Published:Updated:

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 27

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 27
பிரீமியம் ஸ்டோரி
நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 27

குடும்பம்

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 27

குடும்பம்

Published:Updated:
நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 27
பிரீமியம் ஸ்டோரி
நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 27

பிறந்த குழந்தைக்கு நீர் கொடுக்கும் பழக்கம் நம்மில் மிக வேகமாக அறுகிவருகிறது. அதற்கு அடிப்படையான காரணம் தெரியவில்லை. நமது வயிற்றுக்குச் செல்லும் உணவுப் பொருள்கள் செரிமானம் அடைய நீர்  இன்றியமையாதது. குழந்தை பால் தானே குடிக்கிறது? பாலில் நீரும் உண்டுதானே என்ற கேள்வி எழலாம். 

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 27

பாலில் நீர் உண்டுதான். ஆனால் குழந்தை பாலை அருந்தியதும் அதில் இருக்கும் உடனடித் தேவையான பெருஞ்சத்துகளை நீர் வடிவிலேயே செல்கள் உறிஞ்சிக்கொள்ளும். அதனை நொதிக்கச் செய்து பிற சத்துகளைப் பிரித்தெடுக்கும் செயல்பாடுகளின்போது உடலில் வெப்பம் உருவாக்கப்படுகிறது. அந்த வெப்பத்தைத் தணிக்க நீர் தேவைப்படுகிறது. அப்போது நீர்  கொடுக்கப்படாவிட்டால் எரியாத அடுப்பு,  புகைவிடுவதைப் போல உள்ளுக்குள் தீமை செய்யும் காற்று உருவாகி வயிறு உப்பத்தொடங்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 27அப்படித் தேங்கி உப்பிய நிலையிலாவது நீர் புகட்டினால் நீரின் காரத் தன்மை, காற்றை முறித்து ஏப்பமாக வெளியேற்றிவிடும். இல்லையென்றால் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்படும். மலச்சிக்கல் நீடிக்கும்போது செரிமான மண்டலம்  பாதிப்படையும். செரிமான மண்டலம் பாதிக்கப்படுமானால் குழந்தையின் ‘குவா குவா’ மழலை மொழிக்கும், ‘ஆ.. ஊ…’ என்று குரல் எழுப்பியபடி கிளையசைவைப் போன்ற பேரழகு பொங்கும் கைகால் அசைவுகளுக்கும் போதிய ஆற்றல் இல்லாமல் குழந்தை மந்தித்துக் கிடக்கும். அதன் வளர்ச்சியும் பாதிக்கப்படும். வயிறு எப்போதும் உப்பிய நிலையிலேயே இறுகிக்கிடக்க, கைகால்கள் சூம்பி விடும். மஞ்சள் காமாலை உட்படப் பல்வேறு நோய்களுக்கு நீர் கொடுக்காததே அடிப்படையான காரணம் ஆகிவிடும். குறிப்பாக சிறுநீர் பிரிவதும்கூட குழந்தைக்கு வலி மிகுந்த ஒன்றாகி விடும்.

எனக்கு நெருக்கமான குடும்பத்தில் ஒரு மாதக் குழந்தைக்கு மலச்சிக்கலில் தொடங்கிய பிரச்னை சிறுநீர் பிரிவதிலும் சிக்கலாகி ஒவ்வொரு முறை சிறுநீர் பிரியும்போதும் பெருங்குரலெடுத்து அழத்தொடங்கியது. சிறுநீர் வெளியேறும் முறையும் வழக்கமாகக் குழந்தை ஊற்றுப் பீய்ச்சுவது போலில்லாமல் துவண்டு மிகுந்த வெப்பத்துடன் கசிந்து செல்வதாக இருந்தது.

