
உடலுக்கும் தொழிலுக்கும் - 1புதிய பகுதி!

ஐ.நா சபையில் 2016-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று இரண்டு மணி நேரம் கர்னாடக இசைக் கச்சேரி. ஐ.நா சபை உறுப்பினர்கள் அனைவரையும் குரலால் மெய்மறக்கச் செய்தார் சுதா ரகுநாதன். நிகழ்ச்சி முடிந்ததும் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. ஆனால், சுதா ரகுநாதனின் உடல்நிலை கச்சேரி நடைபெறுவதற்கு முன்னால் எப்படி இருந்தது என்பது அவரது கச்சேரியை ரசித்துக் கேட்டவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
“ஐ.நா.சபையில் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு சில நாள்களுக்கு முன்னால், ஒவ்வாமையும் சளித் தொந்தரவும் ஏற்பட்டன. ஒரு வாரம் மருந்து சாப்பிட்டும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. ஐ.நா சபை நிகழ்ச்சி என்பதால் ரத்துசெய்யவும் முடியாது. அந்தப் பிரச்னையோடு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டேன். திட்டமிட்டதுபோல் பாடி முடித்தேன். உடல்நிலை மட்டும் சரியாக இருந்திருந்தால், அந்த நிகழ்ச்சியில் இன்னும் நன்றாகப் பாடியிருக்கலாமே என்ற வருத்தம் இன்றும் இருக்கிறது” என்கிறார் சுதா ரகுநாதன்.

“பாடகர்கள் வெறும் குரல்வளத்தை மட்டும் பாதுகாத்தால் போதாது. முழு உடலையும் ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் வைத்திருக்கவேண்டியது அவசியம். உடல் எடையை அதிகரிக்கவிடக் கூடாது. வயிற்றுப் பகுதியில் சதை போட்டுவிட்டால், மூச்சைப் பிடித்துப் பாடுவது சிரமமாகிவிடும். சரியான நிலையில் உட்கார்ந்து பாட வேண்டும். கூன் போட்டு வளைந்த நிலையில் உட்கார்ந்து பாடினால், தோள்பட்டைவலி, இடுப்புவலி போன்றவை ஏற்பட்டுவிடும். கச்சேரிகளில் மணிக்கணக்காகச் சம்மணம் போட்டு அமர்வதால் கால் நரம்பு இழுத்துக்கொள்வது, தொடை பிடித்துக்கொள்வது போன்ற தொந்தரவுகள் ஏற்படும். அதனால் நிகழ்ச்சி முடிந்த பின்னர், கால், தொடையை இலகுவாக்குவதற்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அதிக நேரம் பாடுவது, ஒரே நாளில் இரண்டு கச்சேரிகளில் பாடுவது, குரலுக்கு அதிகச் சிரமம் கொடுப்பது, கத்திப் பாடுவது போன்றவை குரல்வளையைச் சேதப்படுத்திவிடும். மேடையில் உட்காரும்போது நம்முடனிருக்கும் பிற கலைஞர்களுக்குச் சளியோ, காய்ச்சலோ இருந்தால், அது நமக்கும் பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது. கைகளின் மூலமாகவும் கிருமிகள் பரவும் என்பதால், நான் பிறருடன் கைகுலுக்குவதைத் தவிர்த்துவிடுவேன். நம் கலாசாரப்படி, இருகரம் கூப்பி ‘வணக்கம்’ தெரிவிப்பேன். கச்சேரி முடிந்து வீடு திரும்பியதும் கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவிவிடுவேன். தொற்றுநோய்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள இது எனக்கு உதவுகிறது.

