
தனசேகர் கேசவலு, குழந்தைகள்நல மருத்துவர்
சென்ற இதழில் தாத்தா - பாட்டி செல்லம் பற்றிப் பேசி முடித்திருந்தேன். தாத்தா - பாட்டியின் (அவர்கள் இருக்கும் வீடுகளில்) செல்லமாக உங்கள் குழந்தைகள் இருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். வாண்டுகள் ஏன் உங்களிடம் இருப்பதைவிட அவர்களிடம் நெருக்கமாக இருக்கிறார்கள் என்று யோசித்திருக்கிறீர்களா? அவர்கள் குழந்தைகளுக்காக நேரம் செலவழிப்பதுதான் காரணம். உங்கள் குழந்தைகளுக்கான நேரத்தை நீங்கள் நிச்சயம் ஒதுக்கியே ஆகவேண்டிய வயது ஆரம்பித்துவிட்டது. ஏற்கெனவே அதைச் செய்துகொண்டு இருப்பவர்கள் இன்னும் அதிகப்படுத்துங்கள்.

பாராட்டுங்கள் பெற்றோர்களே!
இந்த வயதில் குழந்தைகளுக்குப் பாராட்டு ரொம்பப் பிடிக்கும். அவர்கள், க்ரேயான்ஸால் சுவரில் இரண்டு கோடுகள் போட்டாலும், கைதட்டிப் பாராட்டுங்கள். நிறங்களையோ, வடிவங்களையோ அவர்கள் சரியாகச் சொல்லும்போது உடனடியாக ஏதாவது பரிசு கொடுங்கள். அது உங்கள் முத்தமாகக்கூட இருக்கலாம். ஆனால், பரிசை உடனே கொடுங்கள். அப்போதுதான் குழந்தைகளுக்கு, ‘நான் இதைச் சரியாகச் செய்திருக்கிறேன்’ என்கிற எண்ணம் மனதில் அழுத்தமாகப் பதியும்.
தண்ணீர்... எச்சரிக்கை!
எல்லா பெற்றோர்களும் நிச்சயம் கவனமாக இருக்கவேண்டிய விஷயம் இது. 2 - 3 வயதுக்குள் இருக்கிற குழந்தைகள் துறுதுறுவென ஓடுவார்கள், வேக வேகமாக நடப்பார்கள். ஆனால், அவர்களுடைய குட்டிப் பாதங்களை உற்றுப் பார்த்தீர்களென்றால், அவை முழுமையாகத் தரையில் பதிந்திருக்காது. இப்படித் தரையில் பாதங்கள் பட்டும் படாமல் நடந்துகொண்டிருக்கிற குழந்தைகள் தண்ணீரிலும் விளையாடுவார்கள். பக்கெட்டில் இருக்கிற தண்ணீரைக் கண்டால் பொடிசுகள் குஷியாகிவிடுவார்கள் என்பது தெரிந்த விஷயம்தானே! அப்படி பக்கெட்டில் இருக்கிற தண்ணீரில் விளையாடிக் கொண்டிருக்கிற குழந்தை, தவறி தலைக்குப்புற தண்ணீர் பக்கெட்டுக்குள் விழுவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம். அப்படி விழுந்தால், அவர்களால் கத்தவும் முடியாது; தண்ணீருக்குளிருந்து வெளியே வரவும் தெரியாது. விளைவு... நினைத்துப் பார்க்கவே நடுக்கமாக இருக்கிறது அல்லவா? அதனால், 2-3 வயதுக் குழந்தை இருக்கிற வீடுகளில் குளியலறையின் தாழ்ப்பாளை எப்போதும் பூட்டிவையுங்கள். அது முடியவில்லையென்றால், பக்கெட், டிரம்களில் தண்ணீர் பிடித்து வைக்காமலாவது இருங்கள். இன்னொரு விஷயம், வெஸ்டர்ன் டாய்லெட்டில் கால் தவறி குழந்தை தலைகுப்புற விழுந்தாலும் ஆபத்துதான். இதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

