
ஹெல்த்
தாம்பத்ய வாழ்க்கையில் கருத்தடைச் சாதனங்கள் அவசியமானவை. இந்தியாவின் பெரும் பிரச்னைகளுள் ஒன்று, மக்கள்தொகை அதிகரிப்பு. அதற்கு கருத்தடைச் சாதனங்கள்தான் தீர்வு. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், ‘இந்திய அளவில், தென்னிந்தியாவில் தான் கருத்தடைச் சாதனங்கள் குறைவாகப் பயன்படுத்தப்படுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் பற்றி ஆராய்ந்தபோது, ஆணுறை பயன்படுத்தும்போது அது சிதைந்துவிடுவதாக பலர் கூறியிருக்கிறார்கள்.

ஆணுறை சரியில்லாமல் போவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று சரியாகப் பயன்படுத்தாதது, இன்னொன்று ஆணுறையில் இருக்கும் தயாரிப்புக் குறைபாடுகள். ஆணுறையில் நுண்ணிய துளைகள் இருக்க வாய்ப்புண்டு.

தாம்பத்யத்தின்போது ஏற்படும் அதிக அழுத்தம் காரணமாக ஆணுறை கிழிந்துபோக வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட சூழலில் ஆணுறை சிதைந்துபோவதை கவனிக்க முடியாமல் போகும். இத்தகையச் சூழலில் பெண் கர்ப்பமாக அதிக வாய்ப்பு உள்ளது.
‘ஆணுறை பயன்படுத்துவதால் முழுமையான தாம்பத்யத்தை அனுபவிக்க முடியவில்லை’ என்பது போன்ற சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், சந்தைகளில் விற்கப்படும் ஆணுறைகள் மிகவும் மெலிதாக, அதிக வழவழப்புத் தன்மையுடன்தான் இருக்கின்றன. இத்தகைய ஆணுறைகளால் தாம்பத்யம் சிறக்கவில்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பொதுவாக, தொடர் தூண்டுதல் இருந்தால்தான் தாம்பத்யம் இனிக்கும். தம்பதிகளுக்கிடையிலான ஸ்பரிசம் குறைந்தால் அது ஆணுக்குச் சலிப்பை ஏற்படுத்திவிடும். நேரடியாகத் தாம்பத்யம் வைத்துக்கொள்ளாமல் வேறு சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அப்போது பெண்ணின் ஒத்துழைப்பு பல வகைகளில் தேவைப்படும். ஆணுறையைப் பயன்படுத்தும்போது, அதன் முனைப் பகுதியை அழுத்திப் பிடித்துக்கொள்வது அவசியம். இப்படிச் செய்வது, அதிலிருக்கும் காற்றை வெளியேற்றிவிடும். தாம்பத்யத்தின்போது ஆணுறை கிழிந்து போகாமலிருக்க உதவும். ஆணுறையில் சிறு துளைகள் ஏதும் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய அதில் காற்றை ஊதிப் பரிசோதிக்கலாம்.

ஆணுறை பயன்படுத்தும்போது, அதை மிக கவனமாகக் கையாள வேண்டும். கூர்மையான நகம் அதில்பட்டு கிழிந்துவிட வாய்ப்புள்ளது. அதேபோல், வழவழப்புக்காகக் கடைகளில் விற்கப்படும் பெட்ரோலியம் க்ரீம்களைப் பயன்படுத்தினால், வேதியியல் மாற்றம் ஏற்பட்டு ஆணுறை சேதமடைய வாய்ப்புள்ளது.
தாம்பத்யத்தின்போது இறுதிநிலையை எட்டியதும், மிகக் கவனமாக ஆணுறையின் மேல் பகுதியில் இருக்கும் வளையத்தைப் பிடித்துக் கொண்டு மெதுவாக அகற்ற வேண்டும். தரமான ஆணுறை பயன்படுத்தினால், தாம்பத்யத்தின்போது இன்பம் அதிகரிக்குமே தவிர குறையாது. கருத்தடைச் சாதனங்களை சரியாகவும் முறையாகவும் பயன்படுத்தினால் தாம்பத்யம் ஓர் எல்லையில்லா இன்பமே.
(இன்னும் கற்றுத் தருகிறேன்...)
- ஐ.கெளதம்