Published:Updated:

"வாழ்ந்து முடிஞ்சவ நான்... எம்புள்ள வாழ வேண்டியவன்..." - சிறுநீரக தானம் கொடுத்து மகன் உயிர்மீட்ட தாய்!

"என் மகனே, 'நீயெல்லாம் தரவேண்டாம்மா'ன்னு சொன்னான். அக்கம்பக்கத்துல உள்ளவங்ககூட, 'உன் மகனாவே இருந்தாலும், உன் சிறுநீரகத்தை தரலாமா?'ன்னு என்னென்னவோ சொல்லி, என் மனசைக் கலைக்கப் பார்த்தாங்க. ஆனா, 'வாழ்ந்து முடிச்ச பொம்பள நான். என் மகன் வாழ வேண்டியவன்'னு வைராக்கியமா இருந்துட்டேன்."

"வாழ்ந்து முடிஞ்சவ நான்... எம்புள்ள வாழ வேண்டியவன்..." - சிறுநீரக தானம் கொடுத்து மகன் உயிர்மீட்ட தாய்!
"வாழ்ந்து முடிஞ்சவ நான்... எம்புள்ள வாழ வேண்டியவன்..." - சிறுநீரக தானம் கொடுத்து மகன் உயிர்மீட்ட தாய்!

'தாயிற் சிறந்த கோயிலும் இல்லை' என்ற வரிகளுக்கு இன்னும் பொருள் சேர்த்து எல்லோரையும் நெகிழ வைத்திருக்கிறார் சுப்புலட்சுமி. 33 வயதில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து, உயிருக்குப் போராடிய மகனுக்கு, சற்றும் யோசிக்காமல் தனது சிறுநீரகத்தைத் தானமாக வழங்கி உயிர்மீட்டிருக்கிறார் இந்தத் தாய். 

கரூர் மாவட்டம், கடவூர் பக்கமுள்ள வீராணம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. மூன்று வெள்ளாடுகளும், ஆஸ்பெஸ்டாஸ் வேயப்பட்ட சிறு வீடும்தான் அவரது சொத்து. வறுமை நிரந்தரமாக இவரது வீட்டில் குடியிருக்கிறது. மகன் குமார் சென்ட்ரிங் வேலைக்குச் செல்கிறார். அதுமட்டும்தான் ஜீவனம். குமாருக்கு திருமணமாகி விட்டது. மனைவி பெயர் ரேணுகா. 4 வயதில் ஹாசினி என்ற மகள் இருக்கிறார். 

திடீரென்று, குமாருக்கு உடல்நலம் குன்றியது. பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு சிறுநீரகங்களும் முழுவதுமாக பழுதடைந்து விட்டதாகவும் சிறுநீரகம் தானமாகக் கிடைத்தால் மட்டுமே அவரது உயிரைக் காப்பாற்ற முடியும் என்றும் சொல்லிவிட்டார்கள். மொத்தக் குடும்பமும் இடி விழுந்த ஓடாக நொறுங்கிப்போனது. தன் மகனை மீட்கத் தனது சிறுநீரகத்தைத் தானமாக வழங்க முடிவு செய்தார் சுப்புலட்சுமி. அவரது வலதுபக்க சிறுநீரகம் தானமாகப் பெறப்பட்டு குமாருக்குப் பொருத்தப்பட்டது. தற்போது உயிர் மீண்டிருக்கிறார் குமார். 

சுப்புலட்சுமியைச் சந்தித்தோம். கண்கலங்கப் பேசினார் அவர். 

"2017 கடைசியில திடீர்ன்னு புள்ளைக்கு உடம்பு முடியாமப் போச்சு. ரொம்பவே சோர்ந்து போனான். டாக்டர்கிட்ட அழைச்சுட்டுப் போனேன். ரெண்டு சிறுநீரகமும் கெட்டுப்போச்சுன்னு டாக்டர் சொன்னார்.  நானும், மருமகளும் பதறிப் போனோம். கோயமுத்தூருக்கு அவனை அழைச்சுட்டு போனோம். 'உடம்புல உப்போட அளவு 300 வரை இருக்கு. இருக்குற கொஞ்ச காலத்துக்கு டயாலிசிஸ் பண்ணலாம்.  உயிர் பிழைக்கனும்ன்னா, அவருக்கு யாராச்சும் சிறுநீரகம் தானமா வழங்கனும்'ன்னு அங்கே சொன்னாங்க. அதைக் கேட்டதும், நான் கொஞ்சமும் யோசிக்கலை. 'நான் தர்றேன் டாக்டர்'னு என்னையறியாம கத்திட்டேன். கடவுள் புண்ணியத்துல என் சிறுநீரகம் அவனுக்கு எல்லா வகையிலும் பொருந்திப் போச்சு. திருச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையிலதான் ஆபரேஷன் பண்ண சொன்னாங்க. கடவுள் புண்ணியத்துல நல்லபடியா ஆபரேஷன் பண்ணி, என் சிறுநீரகத்துல ஒண்ணை எடுத்து, அவனுக்கு பொருத்தி என் மகனை காப்பாத்திட்டாங்க. 

