Published:Updated:

கேட்ஜெட்ஸ்... - குழந்தைகளின் சிந்திக்கும் திறனைக் குறைக்கும்!

கேட்ஜெட்ஸ்... - குழந்தைகளின் சிந்திக்கும் திறனைக் குறைக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்ஸ்... - குழந்தைகளின் சிந்திக்கும் திறனைக் குறைக்கும்!

தேவை அதிக கவனம்

கேட்ஜெட்ஸ்... - குழந்தைகளின் சிந்திக்கும் திறனைக் குறைக்கும்!

தேவை அதிக கவனம்

Published:Updated:
கேட்ஜெட்ஸ்... - குழந்தைகளின் சிந்திக்கும் திறனைக் குறைக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்ஸ்... - குழந்தைகளின் சிந்திக்கும் திறனைக் குறைக்கும்!

ரோக்கியம், இயற்கை வாழ்வியல் முறை, குழந்தை வளர்ப்பு எனப் பல மருத்துவ விழிப்பு உணர்வு வீடியோக்களைத் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்து வருபவர், காரைக்குடியைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் ஆஷா லெனின். அவரின் ஒவ்வொரு வீடியோவும் லட்சக்கணக்கில் பகிரப்படுகின்றன. ‘ஆஷா லெனின்’ என்ற அவருடைய முகநூல் பக்கத்துக்கு ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். ஆஷாவின் வெகு இயல்பான, தெளிவான பேச்சு, ‘தனக்குத் தெரிந்த விழிப்பு உணர்வு தகவல் மக்களுக்குச் சென்றடைய வேண்டும்’ என்ற அக்கறை... இவைதான் அந்த வீடியோக்களின் வெற்றிக்கு அடிப்படை. ஆஷாவிடம் பேசினோம்... 

உங்களைப் பற்றி..?

என் பூர்வீகம், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர். பிறந்ததிலிருந்து இப்போதுவரை முழுக்கவே இயற்கை வாழ்வியல்தான். டீ, காபி குடிச்சதில்லை. பாட்டில் டிரிங்ஸ், பாக்கெட் உணவுகள்னு எதுவும் சாப்பிட்டதில்லை. சில நேரங்களில் நுங்கும் கரும்புமே ஒருவேளை சாப்பாடாக ஆனதுண்டு. பெரும்பாலும் நடந்தோ, சைக்கிளிலோதான் பயணங்கள். நம்பமாட்டீங்க... மகப்பேறு தவிர்த்து இப்போவரை ஆஸ்பத்திரிக்கே போனதில்லை. சில காரணங்களாலே எம்.பி.பி.எஸ் படிக்கும் வாய்ப்பு தடை படவே, ஹோமியோபதியில் சேர்ந்தேன்.

கேட்ஜெட்ஸ்... - குழந்தைகளின் சிந்திக்கும் திறனைக் குறைக்கும்!

சமூக அக்கறை உங்க இயல்பா... இல்லை, வளர்த்துக்கிட்டதா?

எந்தத் துறைக்குப் போனாலும், மக்களுக்கு உதவுற மாதிரி என் பணியை அமைச்சுக்கணும்னு சொல்லித்தான் பெற்றோர் என்னை வளர்த்தாங்க. ஹோமியோபதி கல்லூரியில் சேர்ந்தப்போ தான், மக்களின் உடல்நலப் பிரச்னைகளோடு மருத்துவ வணிகம் எந்தளவுக்குக் கீழிறங்கி செயல்படுது என்பதை அறிந்து அதிர்ச்சியானேன். நம் உணவுமுறை மாறினதுதான் எல்லா ஆரோக்கியக் குறைபாடுகளுக்கும் காரணம் என்பதாலே, இயற்கை வாழ்வியல் விஷயங்களையும் தேடித்தேடிப் படிக்க ஆரம்பிச்சேன். தெரிஞ்சதை மத்தவங்களுக்குச் சொல்லவும் தொடங்கினேன். 2007-ம் வருஷம், காலேஜ் சீனியரான லெனின் முத்துராஜும் நானும் காதல் திருமணம் செய்துகிட்டோம். கணவரின் காரைக்குடி க்ளினிக்லேயே நானும் மருத்துவப் பணியைத் தொடங்கினேன். என் பேஷன்ட்களுக்கு மருந்துகளைவிட, ஆரோக்கிய வாழ்க்கை முறைகளையே முதன்மையா பரிந்துரைப்பேன்.

விழிப்பு உணர்வு வீடியோக்களைப் பதிவிட ஆரம்பித்தது எப்போது?


2015-ம் வருஷம் என் பேஷன்ட்டா ஒரு சிறுமி வந்தா. ஸ்கூல்ல அடிக்கடி பாத்ரூம் போனா டீச்சர் திட்டுறாங்கனு சிறுநீரை அடக்கப் பழகினதால, அவளுக்கு யூரினரி இன்ஃபெக்‌ஷன் ஏற்பட்டிருந்தது. சிறுநீரை அடக்குறது ரொம்பத் தப்பு. அதிலும் சிறுமிகள், இளம் பெண்களுக்கு இதனால் சிறுநீர்ப் பையின் தேக்கிவைக்கும் திறன் (bladder capacity) குறைய வாய்ப்பிருக்கு. இதனால பிற்காலத்துல அந்தப் பெண் சிரிச்சா, அழுதாகூட சிறுநீர் லீக் ஆக ஆரம்பிச்சிடும். இந்த அலெர்ட்டை எல்லோருக்கும் கொடுக்கணும்னு தோணுச்சு. அதை ஒரு வீடியோவாகப் பேசி, என் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவுசெய்தேன். அதை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பார்க்க, ‘நல்ல விஷயங்களை மக்களுக்குச் சொல்ல இது ஒரு நல்ல மீடியமா இருக்கே’னு   தொடர்ந்து வீடியோக்கள் அப்லோடு செய்ய ஆரம்பிச்சேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேட்ஜெட்ஸ்... - குழந்தைகளின் சிந்திக்கும் திறனைக் குறைக்கும்!

