Published:Updated:

சாத்தூர் கர்ப்பிணிக்கு செலுத்திய ரத்தம் முறையாக பரிசோதனை செய்யப்பட்டதா - பின்னணி என்ன?

மருத்துவத் துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர் வளர்மதி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சாத்தூர் கர்ப்பிணிக்கு செலுத்திய ரத்தம் முறையாக பரிசோதனை செய்யப்பட்டதா - பின்னணி என்ன?
சாத்தூர் கர்ப்பிணிக்கு செலுத்திய ரத்தம் முறையாக பரிசோதனை செய்யப்பட்டதா - பின்னணி என்ன?

சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு ரத்தச் சிவப்பு அணுக்கள் குறைபாட்டைப் போக்குவதற்காக ஏற்றப்பட்ட ரத்த தானத்தால், ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட்ட நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. 

உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் ஏற்படக் காரணமான ஹெச்.ஐ.வி. கிருமிகள் கலந்த ரத்தம் ஏற்றப்பட்டதால், அந்தப் பெண்ணின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. ஒரு பக்கம் தேவையான உதவிகள், மருத்துவ வசதிகள், உரிய நிவாரணம் வழங்குகிறோம் எனப் பாதிக்கப்பட்டவரை சரிக்கட்டும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம்

பற்றியும் மருத்துவ வசதிகள் பற்றியும் பொதுவெளியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. 

``கர்ப்பிணிப் பெண் பாதிக்கப்பட்டதற்கு சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்களும், சாத்தூர் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியப் போக்கும்தான் காரணம். அரசுத் துறையில் இருப்பவர்கள் தனியார் மருத்துவமனையை விட அதிகச் சம்பளம் பெறுகிறார்கள். ஆனால், பல பணிகளில் நிரந்தர பணியாளர்களை பணியமர்த்துவதில்லை. ஒப்பந்த ஊழியர்கள் பணியில் இருப்பதால், இவர்களுக்கு ரத்தப் பரிசோதனை, நோய்த் தொற்று தொடர்பான எந்த முறையான பயிற்சியும் அளிக்கப்படவில்லையா என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு  அரசின் செயல்படாத தன்மையும், `அரசு மருத்துவமனை தானே' என்ற ஊழியர்களிடம் இருக்கும் மெத்தனப் போக்கும்தான் முழுமுதற்காரணம்.

அதற்காக, மருத்துவப் பணியாளர்கள்மீது எடுக்கப்பட்டுள்ள `தற்காலிக பணியிடை நீக்கம் நடவடிக்கை என்பது ஒரு கண் துடைப்புதான். பிரச்னையை நீர்த்துப்போகச் செய்வதற்கான வழிமுறை. அவர்களே ஒப்பந்தத் தொழிலாளர்களாக இருக்கும்போது அவர்களை நிரந்தரமாகப் பணியிடை நீக்கம் செய்தால் கூட வேறு வேலைக்குச் சென்று விடுவார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரின் குடும்பத்தின் நிலை என்னவாகும். பொறுப்புஉணர்வோடு பணியாற்ற வேண்டிய மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியமாக இருப்பது, அரசின் மீது பயமின்மையைக் காட்டுகிறது. அரசு என்ன செய்துவிடும் என்று நினைக்கிறார்களா? கடுமையான நடவடிக்கை எடுக்கத் திராணியற்ற அரசா என்று சந்தேகமும் ஒரு சேர வருகிறது."  என்கிற குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார் மருத்துவச் செயற்பாட்டாளரும் மருத்துவருமான ஜீவானந்தம்.

பரிசோதனைகள் முறையாகச் செய்து இருந்தால், அந்த ரத்தத்தில் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதைக் கண்டுபிடித்து இருக்கலாம். ஆனால் ரத்தத்தை முறைப்படி பரிசோதிக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது. ரத்த தானத்தின்போது என்னவிதமான பரிசோதனைகள், நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பது குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை ரத்தவியல் வங்கித் தலைவர் சுபாஷிடம் பேசினோம்.

``ரத்தம் கொடுப்பதற்கு முன்னர், தானம் செய்பவரின் வயது, உடல் எடை உள்ளிட்ட உடல் தகுதி, ரத்தப் பிரிவு, நாடித்துடிப்பு, ரத்த அழுத்தத்தின் அளவு மற்றும் ஹீமோகுளோபின் போன்றவை பரிசோதிக்கப்படும். மது அருந்தியவர்கள், காய்ச்சலில் இருப்பவர்கள், 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள், 45-க்கும் கீழ் எடை உள்ளவர்கள், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களிடம் ரத்த  தானம் பெறப்படாது. அதேபோல, ஒருவரிடமிருந்து ரத்தம் தானமாகப் பெறப்பட்டதும் எச்.ஐ.வி., பால்வினை நோய்கள், மலேரியா, ஹெப்படைட்டிஸ் பி மற்றும் சி போன்ற 5 விதமான சோதனை செய்யப்படும். அந்தப் பரிசோதனைகளில் நெகட்டிவ் ரிசல்ட் இருந்தால் மட்டுமே ரத்தம் தேவைப்படுவோருக்கு வழங்கப்படும்.

