Published:Updated:

கர்ப்ப காலம்... கவனம்... கவனம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கர்ப்ப காலம்... கவனம்... கவனம்...
கர்ப்ப காலம்... கவனம்... கவனம்...

கர்ப்ப காலம்... கவனம்... கவனம்...

பிரீமியம் ஸ்டோரி

ந்தப்பெண் ஒரு நிறைமாத கர்ப்பிணி. ‘இன்னும் சில  தினங்களில் பிரசவம்’ என்று மருத்துவர்கள் தேதி குறித்துவிட்டனர். விடுப்பு சொல்ல அலுவலகம் சென்றார். அலுவலகத்தில் தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தபோதே, திடீரென மயங்கிக் கீழே சரிந்தார். எல்லோருமே பதற்றமடைந்தனர். மருத்துவரிடம் அழைத்துச்சென்றனர். 

கர்ப்ப காலம்... கவனம்... கவனம்...

‘மைல்டு ஹார்ட் அட்டாக்’ என்றார் மருத்துவர். சிசேரியன் மூலம் குழந்தையை வெளியே எடுத்தனர். தாய், சேய் இருவருக்கும் தொடர் சிகிச்சை அளிக்க, இப்போது இருவரும் நலம்.

இதுகுறித்துக் கேள்விப்பட்டு `கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுமா?’ என்ற வினாவோடு மருத்துவர்களை அணுகினோம். ‘இதுபோன்ற நோயாளிகளை இப்போதெல்லாம் அதிகம் பார்க்கிறோம்’ என்றார்கள். உலக அளவில் பல நாடுகளிலும் கர்ப்ப கால மாரடைப்புகள் ஏற்படுவது அதிகரித்துவருகிறது என்றார்கள்.

`அந்தக் காலத்துல எங்க பாட்டி 12 பிள்ளைங்க பெத்தாங்க, நல்லாதானே இருந்தாங்க. அவங்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லையே’ என்று இதைப் படித்துக் கொண்டிருக்கும்போதே, தோன்றலாம். அதிக அளவில் இல்லாவிட்டாலும், அப்போதும் மாரடைப்பு சம்பவங்கள் இருந்திருக்கின்றன என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், வெளியில் தெரியவில்லை. அதோடு அதைக் கண்டறிகிற மருத்துவ வசதிகளும் அப்போது இல்லை. 

‘மாறிவிட்ட நம் வாழ்க்கை முறைதான் கர்ப்பிணிப் பெண்களிடையே அதிக அளவில் மாரடைப்புகள் உண்டாகக் காரணம்’ என்கிறார்கள் மருத்துவர்கள். கர்ப்பிணிகளுக்கு இரண்டு விதமான இதய பாதிப்புகள் ஏற்படுகின்றன.

ஒன்று, பிரசவத்தின்போது குழந்தையைக் கர்ப்பப்பையிலிருந்து வெளியேற்ற தன்னுடைய ஒட்டுமொத்த பலத்தையும் தாய் பிரயோகிக்கிறாள். அப்போது ஏற்படும் அழுத்தத்தினால் இதயத்துக்குச் செல்லும் முக்கியமான ரத்தக்குழாயில் கீறல் ஏற்படுகிறது. அந்தக் கீறலால் ரத்தக்குழாய்களில் ரத்தம் உறைந்து மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த வகை சம்பவங்கள் மிகவும் அரிதாகவே நடைபெறுகின்றன. ஆனால், இறப்பு விகிதம் அதிகம்.

கர்ப்ப காலம்... கவனம்... கவனம்...

இரண்டாவது, கர்ப்ப காலத்தில் இதயத்தில் உள்ள தசைகள் வலுவிழப்பதால், ரத்தத்தைப் பம்ப் செய்யும் பணி கடினமாகி, மாரடைப்பு ஏற்படும். இதன் பெயர் ‘கார்டியோமயோபதி’ (Cardiomyopathy). துரதிர்ஷ்டவசமாக இந்த வகையான மாரடைப்புகள்தான் அதிகரித்து வருகின்றன.

ஏன் மாரடைப்பு?

திருமணத்தையும் குழந்தை பெறுவதையும் தள்ளிப்போடுவது இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இருபதுகளில் உள்ள பெண்களைவிட 35 முதல் 39 வயதுக்குட்பட்ட பெண்கள் கருவுறும்போது, அவர்களுக்கு மாரடைப்புக்கான வாய்ப்பு 5 மடங்கு அதிகமாகிறது. 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 10 மடங்கு என்கிறார்கள்!

