம். ஃபைப்ரோஅடினோமா கட்டிகள் பெரும்பாலும் 35 வயதுக்குள்தான் வரும். அதற்குப் பிறகு, இந்தக் கட்டிகள் வர வாய்ப்பில்லை. அதை முதல்கட்டத்திலேயே கவனிக்கத் தவறுபவர்கள் பலர்.

கட்டி இருக்கும் இடத்தின் மேற்புறச் சருமம் ஆரஞ்சுப்பழத் தோல்போல தடிமனாக மாறுவது, காம்பில் ரத்தம் கசிவது, காம்பு உள்ளிழுத்துக்கொள்வது... இவையெல்லாம் மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறிகள். புற்றுநோயின் பாதிப்பு தீவிரம் அடையும்போது மார்பகத்தில் புண்கள் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கும். நோய் தீவிரமடையும்போது அது நுரையீரல், கல்லீரல், மூளை என மற்ற பாகங்களுக்கும் பரவி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மார்பகப் புற்றுநோயை வெல்வதற்கான முதல் படி!

மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை

ஒருவருக்குப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா என்பதை முன்கூட்டியே அறிவதற்கான ஒரே மருத்துவப் பரிசோதனை முறை, `ஜீன் டெஸ்ட்'. இதில் பிஆர்சிஏ1, பிஆர்சிஏ2 என இரண்டு ஜீன் பரிசோதனை முறைகள் இருக்கின்றன. பிஆர்சிஏ பாசிட்டிவாக இருந்து, மியூட்டேஷனில் மாற்றம் ஏற்படும்போது அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம். எப்போது இந்த மியூட்டேஷனில் மாற்றம் வரும் என்பதும் தெரியாது. இதற்கான ரத்தப் பரிசோதனை செலவும் அதிகமாகவே இருக்கும். மார்பகப் புற்றுநோய்க்கான ஜீன் இருப்பவர்களுக்கு மற்ற புற்றுநோய்களும் வரக்கூடும்.

மார்பகப் புற்றுநோய் முற்றி, ரத்தத்தின் மூலம் மூளை, கல்லீரல், நுரையீரல், முதுகெலும்பு என உடல் முழுவதும் பரவும்போது வலிப்பு வருவது, நினைவு இழப்பது, எலும்பு வலிமை குறைவது, இருமலுடன் ரத்தம் வெளியேறுவது, வயிற்று உப்புசம், மஞ்சள் காமாலை நோய் எனப் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். மேமோகிராம் பரிசோதனையின் மூலம் புற்றுநோய் பாதிப்பிருக்கிறதா என்பதைக் கண்டறியவும் உறுதிப்படுத்தவும் முடியும். புற்றுநோய்க்கான சிகிச்சையைப் பொறுத்தவரை, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் மார்பகத்தை அகற்றாமல் கட்டியை மட்டும் அகற்றி குணம் பெற முடியும்.

மார்பகப் புற்றுநோயை வெல்வதற்கான முதல் படி!

நோய் தீவிரமடைந்திருந்தால் மார்பகத்தை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதைத் தொடர்ந்து வழங்கப்படும் கீமோ சிகிச்சையின்போது, உணவு முதல் உடல் எடை வரை மருத்துவப் பரிந்துரையின்படி வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டும். கீமோதெரபி காலம் முடிந்து நோயிலிருந்து குணம் பெற்றுவிட்டாலும், வருடம் இருமுறை பரிசோதனை செய்துகொள்வது அவசியம். புற்றுநோய் செல்கள் மீண்டும் தோன்றியிருக்கின்றனவா, வளர்ச்சியடைந் திருக்கின்றனவா என்பதைக் கண்டறிய இது உதவும்.

தாய்ப்பாலூட்டாத தாய்மார்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. குழந்தை பிறந்த நேரத்தில், சில தாய்மார்களுக்குத் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கலாம். குழந்தையுடனான அரவணைப்பு, சத்தான உணவுகள் ஆகியவற்றால் அவர்கள் தாய்ப்பால் சுரப்புக்கான வழியைக் கண்டடைந்து பாலூட்ட வேண்டும். குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்குள்ளாக அவர்கள் பாலூட்டுவதை நிறுத்தக் கூடாது. அதேபோல, மார்பகப் புற்று நோய்க்கான பரிசோதனையை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செய்துகொள்வது நல்லது.