Published:Updated:

உழைத்துச் சாப்பிடத்தான் ஆசை! - கனிமொழி

உழைத்துச் சாப்பிடத்தான் ஆசை! - கனிமொழி
பிரீமியம் ஸ்டோரி
உழைத்துச் சாப்பிடத்தான் ஆசை! - கனிமொழி

நானும் பெண்தான்

உழைத்துச் சாப்பிடத்தான் ஆசை! - கனிமொழி

நானும் பெண்தான்

Published:Updated:
உழைத்துச் சாப்பிடத்தான் ஆசை! - கனிமொழி
பிரீமியம் ஸ்டோரி
உழைத்துச் சாப்பிடத்தான் ஆசை! - கனிமொழி

“ஹாய்! நான்தான் கனிமொழி” - எலும்பாக இருக்கும் தன் வலது கையைத் தூக்கி எங்களுக்கு ஹாய் சொன்னவர், அருகில் வந்து கை கொடுத்தார். ஒல்லியான தளர்ந்த தேகம், சிறிய தோற்றம். ஆனால், முகத்தை முழுமையாக நிறைத்திருந்தது புன்னகை.

அத்தனை திருநங்கைகளுக்குமான அதே வலிகள் நிறைந்த வரலாறுதான் கனிமொழிக்கும். 2010-ல் மும்பைக்குச் சென்று முழு திருநங்கையாக மாறியிருக்கிறார். மும்பையில் இவருக்கு வழிகாட்டிய திருநங்கையோ, இவரைக் கைதட்டிக் காசு கேட்டுச் சம்பாதித்து வரும்படி வற்புறுத்தியிருக்கிறார். குடித்துவிட்டு இவரை அடிப்பது, சூடு வைப்பது போன்ற கொடுமைகளையும் செய்திருக்கிறார்

“லோக்கல் ரயில்ல ரெண்டு பக்கமும் மாறி மாறி நடந்து காசு கேக்கணும். ஒரு நாள் விடாம இந்த வேலைக்குப் போணும். ஆனாலும், ‘ஏன் கம்மியா சம்பாதிச்சே’னு கேட்டு அடி பின்னிடுவாங்க. அதோடு, வீட்டு வேலைகளையும் செஞ்சு வைக்கணும். சீதோஷ்ண நிலை ஒப்புக்காம காய்ச்சல் வந்து அவதிப்பட்டப்பவும் வீட்டுக்கு அனுப்பல. நான் யார்கிட்டேயும் பேசிடக் கூடாதுன்னு போனையும் உடைச்சுட்டாங்க...” - கனிமொழியின் கண்களில் நீர் திரள்கிறது.

உழைத்துச் சாப்பிடத்தான் ஆசை! - கனிமொழி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐந்து வருடங்கள் சித்ரவதையை அனுபவித்த பிறகு சென்னைக்குத் தப்பித்து வந்திருக்கிறார் கனிமொழி. வீட்டில் அவரை சேர்த்துக்கொண்டாலும், கிட்டத்தட்ட ஒரு வருடம் கைதி போலத்தான் நடத்தி யிருக்கிறார்கள். ‘எனக்கு ஒரு பொண்ணா வாழத்தான் ஆசையா இருக்கு’ என்று கெஞ்சிய கனிமொழிக்கு மொட்டை அடித்ததோடு, ஏராளமான கட்டுப்பாடுகளையும் விதித்திருக் கின்றனர். வேறுவழியில்லாததால், மீண்டும் வீட்டைவிட்டு வெளியேறினார் கனிமொழி.

சில நாள்கள் வரையிலும் கனிமொழி தனக்கு அறிமுகமான திருநங்கைகளோடு சேர்ந்து ஒரு வீட்டில் இருந்திருக்கிறார். செலவுகளைக் கவனிப்பதற்காக வேறு வழியின்றி கைதட்டிக் காசு கேட்டுச் சம்பாதித்திருக்கிறார். பின்பு அந்த வீட்டை விட்டு வெளியேறி, கடைகளின் ஓரமாக இரவு படுத்துக்கொள்வது, பொது கழிப்பறைகளைப் பயன்படுத்திக்கொள்வது என கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் வாழ்ந்திருக்கிறார். அப்போது, இரவு நேரங்களில் பாலியல் தொந்தரவுகள் மெள்ள மெள்ள அவரை அத்தொழிலுக்குத் தள்ளியது.

“எதையும் எதிர்பார்க்காம திருநங்கை களுக்கு யாரு வேலை கொடுக்குறா? எங்க தேவைகளுக்கு நாங்க என்னதான் பண்றது?” என செவிட்டில் அறைந்ததுபோல கேட்கிறார் கனி.

``ஒருகட்டத்தில் எனக்கு முடி நிறைய கொட்ட ஆரம்பிச்சது. உடலில் மாற்றங்கள் தெரிஞ்சதும், உடனே நானே போய் ப்ளட் டெஸ்ட் செஞ்சு பார்த்தேன். அப்போதான் எனக்கு ஹெச்.ஐ.வி இருக்குறது தெரிய வந்துச்சு. உடனே பாலியல் தொழிலை விட்டேன். மறுபடியும் கைதட்டிக் காசு கேட்டுச் சம்பாதிக்க ஆரம்பிச்சேன். இந்த நேரத்துலதான் ‘ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பென்ஷன் தருது’ன்னு கேள்விப்பட்டேன். அந்த பென்ஷனை வாங்கணும்னா ஆதார் கார்டு வேணும். ‘எந்த அரசு ஆதாரங்களுமே இல்லாத உனக்கு எப்படி ஆதார் கார்டு வாங்கித்தர முடியும்?’னு என்.ஜி.ஓ கைவிரிச்சுட்டாங்க. அப்போ, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி ஜெயந்தி மேடம் எனக்கு உறுதுணையா இருந்தாங்க. ‘கனிமொழி’ன்னு என் பேர்ல ஆதார் கார்டு கெடச்சதுக்கு மொத காரணம் ஜெயந்தி மேடம்தான்” என்று மகிழ்ச்சியுடன் தன் ஆதார் அட்டையைக் காட்டுகிறார். எளிய மனிதர்களுக்கான அங்கீகாரம் கிடைத்த சந்தோஷம் அது.

இப்போது, கனிமொழி ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி-க்குத் தரப்படும் இலவச மாத்திரைகளை உட்கொள்கிறார். தொடர்ந்து இருமிக் கொண்டேதான் பேசுகிறார். “இப்போ எனக்கு பரவாயில்ல. ஆனா, எதிர்காலத்துல எனக்கு முடியலைனா என்ன பண்றதுன்னே தெரியல? ஒரு லோன் கிடைச்சா ஏதாச்சும் வியாபாரம் செஞ்சு சாப்பிட்டுப்பேன். ஏதோ ஒரு மூலையில குப்பை மாதிரி கெடக்குறதுல என்ன அர்த்தம் இருக்கு? அப்துல் கலாம்  ஐயா சொன்ன மாதிரி வாழணும்!” - மறுபடியும் அதே சிரிப்புடன் நிமிர்ந்து பார்க்கிறார்.

- நா.ஜோஸலின் மரிய ப்ரின்சி

படம் : க.மீனாட்சி