என் மகனே, 'நீயெல்லாம் தரவேண்டாம்மா'ன்னு சொன்னான். அக்கம்பக்கத்துல உள்ளவங்ககூட, 'உன் மகனாவே இருந்தாலும், உன் சிறுநீரகத்தை தரலாமா?'ன்னு என்னென்னவோ சொல்லி, என் மனசைக் கலைக்கப் பார்த்தாங்க. ஆனா, 'வாழ்ந்து முடிச்ச பொம்பள நான். என் மகன் வாழ வேண்டியவன்'னு வைராக்கியமா இருந்துட்டேன். நான் இவனைப் பெத்தப்ப அடைஞ்ச சந்தோஷத்தைவிட, இப்போதான் அதிகமா சந்தோஷப்படுறேன்" என்று குரல் உடைந்து கண்ணீர் சிந்துகிறார். 

தொடர் சிகிச்சையால் சற்று சோர்ந்து போயிருந்த குமார் நெகிழ்ச்சியாகப் பேசினார்.  

"எனக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. சென்ட்ரிங் வேலை வெயில்ல பார்க்குற வேலை. அதிகம் தண்ணீர் குடிக்காததால இப்படி ஆயிருச்சுன்னு சொல்றாங்க. ரெண்டு சிறுநீரகமும் கெட்டுப்போச்சுன்னு சொன்னதும் உலகமே தலைகீழாயிட்ட மாதிரியிருந்துச்சு. என் வருமானத்தை மட்டுமே நம்பி குடும்பம் இருக்கு. நான் போயிட்டா, மொத்தக் குடும்பமும் நடுத்தெருவுக்கு வந்திருமேன்னு கலங்கிப் போனேன். 'அதுக்காச்சும் உயிர் பிழைக்கனும் கடவுளே'னு ஊர்பட்ட சாமிகளை வேண்டிக்கிட்டேன். அந்த சாமிகள்தான், இந்த மாதிரித் தாயை எனக்கு கொடுத்து, அவர் மூலமா சீக்கிரமே போகவிருந்த உயிரை மீட்டிருக்கு. எங்கம்மா எனக்கு கொடுத்திருக்கிறது ரெண்டாவது உசுரு. மருத்துவமனையில, எனக்கு பக்கத்து பெட்டுல இருந்தவருக்கு, எவ்வளவு போராடியும் அவங்க அம்மா சிறுநீரகத்தை தானமா தரலையாம். அதனால், வெளியில காசுக்கு வாங்கி பொருத்தினாங்க. ஆனா, அவருக்குச் சரியாகலை.

ஆனா, எங்கம்மா எனக்குச் சிறுநீரகத்தைத் தந்து, என்னை காப்பாத்திட்டாங்க. அதற்கு கைமாறு செய்ய நான் ஏழேழு ஜென்மத்துக்குப் பிறப்பு எடுக்கனும். அத்தனை ஜென்மத்துலயும் அவங்களுக்கு பணிவிடை செய்யனும். எனக்கு நடந்த ஆபரேஷனுக்கு மூன்றரை லட்சம் செலவாச்சு. மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலமா அதைச் சரி செஞ்சுட்டோம். ஆனா, டயாலிசிஸ் பண்ணியது, மாறி, மாறி மருத்துவமனைகளுக்கு போனதுன்னு இதுவரை அஞ்சு லட்சம் வரை செலவாகியிருக்கு. கடன் வாங்கிதான் செலவழிச்சோம். வருமானமே இல்லை. இப்போ வாரத்திற்கு ஒருதடவை திருச்சிக்கு செக்கப்புக்குப் போகவேண்டியிருக்கு. மேலும் மேலும் கடன் ஏறிக்கிட்டே இருக்கு. 'இப்படி கடன் வாங்குறதுக்கு பேசாம செத்துருக்காலாமோ?'னுகூட நினைக்க தோணுது. கோடீஸ்வரங்களுக்கு வரவேண்டிய பிரச்னை இது. எனக்கு வந்திருக்கு. இப்படி இருந்துகிட்டு, எப்படிக் குடும்பத்தை பழையபடி நகர்த்த போறோம்னு தெரியலை. உயிர் பிழைச்சும் குடும்பத்துக்குப் பாரமா போயிட்டோமோன்னு வருத்தமாயிருக்கு சார்..." - குலுங்கி அழுகிறார் குமார். 

அழும் மகனின் தலைவருடி தோள் சாய்த்துக்கொண்டு தனது முந்தானையால் கண்ணீரைத் துடைக்கிறார் சுப்புலட்சுமி. அந்த அரவணைப்பில் "நானிருக்கேண்டா... கவலைப்படாதே" என்கிற ஆறுதல் படிந்திருக்கிறது. அந்த நொடியில், ரமேஷ்வைத்யா எழுதிய ஒரு கவிதை நம் மனதில் இழையோடுகிறது.

 "அன்பு என்ற தலைப்பில்
 சிறு கவிதை கேட்டார்கள்
 உடனே 'அம்மா' என்றேன்
 கேட்டது அம்மா என்றால்
 இன்னும் சுருங்கச்
 சொல்லி இருப்பேன்
 'நீ' என்று!"