மென்று சாப்பிடப் பழக்குங்கள்!
‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்பார்கள். நன்கு மென்று சாப்பிடக் கற்றுக்கொடுக்க வேண்டிய வயதும் இதுதான். முக்கியமாகப் பட்டாணி, காராமணி போன்ற கொஞ்சம் பெரிய அளவிலான பயறுகளை நன்றாக மென்று விழுங்கச் சொல்லிக் கொடுங்கள்.
வெந்நீர், சூடான பால் உஷார்!
உடைந்த பொம்மைகள், பட்டன் பேட்டரிகள், பென்சில், க்ரேயான்ஸ் என்று குழந்தைகளைக் காயப்படுத்தும், அவர்கள் மூக்கில் போட்டுக்கொள்ளக்கூடிய, விழுங்கிவிடக்கூடிய பொருள்களைப் பற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். அதனுடன் இப்போது இந்தத் தகவலையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பாதங்கள் தரையில் பாவாமல் நடக்கிற வயது இது என்பதால், அவர்கள் ஓடியாடுகிற இடங்களில் அல்லது அவர்கள் கைக்கெட்டும் உயரத்தில் வெந்நீர், பால் என சூடானவற்றை வைக்காதீர்கள். தப்பித் தவறி அவை குழந்தைகள் மீது பட்டுவிட்டால், ஆழமான கொப்புளங்கள் ஏற்பட்டுவிடும்... கவனம்.

காரில் செல்லும்போது!
வெளிநாடுகளில் குழந்தைகள் காரில் ஏறியவுடன் அவர்களுக்கு ஸீட் பெல்ட் அணிவித்துவிடுவார்கள். கண்ணாடியை ஏற்றி இறக்கும்போது கையைவிடுவது, கியரைத் தூக்கிவிடுவது, கார் ஓட்டுகிற அப்பாவின் மடியில் உட்கார அடம்பிடிப்பது என்றெல்லாம் காரை, குழந்தைகளின் விளையாட்டுத்திடலாக மாற்றாதீர்கள். இவை ஆபத்தாக மாறலாம். அப்பாவின் மடியில் குழந்தை உட்கார்ந்துகொண்டிருக்கையில் சடன் பிரேக் போடவேண்டிய நிலைமை வந்தால், காரின் ஸ்டீயரிங் குழந்தையின் நெஞ்சில் இடித்துவிடும், ஜாக்கிரதை.
(வளர்த்தெடுப்போம்...)
- ஆ.சாந்திகணேஷ், படம்: மதன்சுந்தர்
வளர்ச்சியில் தேக்கமா?!
க்ரேயான்ஸ், சாக்பீஸ் பிடித்து வரைந்துகொண்டிருந்த குழந்தை, திடீரென்று அவற்றையெல்லாம் செய்யாமல் இருக்கிறதா? நன்றாகச் செய்துகொண்டிருந்ததை செய்ய முடியாமல் போனால் அல்லது நிறுத்திவிட்டால் அது கவனத்துக்குரிய பிரச்னை. இதை நாங்கள் ‘லாஸ் ஆஃப் ஸ்கில்ஸ்’ என்போம். குழந்தையின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டிருந்தாலோ, அடுத்தகட்ட வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய பிரச்னை வந்திருந்தாலோ அல்லது மரபணு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருந்தாலோ இப்படி நிகழலாம். இது தீர்க்க முடியாததொரு பிரச்னையின் அறிகுறி. அதற்காக, ‘நேத்து ஸ்பூன்ல சாப்பிட்டான், இன்னைக்குச் சாப்பிடலை; என் பிள்ளைக்கு அந்தப் பிரச்னையா?’ என்றெல்லாம் பயப்பட வேண்டாம். தொடர்ந்து இரண்டு மாதங்கள் குழந்தையை கவனித்தால் மட்டுமே இந்தப் பிரச்னையைக் கண்டுபிடிக்க முடியும்.