அன்றாடம் நான் பார்க்கும் ஆரோக்கியக் கேடுகள் பற்றிய மருத்துவத் தகவல்கள், மனநலம், குழந்தை வளர்ப்பு, தம்பதிகளுக்கிடையேயான உறவு, தன்னம்பிக்கை உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி இதுவரை 50-க்கும் அதிகமான வீடியோஸ் போட்டிருக்கேன். குறிப்பா, ‘குழந்தைகளுக்கு கேட்ஜெட்ஸின் கதிர்வீச்சு ஏற்படுத்தும் ஆபத்துகள்’, ‘பருவமடைந்த பெண் குழந்தைகளுக்குப் பச்சை முட்டை கொடுக்கக் கூடாது’, ‘தம்பதிகளுக்கு இடையேயான புரிந்துணர்வின்மை நீங்க’ என்று பல தலைப்புகளில் நான் வெளியிட்ட வீடியோக்கள், செம வைரல் ஆனது.

உங்க வீடியோக்களில், குழந்தை வளர்ப்பு முறை அதிகம் இடம்பிடிக்கிறதே...


பெரும்பாலான பெற்றோரின் குழந்தை வளர்ப்பு முறை தவறானதாக இருக்கிறது. ஒரு விஷயத்தைக் கேட்டுக்கேட்டுப் பழகி, கிரகிச்சு, உணர்ந்துதான்... அதைப் பற்றி ஒரு குழந்தை அதிகமாகப் பேச ஆரம்பிக்கும். ஆனால், அஞ்சு வயசுக் குழந்தையைப் பல மொழிகள் கத்துக்க வைக்கிறது எப்படி நியாயம்? ஒரு ரூமுக்கு குழந்தையை அழைச்சுட்டுப்போய், ‘லைட்டைக் காட்டு’னு சொல்றது தப்பு. அந்த ரூமுக்குக் குழந்தையைக் கூட்டிட்டுப்போய், ‘இருட்டா இருக்குதுல்ல. வெளிச்சத்துக்காக லைட் போடலாமா?’னு சொல்லிச் செய்தால் அந்தக் குழந்தைக்கு இருட்டுக்கும் வெளிச்சதுக்குமான வித்தியாசம் புரியும். அப்புறம் எதனால் லைட் எரியுதுங்கிறதுல தொடங்கி பல விஷயங்களைச் சொல்லிக்கொடுக்கலாம். இப்படி அந்தந்த வயசுக்குண்டான எல்லா விஷயங்களையும் குழந்தைக்கு இயற்கையான செயல்முறையுடன் சொல்லித்தரணும். பத்து வயசு வரை கேட்ஜெட்ஸ் சாதனங்களைக் கொண்டு குழந்தைகளை வளர்க்கவோ, அவற்றுடன் விளையாட விடவோ வேண்டாம். மீறிச் செய்வதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சியும், சிந்திக்கும் திறனும் குறையும். வீடியோ கேம்ல விளையாடி, தன் தேவைக்கு ஏற்ப வெற்றி தோல்விகளை நிர்ணயித்துக்கொள்கிற குழந்தைகளால், பிற்காலத்தில் சின்னத் தோல்விகளைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாம தவறான முடிவெடுக்கத் தோணும். எனவே, குழந்தைகளை நண்பர்களுடன் சேர்ந்து கிரவுண்டில் விளையாட விடணும். அதன்மூலம் அவங்க சின்னச் சின்ன தோல்வி, வெற்றி, விட்டுக்கொடுத்தல் உள்ளிட்ட விஷயங்களைக் கத்துக்கணும்.

இருக்கிறது ஒரு வாழ்க்கை. அதை ஆரோக்கியமா வாழுங்க; குழந்தைகளைச் சந்தோஷமா வளர்த்தெடுங்க!

- கு.ஆனந்தராஜ்

படங்கள் : எஸ்.சாய்தர்மராஜ்

வரும் முன் காக்க...

* சூரிய உதயத்துக்கு முன் எழுந்து சில அடிப்படை உடற்பயிற்சிகள் செய்யணும். 10 - 15 நிமிஷங்கள் காலை வெயிலில் நிற்கணும்.

* நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, ஒரு கைப்பிடி கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய ஒரு பெரிய நெல்லிக்காயுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைச்சு, அதை ஒரு டம்ளர் தண்ணீர்விட்டுக் கொதிக்கவிட்டு, கால் டம்ளருக்கு வற்றியதும் வடிகட்டிக் குடிக்கலாம். அல்லது தினமும் ஒரு பெரிய நெல்லிக்காயைச் சாப்பிட்டு வந்தாலே நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும்.

* குறைந்தபட்சம் 7 - 8 மணிநேரம் தூங்கணும். தூங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னரும், எழுந்த பின்னர் அரை மணி நேரம் வரையிலும் நிச்சயமா கேட்ஜெட் பயன்படுத்தக் கூடாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism