Published:Updated:

பிரசவ வலி, பொய் வலி... அடையாளம் காண்பது எப்படி? - மருத்துவர் ஆலோசனை!

காய்ச்சல், இருமல் போன்ற மிகச்சாதாரணமான பிரச்னைகளுக்கே மருத்துவரிடம் செல்லத் துடிக்கிறோம். ஆனால், பெண்ணுக்குக் கர்ப்ப காலத்தில், வயிற்றுப் பகுதியைச் சுற்றித் திடீரென்று தாங்கமுடியாத வலி ஏற்படும்போது என்ன உணர்வு ஏற்படும்.

பிரசவ வலி, பொய் வலி... அடையாளம் காண்பது எப்படி? - மருத்துவர் ஆலோசனை!
பிரசவ வலி, பொய் வலி... அடையாளம் காண்பது எப்படி? - மருத்துவர் ஆலோசனை!

ரு பெண் தாய்மையடையும் நிகழ்வு குடும்பத்தினருக்குக் கொண்டாட்டமாக இருக்கலாம். ஆனால், கர்ப்ப காலம் முழுவதும் பெண்ணின் மனதிலும் உடலிலும் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்பதை நாம் புரிந்துகொண்டிருக்கிறோமா?

காய்ச்சல், இருமல் போன்ற மிகச்சாதாரணமான பிரச்னைகளுக்கே மருத்துவரிடம் செல்லத் துடிக்கிறோம். ஆனால், பெண்ணுக்குக் கர்ப்ப காலத்தில், வயிற்றுப் பகுதியைச் சுற்றித் திடீரென்று தாங்கமுடியாத வலி ஏற்படும்போது என்ன உணர்வு ஏற்படும்? அது பிரசவ வலியாக இருக்குமோ என்று நினைக்கும் வண்ணம் விட்டு விட்டு வலி வரும். அதை எத்தனைப் பேர் அறிவோம்? 

"ஆம்‌... ஐந்து அல்லது ஆறு மாதத்திலிருந்தே பிரசவ வலி போன்ற தன்மைகளைக் கொண்ட வலி உணர்வு அவ்வப்போது ஏற்படலாம்!" என்கிறார் மகப்பேறு மருத்துவர் கிருத்திகா மீனாட்சி. 

கர்ப்ப காலத்தில் ஏற்படும் வலிகளைப் பற்றி விரிவாகப் பேசினார் அவர். ``கர்ப்ப காலத்தில் ஏற்படும் வலியை `ஃபால்ஸ் பிரெக்னென்சி பெய்ன்' என்பார்கள். இது பெரும்பாலும் எல்லாப் பெண்களுக்கும் ஏற்படக்கூடிய இயல்பான ஒன்றுதான். எனவே, இத்தகைய வலியைக் கண்டு பதற்றமடையவோ, பயம் கொள்ளவோ தேவையில்லை.

கர்ப்பப்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள தசைகள் பிரசவத்துக்காக தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும் நிலையில் ஏற்படுவதே இத்தகைய வலி உணர்வு. `ஃபால்ஸ் பிரெக்னென்சி பெய்ன்' எனப்படும் இந்த வலி உணர்வுக்கும் உண்மையான பிரசவ வலிக்கும் சில நுணுக்கமான வித்தியாசங்கள் உள்ளன. அவற்றைத் தெரிந்துகொண்டால் மிக எளிதாக ஃபால்ஸ் பிரெக்னென்சி பெய்னை அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

உண்மையான பிரசவ வலிக்கு முன்னர் ஏற்படும் இத்தகைய வலி உணர்வானது, கர்ப்பப்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள தசைப்பகுதிகளில் ஏற்படும் சுருக்கத்தின் (Contractions) விளைவு என்று சொல்லலாம். பொதுவாக மேல்வயிற்றில் தொடங்கும் இந்த வலி உணர்வு, கீழ் வயிறு, தொடை வரை பரவலாம். `பளீர் பளீர்' என்று உணரப்படும் இந்த வலி நம் உடலின் நிலையை மாற்றிக்கொள்ளும்போது சரியாகிவிடும். பிரசவ வலியானது, நாம் உடலின் நிலையை மாற்றினாலும் வலியின் அளவிலோ தன்மையிலோ எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்தாது. 

ஃபால்ஸ் பிரெக்னென்சி பெய்னில் வலி உணர்வு விட்டுவிட்டு இருக்கும். ஒருமுறை வலி உணர்வு வருவதற்கும் அடுத்தமுறை வருவதற்கும் இடையிலான இடைவெளி மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் பிரசவ வலியின்போதோ பலமுறை தசைச்சுருக்கம் ஏற்படுவதாலும் கர்ப்பப்பை வாய் திறப்பதாலும் குறைந்தகால இடைவெளியில் அடிக்கடி வலி ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். நேரமாக ஆக வலி அதிகரித்துக்கொண்டேபோகும். வலியின் தன்மை தீவிரமடையும். பெரும்பாலும் `ஃபால்ஸ் பிரெக்னென்சி பெய்ன்' பிரசவ வலியின் அளவைவிடக் குறைவாகத்தான் இருக்கும். மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் வலியைப் போன்று பொறுத்துக்கொள்ளும் தன்மை உடையதாக இருக்கும்.

`ஃபால்ஸ் பிரெக்னென்சி பெய்ன்' ஏற்படும்போது மனதை ஒருநிலைப்படுத்தி அமைதியாகவும் நேர்மறை எண்ணங்களுடனும் வைத்துக்கொண்டால் போதும். நிற்கும்போது வலித்தால் அமர்ந்துகொள்ளலாம்; அமர்ந்துகொண்டிருக்கும்போது வலித்தால் எழுந்து பொறுமையாக நடக்கலாம். இப்படி உடலின் நிலையை மாற்றினாலே வலி உணர்வு குறைந்துவிடும். அதேநேரம் பிரசவ வலியை, `ஃபால்ஸ் பிரெக்னென்சி பெய்ன்' என்று நினைத்து அமைதியாக இருந்து விடக்கூடாது. வலி உணர்வு ஏற்படும்போது ரத்தக்கசிவு அல்லது தண்ணீர் போன்ற திரவம் வெளிவருவதுபோல் தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

இதை உணர்ந்துதானோ என்னவோ, குழந்தைப்பேற்றுக்கு முந்தைய மாதங்களில் பெண்ணை அவரது தாய் வீட்டுக்கு அனுப்புவதை நம் முன்னோர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதுபோன்ற வலி உணர்வு உட்பட உடல் மற்றும் மனம் சார்ந்த மாற்றங்கள் புதிதாக ஏற்படும்போது தன்னுடைய பிறந்த வீட்டுச் சூழலில் அதை எளிதாக வெளிப்படுத்திக்கொள்ளமுடியும். அதேபோன்று தன் தாய் மற்றும் உற்றார் உறவினர் உடனிருக்கும்போது இதுபோன்ற நிலைகளை எளிதாகக் கடந்துவிடவும் முடியும். 

கர்ப்பகாலத்தில் சீரான உணவு முறையைப் பின்பற்றுவது மிகவும் அவசியம். மருத்துவரின் ஆலோசனையின்பேரில் உணவு இடைவேளையில் பழங்கள், காய்கறிகள், பழச்சாறுகள்... குறிப்பாக முருங்கைக் கீரை மற்றும் பேரீச்சை சாப்பிடுவது அனீமியா ஏற்படாமல் தவிர்க்க உதவும். இரும்புச் சத்து அதிகமுள்ள கீரை, மாதுளம் பழம் ஆகியவற்றைச் சாப்பிடுவது கூடுதல் சிறப்பு. புரதச்சத்து அதிகமுள்ள உணவை உட்கொள்ள வேண்டியதும் அவசியம். காபி,தேநீரைத் தவிர்ப்பது நல்லது. உணவைப் பொறுத்தவரை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து அவ்வப்போது உட்கொள்ள வேண்டும்.

கர்ப்ப காலத்தில் அதீத சோர்வு, குமட்டல், கால் வீக்கம், தலைச்சுற்றல், அஜீரணம் உட்பட பல்வேறு உடல் சார்ந்த மாற்றங்கள் ஏற்படுவது இயல்புதான். அதேபோன்று எதிர்மறை எண்ணங்களும் அவ்வப்போது தோன்றக்கூடும். அந்த நேரங்களில் மனதை ஒருமுகப்படுத்தி தியானம், பரிந்துரைக்கப்பட்ட யோகாசனம், நடைப்பயிற்சி, மனதுக்கு அமைதியைத் தரும் பாட்டு அல்லது பிடித்த செயலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளலாம். எதிர்மறை எண்ணங்கள் தோன்றும்போது  உடனிருப்பவர்கள் அவர்களுக்கு ஆலோசனை வழங்கிச் சரியாக வழி நடத்த வேண்டியது அவசியம்.

கால் வீக்கத்தைப் பொறுத்தவரை சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டால் தானாகவே குறைந்துவிடும். மேலும் இரவு உறங்கும்போது வலதுபுறமோ அல்லது இடதுபுறமோ ஒருக்களித்துப் படுத்துக்கொள்வது குழந்தையின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். சரியான மருத்துவ ஆலோசனை இல்லாமல் மருந்துகளையோ அல்லது இயல்புக்கு மாறான உணவுகளையோ உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதேநேரம் மருத்துவர் பரிந்துரைக்கும் சிலவற்றில் சந்தேகம் இருந்தால் கேட்டுத் தெரிந்து தெளிவுபெற்று, அதைப் பின்பற்றுவது நல்லது'' ' என்கிறார் கிருத்திகா மீனாட்சி.

இவை வழிகாட்டல் குறிப்புகளே... ஒவ்வொருவரின் உடல் இயல்பும் பிரத்யேகமானது. உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படியே செயல்படவும்!