
தனசேகர் கேசவலு, குழந்தைகள்நல மருத்துவர்
ஒரு குழந்தையின் முதல் 1,000 நாள்கள், அதன் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவை என்று இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே சொன்னேன் நினைவிருக்கிறதா அம்மாக்களே..? ஒரு குழந்தை கருவில் உருவான முதல் நாளிலிருந்து குழந்தையின் இரண்டாவது வயதுவரைக்கும் இருக்கிற நாள்களைத்தான், `முதல் 1,000 நாள்கள்’ என்று சொல்கிறோம். அந்த 1,000 நாள்களின் இறுதிச்சுற்றுக்குக் கிட்டத்தட்ட வந்துவிட்டோம். இந்த நேரத்தில் உங்கள் குழந்தைகளுக்குத் தருகிற உணவுகளில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் நீங்கள். அதைப் பற்றித்தான் இந்த இதழில் பேசப் போகிறேன். அதற்கு முன்னால், ஒன்றரை வயதிலிருந்து ஒன்றே முக்கால் வயதுவரை ஒரு குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும், இந்த வயதில் அவர்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்படுமா என்பதைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன்.

வளர்ச்சி எப்படி இருக்கும்?
* படிக்கட்டுகளில் நான்கு கால் பாய்ச்சலில் ஏற ஆரம்பிப்பார்கள், கீழே இறங்கி வரத் தெரியாமல் முழிப்பார்கள் என்று சென்ற இதழிலேயே சொல்லியிருந்தேன் அல்லவா? அவையெல்லாம் இன்னமும் அதிகரிக்க ஆரம்பிக்கும். அவர்கள் உயரத்துக்கு கைக்கு எட்டிய தூரத்திலிருக்கிற பொருள்களையெல்லாம் கீழே இழுத்துப் போடுவார்கள்; சிலவற்றை உடைப்பார்கள். உங்கள் ஸ்மார்ட்போன் கையில் கிடைத்தால் அதையும் கீழே விட்டெறிந்து, உடைத்து ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். அதனால், விலை அதிகமான பொருள்களை இந்த வாண்டுகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ளவேண்டியது உங்கள் பொறுப்பு.
* ஒன்றரை வயதுக்கு மேல், `தத்தித் தாவுகிற வயது’ என்று சொல்வோம். அந்தளவுக்கு இப்போது குழந்தைகளின் நடவடிக்கைகள் வேகமாக இருக்கும். கால்கள் தரையில்படுகின்றனவா என்பதே தெரியாமல் சுற்றித்திரிவார்கள். நடப்பதற்கும் ஓடுவதற்கும் ஆசைப்படுவார்கள். இதனால் அடிக்கடி கீழே விழுந்து காயம்பட்டுக்கொள்வார்கள். சில நேரங்களில் அவர்கள் வேகத்துக்கு ஓடிப்போய் நம்மால் பிடிக்க முடியாமல்கூட போகலாம். இடுப்பில் தூக்கிவைத்துக்கொண்டாலும் நழுவி நழுவி ஓடிவிடுவார்கள்.
* இருட்டைக் கண்டு பயப்படுவது, அந்நிய ஆள்களைக் கண்டால் பயப்படுவது என்றிருந்த குழந்தைகள் அவற்றிலிருந்தெல்லாம் மீண்டு வர ஆரம்பிப்பார்கள். அந்நியர்களைப் பார்த்தால் கண்ணோடு கண் நோக்கிப் பார்த்துச் சிரிக்க ஆரம்பிப்பார்கள்.

* மழலையில் பேச ஆரம்பிப்பார்கள். சில குழந்தைகள் மழலையையே ஓரளவுக்குத் தெளிவாகப் பேசுவார்கள். பெருவாரியான பொடிசுகளின் மழலையை அவர்களின் அம்மாக்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.
* `ஒன்றே முக்கால் வயசாகிவிட்டதே’ என்று கழிவறைப் பயிற்சி கொடுக்க ஆரம்பிக்காதீர்கள். இது கழிவறைப் பயிற்சிக்கான வயது அல்ல என்பதுதான் மருத்துவ உண்மை. `இல்லை, பயிற்சிகொடுத்தேதான் தீருவோம்’ என்று அடம்பிடித்துச் செய்தீர்கள் என்றால், பிள்ளைகளுக்கு உங்கள் மேல் எரிச்சல்தான் உண்டாகும்.

* பற்பசை விளம்பரங்களில் காட்டுவதுபோல, உங்கள் செல்லத்துக்கு தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, சித்தப்பா, சித்தி என்று ஆளாளுக்கு செல்லம் கொடுக்க ஆரம்பிப்பார்கள். கடைக்குத் தூக்கிக்கொண்டு போய் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுப்பார்கள். விளைவு, நாம் எது கேட்டாலும் அது கிடைக்கும் என்று குழந்தைகள் புரிந்துகொள்வார்கள். ஒன்றரை வயதுவரை அடம்பிடிப்பதன் ஆரம்பநிலையில் இருந்தவர்கள், இனிமேல் பிடிவாதம் பிடிக்க ஆரம்பிப்பார்கள். அவர்கள் பிடிவாதத்துக்கு ஒரு தடவை இணங்கிப் போய்விட்டீர்கள் என்றால், மறுபடி மறுபடி பிடிவாதம் பிடித்துக் காரியம் சாதிக்க ஆரம்பிப்பார்கள். பின்னாளில் இதையே பழக்கமாக்கிவிடுவார்கள், ஜாக்கிரதை.

* இந்த வயதிலிருந்து குழந்தைகளுக்கு பகல் தூக்கம் குறைய ஆரம்பிக்கும். அரை மணி நேரம் தூங்கினால்கூட, புத்துணர்ச்சியாகி விளையாட ஆரம்பித்துவிடுவார்கள். இதை அப்படியே விட்டுவிடுங்கள். உங்களின் வேலை கெடுகிறது, பகல் தூக்கம் கெடுகிறது என்று குழந்தைகளை வற்புறுத்தித் தூங்கவைக்காதீர்கள். அப்படிச் செய்தால், தினமும் நள்ளிரவில்தான் தூங்க ஆரம்பிப்பார்கள். இதனால், உங்களின் இரவுத் தூக்கம் கெடும்.
என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
ஆரோக்கியமான குழந்தைகளுக்கு இந்த வயதில் சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்னைகள்தான் ஏற்படும். காய்ச்சல் என்றால் நான்கு நாள்கள் முதல் ஒரு வாரத்தில் சரியாகிவிடும். வயிற்றுப்போக்கு என்றால், மூன்று நாள்களில் சரியாகிவிடும். இதைத் தாண்டி வேறு பிரச்னைகள் பொதுவாக ஏற்படாது.
என்னென்ன சாப்பிடக் கொடுக்க வேண்டும்?
1,000 நாள்களின் இறுதிச்சுற்றில் உங்கள் குழந்தை இருக்கிறான்/ள் என்பதால், நுண் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை அதிகம் கொடுங்கள். இந்த நுண்ணூட்டச் சத்துகள் வேகாத காய்கறிகள், பழங்கள், ஆவியில் வேகவைத்த கிழங்குகள், முளைகட்டிய தானியங்களில் அதிகமாக இருக்கும். உலர் பருப்புகளை அரைத்து, சட்னியுடன் கலந்து கொடுங்கள். காய்ச்சிய பாலில் சிவப்பு அவலை ஊறப்போட்டுக் கொடுங்கள். சர்க்கரைவள்ளிக்கிழங்கை இட்லிப் பாத்திரத்தில் வேகவைத்துக் கொடுங்கள். வேர்க்கடலை உருண்டை, எள் உருண்டை, பொட்டுக்கடலை உருண்டை, பேரீச்சம் பழம் கொடுங்கள். காலை வேளைகளில் முளைகட்டிய பச்சைப் பயறு கொடுங்கள். பிள்ளைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை இந்த உணவுகள் மிக பலமானதாக்கும். இந்த எதிர்ப்பு சக்திதான் பின்னாளில் ஏற்படும் உயிர்க்கொல்லி நோய்களிடமிருந்துகூட உங்கள் குழந்தையைக் காப்பாற்றும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
(வளர்த்தெடுப்போம்...)
- ஆ.சாந்திகணேஷ், படங்கள்: மதன்சுந்தர்