Published:Updated:

”அவர்கள் நம் வீட்டை சுத்தப்பட்டுத்துக்கின்றனர்; ஆனால் நாம்?!” #CleanYourHeart குறும்படம் உறைக்கும் உண்மை!

கழிவறை வசதி இல்லாததாலே, உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடூரங்கள் நடக்கின்றன என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு!

”அவர்கள் நம் வீட்டை சுத்தப்பட்டுத்துக்கின்றனர்; ஆனால் நாம்?!” #CleanYourHeart குறும்படம் உறைக்கும் உண்மை!
”அவர்கள் நம் வீட்டை சுத்தப்பட்டுத்துக்கின்றனர்; ஆனால் நாம்?!” #CleanYourHeart குறும்படம் உறைக்கும் உண்மை!

லக ஆண்கள் தினம் கடந்த நவம்பர் 19-ம் தேதி கொண்டாடப்பட்டது. அதே தினம் உலகக் கழிவறை நாளாகவும் இருந்துவிட, சமூக வலைதளங்களில் பலரும் இந்த இரண்டையும் வைத்து, மீம்ஸை உருவாக்கிக் கலாய்த்தனர். பல சமயங்களில் நாம் இப்படித்தான் ஒரு நாளோ அல்லது சம்பவமோ எதனை வலியுறுத்துகின்றது என்பதை உணராமல் காமெடிப் பதிவாகக் கடந்துவிடுகிறோம்.

ஆனால், இந்திய முழுவதும் கழிப்பறை சுகாதாரம் என்பது இன்றும் தொலைதூரக் கனவாக இருக்கும் அவலமான நிலையில், நாம் எத்தனை பேர் கழிப்பறைச் சுகாதாரத்தைப் பற்றித் தீவிரமாக உரையாடியிருக்கிறோம்? இப்படியான ஒரு சிந்தனையை நம்முள் தூண்டிவிடுகிறது, இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாகவே ஓடும் Clean your Heart என்ற குறும்படம்!

வீட்டில் அன்றாடம் தனக்கு இடப்பட்டிருக்கும் வேலைகளை முடித்துக்கொண்டு, கழிவறையிலிருந்து வெளிவருகிறார் அந்த வீட்டுப்பணியாளர். அப்போது, அங்கு அமர்ந்திருக்கும் இரண்டு குழந்தைகளுக்கு, அவர்களின் பாட்டி இனிப்பு கொடுக்கிறார். பணியாளருக்கும் கொடுக்கும்படி குழந்தைகள் கூற, அவருக்கும் பாட்டி கொடுக்கிறார். ஆனால், அந்தப் பணியாளர் கையை நீட்டும்போது, அவர் கையோடு தன் விரல்கள் பட்டுவிடாதபடி கையை உயர்த்தி, கிட்டத்தட்ட அந்த இனிப்பைத் தூக்கிப்போடுகிறார். 

``ஏன் பாட்டி அப்படிப் பண்றீங்க?!" என்று கேட்கும் குழந்தைகளிடம்,

``அவர் இப்போதுதான் கழிவறையைச் சுத்தம் செய்துவிட்டு வருகிறார். அவர் கை கழுவினாரா, இல்லையா என்று யாருக்குத் தெரியும்?” என்று முகம் சுளித்தபடிக் கூறுகிறார் பாட்டி . 

தர்மசங்கடத்தில் அங்கிருந்து நகர்கிறார் அந்த வீட்டுப் பணியாளர். இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அந்த வீட்டுப் பெண்மணியிடம், ``அக்கா, இரண்டு நிமிடங்கள் நான் கீழ போயிட்டு வந்துடுறேன்”, என்று கூறி செல்ல முயன்ற வீட்டுப் பணியாளரைத் தடுக்கிறார் அந்த வீட்டுப்பெண்.

``ஏன் கீழே போற? எப்பவும் இங்க தானே போவ“ என்று அந்த வீட்டுப்பெண் கேட்க, 

``அது வந்து... நான் வாஷ்ரூம்க்கு, பாட்டி இருக்காங்க!”, என்று தயங்கியபடிக் கூறுகிறார். 

``நீ இந்த வீட்டில், பாத்திரங்களைக் கழுவும்போது, துணிகளைத் துவைக்கும்போது, குழந்தைகளுக்காகச் சமைத்துக்கொடுக்கும்போது, கழிவறையை மட்டும் ஏன் நீ பயன்படுத்தக் கூடாது?” என்று பாட்டிக்குக் கேட்கும்படிக் கூறுகிறார் .

அதைக் கேட்டதும், வாடியிருந்த முகத்தில் புன்னகை மலர்கிறது அந்த வீட்டுப் பணியாளருக்கு! 

வீட்டுப் பணியாளர்களுக்குப் பெரும்பாலான வீடுகளில் அதைப் பயன்படுத்தவதற்கே அனுமதி கொடுப்பதில்லை. "இனியும் அந்தப் கொடுமையை நீங்கள் செய்யாதீர்” என்ற கருத்துடன் நிறைவடைகிறது இந்தக் குறும்படம்.

உலகம் முழுவதும் இருக்கும் பல பெண்களுக்கும், சுகாதாரமான கழிவறை என்பது இன்றும் சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கிறது. வரும் 2030-ம் ஆண்டுக்குள், எல்லா மக்களுக்கும் அதைச் சாத்தியப்படுத்த வேண்டும் என்பதே இந்தத் தினம் அனுசரிப்பதற்காக முக்கிய நோக்கம்.

இந்தியாவைப் பொறுத்தவரை 40% மக்களுக்குக் கழிவறை வசதி இல்லை. இந்தக் காரணத்தினாலேயே, உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடூரங்கள் நடக்கின்றன என்றது ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு. உலகம் முழுவதும், ஐந்தில் ஒரு பள்ளியில், போதிய கழிவறை வசதிகள் இல்லை. மாதவிடாய் காலத்தில் சிறுமிகளுக்கு இது மிகப்பெரிய பிரச்னை. மேலும், உலகம் முழுவதும் 900 மில்லியன் பள்ளிமாணவர்களுக்குக் கையைச் சுத்தப்படுத்திக்கொள்ளும் வசதி இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் டேட்டா அடுக்கிக்கொண்டே போகிறது. 

எந்த ஒரு சமூகப் பிரச்னையிலும், மிகுந்த கொடுமைகளுக்கு உள்ளாவது அடித்தட்டு மக்கள்தான். கழிவறைச் சுகாதாரத்திலும் அப்படிதான் நடக்கிறது என்று உறைக்கும் இந்தக் குறும்படத்தைப் பார்த்தாவது, நம் மனத்தைக் கொஞ்சம் சுத்தப்படுத்தி, நம் வீட்டைத்  தூய்மைப்படுத்துபவர்களுக்கு உரிய மரியாதை அளிப்போம். இது நமது பெருந்தன்மையும் அடையாளமல்ல, நமது முக்கியக் கடமை!