மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தொல்லை நல்லது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 14

தொல்லை நல்லது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 14
பிரீமியம் ஸ்டோரி
News
தொல்லை நல்லது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 14

தனசேகர் கேசவலு, குழந்தைகள்நல மருத்துவர்

ந்த இதழிலும் 2 - 3 வயதுவரையிலான குழந்தைகளின் வளர்ச்சியைப் பற்றித்தான் பேசப் போகிறேன். 2 - 3 வயதுக்குள் குழந்தைகளின் எண்ணங்களும் வண்ணங்களும் உருவாகும். எண்ணங்கள் என்பவை பர்சனாலிட்டி; வண்ணங்கள் என்பவை குழந்தைகளின் விருப்பங்கள். இந்த வயதில் நல்ல விஷயங்களைச் சொல்லித் தருகிறீர்களோ இல்லையோ, தவறான பழக்கங்களை உங்களை அறியாமல்கூட சொல்லித்தந்துவிடாதீர்கள். குழந்தைகள் கெட்ட பழக்கங்களைக் கற்றுக்கொள்வது பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோரிடத்திலிருந்துதான். உங்களுக்கு வருத்தமாக இருந்தாலும் இதுதான் உண்மை.

தொல்லை நல்லது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 14

கேட்ஜெட்டுக்கு அடிமையாகாமல் இருக்க...

கேட்ஜெட்டுக்கு அடிமையாகிற வயது இது. அதைத் தவிர்க்க, குழந்தைகளை ப்ளே ஸ்கூலுக்கு அனுப்புங்கள். பாதுகாப்பு என்கிற பெயரில் குழந்தைகளை விளையாடவிடாமல் செய்து, தொலைக்காட்சியின் முன்பாகவும் மொபைல் திரைகளிலும் கட்டிப் போடாதீர்கள். மாறாக, குழந்தைகளை விளையாட வைப்பதற்கான வழிகளைத் தேடுங்கள். மொத்தத்தில் குழந்தைகளின் உலகத்தைப் பெரிதாக்குவதுதான் அவர்கள் கேட்ஜெட்டுக்கு அடிமையாகாமல் இருப்பதற்கான ஒரே வழி. 

மூன்று விரல்களை இணைத்துப் பயன்படுத்தும் வயது!

தங்கள் எண்ணங்களில் உருவாகிற விஷயங்களை, குழந்தைகளுக்குக் கைகளுக்கு மாற்றத் தெரிகிற பரிணாம வளர்ச்சி வருகிற கட்டம் இது. அதனால் நிறைய கிறுக்க ஆரம்பிப்பார்கள். கலரிங் புத்தகத்தில் கிறுக்கினாலும் சரி, சுவரில் கிறுக்கினாலும் சரி... கிறுக்கச் சுதந்திரம் கொடுங்கள்.

தொல்லை நல்லது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 14



குழந்தைகள் கட்டை விரல், ஆள்காட்டி விரல், நடு விரல் ஆகிய மூன்று விரல்களையும் ஒன்று சேர்த்து பல்பத்தையோ, பென்சிலையோ பிடித்துக் கிறுக்க ஆரம்பிப்பார்கள். இதை `ட்ரைபாடு கிராஸ்ப் சைல்டு டெவலப்மென்ட்’ (Tripod Grasp Child Development) என்போம். அதனால் 2 - 3 வயதில் விரல்களைப் பயன்படுத்த குழந்தைகளுக்குச் சொல்லித்தர ஆரம்பிக்க வேண்டும். பல்பம், கலர் பென்சில், ஸ்பூன், ஃபோர்க் போன்றவற்றைப் பிடிக்கச் சொல்லித்தரலாம். டம்ளரில் தண்ணீர் எடுத்துக் குடிப்பது, அளவில் பெரிய மணிகளைக் கோப்பது, பெரிய பட்டன்கள்கொண்ட சட்டைகளை (சில குழந்தைகள் மட்டும்) தானாகவே போட ஆரம்பிப்பது என்று உங்கள் பிள்ளைகளின் பிஞ்சுக் கைகள்  நிறைய வேலைகள் பழக ஆரம்பிக்கிற வயது இது.

வடிவங்கள், வண்ணங்கள்...

வட்டம், சதுரம், முக்கோணம் என்று வடிவங்களைக் குழந்தைகள் கற்றுக்கொள்ள ஆரம்பிப்பார்கள். பர்பிள், வயலெட், பிங்க் என்று ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாகத் தெரிகிற வண்ணங்களைக்கூட மிகச் சரியாகப் பிரித்து அறிந்து கற்றுக்கொள்வார்கள்.

எத்தனை வார்த்தைகள் பேசுவார்கள் தெரியுமா?