உணவுகளில் கட்டுப்பாடு தேவையில்லை. ஓடியாடி சம்பாதிப்பதே மூன்று வேளை சாப்பிடுவதற்குத்தான். அதிகப் புளிப்பான உணவுகளைச் சாப்பிடுவது, எப்போதும் குளிர்ந்த நீரையே குடிப்பது, சிட்ரிக் ஆசிட் நிறைந்த எலுமிச்சைச் சாறு, அதிக காரமான மசாலா, எண்ணெய் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடுவது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. வயிறு நிறைய சாப்பிட்டால், சிறிது ஓய்வெடுக்கத் தோன்றும். உடலிலிருக்கும் ஆற்றல் அனைத்தும் சாப்பிட்ட உணவைச் செரிப்பதற்குச் செலவழிந்துவிடும். குறைவாகச் சாப்பிட்டால், செரிமானம் கட்டுப்படுத்தப்பட்டு, கச்சேரியில் பாடுவதற்கு போதுமான ஆற்றல் கிடைக்கும். பாடுவதில் கவனம் செலுத்த முடியும். பாடும்போது மூச்சுவிடுவதும் நம் கட்டுப்பாட்டிலிருக்கும்.
கச்சேரிகளின்போது, அரை மணி நேரம் முன்னதாக கச்சேரி முடியும்வரை தாக்குப்பிடிக்கும் அளவுக்குச் சாப்பிடுவேன். கச்சேரிக்கு நடுவில் சீரகம் போட்டுக் காய்ச்சிய இளஞ்சூடான நீரை அருந்துவேன். அது வயிற்றில் அமிலம் சுரப்பதைத் தடுக்கும். பனிப் பிரதேசங்களுக்குச் செல்லும்போது, காதில் பஞ்சு, கை உறைகள், கழுத்துப் பகுதியை மூடுவது போன்று சால்வை, கால்களுக்கு சாக்ஸ் என முன் தயாரிப்புகளுடன் செல்வேன்.
வெளிநாடுகளுக்குச் செல்லும்போது நேர வேறுபாடு காரணமாக தூக்கம் பாதிக்கப்படும். போதுமான அளவு தூக்கம் இல்லையென்றால், குரல்வளையும் பாதிக்கும். தூக்கம் குறைந்தால், ஆற்றல் குறையும். உடல் விழிப்புநிலையில் இருக்காது. சோர்வாக இருப்பதுபோலவே இருக்கும். அதனால் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது இரவுதான் தூங்க வேண்டும் என்று நினைக்காமல், தூக்கம் வரும்போது தூங்கி ஓய்வெடுத்துவிடுவேன். கச்சேரிகள் அதிகம் இருக்கும்போது கச்சேரிகளிலும் பாடி, வீட்டிலும் பயிற்சி என்ற பெயரில் அதிக நேரம் பாடினால் குரல் பாதிக்கும். அதனால் கச்சேரிகளுக்கு சில நாள்களுக்கு முன்னதாகவே நன்றாகப் பாடி பயிற்சி செய்துவிடுவேன். கச்சேரி நடைபெறும் வேளைகளில் வீட்டில் ‘மௌனப் பயிற்சி’ செய்து கொள்வேன். ‘மௌனப் பயிற்சி’ என்பது பாடலை மனதில் நிறுத்தி, மௌனமாகப் பாடிப் பார்ப்பது. வாய்விட்டுப் பாடாமலிருந்தாலே குரலுக்கு பாதிப்பு ஏற்படாது.
பின்லாந்து நாட்டில், பெரிய இசைத் திருவிழாவில் எனது நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படகுப் பயணம் ஏற்றுக்கொள்ளாமல் வாந்தியெடுக்கத் தொடங்கிவிட்டேன். அடுத்த நாள் நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுவிட்டன. அங்கிருக்கும் மருத்துவரைப் போய்ப் பார்த்தேன். அவர் கொடுத்த மருந்தில் வாந்தி நின்றுவிட்டது.
ஆனால் முந்தைய நாள் 10-15 முறை வாந்தி எடுத்திருந்ததால், உடலிலுள்ள நீர்ச்சத்து குறைந்துவிட்டது. மிகவும் பலவீனமான நிலையிலும், பாடி நிகழ்ச்சியை நல்லபடியாக நிறைவுசெய்தேன். உடல்நிலை எப்படியிருந்தாலும், மேடையில் அமர்ந்து ரசிகர்களைப் பார்த்துவிட்டால், அந்த உற்சாகத்தில் உடல்நிலை மறந்துவிடும். இந்தத் துறையில் சாதிக்க நினைப்பவர்கள் குரல்வளத்தை அலட்சியமாகக் கையாளக் கூடாது. சரீரத்தையும் சாரீரத்தையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவசியம்” என்று அறிவுறுத்துகிறார் சுதா.

குரலுக்குத் தேவை ஓய்வு!
பாடகர்களுக்கு ஏற்படும் குரல்வளை தொடர்பான பிரச்னைகள், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவர் எல்.வேலுமணி விளக்குகிறார்.
“நம் குரல்வளை ‘வி’ வடிவத்திலிருக்கும். அதிகச் சத்தத்தில் பேசும்போதோ, பாடும்போதோ குரல்வளையில் உரசல் அதிகரித்து, பரு (Nodule) போன்ற புடைப்பு ஏற்படும். அதை ‘சிங்கர்ஸ் நாடியூல்’ என்றும் கூறலாம். இந்த பாதிப்பு சிறிய அளவில் இருந்தால், குரலுக்கு போதுமான ஓய்வு கொடுத்தாலே போதும், புடைப்பு தானாகவே சரியாகிவிடும். ஆனால், நாடியூலின் அளவு அதிகரித்து, அதனால் குரல் மாற்றம் தொடர்ந்தால், வீடியோ எண்டோஸ்கோப்பி மூலம் பாதிப்பைக் கண்டறிய வேண்டும். பிறகு, லேசர் அறுவை சிகிச்சையின் மூலம் நாடியூலை அகற்ற வேண்டும். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் குரலுக்கு ஓய்வு கொடுத்தால், முழுமையாக குணமடைந்துவிடலாம்.
குரலின் தன்மையும் மாறாது. சிலருக்குக் குரல்வளையில் அசாதாரண திசு வளர்ச்சி (Polyp) ஏற்பட்டு, அது கட்டிபோல மாறிவிடும். இந்தப் பிரச்னைக்கும் லேசர் அறுவை சிகிச்சை மூலம் தீர்வுகாணலாம். அறுவை சிகிச்சைக்குப் பிறகு பேச்சுப்பயிற்சி செய்வது குரலின் தரத்தை மீட்டெடுக்கும்.குரல்வளையில் நீர் கோப்பதால் ஏற்படும் வீக்கமும் (Reinke’s Edema) இசைக்கலைஞர்களுக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள், குரலுக்கு ஓய்வு ஆகியவற்றின் மூலம் தீர்வுகண்டுவிடலாம். இசைக்கலைஞர்கள் நிகழ்ச்சி இல்லாதபோது அதிகமாகப் பேசுவது, சத்தமாகப் பேசுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். குரல்வளைக்கு அதிக ஓய்வு கொடுக்க வேண்டும். குரல்வளையில் ஒவ்வாமை, நோய்த்தொற்று போன்றவை ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். அதிகக் குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். குளிரில் வெளியே போகாமலிருந்தால் குரல்வளையைப் பாதுகாக்க முடியும். தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல், போதிய இடைவெளியில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்.’’
வந்தனை செய்வோம்...
-ஜெனி ஃப்ரீடா, படங்கள்: கே.ராஜசேகரன்