Published:Updated:

``எனக்கு அந்தத் தாயோட வலி புரியும். ஏன்னா நானும்...'' - ஹெச்.ஐ.வி பாதித்த பெண்ணுக்காக ஆதங்கப்படும் கெளசல்யா

``சாத்தூர் கர்ப்பிணிப் பொண்ணோட விஷயத்துல நாம எல்லோருமே குழந்தையைத் தாண்டி பாதிக்கப்பட்ட அந்த அம்மாவைப் பற்றி அதிகமாகவே சிந்திக்கணும். குழந்தை பிறந்ததுக்குப் பிறகு அவருக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு. அதை அரசாங்கமும் இந்தச் சமூகமும்தான் சரியாக அமைச்சுக் கொடுக்கணும்.”

``எனக்கு அந்தத் தாயோட வலி புரியும். ஏன்னா நானும்...'' - ஹெச்.ஐ.வி பாதித்த பெண்ணுக்காக ஆதங்கப்படும் கெளசல்யா
``எனக்கு அந்தத் தாயோட வலி புரியும். ஏன்னா நானும்...'' - ஹெச்.ஐ.வி பாதித்த பெண்ணுக்காக ஆதங்கப்படும் கெளசல்யா

"குழந்தை... குழந்தை... குழந்தை. எல்லோரும் குழந்தைக்கு ஹெச்ஐவி பரவாமல் தடுப்பதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்களே! மருத்துவர்களும் அரசாங்கமும் மாறி மாறி குழந்தையைக் காப்பாற்றப் போராடுகிறார்களே! வயிற்றிலிருக்கும் சிசுவுக்கு ஹெச்ஐவி பரவாமல் தடுத்துவிட்டால் போதுமா? இப்போதுள்ள மருத்துவ வசதிகொண்டு நிச்சயமாகக் குழந்தைக்கு ஹெச்ஐவி பரவாமல் தடுத்துவிடமுடியும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், எந்தத் தவறுமே செய்யாமல் நோயை வாங்கிக் கொண்ட அந்த கர்ப்பிணிப் பெண்ணின் நிலை என்ன? இன்று அவருக்குத் துணையாக அரசாங்கமும் மீடியாவும் உறவினர்களும் நிற்கலாம். ஆனால், குழந்தை பிறந்த பிறகும் நிலைமை இப்படியே இருக்குமா? அவர் குடும்பம் துணை நிற்குமா? மீடியாவோ அல்லது அரசாங்கமோ கண்டுகொள்ளுமா? இல்லை இந்தச் சமூகம்தான் அவருக்கு ஆறுதலைத் தந்துவிடுமா?" கொதிப்பும் வேதனையுமாகப் பேசுகிறார் `பாசிட்டிவ் வுமன் நெட்வொர்க்' அமைப்பை நடத்தி வரும் கௌசல்யா. 

தனக்கு எய்ட்ஸ் இருப்பதை மறைத்து கெளசல்யாவை திருமணம் செய்திருக்கிறார் அவர் கணவர். இரண்டு மாதங்களுக்குப் பிறகு உண்மை தெரியவந்தபோது கெளசல்யாவுக்கும் எய்ட்ஸ் பரவியிருந்தது. அந்த இடியைத் தாங்கிக்கொள்ள முடியாத கெளசல்யாவுக்கு மேலும் இடியாகத் திருமணமான இரண்டு மாதங்களுக்குள்ளாகவே கணவரின் இறப்பையும் எதிர்கொள்ள நேரிட்டது. உறவினர்களின் உதவியால் மீண்ட கெளசல்யா தற்போது இந்தியா முழுவதிலும் உள்ள ஹெச்ஐவி பாதிக்கப்பட்ட பெண்களுக்காக `பாசிட்டிவ் உமன் நெட்வொர்க்' என்ற அமைப்பை நடத்தி வருகிறார். 

``சாத்தூர் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையை என்னால ஏத்துக்கவே முடியலை. இது எப்பேர்ப்பட்ட கொடூரம். மருத்துவமனையுடைய அஜாக்கிரதை ஒரு பெண்ணுடைய வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கியிருக்கு. இந்த மாதிரி முன்னெச்சரிக்கை இல்லாம ரத்தம் செலுத்துறதால எய்ட்ஸ் பரவுறது தினம்தோறும் நடந்துக்கிட்டேதான் இருக்கு. சிவகாசி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துடுச்சு அவ்வளவுதான். ரெண்டு வருஷத்துக்கு முன்புகூட தீ விபத்துல பாதிக்கப்பட்ட 5 வயசுக் குழந்தைக்கு ஆபரேஷன் பண்ணினப்போ ஹெச்ஐவி பாதிக்கப்பட்டவரோட ரத்தத்தைக் கொடுத்ததால அந்தக் குழந்தைக்கு எய்ட்ஸ் பரவிடுச்சு. குழந்தையோட அப்பா, அம்மா, தங்கைன்னு எல்லோரும் நெகட்டிவ். ஆனா, அந்த பாப்பா மட்டும் ஹெச்ஐவி பாசிட்டிவ். இப்போ 7 வயசுல எய்ட்ஸ் நோயைச் சுமந்துக்கிட்டு மருந்து மாத்திரைகளோடு வாழ்ந்துட்டு இருக்கா. இதுக்கெல்லாம் காரணம் அரசாங்கம் அறிவித்திருக்கிற ரத்த அறிக்கையுடைய விதிமுறைகளை கடைப்பிடிக்காததுதான். ரத்த தானத்திற்கு முன்பாக நோயாளிக்குச் செலுத்தப்படும் ரத்தத்தில் சுகர், மஞ்சள்காமாலை, ஹெபடைடிஸ் - சி உள்ளிட்ட 24 டெஸ்ட்டுக்கள் எடுத்துப் பார்க்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால், அதை ரத்த வங்கி சரியாகக் கடைப்பிடிப்பதே இல்லை. 