பிறவியிலேயே இதய நோய், மரபணு தொடர்பான நோய்கள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவையும் கர்ப்ப காலத்தில் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன. “கர்ப்பிணிகள் எல்லோருக்கும் மாரடைப்பு வராது. நம் குடும்பத்தில் யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டிருந்தால், நமக்கு கர்ப்ப காலத்தில் மாரடைப்பு வரலாம். கர்ப்பமாக இருக்கும்போது சர்க்கரை நோய் இருந்தாலும், அதிக கொலஸ்ட்ரால் இருந்தாலும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

ஆனால், சில பெண்களுக்கு எந்தக் காரணமும் இல்லாமல் கர்ப்ப காலத்தில், ‘கார்டியோமயோபதி’ பாதிப்பு ஏற்படும். குழந்தை வயிற்றில் இருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டால் சிசேரியன் மூலம் குழந்தையை வெளியே எடுத்துவிட்டு, மாரடைப்புக்கான சிகிச்சையில் கவனம் செலுத்தலாம். மாரடைப்பு ஏற்படும்போது குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்துவிட்டால், மாரடைப்புக்கு சிகிச்சை அளிப்பது சுலபம்.

ஆனால், குழந்தை வயிற்றிலிருந்து வெளியே வந்துகொண்டிருக்கும் சமயம் தாய்க்கு மாரடைப்பு ஏற்பட்டால், அது தாயை மட்டுமன்றி, குழந்தையையும் பாதிக்கும். குழந்தைக்கும் சேர்த்துத் துடித்துக்கொண்டிருக்கும் தாயின் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டால், குழந்தைக்குச் செல்ல வேண்டிய ஆக்சிஜன் முழுமையாகச் செல்லாது.

இதயத்தில் உள்ள தசைகள் வலுவிழப்பதால் ஏற்படும் மாரடைப்பைத் தாமதமாகக் கண்டறிந்தால் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.  கர்ப்பகாலத்தின் கடைசி மூன்று மாதங்களில் பெண்கள் இதயத்தை, ‘எக்கோ கார்டியோகிராம்’ ஸ்கேன் செய்துகொள்ள வேண்டியது அவசியம்’’ என்கிறார், இதய நிபுணர் ஆர்.சிவக்குமார்.

எம்போலிசம்

மாரடைப்பின் வகையைச் சேராத, ஆனால் இதயத்தில் அடைப்பை ஏற்படுத்தும் ‘எம்போலிசம்’ (Embolism) என்ற பிரச்னையும் கர்ப்பிணிகளை பாதிக்கும் பிரச்னைகளில் முன்னணியில் உள்ளது. குழந்தைக்கான ஊட்டச்சத்தை அளிக்கும் வகையில், கர்ப்பகாலத்தில் தாயின் ரத்தத்தின் அளவு 30 முதல் 50 சதவிகிதம் வரை அதிகரிக்கும். இதயமும் 40 சதவிகிதம் அதிகமான ரத்தத்தைப் பம்ப் செய்யும். வழக்கத்தைவிட அதிகமாக வேலை செய்வதால், இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய்கள் தளர்ச்சியடையும். தளர்ந்த ரத்தக்குழாய்களில் அதிகமான அளவு ரத்தம் உட்புகும். இதனால் ரத்த அழுத்தம் குறைந்து ரத்தம் உறையும் தன்மை ஏற்படும்.

நுரையீரலிலிருந்து இதயத்துக்குச் செல்லும் ஒன்று அல்லது அதற்கு அதிகமான ரத்தக்குழாய்களில் ரத்தம் உறைந்து அடைப்பை ஏற்படுத்தி, இதயத்தின் இயக்கத்தை பாதிப்பதே, ‘எம்போலிசம்.’ மாரடைப்பைக் காட்டிலும் எம்போலிசத்தினால் இதயம் பாதிக்கப்படுவது அதிகரித்துவருகிறது.

என்ன செய்யலாம்?

