Published:Updated:

மணப்பெண் ஆரோக்கியம்!

மணப்பெண் ஆரோக்கியம்
News
மணப்பெண் ஆரோக்கியம்

எக்ஸ்பர்ட்

`கன்னத்தில் குழி அழகு... கார்கூந்தல் பெண் அழகு’ - கவிஞன் ஒருவன் பெண்ணின் அழகை வியந்து எழுதிய கவிதை இது. அதுவும் மணப்பெண் என்றால் சொல்லவா வேண்டும்?

திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு மகிழ்வான தருணம். கல்யாணப் பேச்சு எடுக்கும்வரை உணவில் எந்த ஒரு கட்டுப்பாடுகளுமின்றி, தோழிகளுடன் சேர்ந்து `ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்’ என்றிருக்கும் பெண்கள், அழகு விஷயத்தில் அளவாகவே அக்கறை காட்டுவார்கள். திருமணப் பேச்சு தொடங்கியதும் வெள்ளரிக்காயில் தொடங்கி தக்காளி, கற்றாழை மற்றும் சிவப்பழகு க்ரீம்கள் என அழகாக இருப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். திருமணத்தின்போது அழகாக இருக்க ஆசை வருவது இயல்பே.

மணப்பெண் மெலிதான தேகத்துடன் அழகாக இருக்க, எடை அதிகரிக்காமல் இருக்க சில உணவுகளைத் தவிர்க்க வேண்டியிருக்கும். இது ஆரோக்கியத்துக்கும் உதவும். திருமணத்துக்கு முன் எந்த மாதிரியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்? டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன் பட்டியலிடுகிறார்.

மணப்பெண் ஆரோக்கியம்!

உப்பைக் குறையுங்கள்!

ஆரோக்கியம் பாதிக்கப்பட உப்பு மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. ஊறுகாய், தின்பண்டங்கள், சிப்ஸ், முறுக்கு, மிக்சர் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மூலம் நாம் அதிகளவில் உப்பை உட்கொள்கிறோம். நம்மையும் அறியாமல் உடலில் உப்புநீர் அதிகரித்து முகத்தில் வீக்கம், வயிறு உப்புசம் ஏற்படும். திருமணத்தின்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் எல்லாம் வாழ்நாள் பொக்கிஷம். இதிலிருந்து தப்பிக்க முடிந்தவரை வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளையே சாப்பிட வேண்டும். வெளியே சாப்பிடும் உணவில் சுவையூட்டுவதற்காக சாஸ், கெட்ச் அப் மற்றும் சோடியம் அதிகளவில் சேர்க்கப்படுவதால் உடலுக்கு மிகுந்த கெடுதலைத் தரும்.

கஃபைன் பாதிப்பு

நாம் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு கப் காபி பருகும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறோம். இதனால் காபியில் உள்ள கஃபைன் உடலில் அதிகப்படியாகச் சேர்ந்து `டியூரிட்டிக்’ என்ற சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் தூக்கமின்மை ஏற்படும். தூங்கும் நேரம், எழும் நேரம் என எல்லாமே பாதிக்கப்படும். அத்துடன் தூக்கமின்மையால் வரக்கூடிய அனைத்துப் பிரச்னைகளும் மெதுவாக வந்து சேரும். அதனால், காபிக்குப் பதிலாக இளநீர், நன்னாரி சர்பத், ஃப்ரெஷ் ஃப்ரூட் ஜூஸ், க்ரீன் டீ, லெமன் வாட்டர், கற்றாழை ஜூஸ், நெல்லிக்காய் ஜூஸ், துளசி கசாயம் போன்றவற்றை எடுத்துக்கொள்வதால் தூக்கமின்மையில் இருந்து காத்துக் கொள்ளலாம். உடல் வறட்சியாகாமலும் பாதுகாக்கலாம்.

குளூட்டன் அதிகமுள்ள உணவுகளைத் தவிருங்கள்

நாம் சாப்பிடும் சில உணவுகள் நம் உடலுக்கு ஒப்புக்கொள்ளாது. குறிப்பாக குளூட்டன் (Gluten) அதிகம் நிறைந்துள்ள கோதுமை, ஓட்ஸ், பார்லி, சிறுதானியங்கள், இவற்றைக்கொண்டு தயாரிக்கப்பட்ட மல்டிகிரைன் ஆட்டா, குக்கீஸ், பிரெட், பிஸ்கட்ஸ், ரஸ்க் மற்றும் பால் சம்பந்தப்பட்ட உணவுகளை உட்கொள்கிறோம். இதனால் உணவு செரிக்காமல் ஏப்பம், வாய்வுத் தொல்லை, வயிறு உப்புசம், வயிற்றுப்போக்கு போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். இவற்றைச் சாப்பிடுவதால் உங்கள் இனிமையான நாள்களில் உடல் சோர்வுற்று, புத்துணர்ச்சியின்றி இருப்பீர்கள். குளூட்டன் அல்லாத அமரந்த், குயினோ (quinoa), பாசிப்பருப்பு, உலர் பழங்கள், நட்ஸ் போன்ற உணவை எடுத்துக்கொள்வதால் சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கலாம்.

அதிக தேநீர் குடிப்பதைத் தவிருங்கள்!

 தேநீர் பலரது உற்சாகப் பானமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு கப் டீ குடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகப்படியாகத் தொடர்ந்து டீ குடித்தால் இரும்புச்சத்தை நம் உடலில் சேரவிடாமல் ரத்தசோகையை ஏற்படுத்திவிடும். இதைக் கவனிக்காவிட்டால் திருமண நாளன்று உடல் சோர்ந்து, முகம் பொலிவிழந்து, பதற்றத்துடன் இருப்பீர்கள்.