ஒரு மருத்துவமனையிலிருந்தோ ரத்த வங்கிகளிடமிருந்தோ பெறப்பட்ட ரத்தம், மற்றொரு மருத்துவமனையில் அனுப்பி வைக்கும்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதா என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். அப்படிக் குறிப்பிடாமல் அனுப்பப்பட்டிருந்தால் தானமாகப் பெறப்பட்ட மருத்துவமனையில் அந்தப் பரிசோதனை செய்யப்படும். அதன் பிறகே ஒருவருக்கு ரத்தம் ஏற்றப்படுகிறது. இதுவே ரத்த தானத்தில் பின்பற்றும் நடைமுறை. இதில் எச்.ஐ.வி பாதிப்பைக் கண்டறிவதில் மட்டும் சில சிக்கல்கள் இருக்கிறது. எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டவுடன் கிருமிகள் பெருகுவதற்கான விண்டோ பீரியடு (Window Period) ஒரு சில நாள்கள் முதல் ஆறு மாதங்கள் வரைகூட ஆகலாம். அதன் பிறகே ரத்தப்பரிசோதனையில் ஹெச்.ஐ.வி தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வரும். எனவே, இதுபோன்ற சமயங்களில் ஹெச்.ஐ.வி தொற்று பாதிப்புகளை கண்டறிய முடியாமல் போகலாம்" என்கிறார் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை ரத்தவியல் வங்கித் தலைவர் சுபாஷ். 

`விண்டோ பீரியடு' என்றால் என்ன, அந்தக் காலத்தில் பரிசோதனையில் எச்.ஐ.வியைக் கண்டறியமுடியாமல் போவதற்கு வாய்ப்பிருக்கிறதா? -  ரத்த தானம் அளிப்பதன் சரியான பின்னணி என்ன என்பது குறித்து ரத்தவியல் நிபுணர் ஒருவரிடம் கேட்டோம். ``பொதுவாக ரத்த தானம் அளிப்பவர்கள், தானம் பெறப்பட்ட பின் ஆன்டிபாடிக்கான பரிசோதனைகள் செய்யப்படும். ஆன்டிபாடி என்பது, உடலில் ஏதாவது நோய் கிருமி இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள செய்யப்படுவது. நோய் எதிர்ப்புச் சக்தியின் வெளிப்பாட்டைத்தான் இப்படிக் குறிப்பிடுவார்கள். நோய் கிருமிகளிலுள்ள புரதம், ஆன்டிஜென் எனப்படும். 

90 சதவிகத்துக்கும் மேலான ரத்த வங்கிகளில், தானமளிப்பவரின் ரத்தத்துக்கு ரேபிட் கார்ட் டெஸ்ட் (Rapid Card Test) என்ற பரிசோதனை முறைதான் செய்யப்படுகின்றது. இது, ரத்தத்திலுள்ள ஆன்டிபாடியை அதிவேகமாகப் பரிசோதிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு முறை. ஏதேனும் நோய் ஏற்பட்டிருப்பவர்களின் உடலில் மட்டும்தான், ஆன்டிபாடி (நோய் எதிர்ப்புத் திறனுக்காக) உருவாகியிருக்கும். ஆக, ஆன்டிபாடி என்பது, உடலின் நோய் எதிர்ப்புத் திறன். 

ஒவ்வொரு கிருமிக்கும், ஒவ்வொரு ஆன்டிபாடி உருவாகும். அவை ஒவ்வொன்றும், உருவாவதற்கான கால அவகாசமும் வேறுபடும். பெரும்பாலும், பாதிப்பு ஏற்பட்டு நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆகலாம். இந்த இடைப்பட்ட காலம், விண்டோ பீரியடு எனச் சொல்லப்படுகிறது. இதில், ஆன்டிஜென் (நோய் கிருமியின் புரதம்) ஆண்டிபாடியாக மாறி நோய் எதிர்ப்புச் சக்தியை வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கலாம். அல்லது பிரச்னை சரியாகிவிடவும் செய்யலாம். சம்பந்தப்பட்டவரின் உடலைப் பொறுத்தது இந்த மாற்றம். 
ரேபிட் கார்ட் டெஸ்ட் என்னும் எலைசா பரிசோதனையின் முடிவில் உடலில் ஆன்டிபாடி இருப்பது தெரியவந்தால், அது குறிப்பிட்ட எந்தப் பாதிப்புக்கு எதிராக உருவானது எனக் கண்டறியப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஒருவேளை உடலில் ஆன்டிபாடி எதுவும் இல்லாவிட்டால், சம்பந்தப்பட்டவருக்குப் பாதிப்பில்லை என்று முடிவு சொல்லப்பட்டுவிடும். இதில் பிரச்னை என்னவென்றால், உடலில் ஆன்டிபாடி வெளிப்படுவதற்கே நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆகும். விண்டோ பீரியடிற்கு சம்பந்தப்பட்ட நோயாளி, பரிசோதனைக்கு உட்பட்டிருந்தால் உடலில் ஆன்டிபாடியே இல்லையென்றுதான் முடிவு வரும். அதைமட்டுமே அடிப்படையாக வைத்து, பரிசோதனை நிலையம் சார்பிலும் `பிரச்னை இல்லை' எனத்தெரிவிக்கப்பட்டுவிடும். அந்த முடிவை நம்பி, ரத்த தானம் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடும். அதுவே ஒருகட்டத்தில் இன்னொருவரின் உடலுக்குள்ளும் செலுத்தப்பட்டுவிடும். அதற்குள் ரத்தத்தில் பாதிப்பு தீவிரமாகி, ரத்தத்தைப் பெற்றவருக்குத் தொற்றிக்கொள்ளும். எனவே ஆன்டிப்பாடிக்கான ரேபிட் கார்ட் டெஸ்ட் பரிசோதனை துல்லியமானதல்ல.