பெற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. நீர் கொடுத்துப் பார்க்கலாமா என்று தோன்றினாலும் அதைச் செய்வதில் தயக்கம். குழந்தைகள்நல நிபுணரிடம் எடுத்துச் சென்று கேட்டார்கள். அவர் மிகவும் கண்டிப்பாக, நீர் கொடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார். அவர் பரிந்துரைத்த மருந்துகளைப் புகட்டியும் சிறுநீர் பிரிவதில் மாற்றம் இல்லை. அழுது, துடித்து சிறுநீர் கழிக்கும் போதெல்லாம் இரண்டடி தொலைவுக்கு அனலடித்தது.  குழந்தையைப் பார்க்க வயதில் முதிர்ந்த உறவினர் ஒருவர் வந்திருந்தார். விசாரிப்புகள், உபசாரங்கள் முடிந்த நிலையில் தூங்கும் குழந்தையை விருந்தினரிடம் பார்த்துக் கொள்ளச்சொல்லிவிட்டு அதன் இளம் தாய் குளிக்கச் சென்றிருக்கிறார். சில நிமிடங்களில் குழந்தை எழுந்து வீறிட்டு அழுததும் வந்திருந்த பெண், அழுகையைத் தணிக்கவென்று சங்கில் நீர் ஊற்றிப் புகட்டி இருக்கிறார்.  குழந்தை ஆவலோடு பருகவே மீண்டும் மீண்டும் நான்கைந்து சங்கு நீர் கொடுத்திருக்கிறார்.

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 27

குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டு, தாய், அரக்கப் பரக்கக் குளித்துவிட்டு ஓடிவந்தால் குழந்தை அமைதியாக இருக்கிறது. ஆசுவாசமடைந்த தாய், நன்றி பாராட்டும் விதமாகக் கொஞ்சத் தொடங்க குழந்தை, ஆர்ட்டீசன் ஊற்றுப் போல சிறுநீரைப் பீய்ச்சி அடித்தது. வழக்கத்துக்கு மாறான வேகத்தில் பீய்ச்சி அடித்தது மட்டுமில்லாமல் சிரிக்கவும் செய்தது. ‘தண்ணி கொடுத்து நிமிசம் ஆகல... அதுக்குள்ள ஒண்ணுக்குப் போய்ட்டியே’ என்று விருந்தினர் அம்மணி கொஞ்சும்போதுதான் உண்மை புரிந்தது.

பால் புகட்டுவதுபோல, குழந்தைக்கு நீர் புகட்டுவதும் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒன்று. குழந்தை பிறந்த நொடியில் மூச்சுக்குழல் திறக்க வீறிட்டு அழுகிறது. அழுதநொடியில் காற்று உள்ளிறங்க உணவுக்கும், நீருக்கும், காற்றுக்கும் என வெவ்வேறு தேவைகளுக்காகச் சுருங்கி இருக்கும் குழல் விரிந்து தனக்குத் தேவையானதை ஏற்கத் தயாராகிவிடுகிறது.

தாய், பாலைப்  புகட்ட, தன்னியக்கத்துக்கான ஆற்றலைப் பெற்றுக்கொண்ட நிம்மதியிலும் தாயின் வயிற்றில் இருந்து பெரு முனைப்போடு புற உலகுக்கு வந்த பயணக் களைப்போடும் ஆழ்ந்து உறங்குகிறது குழந்தை. அதன் உறக்கத்தினூடே கண் சுருக்குவதும், உதடு சுளிப்பதும் தெய்விகப் பேரழகு. 

பெற்றோர், குழந்தையின் அழுகைகளை நிதானமாக அவதானித்தால் அழுகை ஒவ்வொன்றுக்குமான அர்த்தம் புரியும். குழந்தையை மடியில் கிடத்தியபடி செல்போனை வருடிக் கொண்டிருந்தால் குழந்தையின் அழுகைக்கான காரணம் மட்டுமல்ல, உலகின் எந்த இயக்கத்துக்குமான காரணமும் புரியாது. செல்போனில் குவியும் வாட்ஸ்அப் குப்பைகள் போலவே இன்றைய தலைமுறையின் தலைக்குள்ளும் தேவையற்ற தகவல் குப்பைகள் மலையாகக் குவிந்து கிடக்கின்றன. கிடக்கட்டும். அதனோடு குப்பைச் சேர்மானம் ஆபத்தானது என்ற தகவலையும் சேர்த்தே பதிந்து கொள்ள வேண்டியதுதான்.

