Published:Updated:

டிக் டாக் ஆப் இளைஞர்களை ஏன் வசீகரிக்கிறது?- ஓர் உளவியல் அலசல்!

டிக் டாக் ஆப் இளைஞர்களை ஏன் வசீகரிக்கிறது?- ஓர் உளவியல் அலசல்!
News
டிக் டாக் ஆப் இளைஞர்களை ஏன் வசீகரிக்கிறது?- ஓர் உளவியல் அலசல்!

பிறரின் முன்னால் பேசவே தயங்கும் ஆண்களும், பெண்களும் கூட டிக் டாக்கில் பாட்டுப்பாடி, நடனமாடி, அசரவைக்கும் வசனம் பேசி பட்டையைக் கிளப்பி வருகிறார்கள்.

டிக் டாக்.. பாத்ரூம் பாடகர்களாக இருந்த பலரை, பிரபலங்களாக மாற்றிய ஒரு ஆப். பாட்டு, டான்ஸ், வசன உச்சரிப்புகள் என டிக் டாக்கைப் பயன்படுத்தி, பலர்  தங்களின் தனித் திறமைகளை உலகுக்குத் தெரியப்படுத்தி வருகிறார்கள். சீனாவில் பைட் டான்ஸ் ( Byte Dance) என்கிற நிறுவனத்தால் டௌயின் ( Douyin) என்கிற பெயரில் 2016- ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆப், டிக் டாக்காகப் பரிணமித்தது 2017 ல் ஆண்டில்தான். அதேபோல் டிக் டாக்கும், மியூசிக்கலியும் இணைந்தது 2018 ஆகஸ்ட் மாதத்தில். இன்று உலகம் முழுவதும் 150 நாடுகளில்,  ஐம்பது கோடி பேர் இந்த ஆப்பைப் பயன்படுத்தி வருகிறார்கள். சிறிய அளவிலான காணொலிகளில் ஆசியாவிலேயே முதன்மையானதாக இந்த ஆப்பைப் பயன்படுத்தி வெளியாகும் காணொலிகள்தாம் இருக்கின்றன. 

பிறரின் முன்னால் பேசவே தயங்கும் ஆண்களும், பெண்களும் கூட டிக் டாக்கில் பாட்டுப்பாடி, நடனமாடி, அசரவைக்கும் வசனம் பேசி பட்டையைக் கிளப்பி வருகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் உலா வரும் ஒரு சுதந்திர வெளியாக இந்த ஆப் இருக்கிறது. ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற மற்ற சமூக வலைதளங்களை விட டிக் டாக் ஆப்புக்குத்தான் இளைஞர்கள் மத்தியில் செம வரவேற்பு. ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களைக் கூட டிக் டாக் வீடியோக்கள்தாம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. 

பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், இந்த ஆப்பால் ஒரு சில நன்மைகளும் நடந்தேறியிருக்கின்றன. உதாரணமாக, ரஜினிகாந்த் நடித்துள்ள `பேட்ட' படத்தின் பாடலுக்குச் சிறப்பாக நடனமாடிய பெண்ணின் திறமையைக் கண்டு பாடல் வெளியீட்டு விழாவுக்கு அவர் அழைக்கப்பட்டது முதல், எங்கோ ஒரு மூலையில் கிராமத்துப் பெண் பாடும் பாடலுக்கு பிரபலமான இசையமைப்பாளர்களின் பாராட்டு கிடைப்பது வரை பலரின் தனித்திறமைகள் இந்த ஆப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. அதேசமயம் சாதி வெறிப் பேச்சுக்களுக்கும், மற்றவர்களின் மீது அவதூறு பரப்புவதற்கும், ஆபாச செயல்பாடுகளுக்கும் கூட இந்த ஆப் பயன்படுத்தப்படுகிறது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பொதுவாக இதுபோன்ற ஆப்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்வதற்குக் காரணம்தான் என்ன?

``தங்களின் திறமைகளை வெளிப்படுத்த யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை. தான் விருப்பப்பட்ட, அல்லது தன்னால் முடிந்த செயல்களை விருப்பப்பட்ட இடத்திலிருந்து செய்துகொள்ள இது போன்ற இணைய ஆப்கள் உதவி புரிகின்றன. அதைவிட முக்கியமானது, அதற்கு உடனடியாக அங்கீகாரம் கிடைப்பதுதான்..." என்கிறார் உளவியல் நிபுணர் பூங்கொடி. 

 ``உதாரணமாக ஒரு பாட்டுப் பாடி, அல்லது நடனமாடி ஒரு வீடியோ போடும்போது, அதற்கு வரும் கமென்ட்கள், லைக்ஸ்கள் இவர்களுக்கு மகிழ்ச்சி தருகிறது. உளரீதியாக உற்சாகத்தைத் தருகிறது. தொடர்ந்து அதைச் செய்யவும் தூண்டுகிறது. ஒரு சிலருக்கு அதன் மூலம் பேரும், புகழும் கிடைத்துவிடுகிறது. அந்தப் புகழ் மயக்கத்தில் விழுந்து விடுகிறார்கள். நாள்கள் செல்லச் செல்ல அதிக நேரம் உபயோகிக்க ஆரம்பித்து அதற்கு அடிமையாகிவிடுகிறார்கள். 