எனில், எதுதான் துல்லியமானது? கோர் ஆன்டிஜன் (Core Antigen) என்ற பரிசோதனை. ஆன்டிஜென் என்பது நோய் கிருமியிலுள்ள ஒருவகை புரதம். நோய் கிருமியின் புரதம் கண்டறியப்படும்போது, அந்தப் பாதிப்பு என்னவென உறுதிசெய்யப்படும். பாதிப்பு இருப்பவர்கள் அனைவருக்குமே, கிருமி இருக்கும். கிருமியின் புரதம்தான் பி.சி.ஆர் (Polymerase chain reaction PCR) என்னும் கோர் ஆன்டிஜன் பரிசோதனையில் கண்டறியப்படும். எனவே, இதுதான் துல்லியமான பரிசோதனை முறை. இவ்வளவு தெரிந்தும், ஏன் ரத்த வங்கிகளில் கோர் ஆன்டிஜன் பரிசோதனைக்குப் பதிலாக ரேபிட் கார்ட் டெஸ்ட் பரிசோதனையை அதிகமாகச் செய்கிறார்கள் என நீங்கள் கேட்கலாம். ஒரே காரணம், பொருளாதாரம்தான். ரேபிட் கார்ட் டெஸ்ட் செய்ய, அதிகபட்சம் 400 ரூபாய் வரைதான் செலவாகும். ஆனால் கோர் ஆன்டிஜன் பரிசோதனையைச் செய்ய, 9000 ரூபாய்க்கு மேல் செலவாகும். செலவை மட்டுமே பார்த்துக்கொண்டு, துல்லியமான ஒரு பரிசோதனையைத் தவறவிடுவது, இந்தச் சம்பவத்தைப்போல ஆபத்துகளை வரவழைக்கும்" என்றார்.

மருத்துவப் பணியாளர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்னென்ன, பாதிக்கப்பட்டவருக்கு என்ன மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து மாநிலச் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணிடம் கேட்டோம்.

``மருத்துவப் பணியார்களின் அலட்சியத்தை எந்தவகையிலும் நாங்கள் ஆதரிக்கவில்லை. மருத்துவத் துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர் வளர்மதி உள்ளிட்டோர் நிரந்தரமாகப் பணி

நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒப்பந்த ஊழியர்கள் என்றாலும், ஒப்பந்தம் முடிந்த பின்னரும் அவர்களுக்கே திரும்பவும் பணி வழங்கப்பட்டுதான் வருகிறது. இது கடுமையான நடவடிக்கைதான். மேலும், ரத்த வங்கியின் ஆலோசகர், ஆய்வகத் தொழில்நுட்ப உதவியாளர், சான்றிதழ் அளிக்கும் மருத்துவர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களிடமும் விசாரணை நடத்தி வரப்படுகிறது. மேலும், தமிழகம் முழுவதும் உள்ள 89 ரத்த வங்கிகள் மற்றும் 357 ரத்த இருப்பு மையங்களிலும் மறு பரிசோதனையை நடத்த அதிகாரிகள் திட்டமிடப்பட்டுள்ளனர். முதல் கட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரத்த வங்கிகளில் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரத்த மாதிரிகள் முழு ஆய்வு செய்யப்பட்ட பின்னரே நோயாளிகளுக்குச் செலுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், அதுவரை ரத்த வங்கிகளிலிருந்து ரத்தத்தை மருத்துவமனைகளுக்கு அனுப்பக் கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அந்த கர்ப்பிணி பெண்ணைக் காப்பாற்ற தனி மருத்துவக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் இருக்கிறார். அவரின் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி தொற்று பரவாமல் இருப்பதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. அவருக்கும் அவருடைய கணவருக்கும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு அரசுப் பணி வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது" என்றார் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்.