குழந்தைக்கு முதல் பால் புகட்டிய பிறகு, அது எப்போது அழுதாலும் உடனடியாகப் பால் புட்டியில் உடல் சூட்டின் அளவுக்கு இதமான சூட்டில் வெந்நீரை ஊற்றிப் புகட்ட வேண்டும். குழந்தையின் அப்போதைய அழுகைக்கான காரணம் நீர்த் தேவையெனில் அது, நீரை அருந்தத் தொடங்கும். தேவையில்லையென்றால் இரண்டு வாய் நீரை வாயில் சுரந்து வைத்துக்கொண்டு புட்டியின் ரப்பரோடு நீரையும் சேர்த்து வெளியில் துப்பிவிட்டு, ‘நான் கேட்டது பால். நீ தண்ணியக் கொடுக்கிற’ என்ற பொருள்படும்படியாக முன்னிலும்  பெரிதாக வீறிட்டு அழத் தொடங்கும். குழந்தையின் அந்தக் கோபமும்  அழகு தான். இப்போது தாய் செய்ய வேண்டியது மார்புப் பாலினைப் புகட்டுவது. குழந்தையின் ஒவ்வோர் அழுகையின்போதும் முதலில் நீரைப் புகட்டிப் பார்க்க வேண்டும். குடித்தால் அனுமதித்துவிட்டு அடுத்த அழுகையின்போது பாலைப் புகட்ட வேண்டும். நீரை மறுத்தால் பாலைப் புகட்டிவிட வேண்டியதுதான். பசி, தாகம், சோர்வு, தூக்கம் என உடலியக்கத்துக்கு அவசியமான நான்கு உணர்வுகள் மறுக்கப்படக்கூடாதவை. இவை குழந்தை பிறந்த நொடியில் இருந்து மரணிக்கும்வரை மூச்சுக் காற்று போலவே உடலியக்கத்தோடு தொடர்ந்துவரக்கூடியவை. எப்படி தன்னுணர்வு இல்லாமலே சுவாசித்துக் கொண்டிருக்கிறோமோ அதுபோல மேற்படி நான்கு உணர்வுகளையும் மறுக்காமல் உரிய நேரத்தில் அவற்றுக்குப் பணிந்தே தீர வேண்டும்.

பச்சிளம் குழந்தைக்குத் தோன்றும் பசியை அதனைப் பெற்ற தாயால் மட்டுமல்ல, அக்கம் பக்கம் உள்ள யாராலும் மறுக்க முடியாது. கொடிய மிருகம் என்று நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிற புலிக்கு மான்தான் உணவு. ஆனால், ஒரு புலி பசித்திருந்தால் எப்படிப் புல்லைத் தின்னாதோ அதுபோல பச்சிளம் மான் குட்டியையும் தின்னாது. மாறாக மான் குட்டிப் பசித்திருப்பதைக் கண்டால் அதற்கு ஏதேனும் உணவளிக்க முடியுமா என்று முயன்று பார்ப்பதே அதன் இயல்பு. 

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 27

பிறரின் பசி உணர்வை மறுக்கும் துணிவை இன்னமும் எந்த இனமும் பெறவில்லை. அப்படிப் பெறுகிற நாளில் அது ஒட்டுமொத்த உலக அழிவுக்கான ஆரம்ப நாளாக இருக்கும்.  எனவே, நாம் எந்த வகையிலும் குழந்தையின் பசி உணர்வை மரத்துவிடச் செய்யப்போவதில்லை. ஓய்வு, தூக்கம் இரண்டையும் அது தானாகவே எடுத்துக்கொள்ளும். ஆனால், குழந்தையின் தாக உணர்வை நாம் மறுக்கவும் மரத்துப் போகச்செய்யவும் சாத்தியம் உண்டு. உயிரின் ஆதாரமான உடலின் வளர்ச்சியோடு உணர்வுகளும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். நீரை அருந்துவதற்கான தாக உணர்வு மரத்துப் போகச் செய்யப்படுமானால் நாம் மேலே சொன்னது போல உடனடி நோய்களை ஏற்படுத்தவில்லை என்றாலும் காலப்போக்கில் உள்ளுறுப்புகளைச் சிதைத்து விடும்.

