
நிவேதா பாரதி, மகப்பேறு மருத்துவர்ஹெல்த்
முதன்முறை கருத்தரிக்கும் பெண்களுக்குப் பிரசவவலி என்பது நடுக்கமான ஒரு நிகழ்வுதான். இந்த நடுக்கத்தோடு, பிரசவவலி பற்றிய குழப்பமும் இருக்கும். தினசரி செயல்பாடுகளை வைத்தே அது ஆரம்பகட்ட வலியா அல்லது மருத்துவமனைக்குக் கிளம்பவேண்டிய தருணமா என்பதைக் கண்டறிய ஆலோசனைகள் தருகிறார் மகப்பேறு மருத்துவர் நிவேதா பாரதி.

* பிரசவவலி, மாதவிடாய் நேரத்து வலிபோலத்தான் ஆரம்பிக்கும். வலியை உணரும் நேரத்தில் உங்களால் இயல்பாகக் கணவருடன், நண்பர்களுடன் பேச முடிகிறது என்றால், அது ஆரம்பகட்ட பிரசவவலிதான்.
* வலி வந்த பிறகும் உங்களால் நடக்க முடிகிறது என்றால், அது ஆரம்ப வலி.

* வலி இருக்கும்போது உங்களால் ஏதாவது சாப்பிட முடிகிறது, வாந்தி வரவில்லை என்றால், உடனே மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய அவசியமில்லை.
* தொலைக்காட்சியில் வடிவேலு நகைச்சுவைக்கு வாய்விட்டுச் சிரிக்க முடிகிறது என்றால், அது ஆரம்பகட்ட பிரசவவலியே.
* முக்கால் மணி நேரத்துக்கு ஒரு தடவை வலி வருகிறது என்றால், வலி தாங்கக்கூடிய அளவில்தான் இருக்கும். வெந்நீரில் குளித்துவிட்டு, மருத்துவமனைக்குக் கிளம்பிவிடலாம்.
* அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை வலி வருகிறது என்றால், அதுவும் ஆரம்ப வலியே. என்றாலும் இந்நேரம் நீங்கள் மருத்துவமனை சென்று சேர்ந்திருக்க வேண்டும்.

* 10 நிமிடங்களுக்கு ஒரு முறை வலி வருகிறது என்றால், உங்கள் ஜூனியர் சீக்கிரம் வரப்போகிறார் என்று அர்த்தம். இதோ இன்னும் சில மணித்துளிகளே... குவா குவா கேட்டுவிடும்!
குறிப்பு: இது வலியின் அடிப்படையில் மட்டுமே கூறப்பட்டுள்ள வழிகாட்டல். பனிக்குடம் உடைவது உள்ளிட்ட மற்ற சிக்கலான நிலையில் இருக்கும் கர்ப்பிணிகள், வலியை உணர ஆரம்பித்த உடனேயே மருத்துவரின் ஆலோசனை பெற விரைய வேண்டும்.
- ஆ.சாந்தி கணேஷ்