Published:Updated:

மாண்புமிகு மருத்துவர்கள்! - ஓலா ஓர்கொன்ரின்

மாண்புமிகு மருத்துவர்கள்! - ஓலா ஓர்கொன்ரின்
பிரீமியம் ஸ்டோரி
மாண்புமிகு மருத்துவர்கள்! - ஓலா ஓர்கொன்ரின்

சேவை - 4

மாண்புமிகு மருத்துவர்கள்! - ஓலா ஓர்கொன்ரின்

சேவை - 4

Published:Updated:
மாண்புமிகு மருத்துவர்கள்! - ஓலா ஓர்கொன்ரின்
பிரீமியம் ஸ்டோரி
மாண்புமிகு மருத்துவர்கள்! - ஓலா ஓர்கொன்ரின்

லாவின் குடும்பத்தினருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. விடுமுறைக்காக நைஜீரியாவுக்கு வந்த இடத்தில் ஓலாவின் இளைய சகோதரிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. ரத்தச்சோகையில் ஆரம்பித்த பிரச்னை, அவளது உடல்நிலையை மிகவும் மோசமாக்கியது. நைஜீரியாவின் அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கான எந்த வசதியும் இல்லை. உடனே அங்கிருந்து அவசரமாக வேறு நல்ல மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். சாலை வழி வேலைக்காகாது. ஏனென்றால், நைஜீரியாவின் 85 சதவிகிதச் சாலைகள் அகோரமானவை.

மாண்புமிகு மருத்துவர்கள்! - ஓலா ஓர்கொன்ரின்

வான் வழியில் சிறுமியை அழைத்துச் செல்வது மட்டுமே தீர்வு. ‘ஏர் ஆம்புலன்ஸ் எங்கே கிடைக்கும்?’ நைஜீரியாவில் அப்படி ஒரு வசதியே இல்லை. அருகிலுள்ள கேமரூன், கானா, காங்கோ எங்குமே ஏர் ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. அதாவது ஒட்டுமொத்த மேற்கு ஆப்பிரிக்காவிலேயே ஏர் ஆம்புலன்ஸ் என்ற வசதியே அப்போது இல்லை. தென் ஆப்பிரிக்காவில் ஏர் ஆம்புலன்ஸ் இருக்கிறது. ஆனால், ‘அது வந்து சேர ஐந்து மணி நேரம் ஆகும்’ என்றார்கள். ‘அதையாவது வரவழைப்போம்’ என்ற முயற்சியில் ஓலாவின் குடும்பத்தினர் ஈடுபட்டிருந்தபோது, அந்தச் சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமானது. அந்த பன்னிரண்டு வயதுச் சிறுமி பரிதாபமாக இறந்துபோனாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாண்புமிகு மருத்துவர்கள்! - ஓலா ஓர்கொன்ரின்ஓலாவின் குடும்பத்தினர் உடைந்து போனார்கள். “சரியான நேரத்தில் ஏர் ஆம்புலன்ஸ் மட்டும் கிடைத்திருந்தால் என் சகோதரியைக் காப்பாற்றியிருக்கலாமே... இவ்வளவு கேவலமான மருத்துவ வசதிகளுடன்தான் என் நாடு இருக்கிறதா... எனில், மருத்துவ வசதிக் குறைவால் என் சகோதரியைப்போல தினமும் எத்தனை உயிரிழப்புகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன?”

கண்ணீரில் கண்கள் மிதக்க, ஓலாவின் மனத்தில் வலிமிகுந்த இந்தக் கேள்விகள் மிதந்துகொண்டிருந்தன. இந்த அவலச் சூழலில்தான் ஓலா தன் மனத்தில் அந்த மாபெரும் லட்சியத்தை விதைத்துக்கொண்டார்.

ஓலா ஓர்கொன்ரின் (Ola Orekunrin), நைஜீரியாவைச் சேர்ந்தவர். சிறுவயதிலேயே அவளையும் அவளின் சகோதரியையும் இங்கிலாந்தைச் சேர்ந்த டோரீன் என்ற பெண் தத்தெடுத்து வளர்த்தார். இங்கிலாந்தின் லோவெஸ்டாஃப்ட் என்ற கடற்கரை நகரத்தில்தான் ஓலா வளர்ந்தார். கல்வி பயின்றார். கறுப்பினக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்ததால் டோரீன் தன் சமூகத்தில் சந்தித்த அவமதிப்புகள் ஏராளம். அதையெல்லாம் மீறி இரு குழந்தைகளையும் நல்ல நிலையில், கல்வியில் மிகச் சிறந்தவர்களாக வளர்த்து ஆளாக்கினார். அப்போதுதான் ஓலாவின் இளைய சகோதரியின் இறப்பு நேர்ந்தது.