எண்ணெயில் வறுத்த உணவுகள் வேண்டாம்!

எண்ணெயில் நன்கு பொரித்த, வறுத்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அரிசி தவிடு எண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் செக்கு எண்ணெய்களான கடலெண்ணெய், நல்லெண்ணெய் போன்ற எண்ணெய்களைப் பயன்படுத்தும்போது உடலிலுள்ள ரத்தச் சர்க்கரை அளவை நீண்ட காலத்துக்குக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

தூக்கம் அவசியம்!

அழகான உடல்வாகு, ஆரோக்கியமான எடையைப் பராமரிக்க முறையான தூக்கம் அவசியம். இது உங்கள் உடலில் அட்ரினல் சுரப்பியால் உருவாகும் `கார்டிசோல்’ ஹார்மோனைச் சமச்சீராக வைத்திருக்க உதவும். `கார்டிசோல்’ ஹார்மோனின் அளவு அதிகரிக்கவோ, குறையவோ நேரிட்டால் தூக்கமின்மை மட்டுமல்லாமல் பசியின்மையும் ஏற்படும். இதனால் புத்துணர்ச்சியின்றி மந்தமான நிலைக்கு உள்ளாக நேரிடும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மணப்பெண் ஆரோக்கியம்!

மன அழுத்தத்தால் சில பிரச்னைகள்!

திருமணமாவதற்கு முன் சிலருக்கு ஒருவித பதற்றமும் மன அழுத்தமும் ஏற்படும். அப்போது உணவு விஷயத்தில் அதிக அக்கறையின்றி இருப்பதால் பருமன் அதிகரிக்க வாய்ப்புள்ளது (நிறைய உணவுகளை உண்பதால் மட்டுமல்ல; உணவு உண்ணாமல் இருந்தாலும்கூட எடை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது). திடீரென பருமனாவதால் கடைசி நேரத்தில் திருமண உடைகள் ஃபிட் ஆகாமல் போகக் கூடும். அதனால், அதிக கலோரி கொண்ட உணவுகளைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உண்பது நல்லது. முட்டை உள்ளிட்ட புரோட்டீன் நிறைந்த உணவுகளையும் சூப், சாலட், காய்கறி பொரியல், கூட்டு, தயிர் பச்சடி, ஃப்ரூட்ஸ், நட்ஸ் போன்றவற்றை உண்பது நல்லது.

உண்ணும் உணவில் கவனம்!

நாம் உட்கொள்ளும் உணவின் அளவு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதன்விளைவாக நமக்குத் தெரியாமலேயே அளவுக்கு அதிகமாக, கலோரிகள் நிறைந்த உணவுகளை உட்கொள்கிறோம். இதை எப்படித் தவிர்ப்பது? சாப்பிடும்போது, சிறிய தட்டுகளைப் பயன்படுத்தினால் சாப்பிடும் அளவு குறையும். இதனால் நீங்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதையும் கண்காணிக்க முடியும்.

பதப்படுத்தப்பட்ட, சுத்திகரித்த உணவுகளைத் தவிர்க்கவும்!

இந்தியாவில் நடைபெறும் திருமணங்கள் பொதுவாக ஆடம்பரமானவை. பெரும்பாலும் திருமணத்தையொட்டி நடக்கும் பல்வேறு சம்பிரதாயங்கள் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு முன்பே தொடங்கிவிடுகின்றன. அப்போது பல்வேறுவிதமான இனிப்புகள், சாக்லேட்டுகள் மற்றும் கொழுப்புகள் நிறைந்த உணவுகள் பரிமாறப்படும். ஆனால், நாம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நமக்குப் பிடித்த உணவு என்று அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் திருமண நாளில் முகம் வீங்கியும், தலைவலி, மலச்சிக்கல், வயிறு உப்புசம் மற்றும் நெஞ்செரிச்சலில் சிக்கவும் நேரிடும்.

தேவைப்பட்டால் முறையாகத் தேர்ச்சி பெற்ற ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெற்று, அவரால் பரிந்துரைக்கப்பட்ட உணவுகளை உட்கொள்வது நல்லது.

சரியான உணவைத் தேர்ந்தெடுங்கள்!

1. இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், சிறுதானியங்கள், கீரை வகைகளைச் சாப்பிடுங்கள். நீங்கள் உண்ணும் உணவில் பாதியளவு காய்கறிகள், கால் பகுதி பயறு வகைகள், மீதமுள்ள கால் பகுதி சாதம் அல்லது கம்பு, கோதுமையில் செய்த உப்புமா, ரொட்டி வகைகளைச் சாப்பிடலாம். புரோட்டீன் சத்துக்கு மாமிசம், பனீர், மற்றும் பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

2. உணவில் முழு தானியங்கள், ஃப்ரூட்ஸ், நட்ஸ், மாமிசம், காய்கறிகள், கீரைகள், மீன் மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றைக் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.

3. தூங்குவதற்குமுன் இயற்கையான முறையில் உருவான சீமை சாமந்திப் பூ (chamomile), லாவண்டர் (lavendar) தேநீர் குடிப்பது உடல்நலத்துக்கு ஏற்றது.

4. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் போன்ற மாவுச்சத்து உணவுகளைத் தவிர்க்கவும்.

5. தூங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பு கஃபைன் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும்.

-  வெ.அன்பரசி

* தவறாமல் செய்யவேண்டியவை!

1. தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம்.

2.  தினசரி 7 முதல் 8 மணிநேரம் தூக்கம் அவசியம். இரவு 10 மணி முதல் காலை 5.30 மணி வரை உடலைச் சீரமைத்துக்கொள்ள இதுவே சரியான நேரம்.