தொல்லை நல்லது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 14

இந்த வயதில் தினமும் 20 - 30 வார்த்தைகள் பேச ஆரம்பிப்பார்கள் குழந்தைகள். நம்மைப் போலவே பக்கவாட்டுச் சுவரைப் பிடித்துக்கொண்டு படியேற ஆரம்பிப்பார்கள். பின்னோக்கி நடப்பார்கள். உடலுறுப்புகளை அடையாளம் கண்டுபிடிக்க ஆரம்பிப்பார்கள். டிரெஸ் போட்டுவிட்டால், கழற்றிப்போட்டுவிட்டுச் சிரிப்பார்கள்.  இந்த வயதில்தான் ‘தண்ணி கொடு’, ‘சாப்பாடு கொடு’ என்று தங்களுடைய தேவைகளைக் கேட்க ஆரம்பிப்பார்கள். ‘அங்கே இருக்கிற பொருளை எடு’ என்பது போன்ற வேலைகளைச் செய்யவும் சொல்லித்தரலாம்.

கடிக்கிறார்களா... காரணம் இதுதான்!

‘பாப்பா சாப்பிடு’ என்றால் ‘நோ’, ‘அம்மு தூங்கு’ என்றால் ‘நோ’... இப்படி அவர்களுக்குப் பிடிக்காதவற்றை நீங்கள் சொல்லும்போதெல்லாம் ‘வேணா’, ‘வீணாம்’  என்று அவர்கள் மொழியில் ‘நோ’ சொல்லிவிடுவார்கள். கோபம், வெறுப்பு எல்லாவற்றையும் காட்ட ஆரம்பிப்பார்கள்.  அதன் வெளிப்பாடுதான் மற்றவர்களைக் கடிப்பது. 

தொல்லை நல்லது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 14

பகிர்ந்துகொள்ளப் பழக்குங்கள்!

பகிரக் கற்றுக்கொள்ளும் வயது இது. இப்போது இதைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்தால்தான்,  தனக்கு ஒரு தங்கையோ, தம்பியோ பிறக்கும்போது அவர்களுக்கு விட்டுக்கொடுப்பார்கள், தங்கள் பொருள்களைப் பகிர்ந்துகொடுப்பார்கள். உடன் பிறந்தவர்களுடன் ஏற்படும் எதிரி மனநிலையான `சிப்ளிங் ரைவல்ரி’ (Sibling Rivalry) வராமல் தடுக்க, இந்தப் பண்பை கற்றுக்கொடுப்பது மிக அவசியம்.

இது தவறு!

இரவு 12 மணிவரைக்கும் குழந்தைகளை விளையாடவிடுவது, காலை 8 மணி வரை தூங்கவிடுவது இரண்டுமே தவறுதான். இதனால் `கேஜி’ வகுப்பில் சேர்த்த பிறகு பள்ளிக்கூடத்துக்குக் கிளம்ப குழந்தைகள் கஷ்டப்படுவார்கள்.

தொல்லை கொடுக்கிறார்களா... நல்லது!


இந்த வயதில் குழந்தைகள் ‘ம்மா, ம்மா... ப்பா, ப்பா... இங்கே பாரேன்’ என்று உங்களை நச்சரித்துக்கொண்டே இருப்பார்கள். குழந்தைகள் இப்படி நடந்துகொள்ளும்போது சில பெற்றோர் எரிச்சலாகிவிடுவார்கள். ஆனால், உங்கள் பிள்ளை உங்களைத் தொந்தரவு செய்தால், உண்மையில் நீங்கள் சந்தோஷப்பட வேண்டும். இவையெல்லாம் குழந்தைகள், அவர்கள் உலகத்தில் உங்களை இழுக்கப் பார்ப்பதற்கான அறிகுறிகள். இப்படிச் செய்யாமல், தன்னுடைய உலகத்தில் இருப்பது, தனியாக யோசித்துக்கொண்டிருப்பது, தான் வழக்கமாகச் செய்கிற வேலையை அம்மாவோ, அப்பாவோ மாற்றினால் கோபப்படுவது, மற்ற குழந்தைகள் மேல் ஈடுபாடு இல்லாமல் இருப்பது என்று இருந்தால், அவை ஆட்டிசத்துக்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

அடிக்க ஒரு கை... அணைக்க ஒரு கை!


இந்த வயதுக் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சொல்லித் தருகிற நல்ல பழக்கங்களை தாத்தா, பாட்டிகள் செல்லம் கொடுத்து கெடுக்கக் கூடாது. பிறகு பொடிசுகள் அப்பா, அம்மாவின் பலவீனம் தாத்தா, பாட்டிதான் என்பதைப் புரிந்துகொண்டுவிடுவார்கள். அப்பா, அம்மா சொல்கிற நல்ல விஷயங்களைக் காதுகொடுத்துக் கேட்க மாட்டார்கள். `அடிக்க ஒரு கை, அணைக்க ஒரு கை’ என்று வளர்க்கவேண்டிய வயது இது.

(வளர்த்தெடுப்போம்...)

- ஆ.சாந்திகணேஷ்