மனநல மருத்துவத்தைப் பொறுத்தவரை போதைப்பொருள்களைப் பயன்படுத்தி அதிலிருந்து மீள முடியாதவர்களைத்தான் `அடிக்ட்' என்று இதுவரை சொல்லி வந்தோம். ஆனால், இந்த ஆண்டு முதல் ``இன்டர்னெட் கேமிங் அடிக்‌ஷன்'' என்னும் புதிய மருத்துவ முறையையும் சேர்த்திருக்கிறோம். அந்தளவுக்கு இணையதளங்களில் மூழ்கி பலர், பல்வேறு விதமான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறார்கள். 

`எப்படா லைக்ஸ் வரும், கமென்ட் வரும்' என எப்போதும் சமூக வலைதளங்களிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். தாம் பிறரால் விரும்பப்படுகிறோம், பாராட்டப்படுகிறோம் என கனவுலகத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்களின் அன்றாடச் செயல்பாடுகள் மிகவும் பாதிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்றால் அவர்களின் படிப்பு அதல பாதாளத்துக்குச் சென்றுவிடுகிறது. வேலைக்குச் செல்பவர்கள் அவர்களின் வேலைகளில் கவனம் செலுத்த முடிவதில்லை. தன் குடும்பத்தினரிடம், நண்பர்களிடமிருந்து விலகி ஒரு தனித்த உலகுக்குள் சென்று தனிமையின் கொடுமைக்கு ஆட்பட்டுவிடுகிறார்கள். பின்னர், அதிலிருந்து மீள்வதற்காக இன்னும் பல மணி நேரங்கள் இணையத்திலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். இது மேலும் அவர்களை இணைய அடிமையாக்கிவிடுகிறது. இதனால் மன சம்பந்தமான பல்வேறு பிரச்னைகள் உண்டாகின்றன.

தன்னிடம் யாரோ பேசுவதாக, தொடுவதாக, தனக்கு அதிக ரசிகர்கள் இருப்பதாக நம்பிக்கொண்டு கற்பனையில் வாழ ஆரம்பிக்கிறார்கள். அதன் காரணமாக இரவு தூக்கமில்லாமல் தவிக்கிறார்கள். ஒரு சிலர் இரவு கண் விழித்து இதுபோன்ற வீடியோக்களைத் தயார் செய்வார்கள். சரியான தூக்கம் இல்லாமல் போவதால், வீட்டில் இருப்பவர்களிடமும், மற்றவர்களிடமும் கோபம், எரிச்சல் அடைவார்கள். எப்போதும் ஒருவித பதற்றத்துடனே காணப்படுவார்கள். எந்தவொரு செயல்களிலும் அவர்களால் சரியாக கவனம் செலுத்த முடியாது. 

இது போன்ற ஆப்களால் ஒரு சில நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அதனால் இதை நாம் முற்றிலுமாக தவிர்க்கத் தேவையில்லை. பெரிய எதிர்பார்ப்புகள் எதுவுமில்லாமல் ஒரு பொழுதுபோக்குக்காக, அன்றாடப் பணிகள் பாதிக்காதபடி, ஓய்வாக இருக்கும் நேரங்களில் மட்டும் பயன்படுத்தலாம். அதன் மூலம் மனதுக்கு ஒரு புத்துணர்வு கிடைக்கும். தங்களின் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளவும் முடியும். நாளொன்றுக்கு ஒரு முப்பது நிமிடங்கள் வரை இணையத்தில் நேரத்தைச் செலவழிக்கலாம். அதற்கு அதிகமாகும் போது அடிக்ட் ஆகும் வாய்ப்பிருக்கிறது.

இதுபோன்ற ஆப்களை பயன்படுத்தும்போது, பிறர் மனம் புண்படும்படியான, உணர்வுகளைத் தூண்டக்கூடிய எந்தவொரு கருத்தைப் பேசுவதும், செயல்களைச் செய்வதும் கூடாது. எந்தவொரு சூழலிலும் வரம்பு மீறிவிடக்கூடாது. சுய கட்டுப்பாட்டுடனும், பொறுப்புஉணர்வோடும் பயன்படுத்த வேண்டியது அவசியம்.

அதேசமயம், குழந்தைகளை இதுபோன்ற செயல்களில் கண்டிப்பாக ஈடுபடுத்தக் கூடாது. ஒருமுறை அவர்களை இதில் ஈடுபடுத்தினால் தொடர்ந்து செய்ய அடம் பிடிப்பார்கள். அவர்களிடம் சொல்லியும் புரிய வைக்கமுடியாது. எச்சரிக்கையாக இருக்கவேண்டும்  ``என்கிறார் பூங்கொடி.