குழந்தைப் பருவம் தொட்டே வளர்க்கப்படும் மென் உணர்வுகள்தாம் மேலும் மேலும் சரியான திசைவழியில் வளர்த்தெடுக்கப்படும். குழந்தைப் பருவத்தில் மறுக்கப்படும் உணர்வுகளோடு வளரும் குழந்தை, ஆளாகும்போது ஆதிக்க குணத்துடனும் வன்முறை மனப்பான்மையுடனும் மாறும் சாத்தியம் உண்டு. பிறந்த குழந்தைக்கு நீர் கொடுக்க மறுக்கும் போக்கு வளரும் இதே காலகட்டத்தில்தான்,  ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும், காலையில் எழுந்ததும் ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற அறிவுரைகள் நம்மை வந்து தாக்கிக்கொண்டே இருக்கின்றன.

இத்தனை அட்வைஸ்களை அள்ளி வழங்கும் வள்ளல் யாரும் பசிக்கு உணவு கொடுக்க வேண்டும், தாகத்துக்குத் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற உயிரின் ஆதாரமான உண்மைகளைப் பேசுவதில்லை. அதனால்தான் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குத் தண்ணீர் பாக்கெட்டுகளை வெளியில் இருந்து கொண்டு செல்ல வேண்டிய விசித்திரமான முரண்கள் நிரம்பிய காலமாக இது இருக்கிறது.  தாகம் என்பது ஒவ்வொரு தனி மனிதருக்குமான தனிப்பட்ட உணர்வு. அதனைப் பொதுமைப்படுத்தவோ, சராசரியை நிர்ணயிக்கவோ முடியாது. அன்றாடம் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற பரிந்துரை உலவிக் கொண்டிருக்கிறது. அண்டார்ட்டிகாவில் பனிப் பாளங்களைக் கொண்டு வீடுகட்டி வசிக்கும் எஸ்கிமோவினருக்கும், எலும்பை உருக்கும் ஐம்பது டிகிரி வெயிலடிக்கும் ஆப்பிரிக்கப் பாலைவனவாசிகளுக்கும் எப்படி ஒரே அளவை நிர்ணயிக்கமுடியும்?

ஓர் உடலின் தேவையை அனுபவக் கணக்கில் இருந்து ஆவணப்படுத்த முடியாது. அது இயல்பு உணர்வின் வாயிலாகத் தீர்க்கப்பட வேண்டும். நீர் அருந்துவதற்கான தாக உணர்வைப் புரிந்து கொள்வதற்கு முன்பு நாம் நீர் என்று சொல்லிக்கொண்டு குடிப்பது நீரே தானா என்று ஒரு கேள்வி எழுப்பி விடை காண வேண்டி உள்ளது. ‘உடலின் தேவைக்கு மிகுதியான தாதுகளை நீக்குகிறேன்... நீரில் கலந்துள்ள உடலுக்கு ஒவ்வாத கிருமிகளை அகற்றுகிறேன் என்று நீரில் வணிக விளையாட்டை நடத்துபவர்கள், இன்று நீரை நீராகவே இல்லாமல் ஆக்கி விட்டார்கள்.

இயற்கையின் கொடை ஒவ்வொன்றுக்கும் வணிகத்திடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்ட நாம், குறைந்தபட்சம் உடலுக்குத் தேவையான சத்துகளையாவது எளிய முறையில் பெறுவது எப்படி என்று தொடர்ந்து பார்ப்போம்.

நிலாச்சோறு ஊட்டுவோம்... 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism