மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பொடிசுகளிடம் உஷாராக இருங்கள்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 10

பொடிசுகளிடம் உஷாராக இருங்கள்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 10
பிரீமியம் ஸ்டோரி
News
பொடிசுகளிடம் உஷாராக இருங்கள்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 10

தனசேகர் கேசவலு, குழந்தைகள்நல மருத்துவர்

ரு குழந்தை பிறந்ததிலிருந்து 10 மாதங்கள்வரை அந்தச் சின்ன உயிரை நாங்கள் ‘Infant’ (கைக்குழந்தை) என்று சொல்வோம். 11 மற்றும் 12-ம் மாதங்களில் இருக்கிற குழந்தையை ‘Toddler’ (தவழ்கிற குழந்தை) என்றும், பிறகு 18 மாதங்கள்வரைக்கும் அந்தக் குழந்தையை ‘Child’ (பெரிய குழந்தை) என்றும் குறிப்பிடுவோம். இந்த இதழில் 11-வது மாதத்திலிருந்து 18 மாதங்கள்வரை குழந்தைகளின் உடல் வளர்ச்சி எப்படியிருக்கும், அப்போது அவர்கள் என்னென்ன செய்வார்கள், இந்த மாதங்களில் அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், தீர்வுகள் ஆகியவற்றைப் பற்றிச் சொல்கிறேன்.

பொடிசுகளிடம் உஷாராக இருங்கள்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 10

தனித்துவம் வளரும்!

இந்த மாதங்களில் குழந்தைகளின்  அடுத்தகட்ட வளர்ச்சி மிக மிக வேகமாக இருக்கும். பாட்டுக்குத் தாளம் போடுவார்கள்; அவர்களுக்குத் தெரிந்த மழலை மொழியில் பாட்டுப் பாடுவார்கள்; டான்ஸ் ஆடுவார்கள். உங்கள் பிள்ளைகளின் முகம் இப்படித்தான் இருக்கும் என்கிற ஐடியா இந்த மாதங்களில்தான் உங்களுக்குத் தெளிவாகக் கிடைக்கும். தங்களைப் பற்றிய தனித்துவங்களை உங்களுக்கு வெளிப்படையாகக் காட்ட ஆரம்பிப்பார்கள் என்பதால், ‘என் பிள்ளை அமைதியான பையன்’, ‘என் பொண்ணு படுசேட்டை’ போன்ற கமென்ட்ஸ் இனி உங்கள் வீடுகளில் ஒலிக்க ஆரம்பிக்கும்.

பொடிசுகளிடம் உஷாராக இருங்கள்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 10



படிக்கட்டுகளில் ஏறுவார்கள்!

ஒன்றிலிருந்து ஒன்றரை வயதுக்குள் கைகளையும் கால்களையும் பயன்படுத்தி படிக்கட்டுகளில் ஏற ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால், இறங்கத் தெரியாமல், படிக்கட்டுகளின் உச்சியில் நின்றுகொண்டு `கீச் கீச்’ என்று அழ ஆரம்பிப்பார்கள். கீழே இறங்க வேண்டும் என்கிற பதற்றத்தில் சில பொடிசுகள் படிக்கட்டுகளில் உருண்டு விழுந்துவிடலாம் என்பதால் கவனமாக இருங்கள்.

குழந்தை நடக்கவில்லையா?

11-ம் மாதத்திலிருந்து 18 மாதங்களுக்குள் ஒரு குழந்தை நன்றாக நடப்பதும், தவழ்ந்தபடி படிக்கட்டுகளில் ஏறுவதும் இயல்பு. அதே நேரத்தில், இவற்றையெல்லாம் செய்யவில்லை என்றாலும் அச்சம் தேவையில்லை. ‘ஒரு வயது ஆகப்போகுது,  இன்னும் ஏன் பிள்ளை நடக்கலை?’ என்று பயப்படத் தேவையில்லை. சில குழந்தைகள் நடக்க ஆரம்பிக்க தாமதமாகலாம். என்றாலும், ஒரு குழந்தை ஒன்றிலிருந்து ஒன்றரை வயதுக்குள் நடக்கவில்லை என்றால், கீழ்க்காணும் அறிகுறிகளில் கவனம்வையுங்கள்.

பொடிசுகளிடம் உஷாராக இருங்கள்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 10

* குழந்தையின் அம்மாவோ அல்லது அப்பாவோ தாமதமாக நடந்திருக்கலாம்.

* குழந்தை ஒன்றரை வயதுவரை நடக்கவில்லை; அக்குளில் கைகொடுத்துத் தூக்கும்போது குழந்தையின் கால்கள் எக்ஸ் வடிவத்தில் ஒன்றோடு ஒன்று இணைகின்றன என்றால், அது மூளை வளர்ச்சியின்மைக்கான அறிகுறி.

* குழந்தை தவழ்கிறது... ஆனால், நடக்க இயலவில்லை என்றால், கால்கள் மற்றும் இடுப்பில் பிரச்னை இருக்கலாம். இடுப்பு எலும்பு சரியாக முதிர்ச்சி அடையவில்லை என்றாலோ, பிறப்பிலிருந்தே இடுப்பு எலும்பில் இருக்கிற எலும்புக்குழி சிறியதாக இருந்தாலோ குழந்தை ஒன்றரை வயதுவரை நடக்காமல் இருக்கலாம்.

* கால் தசைகளில் சக்தியில்லாததாலும் குழந்தைகள் நிற்க, நடக்க பயப்படுவார்கள். இதனால் நடப்பது தள்ளிப்போகலாம்.

தீர்வுகள்

* குழந்தைகளின் வளர்ச்சிக்கான மைல்கற்களைப் பற்றி குழந்தைகள்நல மருத்துவரிடம் கேட்டு, அதன்படி குழந்தைகளை உன்னிப்பாக கவனித்தாலே பாதிப் பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட முடியும். 

* குழந்தையைத் தூக்கினால் கால்களை எக்ஸ்போல வைத்தால், மூளை வளர்ச்சியை ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும்.

பொடிசுகளிடம் உஷாராக இருங்கள்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 10

* இடுப்பு எலும்பில் பிரச்னை இருக்கிறதா என்பதைக் கண்டறிய எக்ஸ்ரே தேவைப்படலாம்.

* இடுப்பு எலும்பு முதிராமல் இருந்தாலோ அல்லது கால் தசைகள் பலவீனமாக இருந்தாலோ சின்ன அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்தால் பின்விளைவுகள் ஏற்படுமா?

வீட்டுக்குள்ளேயே இருந்தால்கூட, இயற்கை எக்ஸ்ரே கதிர்கள் உங்கள் உடம்புக்குள் தினமும் போய்க்கொண்டுதான் இருக்கின்றன. அதைவிட மிகக் குறைந்த அளவில்தான் ரேடியேஷனை குழந்தையின் உடம்புக்குள் செலுத்தி, பிரச்னையைக் கண்டுபிடிக்கிறார்கள். பிரச்னைகளுக்கான தீர்வுகளாக ஸ்கேனும் எக்ஸ்ரேவும் இருக்கின்றன என்றால், பயன்படுத்திக்கொள்வதுதான் சரி.

இது திடீர் பிரச்னை!

அபூர்வமாக வருகிற பிரச்னை இது.  அந்தந்த மாதங்களுக்கான வளர்ச்சிகளையெல்லாம் சரியாகச் செய்துகொண்டே வருகிற குழந்தை, திடீரென்று வளர்ச்சியில் பின்னோக்கிச் சென்றுவிடும். அதுவரை செய்துவந்த செயல்களை நிறுத்திவிடும்; புதிதாகவும் எதையும் செய்யாது.  இதற்கு முக்கியமான காரணம் மரபணு சம்பந்தப்பட்ட நோயாக இருக்கலாம். உடனே மருத்துவரைப் பார்த்துவிடுங்கள்.

எனர்ஜி அதிகம் தேவைப்படும் வயது இது!

12 மாதங்களுக்குப் பிறகு குழந்தைகளுக்கு உணவுக் கட்டுப்பாடு எதுவும் கிடையாது. வளர்ச்சி வேகமாக இருக்கிற காலகட்டம் என்பதால், கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் கொடுங்கள். எனர்ஜி அதிகம் தேவைப்படும். உப்பு, சர்க்கரை அளவாகக் கொடுக்க ஆரம்பிக்கலாம். அசைவம் தரலாம். குழந்தைகளுக்கு நீர்த்தேவை அதிகம் இருக்கும். ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிப்பார்கள். மோர், பழச்சாறு, இளநீர் என்று எல்லாமும் கொடுக்கலாம். தாய்ப்பாலை நிறுத்திவிட்ட குழந்தை என்றால், கொழுப்புச்சத்து நீக்கப்படாத பசும்பாலோ அல்லது பவுடர்பாலோ ஒரு நாளைக்கு 400 மி.லிவரை கொடுக்க வேண்டும்.  வெண்ணெய், நெய் இரண்டும் குழந்தைகளுக்கு அதிக எனர்ஜி தருபவை. பசி நிறைய எடுக்கிற வயது இது. விதவிதமாக உணவு தரவில்லை என்றால், வயிற்றை நிரப்பிக்கொள்ள பாலை மட்டுமே பழக்கமாக்கிக்கொள்வார்கள்... கவனம்!

சளிப் பிரச்னை அதிகரிக்கலாம்!

தண்ணீரில் விளையாட ஆசைப்படுவார்கள். இதனால், சளிப் பிரச்னை வரும். எனவே, அதைத் தவிர்க்கவும். குழந்தைகளைக் குளிக்கவைத்த பிறகு, தலையையும் பாதங்களையும் ஈரமில்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

பிடிவாதம் பிடிப்பார்கள்!

அம்மா அல்லது பாட்டி என்று சில பேருடன் ஒட்டுதலாக இருப்பார்கள். அவர்கள் இல்லாத நேரத்தில் பயந்து அழுவார்கள். முக்கியமாக, ஒரு வயதிலிருந்தே பிடிவாதம் பிடிக்க ஆரம்பிப்பார்கள். குழந்தை கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்துச் செல்லம் பழக்கிவிட்டால், பின்னாளில் தாங்கள் நினைத்ததை எப்படி வாங்க வேண்டும் என்கிற சூட்சுமத்தைக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிற வயதும் இதுதான்... பொடிசுகளிடம் உஷாராக இருங்கள்!

(வளர்த்தெடுப்போம்...)

- ஆ.சாந்திகணேஷ், படங்கள்: மதன்சுந்தர்