எனக்கு எங்க வீட்டில் பார்த்துத்தான் கல்யாணம் பண்ணி வெச்சாங்க. அத்தை பையன்தான் அவரு. ஆனாலும், அவருக்கு எய்ட்ஸ் இருக்கிற விஷயத்தை அவரும் அவரோட அப்பாவும் என்கிட்ட சொல்லாம மறைச்சிட்டாங்க. திருமணம் முடிஞ்ச 45 வது நாள்லதான் எனக்கும் ஹெச்ஐவி இருக்கிற விஷயம் தெரிய வந்துச்சு. அதுல இருந்து அடுத்த 6 மாசத்துக்கு என்னால யார்கிட்டயும் பேச முடியலை. என்னோட உறவினர்கள் எல்லோருமே எனக்கு சப்போர்ட் பண்ணினாங்க. ஆனாலும், யார் வீட்டுக்கும் என்னால போக முடியலை. உறவினர்களோட குழந்தைகளை தூக்கிக் கொஞ்ச முடியலை. நான் சமைக்கிற சாப்பாட்டைக்கூட யாரும் சாப்பிட முன் வரலை. இருவது வருஷம் ஆகிடுச்சு. இப்போக்கூட என்னால இயல்பான வாழ்க்கை வாழ முடியலை. மருந்து மாத்திரைகள்தான் என்னை இப்போ வரை உயிரோட வெச்சிருக்கு. ஆரம்பத்துல துணையா இருந்த உறவினர்களும் இப்போ கூட இல்லை. அதனாலதான் நான் வற்புறுத்தி சொல்லுறேன். சாத்தூர் கர்ப்பிணிப் பொண்ணோட விஷயத்துல நாம எல்லோருமே குழந்தையைத் தாண்டி பாதிக்கப்பட்ட அந்த அம்மாவைப் பற்றி அதிகமாகவே சிந்திக்கணும். குழந்தை பிறந்ததுக்குப் பிறகு அவருக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு. அதை அரசாங்கமும் இந்தச் சமூகமும்தான் சரியாக அமைச்சுக் கொடுக்கணும். ஏன்னா, அரசாங்கம் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கான சலுகைகளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா நிறுத்திட்டே இருக்காங்க. சட்டமன்றத்தில்கூட நிறைய ஜி.ஓ நிறைவேற்றப்படாமல் கிடப்பிலேயே இருக்கு. எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருந்துகள் எல்லாமே அதிக விலை கொண்டது. சாதாரண ஏழை மக்களால் அதை வாங்க முடியாது. மருந்துகளை விடவும் பாதிக்கப்பட்டவருக்கு உணர்வுபூர்வமான ஆறுதல் தேவை. 

அந்த அம்மாவோட கணவர் இப்போது போல தொடர்ந்து அவருக்கு எமோஷனலா சப்போர்ட் பண்ணணும். இப்போ இருக்கிற மருத்துவம் மூலமா அவருக்கும் ஹெச்ஐவி பரவாமல் பார்த்துக்கொள்ள முடியும். அதற்கு அவர் மனதளவில் தயாராக வேண்டும். தன் மனைவி முன்பு அவர் வருத்தத்தை வெளிப்படுத்தவே கூடாது. நம்ம வாழ்க்கையே தடம் புரண்டுடுச்சுன்னு நினைச்சு வேதனையோடு இருக்கிற அவருக்குச் சுத்தி இருக்கிற எல்லோரும் நம்பிக்கையைக் கொடுக்கணும். அதுமட்டும் போதாது அரசாங்கம் பாதிக்கப்பட்டவருடைய வாழ்வாதாரத்திற்கு நிரந்தரமான வழி காட்டணும். சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் நிர்வாகத்தின் மீதும் மருத்துவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்கணும். அது கண் துடைப்பாக இல்லாமல் நிலையான ஒரு மாற்றத்தை ஏற்படுத்துறதா இருக்கணும்” என்றவர் இறுதியாக,

"இனி ரத்த தானம் செய்ய முன் வருவீர்கள் என்ற விழிப்பு உணர்வோடு ரத்தத்தை முறையாகப் பரிசோதிப்பீர்கள் என்ற விழிப்பு உணர்வையும் மக்களிடம் கொண்டு போக வேண்டும். ரத்த தானம் பெறும் முன் அதை முறையாகப் பரிசோதியுங்கள் என்ற விழிப்பு உணர்வுக் குரல் தினம்தோறும் மக்கள் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அந்த அம்மாவின் வயிற்றிலுள்ள குழந்தை ஹெச்ஐவி நெகட்டிவாகப் பிரசவிக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு அந்த அம்மாவின் நிம்மதியான எதிர்காலத்திற்கும் நாம் பொறுப்பேற்க வேண்டும்” என்று முடித்துக்கொண்டார்.