இது தொடர்பாக மகப்பேறு மருத்துவர் டாக்டர் காவ்யா கிருஷ்ணனிடம் பேசினோம். “கர்ப்ப காலத்தில் பெண்களின் ரத்தம் அடர்த்தியாக இருக்கும். அதனால் இந்த பாதிப்பு எளிதில் ஏற்படுகிறது. கார்டியோமயோபதி பாதிப்பினால் 10-ல் 1 கர்ப்பிணி பாதிக்க வாய்ப்புள்ளது. எம்போலிசத்தினால் 10-ல் இருவர் பாதிக்கப்படுகின்றனர். இரண்டுமே கர்ப்பிணிகளுக்கு ஆபத்தானது.

மாரடைப்பு ஏற்படும் சமயங்களில் சுகப்பிரசவத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தால், உயிர்களை இழக்க நேரிடும். அதனால் சிசேரியன்தான் பெரும்பாலும் மருத்துவர்களின் சாய்ஸ். தாயையும் சேயையும் காப்பாற்றுவதற்கான பாதுகாப்பான வழி அதுதான். சுகப்பிரவத்துக்கான முயற்சியில் இருக்கும்போது, மாரடைப்பு ஏற்பட்டால் குழந்தை இறக்கவும் வாய்ப்புள்ளது. ஒருவேளை குழந்தை பிறந்துவிட்டால் அதன் மூளை வளர்ச்சி பாதிக்கும்.

இன்றைய பெண்கள் கருத்தரித்த உடனேயே தங்கள் அன்றாடப் பணிகளைக்கூட மூட்டைகட்டி வைத்துவிட்டு, ஓய்வெடுக்கத் தொடங்கிவிடுகின்றனர். சிலர் எப்போதும் பெட் ரெஸ்டிலேயே இருக்க விரும்புகின்றனர். இதுதான் மாரடைப்புக்கான முக்கியக் காரணம். கர்ப்பமாகிவிட்டால் ஹார்மோன் மாற்றம் மற்றும் வயிறு பெரிதாவது போன்ற உடலியல் மாற்றங்கள் ஏற்படும். இதனைச் சமன்படுத்த சுறுசுறுப்பாக இயங்கவேண்டும். அதுவே ஆரோக்கியத்துக்கான வழி. மருத்துவர் ஓய்வில் இருக்கச் சொன்னால் மட்டுமே ஓய்வில் இருக்க வேண்டும்” என்றார்.

உடல்நலத்தில் அக்கறையற்றதாக மாறிக்கொண்டிருக்கிறது நம் வாழ்க்கை முறை. சென்ற தலைமுறைகளில் இல்லாத புதியவகை நோய்கள் நம்மைத் தாக்கத் தொடங்கியிருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியால் உடல்சார்ந்த இயக்கங்களைக் குறைத்துக்கொண்டதே இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம். கர்ப்பிணிகள் அதிக கவனமெடுத்து மருத்துவர் உதவியோடு உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதையும், உணவுப்பழக்கங்களில் கவனம் செலுத்துவதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஆபத்து நமக்குத்தான்.

ஜெனி ஃப்ரீடா

கர்ப்ப காலம்... கவனம்... கவனம்...

மாரடைப்பு ஏற்பட்ட பெண்கள் மீண்டும் கருத்தரிக்கலாமா?

ர்ப்பகாலத்தில் ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டால் மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகமிக அதிகம். எனவே, மருத்துவர்கள் பெரும்பாலும் அடுத்த கருத்தரிப்புக்குப் பரிந்துரைப்பது இல்லை. ஆனால், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருப்பவர்கள், இதயநிபுணர், மகப்பேறு நிபுணர், குடும்ப மருத்துவர் அனைவரிடம் ஒப்புதல், ஆலோசனைகளைப் பெற்ற பின்பே கருத்தரிக்கலாம். மாரடைப்பு சிகிச்சைக்காக எடுத்துக்கொள்ளும் சில மருந்துகளின் தன்மை தாய்ப்பாலில் கலந்திருக்கும். அதனால் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதையும் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றே செயல்படுத்த வேண்டும்.

கர்ப்ப காலம்... கவனம்... கவனம்...

கர்ப்ப காலத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள்

*சோர்வு

*கை கால்களில் அதிக வீக்கம்

*எடை அதிகரித்தல்

*தொடர் இருமல்

*நெஞ்சு வலி

*இதயத்துடிப்பு வேகமாக இருத்தல்

*கழுத்து நரம்புகளில் வீக்கம்

*குறைந்த ரத்த அழுத்தம் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு