Published:Updated:

கருப்பையை நீக்கிய பின்பும் ஆரோக்கியமாக வாழ... மகப்பேறு மருத்துவரின் அறிவுரைகள்

கருப்பையை நீக்கிய பின்பும் ஆரோக்கியமாக வாழ... மகப்பேறு மருத்துவரின் அறிவுரைகள்
கருப்பையை நீக்கிய பின்பும் ஆரோக்கியமாக வாழ... மகப்பேறு மருத்துவரின் அறிவுரைகள்

``கருப்பையை எடுத்துவிட்டால் வாழ்க்கையே போய்விடும் என்கிற பயமுறுத்தல்களுக்கு காது கொடுக்காதீர்கள்.''

ருப்பையை நீக்கி விட்டால், உடம்பு வலுவிழந்து விடும். எலும்புகள் பலவீனமாகி விடும். ஆஸ்டியோபோராசிஸ் வந்து விடும். இவையெல்லாம்தான், கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்களுக்கு, மற்றவர்களால் சொல்லப்படுகிற தகவல்கள் அல்லது பயமுறுத்தல்கள். வேறு வழியில்லாமல் கருப்பை நீக்க சிகிச்சை செய்துகொண்ட பெண்கள், மேலே சொன்ன பலவீனங்களைச் சந்தித்தே ஆக வேண்டுமா, மருத்துவம் என்ன சொல்கிறது, மகப்பேறு மருத்துவர் வாணி ஷ்யாம் சுந்தரிடம் கேட்டோம். 

``இது வயதைப் பொறுத்த விஷயம். மெனோபாஸ் வருகிற வயதில், அதாவது 45 வயதிலிருந்து 55 வயதுக்குள் இருப்பவர்களுக்குக் கருப்பையை நீக்கினால், அவர்கள் ரொம்பவும் கஷ்டப்படுவதில்லை. ஆனால், 45 வயதுக்கு முன்னால், அதிக ரத்தபோக்கு அல்லது கருப்பையில் கட்டி காரணமாக கருப்பையை நீக்கினால், அவர்களில் பலரும் எலும்பு பலவீனம், வியர்த்து வழிதல், படபடப்பு, உடல் சோர்வு, சுற்றுப்புறம் சத்தமாக இருந்தால் எரிச்சல் வருவது, வேலை செய்ய விருப்பமில்லாமல் இருப்பது, தலைவலி, உடம்பு சூடாகுதல் என்று எக்கச்சக்க பிரச்னைகளை சந்திக்கிறார்கள். 

இதற்கெல்லாம் காரணம், அது நாள்வரை கருப்பையினால் உடலுக்குக் கிடைத்து வந்த ஈஸ்ட்ரோஜன், புரொஜஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன்கள்  திடீரெனக் கிடைக்காமல் போவதும், அதன் காரணமாக சம்பந்தப்பட்ட பெண்களின் உடல் தடுமாறிப் போவதும்தான். தவிர, கருப்பைபை நீக்கிக் கொண்ட பெண்களுக்கு ஏற்கெனவே நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகியவை இருந்திருந்தால், அவை  இந்த நேரத்தில் இன்னும் அதிகமாகும். இவையெல்லாமே கருப்பை நீக்க அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள் சந்திக்கிற பிரச்னைகள். இதை மருத்துவரின் உதவியுடன் சம்பந்தப்பட்ட பெண்கள் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டால், சமாளித்து விடலாம்'' என்றவர், அதற்கான வழிமுறைகளையும் சொன்னார்.  

``கர்ப்பப்பையை எடுக்கும்போது சினைப்பைகளை (சிஸ்ட் இல்லாமல் இருந்தால்) மட்டும் எடுக்காமல் அப்படியே விட்டுவிடுவோம். இப்படிச் செய்வதால், மேலே சொன்ன பிரச்னைகள் அவர்களுக்கு வராமலும் போகலாம். இது முதல் வழி.

ஒரு பெண்ணுக்கு கருப்பையை எடுத்துவிட்டால், 20 நாள்கள் வரைக்கும் அவருக்கு எந்தவித பிரச்னைகளும் வராமல் இருக்கிறதா என்று கண்காணிப்போம். `பேஷன்ட் நான் நல்லா இருக்கேன் டாக்டர்' என்று சொல்லிவிட்டால் ஓகே. அதற்குப் பதில், அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்களுக்கு வியர்த்து வழிதல், படபடப்பு, உடல் சூடாகுதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் ஹார்மோனல் ரீ பிளேஸ்மென்ட் தெரபி என்ற சிகிச்சையைத் தருவோம். கூடவே சப்போர்ட்டிவ் தெரபியாக சத்து மாத்திரைகளையும் தருவோம். இதனால், தனக்கு ஏற்பட்ட  உடல் பிரச்னைகளிலிருந்து மெள்ள மெள்ள மீண்டு விடலாம். இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு மருத்துவ உண்மையைச் சொல்கிறேன்.

கருப்பையில் இருக்கிற ஹார்மோன்கள்தான், நம் உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் அத்தியாவசிய சத்துகளை டெபாசிட் செய்து வைக்கும். கருப்பையை எடுத்து விடுவதால், ஹார்மோன்கள் திடீரெனக் குறையும். இதனால், அதுநாள் வரை ஹார்மோன்கள் பிடித்து வைத்த அத்தியாவசிய சத்துகளும் நம் உடலிலிருந்து மள மளவெனக் குறைய ஆரம்பிக்கும். சத்துகள் குறைவதால், எலும்பு பலவீனம் வருவதற்கும், ஏற்கெனவே எலும்புகள் பலவீனமாக இருந்தவர்களுக்கு இந்தப் பிரச்னை அதிகமாகவதற்கும் வாய்ப்பிருக்கிறது என்று ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன. அதனால்தான் மூட்டுவலி, உடல் வலி, உடல் சோர்வு என்று பெண்கள் பாடாய்படுவார்கள். ஆனால், இதற்கும் நீங்கள் பயப்படத் தேவையில்லை என்பதுதான் என் கருத்து. 

கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு, எலும்புகள் வலுவாக இருக்க கால்சியம் மாத்திரைகளையும் பரிந்துரைப்போம். ஆனால், சில மாதங்கள் கழித்து இந்த மாத்திரைகளை படிப்படியாகக் குறைத்து நிறுத்திவிடுவோம். அந்தக் காலகட்டத்துக்குள் உடம்பு தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றபடி அட்ஜஸ்ட் ஆகிவிடும். அதனால், வாழ்க்கை முழுக்க கால்சியம் மாத்திரை சாப்பிட வேண்டிய அவசியமில்லை. தவிர, நடைப்பயிற்சி, யோகா போன்ற எலும்புகளை வலுவாக்கும் உடற்பயிற்சிகள், சத்தான உணவுகள் என்று உங்கள் உடலைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.  

கடைசியாக, கருப்பையை எடுத்துவிட்டால் வாழ்க்கையே போய்விடும் என்கிற பயமுறுத்தல்களுக்கு காது கொடுக்காதீர்கள். கருப்பையை நீக்கி விடுவதால் சிலர் சுகவீனப்படுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், எல்லோருக்குமே அது நிகழ வேண்டும் என்கிற கட்டாயமில்லை. பிரச்னை வராது என்று நினையுங்கள், வராது'' என்று முடித்தார் டாக்டர் வாணி. 

அடுத்த கட்டுரைக்கு