மாண்புமிகு மருத்துவர்கள்! - ஓலா ஓர்கொன்ரின்

ஓலா, ஹல் யார்க் மெடிக்கல் ஸ்கூலில் மருத்துவத்தில் பட்டம் பெற்று, 21 வயதிலேயே இங்கிலாந்தின் இளம் மருத்துவர் என்ற பெருமையையும் பெற்றார். அங்கே ‘நேஷனல் ஹெல்த் சர்வீஸில்’ சுமார் பத்தாண்டுகள் மருத்துவராகப் பணியாற்றினார். தன் லட்சியத்துக்காகத் தன் சம்பளத்தில் 60 சதவிகிதம் வரை மிச்சம் பிடித்தார். புது உடைகூட வாங்காமல் எப்போதும் மருத்துவமனையில் சீருடையிலேயே திரிந்தார். ஹெலிகாப்டர் ஓட்டும் பயிற்சி எடுத்து பைலட் தகுதியை அடைந்தார். ஏர் ஆம்புலன்ஸ் குறித்தும், அதில் இருக்கவேண்டிய மருத்துவ வசதிகள், ஏர் ஆம்புலன்ஸில் செய்யவேண்டிய முதலுதவிகள், அவசர சிகிச்சைகள் குறித்தும் கற்றுக் கொண்டார்.

2007. ஓலா தன் தாய்நாடான நைஜீரியாவுக்குத் திரும்பினார். நைஜீரியாவின் லகோஸ் நகரில் முதல் ஏர் ஆம்புலன்ஸ் சேவை, ஓலாவால் ஆரம்பிக்கப்பட்டது. நிறுவனத்தின் பெயர், ‘ஃப்ளையிங் டாக்டர்ஸ்’ (Flying Doctors). மேற்கு ஆப்பிரிக்காவின் முதல் ஏர் ஆம்புலன்ஸ் சேவை அதுவே. வசதி உடையவர்கள், பெரிய நிறுவனங்கள், அரசு நிறுனங்கள் எல்லாம் ஓலாவின் ஏர் ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்தத் தொடங்கினர். அதோடு நிறுத்திக்கொள்ளாமல், எங்கெல்லாம் பெரும் விபத்து நிகழ்கிறதோ, எங்கெல்லாம் வன்முறை கட்டவிழ்க்கப்படுகிறதோ, எங்கெல்லாம் போர் மூளுகிறதோ, எங்கெல்லாம் எளிய மனிதர்களுக்கு ஏர் ஆம்புலன்ஸ் தேவைப்படுகிறதோ, அங்கெல்லாமும் ஓலாவும் குழுவினரும் பறந்து செல்ல ஆரம்பித்தார்கள். உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

மாண்புமிகு மருத்துவர்கள்! - ஓலா ஓர்கொன்ரின்

“ஒருமுறை இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பொன்றால் தாக்கப்பட்ட ஒரு மனிதரை ஏர் ஆம்புலன்ஸில் கொண்டு சென்றோம். அவரது முகத்தில் குண்டு பாய்ந்து பாதி முகமே சிதைந்து, காணாமல் போயிருந்தது. அவருக்கு இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணப்பெண் தன் வருங்காலக் கணவரை இந்தக் கோலத்தில் பார்த்தால் எவ்வளவு துடித்துப் போவாள்? உரிய நேரத்தில் அவரை லண்டனுக்குக் கொண்டு சென்றோம். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யும்போது நானும் கூடவே இருந்தேன். அவர் புதிய முகத்துடன் பிழைத்து எழுந்தார். அவருக்குத் திருமணமும் ஆகிவிட்டது.”

இப்படிச் சொல்ல ஓலாவிடமும் அவருடைய குழுவினரிடமும் ஏராளமான கதைகள் உண்டு.    20 ஏர் ஆம்புலன்ஸ். 47 ஊழியர்கள். அதில் ஓலா உள்பட 44 பேர் மருத்துவர்கள். பெரும்பாலானோருக்கு விமானத்தை இயக்கவும் தெரியும். சாலை விபத்தா, சுரங்கத்தில் விபத்தா, பெரிய கட்டடங்கள் கட்டும் பகுதியில் விபத்தா... அல்லது எங்கேனும் குண்டு வெடித்துவிட்டதா? கால் சென்டர் மூலமாகக் கிடைக்கும் தகவலில் இருந்து,  ஏர் ஆம்புலன்ஸை அனுப்பி வைக்கிறார்கள். ஆப்பிரிக்கக் கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளுக்குப் பறந்து பறந்து, ஆயிரக்கணக்கான உயிர்களை தினமும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாம் ஓலா என்ற அந்த ஒற்றை மனுஷியின் வலியிலிருந்தும் லட்சியத்திலிருந்தும் விளைந்த பயன்கள்.

இன்றைக்கு ஆப்பிரிக்காவின் வலிமையான இளம் தொழிலதிபர், மருத்துவ சேவையில் தன்னிகரற்ற இளம் மருத்துவர், உலகின் நம்பிக்கைக்குரிய மனுஷி போன்ற பல விருதுகளும் அங்கீகாரமும் ஓலாவுக்குக் கிடைத்திருக்கின்றன. ஓலாவுக்கு, தன் தேசமான நைஜீரியாவை, மேற்கு ஆப்பிரிக்காவை, ஒட்டுமொத்த ஆப்பிரிக்கக் கண்டத்தை மருத்துவ வசதிகள் நிறைந்ததாக மாற்ற வேண்டும் என்ற பெருங்கனவு இருக்கிறது. அதை நோக்கித்தான் இயங்கிக்கொண்டிருக்கிறார்.

‘ஓலா’ என்ற சொல்லுக்கு நைஜீரிய மொழியான ‘யொரூபா’வில் செல்வம் என்று பொருள். ஆம், ஓலா, நைஜீரியாவின் செல்வம்தான்..!

சேவை தொடரும்...

- ஓவியம்: பாலன்